Published:Updated:

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உதவிக்கு ஓடிவரும் இலவச சேவை மையம்! - உபயம்: சீனியர் சிட்டிசன்ஸ்

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உதவிக்கு ஓடிவரும் இலவச சேவை மையம்! - உபயம்: சீனியர் சிட்டிசன்ஸ்
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உதவிக்கு ஓடிவரும் இலவச சேவை மையம்! - உபயம்: சீனியர் சிட்டிசன்ஸ்

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உதவிக்கு ஓடிவரும் இலவச சேவை மையம்! - உபயம்: சீனியர் சிட்டிசன்ஸ்

ந்து இலக்கங்களில் சம்பளம், மாதத்துக்கு ஆறு நாள்கள் விடுமுறை, குளிரூட்டப்பட்ட அறையில் வேலை, காலை பத்து மணிக்கு போனால் ஆறு மணிக்கு வெளியே வந்துவிடலாம்... நினைக்கவே இனிக்கிறது இல்லையா?! ஆனாலும், ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்குக் கிளம்புவது என்பது, பலருக்கு பாகற்காய் சமாசாரம். இன்னும் ஏராளமான சலுகைகள் இருந்தாலும், வேலை செய்வதற்கு மட்டும் வந்துவிடுகிறது சலிப்பு. `விடுமுறை எடுத்தால் சம்பளம் போய்விடுமே’ என்கிற காரணத்துக்காக மட்டுமே பலர் வேலைக்குப் போய்வருகிறார்கள்... வேண்டா வெறுப்பாக! இதுதான் உண்மை. சரி... இப்படி யோசிப்பவர்கள் யார்? அப்படியொன்றும் வயதானவர்கள் அல்ல. இவர்களுக்கெல்லாம் அதிகபட்சம் நாற்பது வயதுக்குள்தான் இருக்கும்.

இது ஒருபுறமிருக்கட்டும்... ஒரு ரூபாய்கூட சம்பளம் கிடையாது. வேறெந்தச் சலுகைகளும் கிடைக்காது. குளிரூட்டப்பட்ட அறையா... மூச்! மொத்தம் நான்கு பேர். அவர்களில் மூன்று பேருக்கு வயது அறுபதைத் தாண்டிவிட்டது. மற்றவர் ஒரு பெண்மணி... வயது 52. இவர்கள் காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிவிடுகிறார்கள். நேராக வந்து சேரும் இடம், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை. அங்கே புறநோயாளிகள் பிரிவுக்கு முன்னால் இரண்டு மேசைகள், நான்கு நாற்காலிகளைப் போட்டு அமர்ந்துவிடுகிறார்கள். சரி... என்னதான் வேலை இவர்களுக்கு? எந்த பிரச்னைக்கு எந்த வார்டுக்குப் போவது, எந்த நோய்க்கு எங்கே சிகிச்சை பெறுவது, உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டு எண் என்ன... போன்ற தகவல்கள் கொஞ்சம் விவரமானவர்களுக்கே தெரிவதில்லை. இந்த மருத்துவமனையின் விஸ்தீரணம் அப்படி. பரந்துவிரிந்திருக்கும் இந்த மருத்துவமனையில் வழிதெரியாமல் தவிக்கும் முதியவர்களுக்கும் பிறருக்கும் உதவுவதுதான் இவர்கள் வேலை. இந்த வழிகாட்டும் வேலையையே அன்போடும் கரிசனத்தோடும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை ராஜீவ் காந்தி மருத்துவமனை. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி கட்டடங்கள். தனித்தனி பிளாக்குகள். புதிதாக வரும் ஒருவர் குறிப்பிட்ட ஓர் இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியம். அலைந்து, திரிவதற்கு பயந்தேகூட பலர் இங்கே வராமல் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வதும் உண்டு.

இப்படிப் பரிதவிப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக, அதிகாலையிலேயே வந்து காத்திருக்கிறார்கள் `சேவாஸ்’ (SEVAS) அமைப்பின் உறுப்பினர்கள். முதலில் லஷ்மியிடம் பேசினோம்...

``2005-லருந்து செயல்பட்டு வருகிறது எங்கள் அமைப்பு. மொத்தம் நூறு உறுப்பினர்கள் இருக்கிறோம். மருத்துவமனை உதவி மட்டுமல்ல... கோயில் புனரமைப்புப் பணிகளையும் செய்துவருகிறோம். மருத்துவமனை உதவிக்குழுவில் பதிமூன்று பேர் இருக்கிறோம். அதில், ஐந்து பேர் பெண்கள். அனைவரும் குடும்ப நிர்வாகிகள். அதில் விஜயலட்சுமி என்பவர் மட்டும் இங்கேயே நர்ஸாக இருந்து ரிட்டயர்டு ஆனவர்.

ஆண்களில் கண்ணன் என்பவர்தான் குறைந்த வயதுள்ளவர். மற்றவர்கள் அறுபது வயதைக் கடந்தவர்கள். அவர்களில், அரசு வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்களும் இருக்கிறார்கள். தனியாகத் தொழில் செய்தவர்களும் இருக்கிறார்கள்.

ஒருமுறை, வேறோர் உதவிக்காக இங்கே வந்தபோதுதான் பலர் வழி தெரியாமல் கஷ்டப்படுவதைப் பார்த்தோம். அப்போது எடுத்த முடிவுதான்... அன்றிலிருந்து தினமும் வருகிறோம்.

ஒரு நாளைக்கு நான்கு பேர் வருவோம். கூட்டம் அதிகமாக இருக்கும் திங்கட்கிழமையில் எட்டு பேர். டெங்கு காய்ச்சல் பரவிய சமயத்தில் தினமும் ஏழெட்டு பேர் வந்தோம். எங்களுக்கென்று தனியாக வாட்ஸ்அப் குரூப் இருக்கிறது. அதில், தினமும் காலையில் யார் வருகிறார்கள் என்று தகவல் தெரிவிப்பார்கள். குறைந்தது ஒரு நாளைக்கு நான்கு பேராவது வந்துவிடுகிற மாதிரி பார்த்துக்கொள்வோம்’’ என்கிறார் லஷ்மி.

``இந்த ஹாஸ்பிட்டல் ஒரு கடல் மாதிரி. இங்கே படிச்சவங்களே ஒரு இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறது சிரமம். படிக்காதவங்க நிலைமையை யோசிச்சுப் பாருங்க. ஓ.பி சீட்டைக் காண்பிச்சு `எங்கே போகணும், எப்பிடிப் போகணும்?’னு கேப்பாங்க. நாங்க வழி சொல்லி அனுப்புவோம். வயசானவங்க, கண்ணு தெரியாதவங்க, காது கேட்காதவங்க வந்தா நாங்களே கூட்டிட்டுப் போவோம். எங்களுக்கு ஹாஸ்பிட்டல்லருந்து ஒரு வீல் சேர் குடுத்துருக்காங்க. நடக்க முடியாதவங்களை அதுலவெச்சு கூட்டிட்டுப் போவோம்.

ரொம்ப ஒடம்பு முடியாம இருக்கறவங்களை நாங்களே டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய், கூட இருந்து பார்த்து அனுப்பிவெப்போம். யாருக்காவது மாத்திரை, மருந்து வாங்கணும்னா நாங்களே போய் வாங்கிக் கொடுப்போம். ரத்தம் தேவைப்பட்டாலும் உடனடியா ஏற்பாடு செய்வோம். ஸ்கேன் பண்ற இடம், எக்ஸ் ரே எடுக்குற இடத்துக்கெல்லாம் முடியாதவங்களைக் கூட்டிட்டு போய் நாங்களே சோதனைகள் முடியும்வரை கூட இருந்து உதவி செய்வோம்.

`கால்வலி’னு ஆஸ்பத்திரிக்கு வந்திருப்பாங்க, ஆனா, ஓ.பி சீட்டு குடுக்குறவங்க சரியா அதைக் காதுல வாங்காம, காதுவலி டாக்டரைப் பார்க்க சீட்டு கொடுத்து அனுப்பியிருப்பாங்க. அவங்களும் அங்கே போய்ட்டு, பார்க்க மாட்டாங்கனு சொன்ன பிறகு திரும்பி வருவாங்க. இதனாலயே, நாங்க ஓ.பி சீட்டுல எழுதியிருக்கிறதை மட்டும் பார்த்து யாரையும் அனுப்பிவைக்க மாட்டோம். சீட்டு எடுத்துக்கிட்டு வர்றவங்ககிட்ட `என்ன பிரச்னை?’னு விசாரிப்போம். ரெண்டையும் சரிபார்த்துத்தான் அனுப்புவோம்.

ஒருவேளை தப்பா எழுதியிருந்தா, நாங்களே போயி மாத்தி சீட்டு எழுதி வாங்கிக் குடுத்து அவங்களை அனுப்பிவைப்போம். எங்ககிட்ட ஹாஸ்பிட்டலோட மேப் இருக்கு. டாக்டர்ஸ் ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு காப்பி கொடுத்திருக்கோம். ஹாஸ்பிட்டல்ல யாருக்கு எந்த இடம் தெரியலைனாலும் எங்ககிட்டதான் வருவாங்க. இங்கே வேலை பார்க்குற ஸ்டாஃப்ஸ் எல்லாருக்கும் எங்களை நல்லாத் தெரியும். நாங்க போனா முன்னுரிமை குடுப்பாங்க. சேவை செய்யணும்கிற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும். கோயில், குளத்தைப் புனரமைச்சா புண்ணியம் கிடைக்கும்னு எல்லாரும் வர்றாங்க, ஆஸ்பத்திரிக்கு சேவை செய்ய வரணும்னா பயப்படுறாங்க, ரொம்ப யோசிக்கிறாங்க. பலருக்கு இதோட அருமை புரியறதில்லை. என்னைவிட வயசானவங்கல்லாம் இங்கே வந்து சேவை செஞ்சுகிட்டு இருக்காங்க. இளையதலைமுறையினர் எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து, எங்களோட இணைஞ்சு சேவை செஞ்சா இன்னும் சிறப்பாக இருக்கும்’’ என்கிறார் இன்னொரு தன்னார்வலர் ராஜேஸ்வரி.

குரோம்பேட்டையிலிருந்து வந்து உதவி செய்பவர் மற்றொரு தன்னார்வலரான சீனிவாச ராகவன். "பணம் இல்லாமகூட இருந்துடலாம். ஆனா, நோய் நொடியோட வாழுறது ரொம்பக் கஷ்டம். ஏழைகளுக்குத் தனியார் ஆஸ்பத்திரிக்குப் போகிற அளவுக்குப் பண வசதி இல்லை. அதனாலதான் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு வர்றாங்க. ஏற்கெனவே உடலளவுல பலவீனமடைஞ்சுதான் இங்கே வருவாங்க. இங்கே வந்து வழி தெரியாம அலைஞ்சா, மனசளவுலயும் பலவீனப்பட்டுப் போவாங்க. யாரும் அப்படிக் கஷ்டப்படக் கூடாதுங்குறதுதான் எங்க நோக்கம். அதுனாலதான் என்னால முடிஞ்ச உதவியைச் செய்யலாம்னு வந்துகிட்டு இருக்கேன்’’ என்று சொல்லிவிட்டுத் தன் பணியைத் தொடர்கிறார் 65 வயதைக் கடந்த முன்னாள் அரசு ஊழியர் சீனிவாச ராகவன்.

ஏழெட்டு வருடங்களாக தொடர்ந்து வந்து மக்களுக்கு உதவி செய்துவரும் 73 வயதான ரகுநாதனிடம் பேசினோம்... "என் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற நாசரேத். நான் மூணாவது வரைக்கும் படிச்சிருக்கேன். இங்கிலீஷ் நல்லா வாசிப்பேன். 1967-ல இருந்து சென்னையிலதான் இருக்கேன். பழைய இரும்பு, விறகு வியாபாரம்தான் பார்த்துட்டு இருந்தேன். இங்கே வர ஆரம்பிச்சதுக்கு அப்புறம் வியாபாரத்துக்குப் போறது இல்லை. வாரத்துல நாலஞ்சு நாள் வந்துடுவேன்.

என் மனைவி அம்பிகா. அவ இறந்து 15 வருஷம் ஆச்சு. என் பேத்திக்கு என் மனைவி பேரைத்தான் வெச்சிருக்கோம். ரெண்டு பசங்க... ஒருத்தன் ரகுபதி, இன்னொருத்தான் பசுபதி . அவங்ககூடதான் அயனாவரத்துல இருக்கேன். ட்ராவல்ஸ் வெச்சிருக்காங்க. வியாபாரத்தை விட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு வர்றதுக்கு என் பசங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. அவங்களே பஸ்ஸுக்கு காசு கொடுத்து அனுப்பிவெப்பாங்க. ஏழைகளுக்கு உதவி செய்யுறது அந்த சாமிக்கே உதவி செய்யுறது மாதிரி. அந்த சாமிக்கே சேவை செய்யுறதா நினைச்சுதான் நான் செஞ்சுட்டு இருக்கேன்." 

அடுத்த கட்டுரைக்கு