Published:Updated:

இனி எல்லாம் சுகமே - 9

இனி எல்லாம் சுகமே - 9
பிரீமியம் ஸ்டோரி
இனி எல்லாம் சுகமே - 9

செரிமானம் அறிவோம்!

இனி எல்லாம் சுகமே - 9

செரிமானம் அறிவோம்!

Published:Updated:
இனி எல்லாம் சுகமே - 9
பிரீமியம் ஸ்டோரி
இனி எல்லாம் சுகமே - 9
இனி எல்லாம் சுகமே - 9

வேலை பரபரப்பு... சரியாகச் சாப்பிடாததால்தான் அல்சர் வந்தது என்று சொல்வார்கள். அல்சரை ஏதோ, இந்த நவீன உலகில் தோன்றிய நோய்போலப் பலரும் கருதுகின்றனர். அப்பருக்கே அல்சர் நோய் இருந்ததாய் பழங்கதைகள் சொல்கின்றன. அப்போது, அதற்குப் பெயர் சூளைநோய். வட இந்தியர்களைக் காட்டிலும் அரிசி உணவு உட்கொள்ளும் தென்னிந்தியர்களுக்கு அல்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகம். செரிமானப் பிரச்னைகளில் அல்சர் மிக முக்கியமானது. இரைப்பையில் ஏற்படும் அல்சருக்கு, `கேஸ்ட்ரிக் அல்சர்’, `பெப்டிக் அல்சர்’ என்று பல பெயர்கள் உள்ளன. 

இரைப்பை அல்சரை போலவே சிறுகுடலிலும் அல்சர் (Duodenum ulcer) வரக்கூடும். ஆனால். இரண்டு அல்சரும் வெவ்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இரைப்பை அல்சர் இருந்தால் அடி வயிற்றில் வலி இருக்கும். உணவு உட்கொண்டபிறகு, இந்த வலி மேலும் அதிகரிக்கும். சிறுகுடல் அல்சர் வந்தால், உணவு உட்கொண்ட பின்னர் கொஞ்சம் வலி குறைந்ததுபோலத் தோன்றும்.

வீரியம்மிக்க அமிலங்கள், பெப்ஸின், பித்தம், பாக்டீரியா, உணவுப் பொருட்கள் என அத்தனையையும் தாங்கும் வலிமை படைத்தது இரைப்பையின் சுவர். அதைத் துளைத்து, புண் ஏற்படுவதைத்தான் அல்சர் என்கிறோம்.  காரமான உணவுப் பொருட்களை உட்கொள்வதால், அமிலத்தன்மை நிறைந்த பொருட்களைச் சாப்பிடுவதால்தான் அல்சர் வருகிறது எனப் பலரும் நினைக்கின்றனர். அல்சருக்கு முக்கியக் காரணம் உணவு அல்ல. `ஹெலிகோ பாக்டர் பைலோரி (Helicobacter Pylori)’ என்கிற பாக்டீரியா  இது, இரைப்பையில் அமிலத்தின் அடியில் மியூகஸ் எனும் சளிப்படலத்தின் பாதுகாப்பில் பல வருடங்கள் வாழும் திறன் கொண்டது. தொற்று ஏற்பட்ட மனிதர்கள் மூலமாகத்தான் இந்த பாக்டீரியா பரவுகிறது. நம்முடைய எச்சிலில்கூட இருக்கும். குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பதன் மூலம்கூட இந்த பாக்டீரியா பரவும். 70 சதவிகிதம் பேர் உடலில் இந்த பாக்டீரியா இருந்தாலும், எல்லோருக்கும் அல்சர் வருவது இல்லை. ஏனெனில், நீண்ட நாட்கள் தங்கிவிட்ட இந்த பாக்டீரியா பிரச்னை செய்யாமல் அமைதியாக இருக்கும்.  5-10 சதவிகிதம் பேருக்கு இரைப்பைச் சுவரில் பாதிப்பை ஏற்படுத்தும். அல்சர் ஆறாமல் நீடிக்க மது, புகை, டீ, காபி ஆகியவை வெந்த புண்ணில் வேலாய் பாயும். 

பாக்டீரியாவுக்கு அடுத்த வில்லன் மருந்து, மாத்திரைகள்தான். இரைப்பையில் இருக்கும் மியூகஸ், அமிலத்தின் வீரியத்தைக் காக்கவும், உணவைப் பாதுகாப்பாகச் செரிமானமடையச் செய்யவும் உதவுகிறது. சில உணவுப் பொருட்கள், மருந்துகள் இந்த மியூகஸைப் பாதிக்கின்றன. இதனால், வயிற்றில் அமிலத்தின் வீரியம் அதிகமாகிவிடுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி எல்லாம் சுகமே - 9

மூட்டுவலி, ஆஸ்பிரின் வகை மாத்திரைகள், கால்சியம், தைராய்டு, ஆன்டிபயாட்டிக் ஆகியவற்றுக்கான சில மருந்துகளை அதிக அளவும் அதிக நாட்களும் தொடர்ந்து சாப்பிடுகையில், அவை மியூகஸைப் பாதித்து அல்சரை ஏற்படுத்தலாம். நெல்லிக்காய், அருகம்புல் சாறு, நிலவேம்பு கஷாயம், கடுக்காய், நன்னாரி, எழுமிச்சை, ஆலம் பட்டை சாறு, நாவல் விதை பொடி போன்றவற்றைச் சாப்பிடும்போதும் இந்த மியூகஸ் பாதிக்கப்படலாம். 

புதிதாக ஓர் உணவுப் பொருளையோ, மாத்திரை, மருந்துகளையோ சாப்பிட ஆரம்பித்து, அதன் பின்னர் அஜீரணக் கோளாறுகள், மேல் வயிற்றில் எரிச்சல், வயிற்று உப்புசம், ஏப்பம் எனத் தொந்தரவுகளைச் சந்தித்தால், குறிப்பிட்ட அந்த உணவை, மருந்தை சில நாட்களுக்குத் தவிர்த்துவிட வேண்டும். நிறுத்திய பிறகு, செரிமானக் கோளாறு வரவில்லை எனில், உணவை நிறுத்திவிடலாம். மாத்திரை, மருந்துகளை மாற்ற மருத்துவர்களைக் கேட்கலாம். அல்சர் வெறும் வயிற்றுவலி, அஜீரணக் கோளாறோடு நின்றுவிடுவது இல்லை. இரைப்பைச் சுவரை முற்றிலும் துளைத்து, ஓட்டை போடும் ஆபத்தான நிலைக்குப் போகலாம் அல்லது, துளைக்கும் பாதையில் ரத்தக் குழாய் அரிக்கப்பட்டால், ரத்த வாந்தி, ரத்தமாய் மலம் போவது எனப் பெரும் பிரச்னை தரலாம். சிலருக்கு, அல்சர் வடுவாய் மாறி, அந்த வடுவின் விளைவால், இரைப்பையில் இருந்து உணவு வெளியே போக முடியாமல் அடைபட்டு, தீரா வாந்தியாக மாறலாம்.

அல்சருக்கு அந்தக் காலத்தில் கடினமான அறுவைசிகிச்சைகள் நடந்தன. குறிப்பாக, டியோடினம் அல்சர் எனில் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யவேண்டிய நிலை இருந்தது. ஆனால், இப்போது ஆன்டிபயாடிக் மாத்திரைகள் மற்றும் அமிலக் கட்டுப்பாட்டு மருந்துகள் மூலம், 15 நாட்களில் அல்சரில் இருந்து நல்ல நிவாரணம் பெற முடியும். நூற்றில் ஓரிருவருக்குத்தான் தற்போது அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது. குறைந்தது, மூன்று நான்கு வாரங்கள் வரை தொடர்ச்சியாக அல்சருக்கான அறிகுறி இருந்தால் மட்டும் மருத்துவரை அணுகவும். ஏதாவது, உணவைச் சாப்பிட்டு இரண்டு, மூன்று நாட்கள் தொந்தரவு இருந்த பின், செரிமானம் சீராகிவிட்டால் அல்சர் பிரச்னையோ எனக் கவலைப்பட வேண்டாம். அல்சரைத் தொடர்ந்து, வயிற்றுப் புற்றுநோய் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

- தொடரும்

படம்:  ம.நவீன், மாடல்: அஜய்

அல்சர் அறிகுறிகள்

திடீரென வயிற்றில் எரிச்சல் ஏற்படுவது, சாப்பிட்டால் எரிச்சல் குறைவது போல தோன்றுவது, திடீரென சில நாட்கள் தொடர்ந்து அதிகாலை விழிப்பு வந்து வயிற்றில் அசௌகரியம் ஏற்படுவதை உணர்ந்து, தண்ணீர் அல்லது எதையாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், அல்சர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

ஹெலிகோ பாக்டர் தொற்றை அறிவது எப்படி?

1. எண்டோஸ்கோப்பி மூலம் இரைப்பைச் சுவரின் திசுவில் பயாப்ஸி சாம்பல் எடுத்து ஆராயலாம்

2. ரத்தப் பரிசோதனை மூலம் பாக்டீரியாவுக்கான எதிர்ப்புரதம் (ஆன்டிபாடி) இருக்கிறதா என அறியலாம்.

3. மலத்தில் இதன் புரதக்கூறு (ஆண்டிஜென்) உள்ளதா எனப் பரிசோதிக்கலாம்.

4. சுவாசப் பரிசோதனை மூலமும் இதனைக் கண்டுபிடிக்க முடியும்.