Published:Updated:

அந்தப்புரம் - 31

அந்தப்புரம் - 31
பிரீமியம் ஸ்டோரி
News
அந்தப்புரம் - 31

ஓவியம்: ஸ்யாம்

அந்தப்புரம் - 31

“இரண்டு இதழ்களாக ஆணுறையைப் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அதைப் பயன்படுத்துவதில் என்ன சந்தோஷம் வந்துவிடப்போகிறது. ரெயின்கோட் போட்டுக்கொண்டு மழையில் நனைவதுபோலத்தானே காண்டம் அணிவதும்?”

ஜி.ராகுல், சென்னை.


“தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்ப்பதும், பாலியல்ரீதியாகப் பரவும் நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்வதும் முக்கியம்தானே? ஆணுறை அணிவதால் இவை சாத்தியம் ஆகின்றன. சந்தோஷம் என்று நீங்கள் சொல்வது வெறும் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்பைப் பொருத்தது அல்ல... அது உங்கள் மனதில் இருக்கிறது. ரெயின்கோட் அணிந்து செல்வது எந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையானது என்று உங்களுக்கே நன்கு தெரியும். மழைகோட் போட்டுச் செல்லும்போது உடலைப் பாதுகாத்துக்கொள்கிறோம். அதேபோல், ஆணுறை அணிவதால் தேவையற்ற சமயங்களில் கரு உருவாவது, ஹெச்.ஐ.வி எய்ட்ஸ், எஸ்.டி.டி போன்ற பால்வினை நோய்கள் போன்றவற்றில் இருந்து தப்பிக்க முடியுமே.”

“நான் தொடர்ந்து ஆணுறை அணிந்துதான் உடலுறவுகொண்டேன். ஆனாலும், என் மனைவி கர்ப்பம் தரித்துவிட்டார். ஆணுறையை மீறியும் கருத்தரிப்பது சாத்தியமா?”

ஜெ.தினேஷ் குமார், மதுரை.

“ஆணுறையிலும் சில பிரச்னைகள் உள்ளன. இதில் முக்கியமானது, தயாராகும்போதே அதில் மிகமிகச் சிறிய துளை விழுந்திருக்கலாம். ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்கள், மின்னணு பரிசோதனைகள் செய்து உறுதிப்படுத்திய பிறகுதான் சந்தைக்குக் கொண்டுவருகின்றன. இருப்பினும், இதுபோன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆணுறையின் முனையில் சிறு பாக்கெட் போன்ற அமைப்பு இருக்கும். உறவுக்குப் பிறகு வெளிப்படும் விந்து திரவத்தைச் சேகரிக்கும் வகையில் இது இருக்கும். ஆணுறை அணியும்போது, இதனுள் காற்று சென்றுவிட்டால், விந்து திரவத்தை வெளியேற்றும் நேரத்தில் அதிகப்படியான அழுத்தம் காரணமாக ஆணுறை கிழிந்துவிடும். விந்து, மணிக்கு 40 முதல் 90 கி.மீ வேகத்தில் வெளிப்படும். ஆணுறை பாக்கெட்டில் ஏற்கெனவே காற்று நிரம்பியிருக்கும்போது, அதில் அதிக வேகத்துடன் விந்தணு வெளிப்பட்டால், அழுத்தம் அதிகரிக்கும். ஆணுறை கிழியும்போது, விந்து  பெண்ணுறுப்புக்குள் சென்றுவிடும். (எனவே, ஆணுறை அணியும்போது, காற்றுப் புகாதவாறு அணிய வேண்டும்.)

சிலர், அதிகப்படியான வழுவழுப்புத் தன்மைக்காக வாசலைன்  போன்ற பெட்ரோலிய பொருளையும் பயன்படுத்துவார்கள். இதுவும் லாட்டெக்ஸ் ரப்பரால் ஆன ஆணுறையைப் பாதித்துத் துளை ஏற்படச் செய்யலாம். கூடுதல் வழுவழுப்புத் தேவைப்படுபவர்கள் கே.ஒய் ஜெல்லி போன்ற தாவரம் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தலாம். பொதுவாக, ஸ்பேர்மிஸைட் உடன் ஆணுறையைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது.”

அந்தப்புரம் - 31

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“நான் ஆணுறை அணிந்து உடலுறவுகொள்ளும்போது, சில நேரங்களில் கிழிந்துவிடுகிறது. இந்த நேரத்தில் கரு உருவாகாமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்?”

பெயர் வெளியிட விரும்பாத வாசகர், சென்னை.

“பெண்ணின் பிறப்புறுப்பை (வெஜைனா) உடனடியாக கான்ட்ராசெப்டிவ் ஃபோம், ஜெல்லி அல்லது கிரீம் போன்றவற்றால் நிரப்ப வேண்டும். இவை, தானாக நீர்க்கும் (Dissolve) வரை விட்டுவிட வேண்டும். இது தவிர, அவசரகால வாய்வழி கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.”

“எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்தடை செய்துகொள்ளவில்லை. அவர் வெளியூர் பயணங்கள் அதிகம் செல்வார். அதனால், எப்போதாவதுதான் தாம்பத்யம். இது, எப்போது நிகழும் என்று எல்லாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. இதற்காகத் திட்டமிடுவது எல்லாம் இல்லை. எனவே, உடலுறவுகொள்ளும்போது எல்லாம் நான் எமர்ஜென்ஸி கான்ட்ராசெப்ஷன் எடுத்துக்கொள்ளலாமா?”

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.


“உங்களுக்கு எமெர்ஜென்ஸி கருத்தடை மாத்திரைகளை நான் பரிந்துரைக்க மாட்டேன். வழக்கமாகப் பயன்படுத்தும் கருத்தடை வழிமுறைகளுக்கு மாற்றாக எமெர்ஜென்ஸி கருத்தடை மாத்திரையை யாரும் பரிந்துரைக்க வில்லை. வழக்கமாக எடுத்துக்கொள்ளும் வழிமுறைகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால்மட்டுமே இதைப் பரிந்துரைக்கிறோம்.”

“எமெர்ஜென்ஸி வாய்வழி கருத்தடை மாத்திரைகள் பற்றி விளக்கமாகச் சொல்ல முடியுமா? எந்த மாதிரியான சூழலில் அதைப் பயன்படுத்த வேண்டும்?”


கதிரேசன், திருச்சி.

“எந்த ஒரு கருத்தடைமுறையும் பின்பற்றப்படவில்லை எனும்போது கீழ்கண்ட சூழ்நிலைகளில் இதைப் பயன்படுத்தலாம்.”

ஆணுறையில் தயாரிப்புக் குறைபாடு. ஆணுறையைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்றவற்றால் விந்து வெளியேறிவிடும்போது...

கேப், டயாப்ரம் பொருத்தப்பட்ட இடத்திலிருந்து விலகிவிடுதல்...

விந்தணு வெளியே வரும் நேரத்தில் ஆணுறுப்பை எடுத்துவிடும் முறையில் தவறு நேர்தல்...

பாதுகாப்பான இயற்கைமுறைக் கருத்தடையில், காலத்தைக் கணிப்பதில் தவறு ஏற்படுதல்... போன்ற சமயங்களில் இந்த முறையைப் பயன்படுத்தலாம். சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுவது இல்லை.

“ஆண், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் அவனது ஆண்மை போய்விடுமா?”


கார்த்திகேயன், நெல்லை.

“ஆண் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்துகொள்வதன் மூலம் தேவையற்ற நேரத்தில் கரு உருவாகும் பிரச்னைத் தவிர்க்கப்படுவதால், தாம்பத்தியத்தில் கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கும். இந்த சிகிச்சையில், விந்து அணுக்கள் மற்ற திரவங்களுடன் கலந்து வெளிப்படுவது மட்டுமே தடுக்கப்படுகிறது. எனவே, வழக்கம்போல அவனால் முழுமையாகத் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியும். வழக்கம்போல, விந்து திரவத்தை வெளியேற்ற முடியும். அந்த திரவத்தில் விந்து அணுக்கள் இருக்காது, அவ்வளவுதான். இதனால், ஆண்தன்மைக்கான ஹார்மோனான டெஸ்டோஸ்டிரான் உற்பத்தியில் எந்தக் குறைவும் ஏற்படாது. ஆண்மை எந்த வகையிலும் பாதிக்கப்படாது. ஆண்கள் தாராளமாகக் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ளலாம்.”

அந்தப்புரம் - 31

“ஆண், குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டாலோ, அல்லது பெண் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டாலோ, மீண்டும் குழந்தை வேண்டும் என்றால், அதற்கு வாய்ப்பு உண்டா?”

மாலதி, சென்னை.


“உண்டு. ஆனால், வெற்றிவிகிதம் மிகக் குறைவுதான். சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் அனுபவம், ஆணுக்குக் குடும்பக்கட்டுப்பாடு செய்தபோது என்ன மாதிரியான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது, குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைசிகிச்சை செய்து எத்தனை காலம் ஆகிறது என்பவற்றைப் பொறுத்து வெற்றி விகிதம் மாறுபடும்.

ஆண், குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்து ஒரு வருடம் ஆகிவிட்டால், மீண்டும் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு, 50 சதவிகிதமாகக் குறைந்துவிடுகிறது. ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க, மீண்டும் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பும் குறைகிறது. இது, பெண்களுக்கும் பொருந்தும்.”

“எனக்கு இரண்டாவது பிரசவம் ஆகஸ்ட் மாதத்தில் நடக்க உள்ளது. குழந்தை பிறந்ததும் கருத்தடை அறுவைசிகிச்சை செய்துகொள்ள விரும்புகிறேன். ஆனால், என் கணவர் தடுக்கிறார். இதனால், தாம்பத்தியத்தில் பாதிப்பு வரும் என்கிறார். இது உண்மையா?”

தாரிணி, ஈரோடு.

“நிச்சயமாக இல்லை. முன்பே சொன்னதுபோல, தேவையற்ற கர்ப்பம் தடுக்கப்படுவதால், கூடுதல் மகிழ்ச்சிதான் கிடைக்கும். பெண்களுக்கான கருத்தடை அறுவைசிகிச்சையில், ஃபெலோபியன் குழாயில் முடிச்சுப் போடப்படுகிறது. இதில், பெண்ணின் பிறப்புறுப்பில் எந்தச் சிகிச்சையும் செய்யப்படுவது இல்லை. எனவே, தாம்பத்தியத் திருப்திக்கும் கருத்தடைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.”

பொதுவாக ஏற்படும் பாலியல் பிரச்னைகள், குறைபாடுகளைப் பற்றி அடுத்த இதழில் பேசுவோம்.

- ரகசியம் பகிர்வோம்