Published:Updated:

’120 பேர் தனிமை... 1,500 பேருக்கு ரத்த மாதிரி!- பெரம்பலூரில் அடுத்தடுத்து கொரோனா அதிர்ச்சி

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்

தீயணைப்பு வீரர் குடும்பம், அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள், பணியாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தீயணைப்பு வீரர் மற்றும் கல்லூரி மாணவர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அவருடன் பணியாற்றியவர்கள் மற்றும் பழகிய 120 நபர்கள் பெரம்பலூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.1500-க்கும் மேற்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை அதிகாரிகள் எடுத்துச்சென்றுள்ளனர்.

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்திவருவதால், அதைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரரும், துறைமங்கலம் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்நிலையில், அவர்கள் வசித்த பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தி, தடை செய்யப்பட்ட பகுதிகள் என்று நகராட்சி சார்பில் எச்சரிக்கை போர்டுகள் வைத்துள்ளனர்.

துறைமங்கலம் பகுதியில் ஏற்கெனவே சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், தீயணைப்பு வீரருடன் தொடர்பிலிருந்த குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிந்த தீயணைப்பு வீரர்களுக்கும், அவர் தங்கியிருந்த தீயணைப்பு வீரர் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், இதேபோல் கல்லூரி மாணவருடன் தொடர்பிலிருந்த குடும்பத்தினர், நண்பர்கள் என மொத்தம் 120 பேரின் சளி, ரத்த மாதிரிகள் சுகாதாரத்துறையினரால் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தது.

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

அந்த முடிவுகள் இன்னும் வரவில்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் பேசினோம். ”பாதிக்கப்பட்ட இருவரும் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதனைச் சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் பகுதியை லாக்டெளன் செய்திருக்கிறோம். அதோடு, இந்தப் பகுதிகளை 14 நாள்கள் கண்காணிக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, இப்பகுதி முழுவதும் கிருமிநாசினியைத் தெளித்துவருகிறோம். தொடர்ந்து, நகராட்சிப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று யாருக்கும் தொடர்ந்து சளி, காய்ச்சல் உள்ளதா வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டத்திலிருந்து திரும்பி வந்துள்ளனரா என்பது குறித்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

பெரம்பலூர்
பெரம்பலூர்

இதுவரையிலும் 1,500-க்கும் மேற்பட்டோர் சளி மற்றும் ரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆக இருந்தது. நேற்று ஒருவர் குணமாகி வீட்டுக்குச் சென்றுவிட்டார். தற்போது பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 6 ஆக உள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு