Published:Updated:

இனி எல்லாம் சுகமே - 10

இனி எல்லாம் சுகமே - 10

செரிமானம் அறிவோம்!

இனி எல்லாம் சுகமே - 10

செரிமானம் அறிவோம்!

Published:Updated:
இனி எல்லாம் சுகமே - 10
இனி எல்லாம் சுகமே - 10

டந்த இதழில் அல்சரைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்துவிட்டு திருவாரூரில் இருந்து நாகராஜன் என்பவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ‘எனக்கு அல்சர் அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், பரிசோதனை செய்தால் “செரிமான உறுப்புகள் சரியாகவே வேலை செய்கின்றன” என்கிறார்கள். என்ன செய்வது?’ எனக் கேட்டிருந்தார்.

இது ஒரு முக்கியமான பிரச்னை. சிலர், அல்சருக்கான அறிகுறிகளைச் சொல்வார்கள். எண்டோஸ்கோப்பி உள்ளிட்ட பரிசோதனையில், ‘அல்சர் இல்லை’ என ரிசல்ட் வரும். இதை ‘அல்சர் இல்லாத டிஸ்பெப்சியா’ என்கிறார்கள். இந்த வகை அல்சரும் பரவலாக மக்களிடம் காணப்படுகிறது.

இரைப்பையில் புண் ஏற்படாவிட்டாலும், செரிமானம் ஆகாத உணர்வு ஏற்படும். இதனால், இவர்களுக்கு மனச்சோர்வு இருக்கும். மனச்சோர்வு  இரைப்பைச் சோர்வாக மாறும். மனச்சோர்வு - இரைப்பைச் சோர்வு ஒரு சுழற்சியாக மாறி, அஜீரணப் பிரச்னைகளை அதிகப்படுத்தும். இதற்கு, நேரடித் தீர்வு கிடையாது. பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதித்து, உடலில்  எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை உணர்த்தி, மனச்சோர்வைக் குறைக்க கவுன்சலிங் தருவதன் மூலம், கட்டுக்குள்வைக்க மட்டுமே முடியும்.

இனி எல்லாம் சுகமே - 10

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அல்சரைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் மருந்து, மாத்திரைகளில் சரியாகிவிடும். அதிகபட்சம் இரண்டு சதவிகிதம் அல்சர் நோயாளிகளுக்கு இது புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது. யாருக்கு அல்சர் புற்றுநோயாக மாறும் என்பதைத் தொடக்க நிலையிலேயே பிரித்துச் சொல்வது கடினம்தான். ஆனாலும், 50 வயதுக்கு மேல் புதிதாய் அஜீரணம் ஏற்பட்டு, அது வாரக்கணக்கில் நீடிப்பது, பசி குறைவது, கொஞ்சம் சாப்பிட்டாலே சட்டென வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவது, உடல் எடை திடீரெனக் குறைவது, தொடர் வாந்தி, ரத்த வாந்தி, மலத்தில் தார் போல் ரத்தம் வருவது, ரத்தசோகை, அல்ட்ராசவுண்ட், சி.டி ஸ்கேன் சோதனைகளில் இரைப்பை வீங்கி இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக எண்டோஸ்கோப்பி, பயாப்சி பரிசோதனைசெய்து, அது புற்றுநோயா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

இரைப்பை புற்றுநோய் ஏன் வருகிறது?


உடலில் ஒரு செல் அதீத வளர்ச்சி பெற்று, விதிகளை மீறிப் பல்கிப் பெருகுவதைப் புற்றுநோய் என்கிறோம். அப்படி, இரைப்பைக்கு உட்புறச் சுவராய் அமைந்திருக்கும் எபிதிலியம் வகை செல்கள் இயல்புக்கு மாறாகப் பல்கிப் பெருகுவதுதான் 95 சதவீத இரைப்பை புற்றுநோய்க்குக் காரணம்.

இனி எல்லாம் சுகமே - 10

தீர்வு என்ன?

ஜீரண மண்டலத்திலேயே அதிக அகலம் கொண்ட இடம் இரைப்பை. இங்கு, புற்றுநோய் ஏற்பட்டு, அறிகுறிகளை உணர்ந்து டாக்டரைப் பார்க்க வரும்போது, பரிசோதனைசெய்தால் 50 சதவிகிதம் பேருக்கு நோய் முற்றிய நிலையில் இருக்கிறது என்பதுதான் கவலையான செய்தி.

ஆரம்பக்கட்ட புற்றுநோயை அறுவைசிகிச்சை, கீமோதெரப்பி, கதிர்வீச்சு சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதன் மூலம் நோயாளிகள் புற்றுநோயை வென்று பல ஆண்டுகள் வாழலாம். 15 - 20 ஆண்டுகள் தாண்டியும் நலமாய் இருப்பவர்கள் உண்டு.

ஆனால், முற்றிய நிலையில் கண்டறிடந்தால்,  முழுமையாகத் தீர்வு அளிப்பது கடினம். அந்த சமயங்களில் நோயால் ஏற்படும் உபாதைகளைக் கட்டுப்படுத்துவதே (Palliation) சிகிச்சையின் நோக்கமாகிவிடும். எனவே, செரிமானப் பிரச்னைகள் தொடர்ந்து இருந்தால், ஆரம்பக்கட்டத்திலேயே அது என்ன என்பதைத் தெரிந்து, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இரைப்பை புற்றுநோயைத் தடுக்க முடியும்.

- தொடரும்

இரைப்பை புற்றுநோய்க்கு 6 காரணிகள்

ரத்த வழி உறவினருக்கு இரைப்பை புற்றுநோய் இருந்தால், மரபியல்ரீதியாய் மற்றவருக்கும் இது வர வாய்ப்பு உள்ளது.

புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் கலந்த உணவுகளைச் சாப்பிடுவது. உதாரணமாய் நைட்ரோசமைன் எனும் வேதிப்பொருள் உள்ள ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மீண்டும் மீண்டும் சுடவைக்கப்பட்ட உணவுகளைத் தொடர்ந்து உண்பது இரைப்பை புற்றுநோய்க்கு முக்கியக் காரணம்.

உணவின் நச்சை முறிப்பது இரைப்பையின் அமிலம். இந்த அமிலம் அதிகம் ஆனாலும் பிரச்னை, குறைந்தாலும் ஆபத்து. அமிலம் அதிகமானால் அல்சரும், குறைந்தால் புற்றுநோயும் ஏற்படலாம்.

அல்சருக்காகப் பல ஆண்டுகளுக்கு முன் அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், நாட்பட்ட அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மாத்திரை சாப்பிடுபவர்கள், இரைப்பைச் சுவர் மெலிந்து (Atrophic Gastritis) அதனால், அமிலச் சுரப்பு குறைந்தவர்களுக்கு  இரைப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு சற்று அதிகம்.

ஹெலிகோபேக்டர் பைலோரி எனும் பாக்டீரியா, இரைப்பையில் நுழைந்து ஆண்டுக்கணக்கில் அங்கேயே வசிக்கும். இது, அல்சரை மட்டும் அல்ல சில நேரங்களில் இரைப்பை புற்றுநோயையும் ஏற்படுத்தும்.

புகையிலை, சிகரெட் பழக்கம், இரைப்பை புற்றுநோய்க்கு ஒரு  முக்கியக் காரணி.