தொடர்
Published:Updated:

ஸ்வீட் எஸ்கேப் - 7

ஸ்வீட் எஸ்கேப் - 7
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்வீட் எஸ்கேப் - 7

சர்க்கரையை வெல்லலாம்

ஸ்வீட் எஸ்கேப் - 7

ர்க்கரை நோய் வந்துவிட்டால், ‘இனி அவ்வளவுதான், அடிக்கடி முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். சேமிப்பில் பெரும் பகுதி இதற்கே போய்விடும்’ எனப் பலரும் நினைக்கின்றனர். இதுவே, அவர்களுக்கு மிகப் பெரிய மனச்சுமையாக மாறிவிடுகிறது.

உண்மையில் அப்படி இல்லை. சர்க்கரை நோய் பற்றி மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டியது மிகவும் அவசியம். அவர் பரிந்துரைக்கும் பிரத்தியேகப் பரிசோதனையை, குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்துவந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் தவிர்க்க முடியும்.

இரண்டு கைகளும் சேர்ந்தால்தான் கைதட்ட முடியும். அதுபோல, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உங்களால் மட்டும் முடியாது; மருத்துவரும் இணைந்து செயலாற்றும்போது சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதற்கு, முதலில் உங்கள் தற்போதைய நிலையை அறிய வேண்டும். இதற்காக, சில பிரத்தியேகப் பரிசோதனையை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். எனவே, உங்கள் உடல்நலனில் அக்கறைகொண்ட, உங்கள் பிரச்னையைப் புரிந்து, உங்கள் நலனுக்காக நேரம் செலவிடும், உங்கள் வாழ்க்கைமுறையைத் தெரிந்த ஒரு மருத்துவர் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயைக் கட்டுக்குள்வைக்காததால் ஏற்படக்கூடிய மாரடைப்பு, பக்கவாதம், கால் புண் ஆறாத நிலை, சிறுநீரகப் பாதைத் தொற்று, சிறுநீரகச் செயல் இழப்பு போன்ற பிரச்னைகளுக்கு நாம் செலவிடும் தொகையைக் காட்டிலும், சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க நாம் செய்யும் செலவு மிகக் குறைவுதான். எனவே, ஆரம்ப நிலையிலேயே சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மிகப் பெரிய செலவுகளை நம்மால் தவிர்க்க முடியும். ஆனால், இன்றைய எதார்த்தமான வாழ்வில், நாங்கள் காண்பது, பெரும்பாலும் பாதிப்பு முற்றிய நிலையில்தான் மருத்துவரை நாடி வருகின்றனர். பெரும்பாலும், காலில் புண் ஆறாமல், காலை அகற்றும் நிலையில், மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்தான் மக்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர் என்பது வருத்தமான உண்மை. இன்றைக்கு சர்க்கரை நோயாளிகள் செய்யும் மிகப் பெரிய தவறு சுயமருத்துவம். சர்க்கரை நோய் கண்டறிந்த முதல் மாதத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள்.

ஸ்வீட் எஸ்கேப் - 7

ஒரு மாதம் கழித்து பரிசோதனை செய்வார்கள். அதில், சர்க்கரை அளவு இயல்புநிலையில் இருக்கும். உடனே தங்கள் குடும்பத்தினர், நண்பர்களிடம் இதுபற்றிப் பேசுகின்றனர். அவர்கள் டாக்டராக மாறி, ‘உன் சர்க்கரை அளவு கட்டுக்குள்தான் இருக்கிறது. எனவே, தேவை இல்லாமல் மருந்து, மாத்திரை எடுக்காதே’ என்கின்றனர். மேலும், மாற்று மருத்துவக் குறிப்புகளை அளித்து அதை பின்பற்றச் சொல்கின்றனர். அவருக்கு நல்லது செய்வதாக நினைத்து, எந்த ஓர் அறிவியல்பூர்வமான ஆய்வோ, ஆதாரங்களோ, சுகாதார அமைப்புகளோ, அரசாங்கமோ அறிவிக்காததைப் பரிந்துரைக்கின்றனர். சர்க்கரை நோயாளியோ, அவர்கள் சொன்னதை அப்படியே பின்பற்றி, டாக்டரை சந்திப்பதைத் தவிர்த்துவிடுகின்றனர்.

நாட்கள் செல்லச் செல்ல தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதையே மறந்துவிடுகின்றனர். இந்த நேரத்தில், கட்டுக்குள் இல்லாத சர்க்கரையானது, அவர்களுக்குக் காலிலோ, வேறு உறுப்பிலோ பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. அவர்களிடம் கேட்டோம் என்றால், சர்க்கரை அளவு அதிகமானதால்தான் தங்களுக்குப் பிரச்னை ஏற்பட்டது என்பார்கள். உண்மையில், இவர்கள் சர்க்கரை அளவை நீண்டகாலமாக கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர் என்பதே உண்மை. அப்போதுதான், தனக்கு முதலில் சிகிச்சை அளித்த டாக்டர் நினைவுக்கு வருவார். உடனே, அடித்துப்பிடித்து அவரிடம் சிகிச்சைக்காகச் செல்வார். அப்போது, பாதிப்பின் தன்மையைப் பொறுத்து, தங்கள் சேமிப்பில் இருந்து பெரும் பகுதியை சிகிச்சைக்காக செலவழிக்கும் நிலை ஏற்படுகிறது.

எந்த ஒரு மருத்துவமனைக்கும் சென்று, அங்கு கால் புண்ணுக்கு சிகிச்சை எடுத்துவருபவரிடம், “எப்படி இந்த பாதிப்பு ஏற்பட்டது?” என்று கேட்டுப்பாருங்கள். “சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கத் தவறியதன் விளைவு” என்பார்கள்.

இத்தனை ஆண்டு கால மருத்துவப்பணியில், சர்க்கரை நோய் வந்து 30 ஆண்டுகள் ஆகியும், சர்க்கரை அளவு மிகவும் கட்டுக்குள்வைத்து, எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத பலரைப் பார்த்திருக் கிறேன். இதற்கு நாங்கள் பரிந்துரைப்பது, குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்க்கரை அளவைப் பரிசோதனைசெய்து, சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதுதான். சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைத்திருந்தால், சர்க்கரை நோய் இல்லாதவர்களைக் காட்டிலும், அதிக காலம் வாழ முடியும். அடுத்த இதழில், சர்க்கரை நோயாளிகளுக்கு தெரிந்திருக்க வேண்டிய ஏ, பி, சி பற்றிச் சொல்கிறேன்.

ஸ்வீட்டர்: சர்க்கரை உங்களைக் கட்டுப்படுத்துவதற்கு முன் நீங்கள் அதைக் கட்டுப்படுத்துங்கள்.

- தொடரும்

டயாபடீஸ் டவுட்

“எனக்கு மிகச் சமீபத்தில்தான் சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. எப்போது மருத்துவரைச் சந்திப்பது... எப்படி சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைப்பது என்ற குழப்பம் நிலவுகிறது டாக்டர்.”

“உங்களுக்கு மட்டும் அல்ல. பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் சந்தேகம் இது. முதலில் உங்கள் ரத்தப் பரிசோதனை முடிவுகளுடன் மருத்துவரை அணுகுங்கள். அவர் சர்க்கரை அளவைப் பொறுத்து மருந்துகளைப் பரிந்துரைத்து, இரண்டு வாரங்கள் கழித்தோ, ஒரு மாதம் கழித்தோ வரச் சொல்வார். அப்போது, மீண்டும் ஒருமுறை பரிசோதனைசெய்து, சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறதா என ஆய்வுசெய்வார். சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரை அணுகி ஆலோசனை பெற்றால் போதும். அதாவது, ஆண்டுக்கு நான்கு முறை டாக்டரைச் சந்தித்தால்போதும். அது, உங்கள் கார் அல்லது பைக் சர்வீஸைவிடக் குறைவுதான். உங்கள் ஆரோக்கியத்துக்காக இதைக்கூட செய்ய முடியாதா என்ன? சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதன்  மூலம், டயாபடீஸ் காம்ப்ளிகேஷன்களைத் தவிர்க்கலாம்.”