Published:Updated:

அலர்ஜியை அறிவோம் - 5

அலர்ஜியை அறிவோம் - 5
பிரீமியம் ஸ்டோரி
News
அலர்ஜியை அறிவோம் - 5

ஹெல்த்

அலர்ஜியை அறிவோம் - 5

ணவால் ஏற்படும் அலர்ஜி உயிருக்கே உலைவைக்கும் என்று சென்ற இதழில் சொன்னேன். ‘அப்படியா?’ எனப் பல வாசகர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். பக்கத்திலேயே பத்திரமாக வைத்திருந்த ‘நியூ இங்கிலாந்து மருத்துவப் பத்திரிகை’யில் பல வருடங்களுக்கு முன்பு வந்திருந்த கட்டுரையை வாசித்துக் காண்பித்தேன். சாதாரண நிலக்கடலையைச் சாப்பிட்டு, எட்டு குழந்தைகள் இறந்துவிட்ட நிகழ்வையும், மேலும் எட்டு பேர் இறப்பின் விளிம்பில் இருந்து தீவிர சிகிச்சை மூலம் மீட்கப்பட்டதையும் அந்தக் கட்டுரை விவரித்திருந்தது. இதுபோன்ற அனுபவங்கள் எனக்கும் உண்டு.

ஒரு நண்பர், தன் நான்கு வயது மகனை மிகவும் ஆபத்தான நிலையில் என் மருத்துவ மனைக்குத் தூக்கி வந்தார். பையனுக்கு நாடித்துடிப்பு இல்லை; ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தது; உடல் சில்லிட்டுப்போயிருந்தது. இன்னும் சில நிமிடங்களில் பையனின் சுவாசம் முழுவதுமாக நின்றுவிடும் என்கிற சூழல்... அவசரசிகிச்சை கொடுத்து, ஆக்சிஜனைச் செலுத்தி, குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் சேர்த்து, உயிர்பிழைக்க வைத்தேன். அன்றைக்கு என்ன காரணத்தால் அந்த நிலைமை ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை.

அலர்ஜியை அறிவோம் - 5

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதே பையன் அடுத்த மாதம் ஒருநாள் இதே நிலைமையில் வந்தபோதுதான் காரணம் புரிந்தது. காளான் அலர்ஜிதான் அவனுக்கு இவ்வளவு ஆபத்தான சூழலை ஏற்படுத்தியது. முதல் முறையாக அவனுக்கு மயக்கம் ஏற்பட்டதற்கு அன்றைக்கு அவன் சாப்பிட்ட காளான் ஃப்ரைதான் காரணம் என்கிற உண்மை  தெரியவந்தது. அதற்குப் பிறகு அந்தப் பையனுக்குக் காளான் உணவை எந்த விதத்திலும் கொடுக்கக்கூடாது எனச் சொல்லிவிட்டேன். அவன் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறான்.

அலர்ஜி ஆகும் உணவுகள்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் உணவு அலர்ஜியாக இருக்கலாம். எனவே, பொதுவான பரிந்துரைகள் எல்லோருக்கும் பொருந்துவது இல்லை. ஒருவருக்கு ஒருமுறை ஓர் உணவு அலர்ஜி ஆகிறது என்றால், அந்த உணவை அவர் அடுத்த முறை சாப்பிடக் கூடாது என்பதுதான் அலர்ஜியைத் தடுக்கும் பொதுவான விதி. என்றாலும், அதிகமாக அலர்ஜி ஆகிற சில பொருட்களை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பால், தயிர், முட்டை, வேர்க்கடலை, இறைச்சி, கடல் மீன்கள், இறால், நண்டு, கருவாடு, கத்திரிக்காய், தக்காளி, எலுமிச்சை, பயறு, உருளைக்கிழங்கு, செர்ரி பழங்கள், சாக்லேட், கோதுமை, நட்ஸ் வகைகள், செயற்கைக் குளிர்பானங்கள், வனஸ்பதி ஆகியவைதான் பெரும்பாலும் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன.

பொதுவாக, அதிகமாக வண்ணம் சேர்க்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை நறுமணம் கலந்த உணவுகள் போன்றவற்றில் அலர்ஜியைத் தூண்டும் ரசாயனங்கள் இருக்கும். உதாரணத்துக்கு, தற்போது சுவைக்காக ‘மோனோசோடியம் குளுட்டமேட்’ (Monosodium glutamate (MSG) உப்பு சேர்க்கிறார்கள். இந்த வேதிப்பொருளுக்கு அலர்ஜியை உண்டாக்கும் தன்மை அதிகம்.

அலர்ஜியை அறிவோம் - 5

அலர்ஜி ஆகும் மருந்துகள்

உணவைப்போலவே, எந்த ஒரு மருந்தும் யாருக்கும் அலர்ஜி ஆகலாம். என்றாலும் ஆஸ்பிரின், அனால்ஜின், பெனிசிலின், ஸ்ட்ரெப்டோமைசின், டெட்ராசைக்ளின், இன்சுலின், சல்ஃபா மருந்துகள், மலேரியாவுக்குத் தரப்படும் மருந்துகள், உலோக மருந்துகள், டைக்ளோஃபினாக் போன்ற வலிநிவாரணிகள் ஆகியவை பெருமளவு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடியவை. தவிர, மருந்துகளுக்கு நிறம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிற அமராந்த், டார்ட்ரசின் போன்றவையும், மருந்துகள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்குப் பயன்படுகிற சோடியம் பென்சோவேட், சல்பர் டை ஆக்சைடு போன்றவையும் அலர்ஜி ஆகலாம்.

அழகுசாதனப் பொருட்கள்


நாம் தினமும் பயன்படுத்தும் சோப், முகப்பவுடர், எண்ணெய், க்ரீம், லோஷன் போன்றவையும் தலைமுடிக்குத் தடவப்படும் சாயப்பொருட்களும் பலருக்கும் அலர்ஜி ஆகின்றன. கழுத்து, கை, கால், காதுகளில் அணியப்படும் நிக்கலில் தயாரிக்கப்பட்ட கவரிங் நகைகளால் அலர்ஜி ஆவது நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். ரப்பர், தோல் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களும் இவ்வாறு அலர்ஜியை ஏற்படுத்துவது உண்டு. உதாரணத்துக்கு, வாட்ச் ஸ்ட்ராப்.

தொழில்சார்ந்த அலர்ஜி பொருட்கள்

பஞ்சுத் தூசு, உமித்தூசு, ரைஸ் மில் தூசு, மாவு மில் தூசு, சிமென்ட் புகை, ஆஸ்பெஸ்டாஸ் புகை, நூற்பாலைக் கழிவு போன்றவை மிக எளிதாக அலர்ஜி ஆகின்றன. ரேஷன் கடை மற்றும் மளிகை சாமான் கடைகளில் காணப்படுகிற நெடியும் தூசியும் அலர்ஜி ஆவது மிகச் சாதாரணம். இதுபோல் உரத் தொழிற்சாலை, அலுமினியம், தாமிரம் போன்றவற்றைத் தயாரிக்கும் உலோகத் தொழிற்சாலைகள், ரசாயனத் தொழிற்சாலை ஆகியவற்றின் தொழிலாளிகள், ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் தொழிலாளிகள், தறி­­­­­­­ நெய்பவர்கள், மரத்தச்சர்களுக்கு தொழில் சார்ந்த அலர்ஜி வாய்ப்பு அதிகம்.

அலர்ஜியை அறிவோம் - 5

கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை, பறவைப் பண்ணை, ரொட்டிக் கடை, நூல் நிலையம், தானியக்கிடங்கு, பஞ்சு மெத்தை, ஷோபா தயாரிக்கும் இடம், கயிறு, சணல் உற்பத்தி ஆகும் இடம், கம்பளித் தொழிற்சாலை, பீடித் தொழில், பிளாஸ்டிக் கடை, பெயின்ட் கடை, மரக்கடை, தோல் பதனிடும் தொழில், ரப்பர் தயாரிக்கும் இடம், சலூன் ஆகியவற்றில் வேலை செய்பவர்களுக்கு அங்கு அவர்கள் தொடர்புகொள்ளும் பொருட்களுக்கு ஏற்ப அலர்ஜி ஏற்படுவது வழக்கம். சாயப் பட்டறையில் பணிபுரிவோர், சோப், சென்ட், பூச்சிக்கொல்லிகள், மருந்து தயாரிப்போர், உலோகம் விற்போர், பட்டுப்பூச்சி வளர்ப்போர், ஆட்டு ரோமம் தயாரிப்போர் மற்றும் விற்போர், மின்சாரப் பொருட்களைத் தயாரிப்போர், மருந்து தெளிப்போர், எக்ஸ்ரே படங்களைக் கழுவுபவர்கள் எனப் பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபடுபவர்களுக்குத் தொழில் சார்ந்த அலர்ஜி ஏற்படுவது நடைமுறை.

கோயில் திருப்பணிகளில் ஈடுபடுகிற அர்ச்சகர்களுக்கு கருவறையில் எப்போதும் பயன்படும் மலர்கள், கற்பூரம், சந்தனம், குங்குமம் போன்ற பூஜைப்பொருட்களும் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன.

அலர்ஜி ஆகும் விஷக்கடிகள்

பாம்பு கடித்தால்தான் விஷம் என்பது இல்லை. சாதாரண எறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு போன்ற பூச்சிகள் கடித்தாலும் கொட்டினாலும் விஷம்தான். இதனால், அரிப்பு, வீக்கம் போன்ற சிறு தொல்லைகளில் தொடங்கி உயிரிழப்பு வரை பல அலர்ஜி பாதிப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, காட்டுத் தேனீக்கள் கொட்டி பல பேர் உயிரிழந்துள்ளனர் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

இனி, ஒவ்வோர் இதழிலும் ஓர் அலர்ஜி நோயை அறிவோம். அடுத்த இதழில் அடுக்குத் தும்மலைப் பற்றிப் பார்ப்போம்!

- எதிர்வினை தொடரும்

அலர்ஜி டேட்டா!

குடலில் ‘லேக்டோஸ்’ எனும் என்சைம் பல குழந்தைகளுக்குக் குறைவாகச் சுரக்கும். அப்போது புட்டிப்பாலில் உள்ள ‘லேக்டோஸ்’ சர்க்கரையை முழுவதுமாகச் சிதைக்க முடியாது. இதனால் அவர்களுக்குப் பால் அலர்ஜி ஏற்படும்.

சாக்லேட்டில் ‘டைரமின்’ எனும் வேதிப்பொருள் உள்ளது. இது சரியான அளவில் குடலில் சிதைக்கப்படாவிட்டால், அலர்ஜி ஆகும்.

கோதுமையில் ‘குளூட்டன்’ எனும் புரதம் உள்ளது. இது பலருக்கும் அலர்ஜியை ஏற்படுத்தும்.

ஜாம், சாஸ் போன்றவற்றில் சேர்க்கப்படுகிற ’டார்ட்ரசின்’, கேசரி பவுடரில் கலக்கப்படுகிற காரீய ஆக்சைடு ஆகியவை அலர்ஜியைத் தூண்டக்கூடியவை.

நிலக்கடலை அலர்ஜி என்றால், அது தொடர்பான அனைத்துப் பொருட்களும் அலர்ஜி ஆகலாம்.  உதாரணத்துக்கு, கடலை எண்ணெய். கடலை மிட்டாய்.

பால் அலர்ஜி என்றால் பாலில் தயாரிக்கப்படும் தயிர், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்ற எல்லா பால் பொருட்களும் அலர்ஜி ஆகலாம்.

ஆர்.பாரத்குமார், சேலம்.

“என் வயது 37. எனக்கு கடந்த சில வருடங்களாக சைனஸ் பிரச்னை உள்ளது. சைனஸ் பிரச்னை ஏன் ஏற்படுகிறது... இதற்கு, சித்த வைத்தியத்தில் தீர்வு உண்டா?”

டாக்டர் ஆர்.வெற்றிவேந்தன்

சித்த மருத்துவர், சேலம்.


“சைனஸ் என்பவை மூக்கில் உள்ள முக்கிய காற்றறைப் பைகள். சைனஸில் எப்போதும் திரவம்

அலர்ஜியை அறிவோம் - 5

சுரந்துகொண்டே இருக்கும். உள் நுழையும் வெப்பக் காற்றை ஈரப்படுத்தி அனுப்பும் பணியை இது செய்கிறது. இந்த சைனஸ் அறைகளில் திரவம் வரும் வழி அடைக்கப்பட்டு, அந்த இடத்தில் திரவம் தேங்கும்போது, சைனஸ் பிரச்னை ஏற்படுகிறது. பாக்டீரியா, வைரஸ் தொற்றால் ஏற்படும் சளி, சுற்றுச்சூழல் மாசு, அலர்ஜி போன்ற காரணங்களால் சைனஸ் தொல்லை ஏற்படலாம். அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகுதல், தலைவலி போன்றவை சைனஸ் பிரச்னை ஏற்படுத்தும் உபாதைகள்.

சைனஸ் பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் தீர்வாக ‘நசியம்’ எனும் மூக்கில் நீர் விடும் வைத்தியம் செய்யப்படுகிறது. இந்த மூலிகைச் சொட்டு மருந்து மூலமாக, மூக்கின் வழியே சளி முழுவதும் வெளியேற்றப்படுகிறது.  

மருத்துவர் ஆலோசனையுடன் சுக்குத் தைலம்,  சிரோபார நிவாரணத் தைலம், பீனிசத் தைலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதில் நல்ல முன்னேற்றம் தென்படும். `சீந்தில்’ எனும் சித்த மருத்துவத் தாவரத்தில் இந்து எடுக்கப்படும் மருந்தும் சிறந்த தீர்வாக அமையும்.

இது மட்டுமல்லாமல், நீர்க்கோவை மாத்திரையை ஆவிபிடித்தலும் சிறந்த தீர்வுதான். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் அதிகக் குளிர்ச்சியான அல்லது சூடான உணவுகளை உண்ணக் கூடாது. சில்லென்ற அதிகாலைக் காற்றிலும் பனியிலும் அலையக் கூடாது. புகைபிடித்தலை அறவே தவிர்க்க வேண்டும். மேலும், முறையான மூச்சுப்பயிற்சியின் மூலமும் இதற்குத் தீர்வு காணலாம்.”