Published:Updated:

கோடை வெயிலின் 10 பாதிப்புகளிலிருந்து காக்கும் இளநீர்! #TenderCoconutBenefits

கோடை வெயிலின் 10 பாதிப்புகளிலிருந்து காக்கும் இளநீர்! #TenderCoconutBenefits
கோடை வெயிலின் 10 பாதிப்புகளிலிருந்து காக்கும் இளநீர்! #TenderCoconutBenefits

``ப்போதே கொளுத்தத் தொடங்கிவிட்டது கோடை வெயில். வீதிக்கு வீதி, தர்பூசணிப் பழங்கள், குளிர்பானங்கள், பழச்சாறுகள் விற்பனை களைகட்டத் தொடங்கிவிட்டது. இன்னொரு பக்கம் ஆண்டு முழுவதும் விற்பனையாகும் இளநீரின் விற்பனையும் சூடுபிடித்திருக்கிறது. விற்பனை சூடுபிடிப்பது இருக்கட்டும்... உடல் சூட்டைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுவது இளநீர். `பல தாதுச்சத்துகளையும் ஊட்டச்சத்துகளையும் கொண்டிருக்கும் இளநீரைக் குடிப்பது அவ்வளவு நல்லது’ என்கிறது மருத்துவம். இளநீர், கொழுப்பைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்கும்'' என்கிறார் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் ஜெ.எம்.ஜெனிபர் டயானா.

``இளநீர், மனிதனுக்குத் தேவையான பல சத்துகளைத் தன்னுள்ளே கொண்டிருப்பது. குறைந்த அளவு, வெறும் 46 (சுமார்) கலோரிகளைக் கொண்டது. இதனடிப்படையில் உடல் பருமனைக் குறைக்க இளநீரைவிட சிறந்தது வேறு எதுவுமில்லை. நல்ல கொழுப்பை அதிகரித்து (HDL) கெட்டக் கொழுப்பைக் (LDL) குறைக்க உதவும்; உடலின் வளர்சிதை மாற்றத்தின் அளவை (Metabolic rate) அதிகரிக்கும், இதனால் தைராய்டு சுரப்பிகூட நன்றாக வேலை செய்யத் தொடங்கும். 

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்; இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும். இரண்டாம் உலகப் போரின்போது காயம்பட்டவர்களுக்கு சலைனுக்குப் பதில் இளநீர் செலுத்தினார்கள் என்பது வரலாறு. அந்தளவுக்கு அற்புதமான இளநீர், தாய்ப்பாலைப்போல மிகவும் சுத்தமானது.

நார்ச்சத்து

பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களில் நார்ச்சத்து கிடையாது. ஆனால், ஒரு டம்ளர் இளநீரில் சுமார் மூன்று கிராம் நார்ச்சத்து இருக்கிறது. இந்த நார்ச்சத்து, உணவு சட்டென்று குடலில் உறிஞ்சப்படுவதைத் தவிர்த்து, உணவு மிக மெதுவாகச் செரிமானமாகி உறிஞ்ச உதவும். எனவே, குறைந்த இடைவெளியில் பசி ஏற்படுவதையும் தவிர்க்கும். வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தாமல், வயிற்றை நிரப்புவதில் இளநீருக்கு நிகர் ஏதுமில்லை.

பொட்டாசியம்

மிக முக்கியமான கனிமச் சத்துக்களில் ஒன்று பொட்டாசியம். அது இளநீரில் அதிகமிருக்கிறது. சாப்பிடும் உணவைச் சக்தியாக மாற்றும் திறன் கொண்டது.

புரதம்

இளநீரில் சுமார் இரண்டு கிராம் புரதம் இருக்கிறது. இது, பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையது'' என்கிறார் ஜெ.எம்.ஜெனிபர் டயானா.

இளநீரின் சத்துகள் குறித்து, ஊட்டச்சத்து நிபுணர் வாணியிடம் பேசினோம். ``கொழுப்புச்சத்தே இல்லாதது இளநீர்’’ என்று ஆரம்பித்தவர், அதிலுள்ள சத்துகள் சிறப்புகளை விளக்க ஆரம்பித்தார்...

``இளநீரில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி, சி, துத்தநாகம் போன்ற சத்துகள்  இருக்கின்றன. பகலில் பழச்சாறுகள் குடிப்பவர்கள், அதற்குப் பதிலாக தினமும் இளநீர் குடிப்பது நல்லது. பழச்சாறுகளில்கூட வெள்ளைச் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டு, பழத்தின் முழுச்சத்துகளும் கிடைக்காமல் போகலாம். இளநீரில் அது போன்ற எந்தப் பிரச்னையும் இல்லை.

இளநீர் குடிப்பது, உடலில் வறட்சி, சருமப் பாதிப்புகள் ஏற்படாமலிருக்க உதவும். மலச்சிக்கல், உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய உதவும். இளநீரின் வழுக்கைப் பகுதியை ஒதுக்கிவிடக் கூடாது. தினமும் இளநீர் குடிப்பதால் சிறுநீரகக்கல், கீல்வாதம், அழற்சி போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். கர்ப்பிணிகள் இளநீர் குடித்தால் ஃபோலேட் (Folate) சத்து கிடைக்கும்.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் தங்கள் உணவில் உள்ள கலோரிகள் அனைத்தையும் ஒதுக்கத் தொடங்குவார்கள். அரிசி வகை உணவுகளைத் தவிர்ப்பார்கள்; சர்க்கரையை ஒதுக்குவார்கள்; ஜூஸ் குடிப்பார்கள். உண்மையில் 117 கலோரி வரை இருக்கும் ஜூஸை குடிப்பதற்குப் பதிலாக, சுமார் 46 கலோரிகள் வரையிருக்கும் இளநீரை தினமும் குடிப்பது, கொழுப்புச்சத்து ஏற்படாமல் உடலைக் காக்கும். 

இளநீரிலிருந்து கிடைக்கும் சத்துகளில் முக்கியமானது, நார்ச்சத்து. இளநீர் ஒன்றில் 2.6 கிராம் வரை நார்ச்சத்து இருக்கிறது. `ஒருவர் அதிகளவு நார்ச்சத்து எடுத்துக்கொண்டால், அவருடைய உடல் எடை குறையத் தொடங்கும்’ என்பது ஆய்வு ஒன்றின் முடிவு. உணவிலிருந்து கொழுப்புச்சத்தைத் தவிர்க்க விரும்புபவர்கள் இளநீரை மட்டும் அருந்தலாம்.

உடற்பயிற்சி செய்பவர்கள், தங்களது பயிற்சியை முடித்ததும், ஆற்றல் கிடைக்க குளிர்பானங்களைக் குடிப்பார்கள்.  சில குளிர்பானங்கள் வாந்தி, வயிற்றுப்போக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆனால், இந்தப் பிரச்னையை எந்தப் பக்கவிளைவும் இல்லாமல் சரிசெய்யக்கூடிய அருமருந்து, இளநீர். 

ஊட்டச்சத்து நிறைந்த இளநீரால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இது சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் சத்து அதிகம் கொண்டது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே இளநீர் அருந்த வேண்டும்."

இளநீரால் கிடைக்கும் 10 நன்மைகள்:

* மலச்சிக்கல் ஏற்படாது,

* உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைச் சரிசெய்ய உதவும்,

* சிறுநீரகக்கல் ஏற்படாது,

* கீல்வாதம் பிரச்னையில் இருந்து விடுபடலாம்,

* உடல் எடை குறையும்,

* உடல் வறட்சி ஏற்படாது,

* சரும பாதிப்பு ஏற்படாது,

* நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்,

* இன்சுலின் சுரப்பு மேம்படும்,

* செரிமானப் பிரச்னை ஏற்படாது.