Election bannerElection banner
Published:Updated:

கலர்ஃபுல் பண்டிகை ஹோலி... கலரில் கவனம் மக்களே! #HoliFestival

கலர்ஃபுல் பண்டிகை ஹோலி... கலரில் கவனம் மக்களே! #HoliFestival
கலர்ஃபுல் பண்டிகை ஹோலி... கலரில் கவனம் மக்களே! #HoliFestival

கலர்ஃபுல் பண்டிகை ஹோலி... கலரில் கவனம் மக்களே! #HoliFestival

"ஹோலிப் பண்டிகை வந்தாலே இப்படித்தான்... ஏரியாக்குள்ள வர்ற எல்லார் மேலயும் கலர் பவுடரைப் பூசிவிட்டுருவாங்க. யாரு, என்னனு எதையும் பார்க்க மாட்டாங்க. எந்தப் பக்கமிருந்து பலூன் வரும்னே தெரியாது...’’ என்கிறார் சென்னை, பிராட்வேயைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர். `ஹோலி...’ என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே பலருக்கும் நினைவுக்கு வருவது வண்ணங்களே. இரண்டு நாள் ஹோலிப் பண்டிகையில், முதல் நாள் 'ஹோலிகா தஹான்' (Holika Dahan) எனப்படும் ஹோலிகா அரக்கியை பகவான் விஷ்ணு கொல்வது போன்ற நிகழ்வுகள் இருக்கும். அடுத்த நாள், ரங்வாலி ஹோலி (Rangwali Holi). மஞ்சள், சிவப்பு, ரோஸ், பச்சை, ஊதா, ஆரஞ்சு என... எதிரிலிருப்பவர் முகத்தில் நேரடியாக வண்ணப் பொடிகளை அப்பிவிடுவது, பலூனில் தண்ணீரையும் கலர் பவுடரையும் கரைத்து பலூனை வீசியடிப்பது, விளையாட்டுத் துப்பாக்கியில் (Water Guns) கலரையும் நீரையும் கலந்து சுடுவது... எனப் பல டெக்னிக் வைத்திருப்பார்கள் சிறுவர்கள். எப்படியாவது மற்றவர்கள் மீது வண்ணங்களை அப்பிவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஒரே எண்ணமாக இருக்கும். சிறியவர்-பெரியவர், நண்பர்-பகைவர் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாற உதவும் `கலர்ஃபுல்  ஃபெஸ்டிவல்’ ஹோலி. 

ஹோலி, 'கலர் ஃபுல்' ஃபெஸ்டிவலாக இருந்தாலும், நம் மீது பூசப்படும் அல்லது தெளிக்கப்படும் அந்த வண்ணங்களை எளிதாகத் தோலிலிருந்து அழித்துவிட முடியாது. அந்த வண்ணங்களில் சேர்க்கப்படும் சில கெமிக்கல்கள், தோலுக்குத் தேவையில்லாத அலர்ஜியைக் கொடுக்கும். கொண்டாட்ட மனநிலையில் இருப்பவர்களால் இதைப் பற்றி சிந்திக்க முடியாது. ``இந்த வண்ணங்களால்

ஏற்படும் தோல் பிரச்னைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?’’ என்று தோல் நோய் சிறப்பு மருத்துவர் ஷரதாவிடம் கேட்டோம்... 

"பல நேரங்களில் கடைகளில் விற்கப்படும் பவுடர்கள், தொழிற்சாலைச் சாயங்களிலிருந்து தயாரிக்கப்பட்டதாக இருக்கின்றன. காப்பர் சல்ஃபேட்டிலிருந்து (Copper Sulphate) பச்சை நிறம், க்ரோமியம் ஐயோடைடிலிருந்து (Chromium Iodide) ஊதா நிறம், அலுமினியம் புரோமைடிலிருந்து (Aluminium bromide) சில்வர் நிறம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். வண்ணத்தில் ஷைனிங் வேண்டும் என்பதற்காக மைக்கா (Mica), கண்ணாடி போன்றவற்றையும் சிலர் சேர்க்கிறார்கள். இது போன்ற கெமிக்கல்கள் தோலில்  நேரடியாகப் படும்போது, சருமப் பாதிப்புகள் உருவாகும். காப்பர் சல்ஃபேட் கலந்த வண்ணப் பொடிகள், கண் பாதிப்பு, பார்வைக் குறைபாடு, அலர்ஜி போன்ற பிரச்னைகளை உருவாக்கும். தோல் பாதிப்புகளைப் பொறுத்தவரை சிலருக்கு, உடனடியாக பிரச்னை எதுவும் ஏற்படவில்லையென்றாலும், நான்கு வாரங்கள் கழித்துக்கூட ஏற்படலாம். தோல்கள் சிவந்திருப்பது அல்லது வறண்டிருப்பது, சிவப்புத் தழும்புகள்... என எத்தனை நாள்கள் கழித்து இந்த அறிகுறிகள் தெரிந்தாலும், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். வண்ணங்களால் கண்கள் பாதிக்கப்படுவதும் உண்டு. முகத்தில் சாயத்தைப் பூசும்போது, அது நேரடியாகக் கண்களில் படுவதுதான் இதற்கு முக்கியக் காரணம். எனவே, ஹோலி கொண்டாட்டத்தின்போது கண்களில் கவனமாக இருக்க வேண்டும்.

ஹோலி... சில பாதுகாப்பு வழிமுறைகள்...

# வீட்டிலேயே கலர் பவுடர் தயாரித்துப் பயன்படுத்துவது நல்லது. கொண்டாட்டத்தின்போது, முழுக்கை சட்டை, பேன்ட் அணிந்துகொள்வது, பெண்கள் சுடிதார் அணிந்துகொள்வது சருமத்தைப் பாதுகாக்கும். கண்ணில் கண்ணாடி அணிந்துகொண்டால் கண்களையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.

# ஹோலி கொண்டாடி முடித்தவர்கள், தோலில் உள்ள கலரை உடனடியாகச் சுத்தப்படுத்திவிடவும். கலரில் நிறமிகள் அதிகம் இருக்குமென்பதால், எளிதில் வண்ணக் கறை போய்விடாது. இதுபோன்ற பிரச்னை இருப்பவர்கள், கீழ்க்காணும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும்...

* கலர் பட்ட தோல் பகுதியில், லேசாக எண்ணெயைத் தடவி, குளிர்ந்த நீரில் மெதுவாகத் துடைக்கவும். கலர் உடலில் படுவதற்கு முன்னரே எண்ணெய் தேய்த்திருந்தால், தண்ணீர்பட்டவுடன் கறை நீங்கிவிடும்.

* முகத்தில் பட்ட கலரைப் போக்குவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைப் பயன்படுத்தலாம். பஞ்சைக்கொண்டு முகத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து, மெதுவாகக் கழுவினால், வண்ணம் எளிதாக நீங்கிவிடும்.

*தலைமுடியில் கலர் பட்டிருப்பவர்கள், சீயக்காய், ஹெர்பல் ஷாம்பூ போன்றவற்றைப் பயன்படுத்தி கலரை நீக்கலாம்.

# `எஸ்.பி.எஃப்’ எனப்படும் (SPF - Sun Protection Factor) அளவு 30 இருக்கும் சன்ஸ்க்ரீன் லோஷனை, கலர் பட்ட அனைத்து இடங்களிலும் மிருதுவாகத் தேய்த்துக்கொள்ளவும்.

# கலரை நீக்கிய பின்னரும் கண்ணில் உறுத்தல் இருந்தால், தண்ணீரில் கண்களை நனைக்கவும். எந்தச் சூழலிலும் கைகளால் கண்ணைக் கசக்கிவிடக் கூடாது. இது தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கும்.

மகிழ்ச்சியோடு சேர்த்து, சில நேரங்களில் பாதிப்புகளையும் ஹோலி கொண்டு வந்துவிடும் என்பதால், பாதுகாப்பாகக் கொண்டாடுங்கள்!’’ என்றார் ஷரதா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு