Published:Updated:

எலும்புகளை ஒருவரிடமிருந்து எடுத்து இன்னொருவருக்குப் பொருத்த முடியுமா?

எலும்புகளை ஒருவரிடமிருந்து எடுத்து இன்னொருவருக்குப் பொருத்த முடியுமா?
எலும்புகளை ஒருவரிடமிருந்து எடுத்து இன்னொருவருக்குப் பொருத்த முடியுமா?

முதியவர்களுக்காகச் செயல்படும் ஓர் ஆதரவற்றோர் இல்லம் இன்று தமிழகத்தையே கதிகலங்க வைத்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் அருகே இருக்கும் பாலேஸ்வரம் கிராமம்... அங்கே இருக்கிறது `செயின்ட் ஜோசப்’ என்ற முதியவர்களுக்கான கருணை இல்லம். இங்கு ஆதரவற்ற வயதானவர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கருணை இல்லத்தில் நோயாலும் முதுமையாலும் இறந்துபோகும் முதியோரின் எலும்புகள், மருந்து தயாரிப்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

அது மட்டுமன்றி,  இந்தச் செய்தி சேவை மனப்பான்மையுடன் செயல்படும் மற்ற முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களின் சேவைகளையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இதுபோன்ற காப்பகங்களே கதியென வாழும் வயதானவர்களையும், ஆதரவற்றோர்களையும் பதறவைத்திருக்கிறது.  

`உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவுக்கு மருத்துவத்துறை முன்னேறியிருக்கிறது. ஆனால் ரத்தம், கிட்னி, கண், பெண்ணின் கரு முட்டை, எலும்பு,  தலைமுடி... என மனிதர்களின் உடல் உறுப்புகளெல்லாம் இன்றைக்குப் பல கோடி ரூபாய்கள் புழங்கும் விற்பனைப் பொருள்களாக மாறிவிட்டன’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர், தன் பழுதடைந்த கிட்னிக்கு மாற்று வேண்டும் என்று விளம்பரம் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு இந்தியாவிலிருந்து சிறுநீரகம் ஏற்றுமதியாகும் அளவுக்கு 'சிவப்புச் சந்தை' எனப்படும் உடல் உறுப்புகள் விற்பனை கன ஜோராக நடந்துகொண்டிருக்கிறது. இதைச்  சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஸ்கார்ட் கார்னி (Scott Carney) என்பவர் 'தி ரெட் மார்கெட்' (The Red Market)  என்னும் தன் புத்தகத்தில் அம்பலப்படுத்தியிருந்தார். 

`உண்மையில், எலும்பின் தேவை மருத்துவத்தில் அவ்வளவு முக்கியமானதா... மருத்துவத்தில் எலும்பு  எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது... இறந்தவர்களின் எலும்புகளை எடுத்து வேறு ஒருவருக்குப் பொருத்த முடியுமா?'  - எலும்பு அறுவைசிகிச்சை நிபுணர் செந்தில் வேலனிடம் கேட்டோம்.

"மருத்துவத்தில் எலும்புகள்  பல்வேறு வகையில் பயன்படுகின்றன. எலும்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகவும், மருந்துகள் தயாரிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் சாதாரண எலும்பு மஜ்ஜை முதல் இடுப்பு மாற்று அறுவைசிகிச்சை வரை சர்வசாதாரணமாக நடக்கிறது.  

பிளாஸ்டிக் சர்ஜரியில் தொடையில் உள்ள தோலை எடுத்து, முகத்தில் வைத்து சிகிச்சை அளிப்பது பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதுபோல, 'மாற்று அறுவைசிகிச்சை' மூலம்  எலும்புகளையும் ஓரிடத்திலிருந்து எடுத்து, மற்றோரிடத்தில் பொருத்தலாம். இதை `ஆட்டோகிராஃப்ட்’ (Autograft) என்பார்கள். 

மனிதர்களிடம் தேவையில்லாத உடல் எலும்புகளும் உள்ளன. இப்படி அதிகம் பயன்படாத எலும்புகளை மற்றவர்களுக்கு மாற்றும் வழக்கமும் இருக்கிறது. உதாரணமாக,  அம்மாவிடமிருந்து குழந்தைக்கோ, உறவினர்களிடமிருந்து மற்றவர்களுக்கோ எலும்புகளை எடுத்துப் பொருத்தலாம்.

பொதுவாக இது போன்ற எலும்பு மாற்று அறுவைசிகிச்சையை இறந்தவர்களிடமிருந்து எடுத்துதான்  மற்றவர்களுக்குப் பொருத்துவார்கள்.  இதற்கு 'அல்லோகிராஃப்ட்' (Allograft) என்று பெயர். இறந்தவர்களின் எலும்பை எடுத்து, பதப்படுத்தி வைத்து தேவைப்படுபவர்களுக்குப் பயன்படுத்துவார்கள். இதற்காக, மருத்துவமனைகளில் எலும்பு வங்கிகளும் இருக்கின்றன. இறந்தவருக்கு ஹெச்.ஐ.வி போன்ற நோய் தொற்றுகள் இல்லாமல் இருக்கிறதா என்பதையெல்லாம் பரிசோதித்து, பிறகே  பதப்படுத்தி  வைத்திருப்பார்கள்.

ஆனால், எலும்பு என்பது இதயம், சிறுநீரகம், நுரையீரல்போல, உயிர் பறிக்கும் உடல் உறுப்பல்ல. எலும்பு பலவீனமானாலோ அல்லது நொறுங்கிப் போயிருந்தாலோகூட உயிரிழப்பு என்ற நிலை ஏற்படாது. பாதிக்கப்பட்ட உறுப்பைப் பயன்படுத்த முடியாமல் போகலாம் அல்லது கால்கள் போன்றவற்றில் எலும்பு சேதமடைந்திருந்தால் நடமாட முடியாத நிலை ஏற்படலாம். அவ்வளவுதான். இதனால் பெரும்பாலும் வசதியானவர்களுக்கு மட்டுமே எலும்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. அதேபோல, எலும்புத் தேவைக்கு

மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகளும் பயன்படுகின்றன. 

மருத்துவத்தில் எலும்பு, கால்சியம் மாத்திரைகள் உள்ளிட்ட சில மருந்துகள் தயாரிப்பில் பயன்படுவதும் உண்மை. ஆனால், கால்சியம் மாத்திரைகள், சப்ளிமென்ட்ரி போன்றவற்றுக்குப் பவழப் பாறைகள் (coral) அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பால் போன்ற பல பொருள்களிலிருந்தும் கால்சியம் கிடைக்கிறது. அதனால், எலும்புக்காக இப்படி வியாபாரம்  நடக்குமா என்பது கேள்விக்குறிதான். ஒருவேளை வேறு உடல் உறுப்புகளுக்காகக்கூட இது நடந்திருக்கலாம்" என்கிறார் செந்தில் வேலன்.

இதுகுறித்து மூத்த முதியோர் நல மருத்துவர் நடராஜன் சொல்கிறார்... "நானும் செய்திகளைப் பார்த்தேன். அதில் கூறப்பட்டிருக்கும் எண்ணிக்கை மிகவும் அதிர்ச்சியைத் தருகிறது. ஒருவர் இறந்திருக்கலாம்... அவருடைய உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்றால்கூட நம்பலாம். ஆனால், நூற்றுக்கணக்கில் நடந்தாகச் சொல்லப்படும் செய்திகள் நம்பும்படியாக இல்லை. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முதியோர்கள் இல்லம், சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படவேண்டிய ஒன்று. இதுபோன்ற இல்லங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவேண்டியது அரசின் கடமை" என்றார் அவர். 

உடல் உறுப்புகளிலேயே அதிக விலை உடையது எலும்பு மஜ்ஜைதான் என்கிறார்கள். சர்வதேச மார்க்கெட்டில் வெறும் 10 கிராம் எலும்பு மஜ்ஜை 23,000 டாலர் வரை  விலைபோகுமாம்.  

மருத்துவ உலகம் குறித்து சாதாரண மனிதர்களுக்குப் போதிய விழிப்புஉணர்வு இல்லை. அது மர்மமான பகுதியாகவே இருக்கிறது. வியாசர்பாடி போன்ற அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரத்த விற்பனை, கருமுட்டை விற்பனை சத்தமில்லாமல் நடப்பதாகவும் அப்பகுதியில் பணியாற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

இதுபோன்ற செய்திகள் வெளியாகிறபோது, பரபரப்பாகப் பேசுவதும் பிறகு அடங்கி விடுவதும் இயல்பாகிவிட்டது.  அரசு, இதையே தக்க தருணமெனக் கருதி தீவிர விசாரணை நடத்த வேண்டும். இதுமாதிரியான ஆதரவற்றோர் இல்லங்கள், மருத்துவமனைகளைத் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.