Published:Updated:

ஸ்வீட் எஸ்கேப் - 9

ஸ்வீட் எஸ்கேப் - 9
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்வீட் எஸ்கேப் - 9

சர்க்கரையை வெல்லலாம்

ஸ்வீட் எஸ்கேப் - 9

துவரை சர்க்கரை நோய் தொடர்பான பொதுவான விஷயங்களைப் பற்றி பார்த்துவந்தோம். இனி, சர்க்கரை எப்படி நம் உடலின் முக்கிய உறுப்புகளில் செயல்படுகிறது, பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி பார்ப்போம். முதலில், உலகைக் காணும் ஒளியாக, வாசலாக இருக்கும் கண்கள்.

டிஜிட்டல் கேமரா எப்படி வேலை செய்கிறதோ, அதுபோல, சிறிய உருளை வடிவத்தில் அமைந்திருக்கும் கண்கள் ஒளி சிக்னலை பெற்று எலக்ட்ரோ கெமிக்கல் சிக்னலாக மாற்றி விழித்திரையில் (Retina) இருந்து மூளைக்கு ஆப்டிக் நரம்புகள் வழியாக அனுப்புகின்றன. இதை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள விழித்திரைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். விழித்திரை என்பது கண்ணின் கடைசிப் பகுதியில் அமைந்திருக்கும் ஒளி உணர் பகுதி. வெளிப்புற சுற்றுச்சூழலில் இருந்து வரும் ஒளி சிக்னலானது கண் உருண்டையில் உள்ள திரவ அறைகள் (Vitreous fluid) வழியாகப் பயணித்து, விழித்திரையில் விழுகிறது. அங்கு அது, எலக்ட்ரோ கெமிக்கல் சிக்னலாக மாற்றப்பட்டு ஆப்டிக் நரம்புகள் வழியாக மூளைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. இவை அனைத்தும் மிகமிக வேகமாக, ஒரு நொடிக்குக் குறைவான நேரத்தில் நடக்கின்றன. 

நம் விஷயத்துக்கு வருவோம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதன் மூலம் நம் கண்களில் என்ன நடக்கிறது?

சர்க்கரை நோயாளிகளுக்கு டயாபடீக் ரெட்டினோபதி (Diabetic retinopathy) என்ற பிரச்னை ஏற்படுகிறது. அதாவது, உயர் சர்க்கரை அளவு, கண்ணின் விழித்திரைக்குச் செல்லும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்களில் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் ஒரு கட்டத்தில் பார்வை இழப்பு ஏற்படுகிறது. பெரியவர்களில் பார்வை இழப்பு ஏற்பட முக்கியக் காரணம் இது.

ஸ்வீட் எஸ்கேப் - 9

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடக்க நிலையில், டயாபடீக் ரெட்டினோபதி எந்த அறிகுறியையோ அல்லது லேசான பார்வைத் திறன் குறைந்த உணர்வையோகூட ஏற்படுத்தாது. ஆனால், இறுதியில் பார்வை இழப்பை ஏற்படுத்திவிடும். பிரச்னை தீவிரம் அடையும்போது சில அறிகுறிகள் தெரியும்.

புள்ளி அல்லது கருமையான பொருள் பாய்வது போன்று இருப்பது. மங்கலான பார்வை. பார்வைத்திறனில் ஏற்ற இறக்கம். நிறத்தை அறிவதில் சிரமம். கருமையான அல்லது குறிப்பிட்ட பகுதியில் வெறுமையான பார்வை. பார்வை இழப்பு.

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்காதபோது, அது விழித்திரைக்குச் செல்லும் மிக நுண்ணிய ரத்தக் குழாயில் அடைப்புகளை ஏற்படுத்துகிறது. போதுமான ரத்தம் கிடைக்காதபோது, புதிய நுண் குழாய்களை உருவாக்கி, ரத்த ஓட்டத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இந்த புதிய ரத்தக்குழாய்கள் முறையாக வளர்ச்சியடைவது இல்லை. இதனால், இந்த ரத்தக்குழாய்களில் கசிவு ஏற்படுகிறது. இதனால் டயாபடீக் ரெட்டினோபதி ஏற்படுகிறது. இதை, ஆரம்பநிலை, முற்றிய நிலை என்று இரண்டாகப் பிரிக்கலாம்.

ஆரம்பநிலை டயாபடீக் ரெட்டினோபதி

இந்த நிலையில், புதிய ரத்தக்குழாய்கள் வளர ஆரம்பித்திருக் காது. ஆனால், விழித்திரை ரத்தக்குழாய்கள் வீக்கம் அடைய ஆரம்பித்தி ருக்கும். இது ரத்தக்குழாய் வீக்கம் அடைந்த டயாபடீக் ரெட்டினோபதி (Nonproliferative diabetic retinopathy (NPDR)). இந்த நிலையில், விழித்திரையில் உள்ள நுண்ணிய ரத்தக்குழாய்களில் கசிவுகள் ஏற்பட ஆரம்பிக்கும். இப்படி கசிந்த திரவம் தேக்கம் அடைகிறது அல்லது விழித்திரையை வீக்கம் அடையச் செய்கிறது.சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டுவந்தால், சரியாகிவிடும்.

முற்றியநிலை டயாபடீக் ரெட்டினோபதி (proliferative diabetic retinopathy)

இந்த நிலையில் பாதிப் படைந்த ரத்தக்குழாயில் தடைகள் ஏற்படுகின்றன. இதனால், புதிதாக இயல்புக்கு மீறிய ரத்தக்குழாய்கள் விழித்திரையில் வளர ஆரம்பிக்கிறது. கண்ணின் மையத்தில் ஜெல் போன்ற பகுதியில் (Vitreous)ரத்தக்கசிவு படிகிறது. இந்த இடங்களில் எல்லாம் ஒளி ஊடுருவாது. இதனால், புள்ளி போன்று தெரிகிறது. ஒரு கட்டத்தில் பார்வை முற்றிலும் பாதிப்படைந்து கண்ணில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்பைப் பாதித்து க்ளைக்கோமா ஏற்படக் காரணமாகிவிடுகிறது.

ஸ்வீட் எஸ்கேப் - 9

யாருக்கு இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு?

சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காதவர்கள்

உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள்

அதிகக் கொழுப்பு அளவு உள்ளவர்கள்

கர்ப்பிணிகள்

சிகரெட் - புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள்

எப்படிக் கண்டறிவது?

கண் பரிசோதனை மூலம் இந்த ரத்தக்கசிவு பிரச்னை உள்ளதா என்பதை அறியலாம். கண் பரிசோதனையின்போது, கண்ணில் சொட்டு மருந்து விடப்பட்டு, கண் மருத்துவர் ஆய்வு செய்வார். ஆய்வின்போது, இயல்புக்கு மீறிய ரத்தக்குழாய் வளர்ச்சி, விழித்திரையில் கொழுப்பு, ரத்தம் படிந்திருக்கிறதா, புதிய ரத்தக்குழாய் வளர்ச்சியடைந்திருக்கிறதா, கண்ணின் மையப் பகுதியில் ஜெல்லி போன்ற பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதா, ஆப்டிக் நரம்பில் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்று பார்க்கப்படும். இதனுடன், பார்வைத் திறன், கண்ணின் நீர் அழுத்தப் பரிசோதனை, கண் புரை ஏற்பட்டுள்ளதா என்றும் பரிசோதிக்கப்படும்.

ஆப்டிக்கல் கோஹரன் ஸ்டேமோகிராப்பி (ஓ.சி.டி) மூலம் கருவிழியின் படம் எடுக்கப்படும். இதன் மூலம் கருவிழியின் அடர்த்தி உள்ளிட்டவை கண்டறியப்படும். மேலும், மேக்குலர் எடிமா (வீக்கம்) தன்மை கண்டறியப்படும்.

சிகிச்சை

ஆரம்பநிலை டயாபடீக் ரெட்டினோபதி என்றால், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்தால் மட்டும் போதும், எந்த சிகிச்சையும் தேவைப்படாது. ஆனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் மருத்துவரை அணுகி பிரச்னை தீவிரமடையாமல் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டயாபடீக் ரெட்டினோபதி ஆரம்பநிலை மற்றும் தீவிரம் அடையத் தொடங்கும் நிலையில் இருப்பவர்கள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் பிரச்னையின் தீவிரத்தைத் தவிர்க்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்.

இதுவே முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு, சில அறுவைசிகிச்சை தேவைப்படலாம். இதில் முக்கியமானது ஃபோகல் லேசர் சிகிச்சை. இந்த சிகிச்சையின் மூலம், விழித்திரையில் உள்ள ரத்தக் கசிவு மற்றும் நீர்க் கசிவுகள் தடுக்கப்படும் அல்லது குறைக்கப்படும். இந்த சிகிச்சையின்போது, லேசர் கதிர்வீச்சை செலுத்தி இயல்புக்கு மீறிய வளர்ச்சியுள்ள ரத்தக்குழாய்கள் அழிக்கப்படும். இந்த சிகிச்சையை கண் மருத்துவர் ஒரே சிட்டிங்கில் அளிப்பார்.

விட்ரோக்டமி என்று மற்றொரு சிகிச்சை உள்ளது. இதில் மிகச்சிறிய அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, கண்ணின் மையப்பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் அகற்றப்படும். இதை கண் மருத்துவமனையில், லோக்கல் அனஸ்தீஸியா அளித்து செய்வர். அறுவைசிகிச்சைகள் எல்லாம் பிரச்னை தீவிரம் அடைவதைத் தடுத்து நிறுத்தும் அல்லது தாமதப்படுத்தும். குணமாக்காது. ஏனெனில், சர்க்கரை நோய் என்பது வாழ்நாள் முழுக்க இருக்கக்கூடியது. எனவே, எதிர்காலத்தில் மீண்டும் பிரச்னை ஏற்படலாம். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

டயாபடீக் ரெட்டினோபதிக்கு, இயல்புக்கு மீறிய ரத்தக் குழாய் வளர்ச்சியைத் தடுக்க, கட்டுப்படுத்தக்கூடிய மருந்தை அளிப்பது தொடர்பான புதிய சிகிச்சைகள் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில், கண்ணில் நேரடியாக ஊசி மூலம் செலுத்தி வீக்கம் மற்றும் இயல்புக்கு மீறிய ரத்தக்குழாய் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தப்படுகிறது. இத்தகைய சிகிச்சைகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றன.

- தொடரும்

டயாபடீஸ் டவுட்

“பார்வை மங்கலாகத் தெரியவே கண் மருத்துவரைச் சந்தித்தேன். அவர் பரிசோதித்துவிட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யச் சொன்னார்.  எனக்கு சர்க்கரை நோய் இல்லை. ஆனால், ப்ரீடயாபடீஸ் எனப்படும் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருக்கிறேன். எனக்குக்கூட டயாபடீக் ரெட்டினோபதி ஏற்பட வாய்ப்பு உள்ளதா?”

“ஆம், உங்களுக்கு இருக்கலாம். இன்று ப்ரீடயாபடீஸ் நிலையில் உள்ளவர்களும் கூட டயாபடீஸ் ரெட்டினோபதி பிரச்னையுடன் வருகின்றனர். க்ளைகேஷன் (Glycation) என்ற செயல்பாட்டில் உருவாகும் சர்பிட்டால் (sorbitol) உள்ளிட்ட பொருட்கள் விழித்திரைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் படிந்து, மங்கலான பார்வையை ஏற்படுத்தலாம். இதில் நல்ல விஷயம், இதை முழுமையாகச் சரிசெய்து, இயல்பான பார்வையைப் பெற முடியும். டயாபடீக் ரெட்டினோபதி ஆரம்பநிலையில் இருக்கும்போது, மருந்து, மாத்திரைகளுடன் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் நல்ல தீர்வைப் பெற முடியும்.”

ஸ்வீட்டர்:
சர்க்கரை நோய் இருந்தால், ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் கண் பரிசோதனை செய்ய வேண்டும்.