Published:Updated:

அந்தப்புரம் - 29

அந்தப்புரம் - 29
பிரீமியம் ஸ்டோரி
News
அந்தப்புரம் - 29

ஓவியம்: ஸ்யாம்

அந்தப்புரம் - 29

குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடுவது எப்படி என்று அஸ்வினிடம் ஆலோசனை கேட்டான் சுரேஷ். அஸ்வின் அளித்த ஆலோசனை மற்றும் அவன் பரிந்துரைத்த மாத்திரையை வாங்கிக்கொண்டு சந்தோஷமாக வீட்டுக்குச் சென்றான். திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்தன. சுரேஷ் மற்றும் சுனிதாவை விருந்துக்கு அழைத்தான் அஸ்வின். அனிதா விதவிதமாக உணவுகள் தயாரித்து, இருவரையும் வரவேற்றார். சுனிதா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால், சுரேஷ் முகம் வெளிறிப்போய், சோகமாக இருந்தான். “எப்படி இருக்கடா” என்று அஸ்வின் கேட்க, “நல்லா இருக்கேன்...” என்று இழுத்தான். என்ன ஆயிற்று இவனுக்கு என்று ஒரே யோசனையாக இருந்தது அஸ்வினுக்கு. ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்திருந்தான். ஆனால், ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தான் சுரேஷ்.

அனிதாவுக்கு உதவி செய்ய சுனிதா சென்ற சமயம், பொறுக்க முடியாமல், என்ன ஆச்சு என்று சுரேஷிடம் கேட்டான். பெருமூச்சு விட்டபடி, ‘சுனிதா இப்போ கர்ப்பமா இருக்கா’ என்றான். அஸ்வின் ஆச்சரியத்துடன், “என்ன நான் சொன்னதை ஃபாலோ செய்யலையா? கல்யாணத்துக்கு அப்புறம் மனசு மாறி குழந்தைக்கு பிளான் செய்துட்டீங்களா?” என்று கேட்டான்.

சுரேஷ் மிகுந்த கோபத்துடன், “உன்கிட்டபோய் ஐடியா கேட்டேன் பாரு, என்னை அடிக்கணும். ஒழுங்கா டாக்டர்கிட்டயே கேட்டிருக்கலாம். நீ சொன்னபடி செய்தும், அவ கர்ப்பம் ஆகிட்டா.” என்று சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

அந்தப்புரம் - 29

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அஷ்வின் குழப்பத்துடன், “இதுக்கு சான்ஸே இல்லை. நான் சொன்ன மாத்திரையை வாங்கிக் கொடுத்தியா? டெய்லி சுனிதா அந்த மாத்திரையைப் போட்டுக்கிட்டாளா?” என்று கேட்டான்.

சுரேஷ் பேய் அறைந்தவன் போலானான். “என்ன... சுனிதாவையா மாத்திரை எடுத்துக்கச் சொன்ன? நீ என்னைத்தான் மாத்திரை எடுத்துக்கச் சொல்றியோனு நினைச்சு, தினமும் அந்த மாத்திரையை ரகசியமா போட்டுக் கிட்டு வந்தேனே!” என்றான். சுரேஷின் அறியாமை யைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தான் அஸ்வின்.

ஏன்? எதற்கு? எப்படி?

கடந்த இதழில், கருத்தடை, கருக்கலைப்புக்கு என்ன எல்லாம் வழிகள் உள்ளன என்று சொல்லியிருந்தேன். அதைப் பற்றி இந்த இதழில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

1. மாத்திரை

அந்தப்புரம் - 29கருத்தடை மாத்திரையானது முட்டை வெளிப்படுதலை (ஓவரேஷன்) தடுக்கிறது. இந்த மாத்திரையில், பெண்ணின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் ஹார்மோன்கள் ரசாயன வடிவில் இருக்கின்றன. இந்த ஹார்மோன்கள்தான் இயற்கையான மாதசுழற்சி மற்றும் முட்டை வெளிப்படுதல் நிகழவும், மாதவிலக்கு ஏற்படவும் காரணமாக இருக்கின்றன. இந்த ஹார்மோன்களைச் செயற்கையாக அளிப்பதன் மூலம், அது உடலில் செயல்பட்டு, முட்டை வெளிப்படுதலைத் தடுக்கிறது. இதன் மூலம் கரு உருவாவது தடுக்கப்படுகிறது. இந்த மாத்திரை மிகவும் ஆற்றல்கொண்டது. குழந்தைப்பேறு எப்போது வேண்டும் என்று முடிவு செய்கிறார்களோ, அப்போது இந்த மாத்திரை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

2. ஐ.யு.டி

அந்தப்புரம் - 29இன்ட்ராயூட்ரைன் டிவைஸ் (Intrauterine device) என்பது காப்பர் டி, லூப் போன்றவை ஆகும். இவை, பிளாஸ்டிக் அல்லது உலோகத்தால் ஆன மிகச்சிறிய, எளிய கருவி. இவை கர்ப்பப்பையின் உள்ளே வைக்கப்படும். இதை டாக்டர்தான் பொருத்துவார். இது பல்வேறு அளவுகளில், அமைப்புகளில் வருகிறது. கருத்தரித்த முட்டையானது எண்டோமெட்ரியத்தை அடையவிடாமல் தடுத்து, கர்ப்பம் அடைவதைத் தடுக்கிறது. இதை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

3. ஸ்பெர்மிசைட்ஸ்

அந்தப்புரம் - 29இது ரசாயனப் பொருள். இது விந்தணுக்களை அழிக்கும் அல்லது நுரை போன்ற அமைப்பை உருவாக்கி விந்தணு ஓட்டத்தைத் தடை செய்யும். இது, பெண்ணின் பிறப்புறுப்பில் வைக்கக்கூடிய ஜெல், கிரீம், மாத்திரை எனப் பல வடிவங்களில் வருகிறது. இது, 100 சதவிகிதம் துல்லியமானது என்று சொல்ல முடியாது. டயாப்ரம் அல்லது கேப் உடன் பயன்படுத்தும்போது நல்ல பயன் அளிக்கும்.

4. டயாப்ரம் (Diaphragm)

அந்தப்புரம் - 29கூடாரம் போன்ற முகப்பு கொண்ட ரப்பரால் ஆன பொருள். இதில், வளைந்துகொடுக்கக்கூடிய கரை இருக்கிறது. இதை உடலுறவு கொள்வதற்கு முன்பு பெண்கள் பொருத்திக்கொள்ள வேண்டும். வெஜைனாவுக்குப் பின்புறம், பியூபிக் எலும்பு பகுதியில் பொருத்த வேண்டும். மிகச்சரியாகப் பொருத்தினால் கர்ப்பப்பைவாய் திறக்காமல் போய்விடும். இதனால், கர்ப்பப்பைக்குள் விந்தணு செல்வது தடுக்கப்படும். உடலுறவுக்குப் பின் ஆறு மணி நேரத்தில் இதை அகற்றிவிட வேண்டும். தொடக்கத்தில் இந்த டையாப்ரத்தை மருத்துவர்தான் பொருத்துவார். நன்கு பழகிய பிறகு இதைப் பெண்கள் தாங்களாகவே பொருத்திக்கொள்ளலாம். இதைத் தனியாகப் பயன்படுத்துவதால், பெரிய பலன் இருக்காது. ஸ்பெர்மிசைட்ஸ் உடன் பயன்படுத்தும்போது பலன் கிடைக்கும்.

5. கேப்

அந்தப்புரம் - 29இதுவும் ரப்பரால் ஆன பொருள். இதுவும் கர்ப்பப்பைவாய்க்கும் வெஜைனாவுக்கும் இடையில் பொருத்தப்பட வேண்டியது. இது, விந்தணுக்கள் பயணிப்பதைத் தடுக்கிறது. கிட்டத்தட்ட இதுவும் டயாப்ரம் போலத்தான். ஆனால், பல்வேறு அளவுகளில் வருகிறது.

6. ஆணுறை

அந்தப்புரம் - 29கருத்தரிப்பைத் தடுக்க அதிக அளவில் பயன்படுத்தப்படும் முறை ஆணுறை. இது மிக மெல்லிய ரப்பர் அல்லது ஃபிரெஞ்சு லெதரால் ஆனது. இதன் முனையில் சிறிய அளவு வெற்றிடம் இருக்கும். உடலுறவின்போது, விந்தணு இந்த இடத்தில் விழும். ரப்பரால் ஆனது என்பதால், இதைத் தாண்டி விந்தணுவால் பெண்ணின் பிறப்புறுப்புக்குள் நுழைய முடியாது. மேலும், பால்வினை நோய்கள் பரவாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஆணுறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதில் துளை ஏதும் உள்ளதா என்பதுதான். துளை இருந்தால், விந்தணுக் கசிவு ஏற்படலாம்.

7. வெளியே எடுத்தல் (Withdrawal method)

அந்தப்புரம் - 29உடலுறவின்போது, விந்தணு வெளிப்படும் நேரத்தில், ஆணுறுப்பை வெளியே எடுத்துவிடும் முறை இது. இதுவும் நம்பிக்கைக்குரிய முறையாக இல்லை. ஏனெனில், உடலுறவுக்கு முன்பு தம்பதி ஈடுபடும் முன் விளையாட்டுகளின் (ஃபோர் பிளே) போது, ஆணின் பிறப்புறுப்பில் இருந்து வெளிப்படும் திரவத்தில்கூட விந்தணுக்கள் இருக்கலாம். மேலும், விந்தணு வெளிப்படும் நேரத்தில் ஆணின் பிறப்புறுப்பை வெளியே எடுப்பது சிலருக்கு அசெளகரியத்தைக் கொடுக்கலாம்.

8 ரிதம் வழிமுறை

அந்தப்புரம் - 29சேஃப் பீரியட்ஸ் மெத்தட் அல்லது இயற்கைக் குடும்பக் கட்டுப்பாடு என்று இதைச் சொல்வார்கள். மாதவிலக்கின் சுழற்சியை அடிப்படையாகக்கொண்டது. இதில், குழந்தைப் பிறப்புக்கு வாய்ப்பு இல்லாத நாட்களில் உடலுறவுகொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. அதாவது, முட்டை வெளிப்படும் காலக்கட்டத்தில் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக, இயல்புநிலை மாதசுழற்சி உள்ளவர்களுக்கு முட்டையானது, மாதவிலக்கு வந்ததில் இருந்து தோராயமாக 14-வது நாள் வெளிப்படும். பெரும்பாலான பெண்களுக்கு இயல்பான அளவான 28 நாள் மாத சுழற்சி இருப்பது இல்லை என்பதுதான், இதன் மிகப்பெரிய பின்னடைவு.

9. அவசரகால கருத்தடுப்பு மாத்திரை

அந்தப்புரம் - 29எதிர்பாராத சூழலில், பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு நடந்துவிட்டது என்றால், அந்தப் பெண் மிக அதிக ஆற்றல்கொண்ட சின்தடிக் ஈஸ்ட்ரோஜன் மாத்திரையை 72 மணி நேரத்துக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த டோஸ் மருந்தை அடுத்த 12 மணி நேரம் கழித்து எடுத்துக்கொள்ள வேண்டும். கரு, ஃபெலோபியன் குழாய் வழியே பயணிப்பதை இந்த மாத்திரை தடுக்கும் அல்லது எண்டோமெட்ரியத்தில் ஒட்டிக்கொண்டு வளர்வதைத் தடுக்கும். வாந்தி, குமட்டல் போன்ற சில பக்கவிளைவுகளும் இதில் உள்ளன.

10. அறுவைசிகிச்சை

அந்தப்புரம் - 29எதிர்காலத்தில் குழந்தைப்பேறு வேண்டாம் என்பவர்களுக்கு செய்யப்படுகிறது. இதனால், தாம்பத்திய வாழ்வில் எந்தப் பாதிப்பும் வராது. கர்ப்பமாகிவிடுமோ என்ற பயமின்றி தாம்பத்திய உறவுகொள்ள அறுவைசிகிச்சை பெரிதும் உதவியாக இருக்கிறது. பெண்களுக்குச் செய்யப்படும் அறுவைசிகிச்சைக்கு டியுபெக்டமி என்று பெயர். இதில், அறுவைசிகிச்சை மூலம் ஃபெலோபியன் குழாய் கத்தரிக்கப்பட்டு முடிச்சு போடப்படும். இதன்மூலம், விந்தணுக்கள் முட்டையை அடைவது தடுக்கப்படுகிறது. முன்பு, வயிற்றில் அறுவைசிகிச்சை செய்துவந்தனர். தற்போது, லேப்ராஸ்கோப்பி மூலம் செய்துவிடுகின்றனர்.

ஆண்களுக்குச் செய்யப்படும் சிகிச்சைக்கு வாசக்டமி என்று பெயர். இதில், டெஸ்டிஸில் (விதை) இருந்து ஆண் பிறப்பு உறுப்பு நோக்கி வரும் விந்துக் குழாய் கத்தரித்து முடிச்சுப் போடப்படும். இதனால், தாம்பத்திய உறவில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. வழக்கம்போல, விந்து திரவத்தை வெளியிடலாம். அந்த திரவத்தில் விந்து அணுக்கள் மட்டும் இருக்காது. புறநோயாளியாக வந்தே அறுவைசிகிச்சை முடித்து வீடு திரும்பலாம்.

கருத்தடை சாதனங்கள் பற்றி விரிவாகப் பார்த்தோம். இது தொடர்பான வாசகர்கள் கேள்விகளை, அடுத்த இதழில் காண்போம்.

- ரகசியம் பகிர்வோம்