பிரீமியம் ஸ்டோரி
ஈஸி 2 குக்

கிரீன் பீஸ் கார்ன் பேல்

தேவையானவை

பொடியாக நறுக்கிய வெங்காயம், வேகவைத்து  தோல் நீக்கிய உருளைக்கிழங்கு - தலா 1/4 கப்

வேகவைத்த பச்சைப்பட்டாணி, ஸ்வீட் கார்ன் - தலா 1/2 கப்

பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பேரீச்சம்பழம், வெள்ளம், புளியால் தயாரிக்கப்பட்ட மீட்டா சட்னி - 1/4 கப்

மாங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்

மாதுளை முத்துக்கள் - 2 டீஸ்பூன்

ஓமப்பொடி - 1/4 டீஸ்பூன்

ஈஸி 2 குக்

செய்முறை

கடாயில் எண்ணெயை சூடுசெய்து, சீரகம் போட்டு வெடித்த பிறகு, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். உருளை, பட்டாணி, ஸ்வீட் கார்ன் கலந்து சில விநாடிகள் வதக்கி இறக்க வேண்டும். ஆறிய பிறகு, நறுக்கிய தக்காளி, உப்பு, மீட்டா சட்னி, மாங்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி, பரிமாறும் பவுலில் இவற்றைக் கொட்டி, மேலே கொத்தமல்லி, ஓமப்பொடி, மாதுளை முத்துக்களைத் தூவி அலங்கரிக்க வேண்டும்.

பலன்கள்

வேகவைக்கப்பட்ட பொருட்கள் இதில் கலந்திருப்பதால்,  வயிறு நிறைந்த உணர்வைத் தரும் சத்தான உணவு.

புரதம், மாவுச்சத்து, வைட்டமின், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன.

நார்சத்து இருப்பதால், மலச்சிக்கல் பிரச்னை தீரும். காலை, மாலை என ஏதாவது ஒருவேளை இதைச் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மாலை ஸ்நாக்ஸாகத் தயாரித்துத் தருவது நல்லது.

ஓட்ஸ் ஆப்பிள் மில்க் ஷேக்

தேவையானவை

தோல் நீக்கிச் சதுரங்களாக நறுக்கிய ஆப்பிள் - 1

ஓட்ஸ் - 1 கப்

காய்ச்சி ஆறவைத்த பால் - 2 கப்

உலர்ந்த திராட்சை - 2 டீஸ்பூன்

தேன் - சுவைக்கேற்ப

ஈஸி 2 குக்

செய்முறை

வெறும் வாணலியில் ஓட்ஸைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வறுக்க வேண்டும். இளஞ்சூடான நீரில் உலர் திராட்சையை ஊறவைக்க வேண்டும். மிக்ஸியில் உலர்ந்த திராட்சை, ஆப்பிள், சூடு ஆறிய ஓட்ஸ், ஆறிய பால், தேன் கலந்து அரைத்து, கிளாஸில் ஊற்றிக் குடிக்கலாம்.

பலன்கள்

கால்சியம், வைட்டமின்கள், மாவுச்சத்து நிறைந்தது. எலும்புகள், வயிற்றுப்பகுதி வலுப்பெறும்.

காலை உணவுடன் சேர்த்துச் சாப்பிட, சரிவிகித உணவாக இருக்கும்.

உடல்பருமனாக இருப்பவர்கள் இவற்றை மட்டும் காலை உணவாகச் சாப்பிடலாம். நார்மலாக இருப்போர், காலை உணவுக்குப் பிறகு 11 மணி அளவில் இதைச் சாப்பிடலாம்.

குழந்தைகளுக்குத் தினமும் காலையோ மாலையோ குடிக்கக் கொடுக்கலாம்.

- ப்ரீத்தி, படங்கள்: எம்.உசேன்

கே.எழிலரசன், திருச்சி.

ஈஸி 2 குக்“எனக்கு வயது 22. சில வருடங்களாக இளநரை உள்ளது. நரை அதிகமாகிவிட்டதால், சில மாதங்களாக டை உபயோகித்துவருகிறேன். இதனால், தலையில் அரிப்பு ஏற்படுகிறது. இளநரையைப் போக்க இயற்கையான வழிகள் உண்டா?”

டாக்டர் கி.கலைச்செல்வி, சித்தமருத்துவர்.

``இன்றைய இளைஞர்களின் மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்று இளநரை. ஊட்டச்சத்துக் குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், சுற்றுச்சூழல் மாசு, மோசமான நீரில் குளிப்பது, வேதிப்பொருள் அதிகம் உள்ள ஷாம்புவைப் பயன்படுத்துவது, மனஅழுத்தம் போன்ற பல காரணங்களால் இளநரை ஏற்படுகிறது. டையைப் பயன்படுத்துவதால், கண் எரிச்சல், தலை அரிப்பு, முடி உதிர்தல், முகத்தில், தலையில் தோலின் நிறம் மாறுதல், கட்டிகள் தோன்றுதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

ஈஸி 2 குக்

தொடக்க நிலை என்றால், தினமும் தலைக்குத் தேங்காய் எண்ணெய் தேய்த்து, வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய் குளியல் எடுப்பது சுலபமான தீர்வு.ஷாம்பு பயன்படுத்துவதைத் தவிர்த்து, சீயக்காய், பூவந்திக்கொட்டை, ஆவாரம்பூ, பாசிப் பயறு, வெந்தயம், செம்பருத்திப்பூ பொடி சேர்ந்த கலவையைப் பயன்படுத்தலாம். உணவில், நெல்லிக்காய், வெந்தயம், மாதுளம்பழம், பேரீச்சை, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசால் முடி பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளவும். திரிபலா கற்பம், கரிசாலைக் கற்பம் போன்ற மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டால், இளநரை, முடிஉதிர்தல், பொடுகுத்தொல்லை கட்டுக்குள் வரும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு