Published:Updated:

ட்ரெக்கிங் செல்பவர்களுக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன? #KurnganiForestFire

ட்ரெக்கிங் செல்பவர்களுக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன? #KurnganiForestFire
ட்ரெக்கிங் செல்பவர்களுக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன? #KurnganiForestFire

ட்ரெக்கிங்... இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் ஈர்த்திருக்கும் ஒரு பொழுதுபோக்கு. `எப்படா விடுமுறை கிடைக்கும் ட்ரெக்கிங் போகலாம்’ என ஆவலோடு காத்துக்கிடக்கிறார்கள் பல இளைஞர்கள். மாநகரங்களில், நகரங்களில் பெருகிவரும் காற்று மாசு, வேலைப்பளுவால் ஏற்படும் மனஅழுத்தம் இவைதான் பலரையும் மலையேற்றத்தின் மேல் ஈடுபாடு கொள்ளவைத்திருக்கிறது. சுத்தமான காற்று, மலையிலுள்ள சுனைகளில் ஊறும் சுவையான நீர், மரம், செடி, கொடிகளின் பசுமை, பறவைகளின் வித்தியாசமான ஓசை, இயற்கையழகு, பேரமைதி... என ஒட்டுமொத்த அழகையும் தாங்கியிருக்கும் மலையும் வனமும் எல்லோரையுமே பரவசத்தில் ஆழ்த்துபவை. இந்தக் காரணங்களால்தான் மலையேற்றத்துக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக்கிக்கொண்டேயிருக்கிறது.

காடுகளில் சுற்றுவதும், மலையேறுவதும் எந்தளவுக்கு ஆனந்தத்தைக் தருகின்றனவோ, அதைவிடப் பலமடங்கு ஆபத்தையும் சில நேரங்களில் தந்துவிடுகின்றன. நேற்று, குரங்கணி மலையில் நடந்த சம்பவம் அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

சென்னை மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த 39 பேர் குரங்கணி மலைப்பகுதியில், ட்ரெக்கிங் சென்றிருக்கிறார்கள். கொழுக்குமலையை அடைவதற்காக, ஒத்தமலை என்ற பகுதியில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக்கொண்டார்கள். அவர்களில், இதுவரை 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகவும், 9 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

`இதுபோன்ற துயரங்கள் ஏற்படுவதற்கு என்ன காரணம்... மலையேற்றத்தின்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் என்னென்ன?’

பத்து வருடங்களுக்கும் மேலாக ட்ரெக்கிங் சென்று வருபவரும், பலருக்கு வழிகாட்டியாக இருந்து அழைத்துச்சென்று வருபவருமான ஆசாத்திடம் பேசினோம்...

``காடு பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் ட்ரெக்கிங் செல்பவர்கள்தான் இது போன்ற விபத்துகளில் சிக்கிக்கொள்கிறார்கள். புல்வெளிகள் நிறைந்த வனப்பகுதிகளில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ட்ரெக்கிங் செல்லவேகூடாது. குரங்கணியும் புல்வெளிகள் நிறைந்த வனப்பகுதிதான்.

டிசம்பர் மாத பனிக்காலத்துக்குப் பிறகு, புற்கள் காய ஆரம்பித்துவிடும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். அதனால், லேசாகத் தீ பட்டாலே அது காடு முழுக்கப் பரவிவிடும்.காடுகளில் தீ ஏற்படுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. யாராவது, புகைபிடித்துவிட்டு அணைக்காமல் தூக்கிப் போட்டுவிடுவதாலும் தீப்பிடிக்கும். வனத்துறையினரின் மேல் உள்ள கோபத்தின் காரணமாக சிலர் தீ வைத்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. குரங்கணி மலைப்பகுதி மட்டுமல்ல, `கொடைக்கானல் மலைப்பகுதியில் தீ’, `குன்னூர் மலைப்பகுதியில் தீ’ என்று தொடர்ச்சியாக செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதையெல்லாம் ட்ரெக்கிங் செல்லும்போது கவனத்தில்கொள்ள வேண்டும்.

ட்ரெக்கிங் செல்வதற்கு முன்னர் கவனிக்கவேண்டியவை...

முதலில், வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்.

18 வயதுக்குக் குறைவானவர்கள் ட்ரெக்கிங் செல்லக் கூடாது.

அடுத்ததாக, எந்த வனத்துக்குள் ட்ரெக்கிங் செல்கிறோமோ, அந்த வனத்தைப் பற்றி நன்கு தெரிந்த ஒருவரை உடனழைத்துச் செல்ல வேண்டும்.

காட்டன் துணிகளை உடுத்திச் செல்ல வேண்டும். அவசரத் தேவைக்காக கொஞ்சம் காட்டன் துணிகளை எடுத்துச் செல்வதும் நல்லது.

தீ பற்றக்கூடிய எந்தப் பொருளையும் கொண்டுசெல்லக் கூடாது.

காட்டில் சமைத்துச் சாப்பிடுவதை (Camp fire) கண்டிப்பாகத் தவிர்த்துவிட வேண்டும்.

காட்டிலுள்ள விலங்குகளைப் பற்றியும், விபத்து நேரங்களில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டு ட்ரெக்கிங் செல்வது நல்லது.

வனத்துறை அனுமதியுடன் தற்காப்புக்காக கத்தி போன்ற பொருள்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். இது, ஆபத்தான நேரங்களில் உதவியாக இருக்கும்.

நேற்றைய விபத்தில்கூட, காட்டைப் பற்றி அறிந்த ஒருவர் கத்தி போன்ற பொருள்களுடன் உடனிருந்திருந்தால், எதிர்த் தீயை (தீப்பற்றி வரும் திசையின் எதிர்புறத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்துகொண்டு, அந்த இடத்தில் 10க்கு 8 அடி வீதத்தில் அங்குள்ள செடி, கொடிகளை வெட்டி ஒரு வெற்றிடத்தை உருவாக்கவேண்டும். வெட்டிய செடி, கொடிகளை தீ எறியும் திசையில் போட்டுவிடவேண்டும். தீ திசை மாறிச் சென்றுவிடும்.) உருவாக்கி விபத்திலிருந்து தப்பியிருக்கலாம்" என்கிறார் ஆசாத்.

`ட்ரெக்கிங் செல்பவர்களுக்குத் தேவையான உடற்தகுதி என்ன?’ - சித்த மருத்துவரும், அடிக்கடி ட்ரெக்கிங் சென்று வருபவருமான விக்ரம் குமார் விளக்குகிறார்

"குரங்கணி மலைப்பகுதியில் நான் பலமுறை ட்ரெக்கிங் போயிருக்கிறேன். கிட்டத்தட்ட 16 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். புல்வெளிகள் நிறைந்த வனப்பகுதி அது. கொஞ்ச தூரம் நடந்ததுமே பாதை ஒற்றையடிப் பாதையாகிவிடும். ஒருபுறம் தீயும், மறுபுறம் பள்ளமும் இருந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. வனத்துறையின் அனுமதி இல்லாமல் அவர்கள் சென்றிருக்க வாய்ப்பில்லை. சிகரெட், ஆல்கஹால் போன்ற பொருள்களை மேலே எடுத்துச் செல்ல அனுமதியில்லை. எனவே, ட்ரெக்கிங் சென்றவர்களால் தீப்பிடித்திருக்க வாய்ப்பில்லை.

இதய நோயாளிகள், மூட்டு பாதிப்புள்ளவர்கள், சர்க்கரைநோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள், வலிப்பு நோய் உள்ளவர்கள், அடிக்கடி மயக்கமடைபவர்கள், உயரத்தைப் பார்த்து பதற்றம் அடைபவர்கள் ட்ரெக்கிங் செல்லக் கூடாது.

ட்ரெக்கிங் செல்பவர்கள், திடீரென மலையேறுவது ஆபத்தானது. அப்படி ஏறும்போது படபடப்பு, நெஞ்சுவலி ஏற்பட வாய்ப்புண்டு. ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். சாப்பாடு, தண்ணீர் போன்றவற்றை மேலே கொண்டுசெல்லவேண்டியிருக்கும். அதற்கேற்ப உடலளவில் தயாராகவேண்டியது அவசியம். காலையில் சாப்பிடாமல் மலையேறக் கூடாது. இவை அனைத்தையும்விட ட்ரெக்கிங் செல்வதற்கு முன்னர் ஒருமுறை மருத்துவரிடம் உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது" என்கிறார் விக்ரம் குமார்.

"இமயமலைக்குச் செல்வதற்கு, ஃபிட்னெஸ் (ட்ரெட்மில்) பரிசோதனை செய்து, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அந்த நடைமுறையை அனைத்து மலையேற்றத்துக்கும் கொண்டு வரலாம். ஆபத்துக்கால முதலுதவிகளை (Basic life support) அறிந்துவைத்திருப்பவர்களை மட்டுமே மலையேற்றத்துக்கு அனுமதிக்க வேண்டும்" என்கிறார், பொதுநல மருத்துவர் சிவராமக் கண்ணன்.