Published:Updated:

``எனக்கு நியூரோஎண்டாக்ரின் ட்யூமர்!'’ - கலங்கவைத்த நடிகர் இர்ஃபான் கான் #NeuroendocrineTumourAlert

``எனக்கு நியூரோஎண்டாக்ரின் ட்யூமர்!'’ - கலங்கவைத்த நடிகர் இர்ஃபான் கான் #NeuroendocrineTumourAlert
``எனக்கு நியூரோஎண்டாக்ரின் ட்யூமர்!'’ - கலங்கவைத்த நடிகர் இர்ஃபான் கான் #NeuroendocrineTumourAlert

``எனக்கு நியூரோஎண்டாக்ரின் ட்யூமர்!'’ - கலங்கவைத்த நடிகர் இர்ஃபான் கான் #NeuroendocrineTumourAlert

ரு ரசிகனுக்கு, நடிகர் என்பவர் வெறும் நடிகர் மட்டுமல்ல... தன் வாழ்வோடு கலந்துவிட்ட ஒருவர். தன் அன்புக்குரிய நடிகருக்கு ஏதாவது பிரச்னை என்றால், துடித்துப்போவது ரசிகன்தான். சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் (Irrfan Khan) தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், தனக்கு ஓர் அரிதான நோய் வந்திருப்பதாகவும், அது என்ன என்பதை பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவைப் படித்துவிட்டு பதறிப்போனார்கள் அவருடைய ரசிகர்கள். இப்போது, இரண்டு நாள்களுக்கு முன்பாக தனக்கு வந்திருப்பது, `நியூரோஎண்டாக்ரின் ட்யூமர்’ (Neuroendocrine tumour) என்று குறிப்பிட்டிருக்கிறார் இர்ஃபான் கான். 

ஹாலிவுட், பாலிவுட் இரண்டிலும் முத்திரை பதித்தவர், இர்ஃபான் கான். அவருடைய இயல்பான, யதார்த்தமான நடிப்பு பல உயரங்களை அவருக்குப் பெற்றுத்தந்தது. 1984-ம் ஆண்டில் தேசிய நாடகப் பள்ளியில் (National school of drama) உதவித்தொகையின்மூலம் எம்.ஏ படிப்பை முடித்தார். திரைப்படக் கனவோடு மும்பைக்கு வந்தார். சில தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. `சாணக்யா’, `பாரத் ஏக் கோஜ்,’ `சந்திரகாந்தா’ எனப் பல தொடர்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். 1988-ம் ஆண்டு, இயக்குநர் மீரா நாயர் மூலமாக `சலாம் பாம்பே’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.  

அதைத் தொடர்ந்து, பல பட வாய்ப்புகள் கிடைத்தாலும் பெரிய வெற்றி என்று சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. 1995-ம் ஆண்டு தன்னுடன் தேசிய நாடகக் கல்லூரியில் படித்த சுடாபா சிக்தர் (Sutapa sikdar) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 2001-ம் ஆண்டு நடித்து வெளிவந்த 'தி வாரியர்' (The Warrior)  திரைப்படம் இவரை உலகப் பிரபலமாக்கியது. பிறகு அவர் திரைப்படத் துறையில் எடுத்துவைத்த ஒவ்வோர் அடியும் அழுத்தமாக விழுந்தது. `ரோடு டு லடாக்’ (Road to ladakh), குறும்படம், 2005-ம் ஆண்டில் வெளீயான `ராக்’ (Rog)...  என வெற்றிகரமாக அவரின் பயணம் தொடர்ந்தது. 

தொடர்ந்து திரைப்படங்களில் முன்னணி மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். 50-க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்கள், `ஸ்லம் டாக் மில்லியனர்’, `லைஃப் ஆஃப் பை’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்கள் என அவருக்கு வந்த வாய்ப்புகள் எல்லாமே அவருடைய தனித்துவமான நடிப்புக்குக் கிடைத்த அங்கீகாரங்கள். ஃபிலிம் ஃபேர் விருது தொடங்கி பத்மஸ்ரீ விருது வரை பெற்றுவிட்டார் இர்ஃபான் கான். அவருக்கு நியூரோஎண்டாக்ரின் ட்யூமர் இருப்பது மருத்துவ சோதனையில் தெரியவந்திருக்கிறது. இதற்கான சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குப் போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் இர்ஃபான் கான். ``என்னைச் சுற்றியிருப்பவர்களின் அன்பும் எனக்கு வலிமையையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது’’ என்று நெகிழ்ந்துபோய்ச் சொல்லியிருக்கிறார் இர்ஃபான்.  

``நியூரோஎண்டாக்ரின் ட்யூமர் என்றால் என்ன, இதற்கான அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?’’ மருத்துவர் ஸ்ருதி சந்திரசேகரனிடம் கேட்டோம். 

``நம் உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பியிலும் நரம்பு மண்டலத்திலும் இருக்கும் செல்களில் உருவாகும் ஒரு வகைக் கட்டிதான், நியூரோஎண்டாக்ரின் ட்யூமர். இதில், இரண்டு வகைக் கட்டிகள் இருக்கின்றன. ஒன்று, `பினைன்’ (Benign). மற்றொன்று, `மாலிக்னன்ட்’ (Malignant). பெரும்பாலான நியூரோஎண்டோக்ரின் ட்யூமர்கள் பினைன் வகையைச் சார்ந்தவை. இவை, தீங்கு விளைவிக்காதவை.  ஆனால் மாலிக்னன்ட் வகை, உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது; புற்றுநோயை உருவாக்கும் தன்மைகொண்டது.

இந்தக் கட்டிகள் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை எங்கு வேண்டுமானாலும் வரலாம். நுரையீரல், பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு, வயிறு, கல்லீரல், கணையம், கர்ப்பப்பை என எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம்.

அறிகுறிகள்... 

உடலின் எந்தப் பகுதியில் கட்டி வருகிறதோ, அதற்கேற்ப அறிகுறிகள் மாறுபடும். இந்தக் கட்டிகள் வெவ்வேறு வகையான ஹார்மோன்களில் ஒளிந்திருக்கும். நியூரோஎண்டாக்ரினில் அதிகமாக உண்டாவது கார்சினாய்டு (Carcinoid) கட்டிகள்தான். இவை, வயிற்றுப் பகுதியில் உருவாகும். 

பாதிப்பட்டவர்களுக்கு...

பொதுவாக, அதிக வியர்வை, படபடப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும். எந்த இடத்தில் கட்டி உருவாகிறதோ அதற்கேற்ப அறிகுறிகள் தெரியும். உதாரணமாக, கணையத்தில் உருவாகியிருந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும். வயிற்றில் அல்சர் ஏற்படலாம்; மஞ்சள்காமாலை உண்டாகலாம். இரைப்பையில் கட்டி என்றால், வயிறு, குடல் ஆகியவற்றில் வலி ஏற்படும். குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு வரலாம். உடல் எடை குறையும்.

சிகிச்சை... 

பாதிக்கப்பட்ட பகுதியில் உடல் திசு ஆய்வு (Biopsy) செய்த பிறகு, நுண் திசு நோய்க்கூறு இயல் (Histopathology) சோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகு, இந்த நோயின் தன்மையை மூன்று வகையாகப் பிரிப்பார்கள்.
    1. நன்றாக மாறுபட்ட வகை (Well differentiated)
    2. மிதமாக மாறுபட்ட வகை (Moderate differentiated) 
    3. மோசமாக மாறுபட்ட வகை (Poor differentiated).
 

முதல் வகையாக இருந்தால், பயப்படவேண்டிய அவசியமில்லை. இரண்டாவது வகையில் நோயின் தன்மை சுமார் என்பதுபோலிருக்கும். மூன்றாவது பிரிவில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய தன்மை அதிகம் இருக்கும். இவற்றின் அடிப்படையில்தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். 

பாதிக்கப்பட்டவருக்கு நியூரோஎண்டாக்ரின் ட்யூமர், மாலிக்னன்ட் வகை இருப்பது தெரிய வந்தால், சிறப்பு மருத்துவர்களைக்கொண்டு அறுவைசிகிச்சை செய்யவேண்டியிருக்கும். நோயின் தாக்கம், தன்மை, அதன் வீரியத்தைப் பொறுத்து மருந்துகள் வழங்கப்படும்’’ என்கிறார் டாக்டர் ஸ்ருதி சந்திரசேகரன்.  

ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ்கூட கணையத்தில் நியூரோஎண்டாக்ரின் ட்யூமரால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இர்ஃபான் கானுக்கு வந்திருக்கும் கட்டி எந்த வகை என்று சோதித்து அறிந்த பிறகுதான் அதற்கான சிகிச்சை தொடங்கும். அவர் விரைவில் இந்தப் பிரச்னையிலிருந்து மீண்டுவர வேண்டும் என்பதே ரசிகர்கள் முதல் அனைவரின் விருப்பமாகவும் இருக்கிறது! 

அடுத்த கட்டுரைக்கு