Published:Updated:

இதயம் காக்கும் சிகிச்சைகள்!

இதயம் காக்கும் சிகிச்சைகள்!

இதயம் காக்கும் சிகிச்சைகள்!

இதயம் காக்கும் சிகிச்சைகள்!

இதயம் காக்கும் சிகிச்சைகள்!

Published:Updated:
இதயம் காக்கும் சிகிச்சைகள்!
இதயம் காக்கும் சிகிச்சைகள்!

தயம், மனித உடலின் மகத்தான இன்ஜின். ஆனால், மானுட வாழ்வின் ஜீவாதாரமான இந்த அற்புத உறுப்பைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புஉணர்வு குறைவு. இந்தியாவில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 24 லட்சம் பேர் இதய நோய்களால் உயிர் இழக்கிறார்கள்.

இதய நோய் என்றதும் பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு மட்டும்தான் தெரியும். பரபரப்பாக வேலைக்குச் செல்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், விளையாட்டு வீரர்களுக்கு கார்டியோமையோபதி, வயோதிகர்களுக்கு கரோனரி ஆர்ட்டரி ஃபெயிலியர், குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை... என அனைத்துத் தரப்பினரையும் பலவகையில் ஆட்டிப்படைக்கின்றன இதய நோய்கள்.  இதற்கான சிகிச்சையில் எத்தனையோ முன்னேற்றங்கள் வந்துவிட்டன. இருந்தாலும்  நாளுக்கு நாள் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டமும் பெருகிக்கொண்டேதான் வருகிறது.

துரித உணவில் கலந்துள்ள சாச்சுரேட்டட் கொழுப்பு, புகையிலைப் பழக்கம், இயற்கை விவசாய வீழ்ச்சி, கார்பனேடட் குளிர்பானங்கள், உடல்பருமன், பெரு நகரங்களின் மாசுபட்ட காற்று ஆகியவற்றால்,
25 வயதிலேயே இதய பாதிப்பு ஏற்படுகிறது. இன்றைய சூழலில் அனைவரும் இதய நோய்களுக்கான  சிகிச்சைகள் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

இதயம் காக்கும் சிகிச்சைகள்!

நவீன அறுவைசிகிச்சை முறைகள்

கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் கிராஃப்ட்டிங் (Coronary artery bypass grafting)


இது, இதய ரத்தக் குழாயில் அடைப்பு உள்ளவர்களுக்குச் செய்யப்படுகிறது. இதய ரத்தக் குழாயில் படியும் கொழுப்பு, ஒரு கட்டத்தில்,  ரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இது, இதயத் தசைக்குச் செல்லும் ரத்தத்தை உறையவைக்கும். இவர்களுக்கு, நெஞ்சுப் பகுதியில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் வெட்டி எடுக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கை அல்லது காலில் இருந்து ஆரோக்கியமான ரத்தக் குழாய் பிரித்தெடுத்துப் பொருத்தப்படுகிறது. இது, நெடுங்காலமாகப் பின்பற்றப்படும் அறுவைசிகிச்சை முறை. புது ரத்தக் குழாயின் ஆயுட்காலம், ஏழு முதல் 10 ஆண்டுகள். இந்த அறுவைசிகிச்சை முடிந்த நோயாளிகள் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சரியான சர்க்கரை, ரத்த அழுத்தக் கட்டுப்பாடு மூலம் ரத்தக் குழாயின் ஆயுளை நீட்டிக்கலாம்.

மினிமலி இன்வேஸிவ் சர்ஜரி (Minimally invasive surgery)

பைபாஸ் அறுவைசிகிச்சைக்குப் பதில், புதிதாக வந்திருக்கும் முறை இது. ஐந்து முதல் ஏழு செ.மீ வரை சிறிய அளவில் மார்புப் பகுதியில் வெட்டப்பட்டு, சிறிய மைக்ரோ கேமரா உதவியுடன் இதயத்தை மானிட்டரில் பார்த்து, ரத்தக் குழாய் அடைப்பு சரிசெய்யப்படுகிறது. காயம், தழும்பின் அளவு குறைக்கப்படுகிறது. மிக விரைவாக நலம் பெறலாம். குறிப்பாக, அறுவைசிகிச்சையின்போது, ஏற்படும் அதீத ரத்தப்போக்கைத் தவிர்க்கலாம். புகைபிடிப்பதால் இதய நோய் வந்தவர்களுக்கு, நுரையீரல் பலவீனமாக இருக்கும் என்பதால், இந்த அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. 

இதய வால்வு மாற்று/சீரமைப்பு (Heart valve replacement/repair)

இதயத்தின் நான்கு அறைகளிலும் ரத்த ஓட்டத்தைச் சீராகவைத்திருக்க உதவுபவை, இதய வால்வுகள். இவை, மிகவும் மெல்லியதாக இருக்கும். 60 வயதுக்கு மேல் வலுவிழந்து இறுகிவிடும். வால்வுகள் சரியாக வேலை செய்யாமல் போனால், புவி ஈர்ப்பு விசை காரணமாக  ரத்தம் கீழ் நோக்கிப் பயணித்து, சிக்கல் ஏற்படும். தற்போது, உலோகம் மற்றும் பன்றி, மாட்டின் திசுக்களால்  செய்யப்பட்ட செயற்கை வால்வுகள் பொருத்தப்படுகின்றன.

இதயம் காக்கும் சிகிச்சைகள்!

பேஸ்மேக்கர் (Pacemaker)

சீரற்ற இதயத் துடிப்பு நோயாளிகளுக்கு, இதயத் துடிப்பு விகிதம் குறையவோ, அதிகரிக்கவோ வாய்ப்பு உள்ளது. இதனால், மூளை, சிறுநீரகம், கல்லீரல், கணையம் உள்ளிட்ட முக்கிய உறுப்புக்கள் பாதிக்கப்படும். ஆரம்பநிலையில் மருந்து மாத்திரைகள் மூலமாக இதனைக் குணப்படுத்தலாம். முற்றிய நிலையிலேயே பேஸ்மேக்கர் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சிறிய எலெக்ட்ரானிக் கருவி. இதனை அறுவைசிகிச்சை மூலம் மார்பில் வைத்து, மின் இணைப்பை இதயத்தில் பொருத்திவிடுவர். எப்போது எல்லாம் இதயத் துடிப்பு அதிகரிக்கிறதோ, அப்போது பேஸ்மேக்கர் மின்சார அதிர்வலைகளை இதயத்துக்கு அனுப்பும். இதன் மூலமாக இதயத் துடிப்பு சீராகும். இதன் மேம்பட்ட வடிவம் இம்பிளான்டபிள் கார்டியோவெர்ட்டர் டீஃப்ரிலேட்டர் (Implantable cardioverter defibrillator (I.C.D)). பொதுவாக, இது நோயாளிகளின் இதயச் செயல்பாடு 30 சதவிகிதத்துக்கும் குறைவாகும்போதே பரிந்துரைக்கப்படுகிறது.

தூக்கத்தில் கார்டியாக் அரஸ்ட்?

தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்று சொல்வது உண்டு. ஆனால், அது மாரடைப்பு அல்ல... மாரடைப்பையும் கார்டியாக் அரஸ்ட் எனப்படும் திடீர் இதயத்துடிப்பு முடக்கத்தையும் ஒன்றாகக் கருதுகிறோம், இது தவறு.

`ஸ்லீப் ஆப்னியா’ எனப்படும் தூக்கத்தில் மூச்சுத் தடைபடும் பிரச்னை, உடல்பருமன் உள்ளவர்களை அதிகமாகத் தாக்குகிறது. உடல்பருமனாக உள்ளவர்களுக்குத் தாடை மற்றும் கழுத்துத் தசை அதிகமாக இருக்கும். இவர்களுக்கு, தூக்கத்தில் சுவாசிக்கும்போது கழுத்துச் சதை இடையூறால் குறட்டை வரும். தொடர்ந்து மூச்சுக் காற்று தடைபடும்போது, இதயத்துக்குச் செல்ல வேண்டிய ஆக்சிஜன் தடைபட்டு, உள்ளிருக்கும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற இயலாமல் இதயத் துடிப்பு அதிகமாகி, சடன் கார்டியாக் அரஸ்ட் ஏற்படலாம். பெரும்பாலும், அதிகாலையிலேயே  மனஅழுத்தம் அதிகமாக இருப்பதால், சடன் கார்டியாக் அரஸ்ட் வர வாய்ப்பு அதிகம்.

இதயம் காக்கும் சிகிச்சைகள்!

இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி சிகிச்சை

இதயக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைபடும்போது, பைபாஸ் அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. சிறிய அளவிலான இதய ரத்தக் குழாய் அடைப்புக்கு மிகப்பெரிய அளவில் அறுவைசிகிச்சை இன்றி, சிறு துளையிட்டு, ரத்த நாளம் வழியே கருவியைச் செலுத்தி, அடைப்பை நீக்கும் முறைதான் இன்டர்வென்ஷனால் கார்டியாலஜி சிகிச்சை. இந்த சிகிச்சை இரண்டு கட்டமாகச் செய்யப் படுகிறது. முதலில், இதயக் குழாய் அடைப்பு எங்கு ஏற்பட்டுள்ளது எனக் கண்டுபிடித்து, தொடை அல்லது கையில் உள்ள ரத்தக் குழாய் வழியே கருவியைச் செலுத்தி அடைப்பு நீக்கப்படுகிறது.  இதில், பல சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

ஆஞ்சியோகிராம்

இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி சிகிச்சையின் முதல் கட்டமாக ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்படுகிறது. கை மணிக்கட்டில் தொடங்கும் ரேடியல் ஆர்ட்டரி முனையில் சிறிய ஊசி மூலம் வளையும் தன்மையுடைய காதீட்டர் (குழாய்) செலுத்தப்படுகிறது. இதயம் வரை இந்த காதீட்டர் கொண்டுசெல்லப்பட்டு, எந்தெந்தப் பகுதிகளில் அடைப்பு உள்ளது என ஆராயப்படுகிறது.

ஆஞ்சியோபிளாஸ்டி

இதை, பலூன் சர்ஜரி என்றும் கூறுவர். ஆஞ்சியோகிராம் மூலம் அடைப்புக் கண்டுபிடிக்கப்பட்ட பின், இரண்டாம் கட்டமாக ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்படுகிறது. இந்த முறையில் ரேடியல் ஆர்ட்டரி மூலம் உள்ளே செலுத்தப்பட்ட ஒயரைச் சுற்றி இரண்டு செ.மீ அளவில் சுருங்கி விரியும் தன்மையுடைய பலூன் பொருத்தப்பட்டு உள்ளே செலுத்தப்படுகிறது. அடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் இந்த பலூனைக் கொண்டுசென்று, விரிவடையவைத்து குழாய் விரிவாக்கப்படுகிறது. இதனால், ரத்தம் தடை இல்லாமல் பாய்கிறது. இதுபோல, முழுநீளக் குழாயில் ஏற்பட்டு உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட அடைப்புகளைச் சரிசெய்யலாம்.

இதயம் காக்கும் சிகிச்சைகள்!

ஸ்டென்ட் பொருத்தும் முறை

ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் இதய அடைப்புத் தற்காலிகமாகச் சரி செய்யப்பட்டாலும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குச் செய்யப்படும்போது, அது நிரந்தரத் தீர்வு ஆகாது. மீண்டும் இதயக் குழாயில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஒரு முறை அடைப்பு ஏற்பட்ட இடத்தில்,  மீண்டும் அடைப்பு ஏற்படாமல் இருக்க உதவுவதுதான் ஸ்டென்ட் எனப்படும் உலோக வலை பொருத்தும் சிகிச்சை. இந்த உலோக வலை இரண்டு செ.மீ நீளம் கொண்ட உருளை வடிவில் இருக்கும். விரியும் தன்மை உடையது. ஆஞ்சியோ பிளாஸ்டியில் ஒயர் வழியாக உள்ளே செலுத்தப்படும் பலூனின் மேற்புறத்தில், இந்த ஸ்டென்ட் பொருத்தப் படுகிறது. குழாயில் அடைப்பு உள்ள பகுதிக்கு பலூன் வந்தவுடன் பலூன் விரிவடையச் செய்யப்படுகிறது. பலூன் விரியும்போது உலோக ஸ்டென்டின் வலை போன்ற அமைப்பும் விரிந்து கொடுத்து, குழாயின் சுருங்கிய பகுதியை விரிவடையச் செய்கிறது. பிறகு, பலூன் மற்றும் ஒயர் குழாயிலிருந்து வெளியேற்றப்பட, ஸ்டென்ட் நிரந்தரமாகக் குழாயில் பொருத்தப்பட்டுவிடுகிறது. இதனால், ஸ்டென்ட் பொருத்தப்பட்ட இடத்தில் அடைப்பு ஏற்படாது.

கரையக்கூடிய ஸ்டென்ட்

உலோகத்தால் ஆன ஸ்டென்ட் பொருத்தப்பட்டால், ஆயுள் முழுக்க சில மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மாற்றாக வந்திருப்பது கரையக்கூடிய ஸ்டென்ட். இதைப் பொருத்தி ஒருசில வருடங்களுக்குள்ளாக இந்த ஸ்டென்ட் கரைந்து, ரத்தக்குழாய் சுவருடன் சுவராக மாறிவிடும். ஆனால், இது விலை சற்று அதிகம்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

மாரடைப்பு... வருமுன் காக்க!  

ஏற்கெனவே, முதல் அட்டாக் வந்தவர்கள், ஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது ஆஸ்பிரின், நாக்கின் அடியில் வைத்துக்கொள்ளும் ஐசார்டில் மாத்திரைகளைத் தண்ணீர் உடன் வைத்திருப்பது நல்லது. சிறிய அளவில் வலி அல்லது தலைசுற்றல் ஏற்படும்போதே மாத்திரையை விழுங்கிவிட்டால், மருத்துவமனைக்குச் செல்லும் வரை இரண்டு மணி நேரம் தாக்குப்பிடிக்கலாம். 

மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் அவசர உதவி மைய எண்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளால் வழங்கப்படுகின்றன. அவற்றைக் குறித்துவைப்பது நல்லது. வீட்டின் அருகே உள்ள இதய அவசர சிகிச்சை மருத்துவமனையின் எண்ணும் அறிந்துவைத்திருக்க வேண்டும்.

40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்துகொள்வது அவசியம். பரம்பரை இதய நோய் உள்ளவர்கள், 30 வயதுக்கு மேலிருந்தே செய்வது நல்லது.

இதய நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டியவை

புகை மற்றும் மதுப்பழக்கத்தைக் கைவிடவேண்டும்.

காலை ஜாகிங், நடைப்பயிற்சி, வார்ம்அப் பயிற்சிகள்.

யோகா, பிராணயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளைத் தினமும் அதிகாலையில் செய்ய வேண்டும்.

வேகவைத்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

‘ரெட் மீட்’ எனப்படும் அதீதக் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள ஆடு, மாட்டு இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.