Published:Updated:

நாட்டு மருந்துக் கடை - 25

நாட்டு மருந்துக் கடை - 25
பிரீமியம் ஸ்டோரி
நாட்டு மருந்துக் கடை - 25

ஆவாரை

நாட்டு மருந்துக் கடை - 25

ஆவாரை

Published:Updated:
நாட்டு மருந்துக் கடை - 25
பிரீமியம் ஸ்டோரி
நாட்டு மருந்துக் கடை - 25
நாட்டு மருந்துக் கடை - 25

ரை எல்லாம் தங்கம் பூத்திருந்தால் எப்படி இருக்கும். ஆவாரை   பூத்திருக்கும் நிலம் அப்படித்தான் இருக்கும். ‘ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ?’ என்ற சொலவடை, ஆவாரையின் சஞ்சீவத்தன்மைக்கு தமிழ் சாட்சி.  சாதாரண வரள் நிலப்பகுதியில் களைக்காடாய் வளரும் செடிக்கும் ஒரு மாபெரும் மருத்துவக் குணம் உண்டு என்பதைப் பறைசாற்றுகிறது இந்த முதுமொழி. அப்படி என்ன இருக்கிறது ஆவாரையில்?

வெப்ப பூமியில் வளரும் இந்தச் செடி, நல்ல குளிர்ச்சியும் துவர்ப்புச்சுவையும் கொண்டது. இதன், பூ, இலை, காய், பட்டை, பிசின், வேர் என அனைத்துமே முழுமையாய்ப் பயன் தரக்கூடியது. அந்தக் காலத்தில் நீண்ட தூரம் வெயிலில் நடந்து செல்லக்கூடிய வழிப்போக்கரும், வெயிலோடு உறவாடி வேளாண்மை செய்யும் விவசாயியும், சூரியனின் வெப்பக் கதிர்வீச்சு தலையைத் தாக்காது இருக்க, ஆவாரையைத் தலைப்பாகையாய் கட்டி இருப்பார்களாம். இந்தக் காலத்திலும், வெயிலில் நின்று பணிபுரியும் காவலரைக் காக்க, கொடுங்கோடை வருமுன்னே ஆவாரை இலைக்கட்டால் ஒரு தொப்பியைக் கண்டுபிடித்துத் தாருங்கள். அவர்களுக்குப் பெரும் பயனாயிருக்கும்.

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பெரும் அசெளகரியம். மேலும், இது நாள்பட்டுத் தொடர்கையில் பல உள் வியாதிக்கும் வழிவகுக்கும். இந்த நோயினைத் தீர்க்க, ஆவாரம் பூவின் இதழ்களைச் சேகரித்து நிழலில் உலர்த்தித் தூள் செய்து வைத்துக்கொண்டு, அரை கிராம் எடுத்து, இரண்டு கிராம் வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட வேண்டும். இதனைப் பாலில் கலந்து சாப்பிட்டாலும், நீர் சேர்த்து நாலில் ஒரு பங்காகக் காய்ச்சிக் குறுக்கிக் கசாயமாக்கிச் சாப்பிட்டாலும் வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல், நீங்கும். உடல் வெப்பம் தணிந்து, வாய்ப்புண் வருகைகூட நீங்கும்.

நாட்டு மருந்துக் கடை - 25

இன்றைய இளைஞர்களின் பெரும் கவலை,  நல்ல வேலை, கை நிறைய சம்பளம், மனதுக்கு இனிய துணை என இனிப்பான வாழ்வு பற்றி அல்ல... நல்ல அசதி, கைகால் எரிச்சல், மாரடைப்பு, சர்க்கரை நோய் வந்துவிடக் கூடாதே என்பதுதான். ‘சர்க்கரைநோய் இல்லாத பையனுக்கு, சினைப்பை நீர்க்கட்டி இல்லாத பெண் வேண்டும்’ என்னும் வரன் தேடும் விளம்பரங்கள் வரும் நாள் வெகு தூரம் இல்லை. பெருவெள்ளப் பேரிடர் போல் பெருகிவரும் சர்க்கரை நோய் வராது ஆரம்பத்திலேயே தடுக்க, அப்படியே வந்தாலும் ஆரம்பித்திலேயே அந்த நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, ஆவாரை மிக முக்கியமான அமிர்தம்.

ஆவாரையைப் பிரதானமாகக்கொண்டு செய்யப்படும் ‘ஆவாரைக் குடிநீர்’ சர்க்கரை நோயாளி ஒவ்வொருவரது வீட்டிலும் இருக்க வேண்டிய மூலிகைத் தேநீர். ‘காவிரி நீரும் வற்றும்; கடல் நீரும் வற்றும்’ என சூட்சுமமாய்ச் சித்த மருத்துவன் சொன்ன சூத்திரத்தைக் கட்டவிழ்த்துப் பார்த்த இன்றைய விஞ்ஞானம், ஆச்சரியத்தில் ஆழந்துள்ளது. ‘ஆவாரை, கொன்றை, நாவல், கடலழிஞ்சில், கோரை, கோஷ்டம், மேவிய மருதத் தோல்’ என ஏழு மூலிகைகளைக்கொண்டு தேநீர் போட்டுக் குடித்தால், இனிப்பு கலந்து சிறுநீர் வரும் (காவிரி நீர்) சர்க்கரை நோய்க்கும் உப்பு நீரான (கடல் நீர்) புரதம் கழிந்து வரும் நீர் உடைய ஆரம்பகட்ட சிறுநீரக வியாதிக்கும், நல்ல பலன் தரும் என்று கண்டறிந்துள்ளனர்.

மாதவிடாய் சமயம் அதிக ரத்தப்போக்கினால் அவதிப்படும் பெண்கள், ஆவாரையைக் கசாயமாக்கி, 120 மி.லி அளவு இரு முறை குடித்தால், ரத்தப்போக்கு குறையும். உடல் எடை உள்ள, சீரான மாதவிடாய் இல்லாத, சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உடைய பெண்களும் ஆவாரைத் தேநீர் அருந்த, எடையும் குறையும்; சினைப்பை நீர்க்கட்டி படிப்படியாய் நீங்கும்.

நாட்டு மருந்துக் கடை - 25

ஆவாரையின் அத்தனை பாகங்களையும் கொண்ட சூரணம் ஆவாரைப் பஞ்சாங்கச் சூரணம். வேர், இலை, பட்டை, பூ, காய் என இவற்றின் உலர்ந்தபொருளைச் சேகரித்துப் பொடித்து, வைத்துக்கொண்டு, 10 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும். பிற மருத்துவம் எடுத்துக்கொண்டிருந்தாலும், இந்தச் சூரணம் சாப்பிட, நாட்பட்ட சர்க்கரை நோயினால் வரக்கூடிய சிறுநீரக நோய் (Diabetic nephropathy), இதய நோய் (Diabetic cardipoathy) மற்றும் கரபாத சூலை (Diabetic peripheral neuropathy) எனும் நரம்புப் பிரச்னைகள் என அனைத்தையும் தடுக்க உதவிடும்.

ஆவாரை, சாலை ஓரத்தில் வரப்பு ஓரத்தில் கேட்பாரற்றுக்கிடந்த மூலிகை. இப்போது, ஆங்காங்கே இதன் பயன் அறிந்து தேநீராக்கிச் சாப்பிடுவது பெருகிவருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் தேநீரைத் தவிர்த்து, இதன் நீருக்கு மவுசு வரக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். பெண்களுக்குக் கருச்சிதைவைத் தடுக்க உதவவும், கருத்தரிக்கத் தடையாய் இருக்கும் சினைப்பை நீர்க்கட்டி, கர்ப்பச்சூடு முதலான பல நோயை நீக்கப் பயனாவதையும் இன்றைய மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்திவருகின்றன.

மொத்தத்தில், ஆவாரை தோற்றத்தில் மட்டும் அல்ல மருத்துவக்குணத்திலும் தங்கமாய் பூத்திருக்கும் தமிழ்த் தாவரம்!

- தொடரும்