Published:Updated:

நீங்கள் பயன்படுத்துவது தரமான மஞ்சள்தானா? - கண்டுபிடிப்பது எப்படி? #HealthBenefitsOfTurmeric

நீங்கள் பயன்படுத்துவது தரமான மஞ்சள்தானா? - கண்டுபிடிப்பது எப்படி? #HealthBenefitsOfTurmeric
நீங்கள் பயன்படுத்துவது தரமான மஞ்சள்தானா? - கண்டுபிடிப்பது எப்படி? #HealthBenefitsOfTurmeric

'ன்னும் மூணு மாசத்துல கல்யாணம் உனக்கு... கண்டதை போட்டு சருமத்தை கெடுத்துக்காதே, தினமும் முகத்துக்கு கஸ்தூரி மஞ்சள் பூசிக் குளி’, `வறட்டு இருமலுக்கு, பால்ல மஞ்சத்தூள் கலந்து குடிக்கவேண்டியதுதானே...', 'காயம்பட்ட இடத்துல மஞ்சப்பொடி போட்டு, டிரெஸ்ஸிங் பண்ணிட்டா ரெண்டு நாள்ல காயம் சரியாகிடும்’... இப்படி மஞ்சளின் மருத்துவக் குணங்களை, மகிமையை நாம் அடிக்கடி சொல்லக் கேட்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக, நம்முடைய பாரம்பர்ய உணவுப் பொருளான மஞ்சள் குறித்து பல நாடுகளும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுவருகின்றன. `மஞ்சள் ஞாபகசக்தியை மேம்படுத்தும்` என்று `அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஜீரியாட்ரிக் சைக்கியாட்ரி’ (American Journal of Geriatric Psychiatry) பத்திரிகையில் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. மஞ்சளிலுள்ள வேதிப் பொருள்களில் முக்கியமானது `குர்குமின்’ (Curcumin). ஆர்கானிக் சந்தைகளில் மாத்திரை வடிவிலான குர்குமின் இப்போது பிரபலமடைந்துவருகிறது. ஆக, மஞ்சள் மகத்தானது! இதில் நமக்குத் துளிக்கூடச் சந்தேகம் வேண்டாம்.

மஞ்சளின் சத்துகள், நன்மைகள், மருத்துவப் பயன்கள் குறித்துச் சொல்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜயபால்...

``மஞ்சள் இரண்டு வகைப்படும். ஒன்று, `குர்குமா லோங்கா’ (Curcuma Longa). இது சமையலுக்குப் பயன்படுவது. மற்றொன்று, `குர்குமா செடோரியா’ (Curcuma Zedoaria). கஸ்தூரி மஞ்சள் வகையைச் சேர்ந்த இதை, சரும அழகுக்குப் பயன்படுத்துகிறோம். ஆயுர்வேதத்தில்

மஞ்சளை `ஹரித்ரா’ எனக் குறிப்பிடுகிறார்கள்.

நல்ல மஞ்சளா... கண்டுபிடிப்பது எப்படி?

இன்று கடைகளில் கிடைக்கும் மஞ்சளில், நிறத்துக்காகப் பல செயற்கை கெமிக்கல்களைச் சேர்க்கிறார்கள். இயற்கையாக, எந்த பிரிசர்வேட்டிவும் சேர்க்காத மஞ்சள் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், மஞ்சள் கிழங்குகளை வேகவைத்து, அதை உலரவைத்துப் பயன்படுத்தலாம். மஞ்சள் கிழங்கை வாங்கும்போது, அதை உடைத்துப் பார்த்து வேண்டும். அதன் உள்பகுதி ஈரமாகவும், இளஞ்சிவப்பு நிறமாகவும் இருந்தால், அது நல்ல மஞ்சள்.

மஞ்சளின் நன்மைகள்...
* கடந்த சில ஆண்டுகளாக, ரத்தச்சோகைப் பிரச்னை உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. நம் அன்றாட உணவில் ஏதாவதொரு வகையில் மஞ்சளைச் சேர்த்துக்கொண்டால், ரத்தச்சோகை பிரச்னையே ஏற்படாது.

* மஞ்சளையும் நெல்லிக்காயையும் சம அளவு எடுத்துக்கொண்டு, அதை அரைத்துப் பொடியாக்க வேண்டும். அந்தப் பொடியை, காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரைநோயைத் தடுக்கலாம். 

* மஞ்சள், மிகச்சிறந்த கிருமிநாசினி. இதைக்கொண்டு குடலைச் சுத்தப்படுத்தலாம். மஞ்சள் மற்றும் வேப்பங்கொழுந்தை சம அளவு எடுத்து அரைத்து, மூன்று மாதத்துக்கு ஒருமுறை, ஏழு நாள்கள் சாப்பிட வேண்டும். இதில், மஞ்சள் மற்றும் வேப்பங்கொழுந்தின் அளவு, உடல் எடையைப் பொறுத்து மாறுபடும். 50 கிலோ எடையுள்ளவருக்கு, 2.5 கிராம் பசு மஞ்சள், 2.5 கிராம் வேப்பங்கொழுந்து சாப்பிட வேண்டும். இதேபோல 30 கிலோ எடை என்றால் 1.5 கிராம் பசு மஞ்சள், 1.5 கிராம் வேப்பங்கொழுந்து, 40 கிலோ எடை என்றால், 2 கிராம் பசு மஞ்சள், 2 கிராம் வேப்பங்கொழுந்து... இப்படி!

* கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட (Preservative) மஞ்சள், உடலுக்கு ஆரோக்கியமானதல்ல. இதற்குப் பதிலாக மஞ்சள் கிழங்கை வாங்கி, அதை அரைத்து உபயோகப்படுத்தலாம்.

* மஞ்சள், சருமத்தை வறட்சியாக்கும் இயல்புடையது. வறண்ட சருமம் இருப்பவர்கள் அதிகம் மஞ்சளை உபயோகப்படுத்த வேண்டாம்.

மஞ்சள் மருந்துகள்...

* மஞ்சள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடலில் அரிப்பு ஏற்பட்டால், மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, அந்த இடத்தில் தேய்த்துவந்தால், அரிப்பு குணமாகும்.

* சிலருக்குத் தொடையில் சூடுக்கட்டிகள் ஏற்படும். அரைத்த மஞ்சளை, நல்லெண்ணெயோடு சேர்த்துத் தடவி வந்தால், மெள்ள மெள்ள கட்டி சரியாகும்.

* சருமப் பாதிப்பு இருப்பவர்கள், கஸ்தூரி மஞ்சளோ அல்லது காப்பு மஞ்சளோ உபயோகிப்பது நல்லது. உடலில் ஒவ்வாமை ஏற்பட்டால், ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் `ஹரித்ரா காண்டம்’ என்ற மஞ்சளில் தயாரித்த மருந்தை வாங்கித் தடவிவந்தால் பிரச்னை தீரும்.

* சிலருக்கு மூக்கடைப்பு பிரச்னையால் இரவில் தூக்கம் கெடும். மஞ்சள் கிழங்கை தீயில் சுட்டு, அதிலிருந்து வரும் புகையை நுகர்ந்து பார்த்தால், மூக்கடைப்பு சரியாகும். இந்தச் சிகிச்சையைச் செய்பவர்கள், அடுத்த இரண்டு மணி நேரத்துக்குத் தண்ணீர் குடிக்கக் கூடாது.

* மஞ்சள், திப்பிலி, ஏலக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து, பொடியாக்கி, ஒரு டீஸ்பூன் சாப்பிட்டுவந்தால், மஞ்சள்காமாலை குணமாகும். உணவில் தொடர்ந்து மஞ்சளைச் சேர்த்து வந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.

* மஞ்சளைத் தண்ணீரில் கொதிக்கவிட்டு, கண்களில் ஒத்தடம் கொடுத்தால் 'மெட்ராஸ் ஐ' குணமாகும்.

* மூட்டுப்பகுதிகளில் வலியோ, வீக்கம் ஏற்பட்டால், மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து தடவினால், சிறிது சிறிதாகப் பிரச்னை தீரும்.

***

``மஞ்சள் குறித்து கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் உலக அளவில் ஆயிரக்கணக்கான ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன’’

என்கிறார் சித்த மருத்துவர் பா.தமிழ்க்கனி.

"மஞ்சளில் வாலட்டைல் எண்ணெய் (Volatile Oil) என்ற திரவம் இருக்கிறது. அதிலுள்ள குர்குமின் (Curcumin) என்ற நிறமிதான் இதற்கான காரணம். குர்குமினில் பல வகைகள் உள்ளன. அந்த வகையில், மூளையில் ஏற்படும் பிரச்னையான ஞாபகமறதியை இது சரிசெய்யும். குர்குமின் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி இன்ஃப்ளமேஷன் போன்ற பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இது இதயம், கல்லீரல், சிறுநீரகம், வயிறு, குடல் என உடலின் அனைத்துப் பகுதிகளின் அழற்சியையும்  சரிசெய்யும்.

மாலை நேரத்தில் டீ, காபிக்கு பதில் மஞ்சள் கலந்த பாலை குடிப்பது சிறந்தது. இதில், ரெடிமேடாகக் கிடைக்கும் மஞ்சள் பொடிக்கு பதில் விரலி மஞ்சளைப் பயன்படுத்தலாம். ஒரு டம்ளர் பாலுக்கு, ஒரு இன்ச் விரலி மஞ்சளை எடுத்து, இரண்டு மூன்று மிளகு, 100 மி.லி தண்ணீர்விட்டு கொதிக்கவைத்துக் குடிக்க வேண்டும். இதை தினமும் குடித்துவந்தால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, நோய்த்தொற்று பாதிப்புகளும் தடுக்கப்படும். மஞ்சள், குப்பைமேனி இரண்டையும் தேவையான அளவு எடுத்து அரைத்து, பூசிவந்தால், சருமப் பிரச்னைகள் அனைத்தும் சரியாகும்’’ என்கிறார் தமிழ்க்கனி.