தன்னம்பிக்கை
Published:Updated:

நோய் நாடி..! - காக்க... காக்க... கண் நலம் காக்க!

நோய் நாடி..! - காக்க... காக்க... கண் நலம் காக்க!
பிரீமியம் ஸ்டோரி
News
நோய் நாடி..! - காக்க... காக்க... கண் நலம் காக்க!

கம்ப்ளீட் மெடிக்கல் கைடு!

நோய் நாடி..! - காக்க... காக்க... கண் நலம் காக்க!

நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான். அந்த வகையில் தொடர்ந்து நோய்களைப் பற்றி வெளிச்சம் தந்துவரும் ‘நோய் நாடி’ பகுதியில்... கண் நோய்கள், அவற்றுக்கான பரிசோதனைகள், சிகிச்சைகள், வாழ்வுமுறை தீர்வுகள் பற்றி விளக்கமாகச் சொல்கிறார், சென்னை - ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் மூத்த துணைப் பேராசிரியரும், கண் பார்வை சிறப்பு அறுவை மற்றும் லேசர் சிகிச்சை நிபுணருமான டாக்டர் வெங்கடேஷ்.

‘‘புலன்களில் தனிச்சிறப்பு வாய்ந்த கண், ஒளி உணரும் தன்மைகொண்ட ஒரே உடல் உறுப்பு. அதில் பிரச்னை ஏற்படாத வகையிலான வாழ்க்கை முறையை உணவு, பயிற்சி என்று கட்டமைத்துக்கொள்வதும், கண் பிரச்னைகளை வளரவிட்டு சிகிச்சையற்ற நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தாமல் ஆரம்பித்திலேயே குணமாக்கிக்கொள்ள வேண்டியதும் முக்கியம்’’ என்ற அறிவுறுத்தல் தந்து ஆரம்பித்தார் டாக்டர்...

குழந்தைகளின் பார்வைக் குறைபாடுகள்!

நோய் நாடி..! - காக்க... காக்க... கண் நலம் காக்க!கண் நலனில் குழந்தைப் பருவம் மிகமிக முக்கியமானது. சில குழந்தைகள் கண்களைச் சுருக்கிப் பார்ப்பார்கள், சிலர் தாடையைச் சாய்த்து மேல்நோக்கிப் பார்ப்பார்கள், சிலர் டி.வி-யை அருகில் உட்கார்ந்து பார்ப்பார்கள், சிலர் சைடாக அமர்ந்து பார்ப்பார்கள். இப்படி ஒரு காட்சியைப் பார்க்கும் விதத்தில் இயல்பாக இல்லாமல் குழந்தைகளிடம் ஏதாவது வித்தியாசம் தென்பட்டால், அவர்கள் கண்பார்வையில் ஏதோ சிரமம் இருக்கிறதென்று அர்த்தம். உடனடியாக மருத்துவரை அணுகி கண் பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

குழந்தைகளின் மாறுகண்... எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக சிகிச்சையளிக்க வேண்டிய பிரச்னை. இல்லையென்றால் ஒரு கண்ணில் பார்வை முற்றிலும் தெரியாமல்போவதுவரை செல்லலாம். மேலும் டிரைவிங் லைசன்ஸ் தொடங்கி பல ஆவணங்களைப் பெறுவதிலும் அது சிக்கலை ஏற்படுத்தலாம். இந்த 21-ம் நூற்றாண்டிலும் மாறுகண் அதிர்ஷ்டம் என்று நம்புவது முட்டாள்தனம். மாறுகண்ணை மருத்துவத்தில் சோம்பேறிக் கண் (lazy eye) என்போம். இதற்கு ஆரம்ப நிலையிலேயே கண்ணாடி அணிவது, அறுவை சிகிச்சை என பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சையளிக்க வேண்டும். அப்படி சரிசெய்யாமல் விட்டால், அந்தக் குழந்தையின் பார்வையை இயல்பு நிலையில் வைத்திருப்பது கடினம். மாறுகண்ணிலிருந்து வரும் பிம்பம் மாறுபட்ட பிம்பம்; இதனை மூளை சரிவர ஏற்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

டாப் 4 கண் பிரச்னைகள்!

நோய் நாடி..! - காக்க... காக்க... கண் நலம் காக்க!

குழந்தைகளுக்கு கண்ணில் பிரச்னை ஏற்பட்டு, அதற்கு சரியான நேரத்தில் கண்ணாடி அணியாமல்போகும்போது, கண்களின் வளர்ச்சி முழுமையடையாமல் போகும்.

உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறை, சர்க்கரை நோய் பாதிப்பு போன்றவற்றால் ஏற்படும் கண்புரை நோய்க்கு, அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு. இது அனைத்து வயதினருக்கும் வரக்கூடும்.

சர்க்கரை நோயால் வரக்கூடிய கண்பார்வை பிரச்னைகளையும் உரிய நேரத்தில் கண்டறியாமல்விடுவது இங்கு அதிகம். இந்தப் பாதிப்புகளை லேசர் சிகிச்சை மூலமாக சரிசெய்யலாம்.

இன்றைக்கு கண் பாதிப்பு உடையவர் களில் 20% பேருக்கு அது விபத்தினால் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஹெல்மெட் அணியாதது, கூலிங் கிளாஸ் போடாதது, கூர்மையான ஆயுதம் கண்ணில்பட்டது, பாதுகாப்பில்லாமல் வெடி வெடித்தது போன்றவை இதற்குக் காரணம்.

கண் பரிசோதனைகள்!

ரிஃப்ராக்‌ஷன் டெஸ்ட் (Refraction Test): கண் பார்வையில் ஏதேனும் குறை இருக்கிறதா என்பதைக் கண்டறியும் இந்தப் பரிசோதனையை... 7, 8 வயதுக்குள் அனைத்துக் குழந்தைகளும் செய்து கொள்வது நல்லது. 

ரெகுலர் டெஸ்ட் (Regular Test): கண்ணில் சத்துக்குறை இருக்கிறதா என்பதைக் கண்டறியும் இந்தப் பரிசோதனையை, அனைத்து வயதினரும், அனைத்து மருத்துவரிடமும், ஆறு மாதத்துக்கு ஒரு தடவை செய்துகொள்ளலாம். இதனை மருத்துவர்கள் கண்களை பார்த்து நேரடி யாகக் கணிப்பார்கள். 

மாறுகண் சோதனை: பார்வை வித்தியாசமாகத் தெரியும்போது, அது மாறுகண்ணா இல்லையா என்பதை இந்தப் பரிசோதனை மூலம் உறுதிபடுத்தலாம். 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் செய்யக்கூடியது இந்தப் பரிசோதனை.

ரெட்டினா டெஸ்ட் (Retina Test): கண் பார்வை பிரச்னைக்காக கண்ணாடி அணிபவர்கள் ஒவ்வொரு தடவை கண்ணாடி மாற்றும்போதும் (அல்லது வருடத்துக்கு ஒரு தடவை) இந்த விழித்திரை பரிசோதனையைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இதில் கண் நரம்புகள் சோதனை செய்யப்பட்டு, கூடுதல் பாதிப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக, மயோஃபியா (Myopia) என்னும் தூரப்பார்வை குறைபாடு, சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் இந்தச் சோதனையை தவறாமல் செய்துகொள்ள வேண்டும். 

பெரிமெட்ரி டெஸ்ட் (Perimetry Test): கண் அழுத்த நோய் உள்ளவர்கள், கண் நரம்பு பாதிப்பின் அளவை அறியும் இந்தப் பரிசோதனையை 9 மாதத்துக்கு ஒரு தடவை மேற்கொள்ள வேண்டும்.

`ஐடிஓ' டெஸ்ட் (IDO Test - Indirect Opthalmoscopy): சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் வருடத் துக்கு ஒருதடவை செய்துகொள்ள வேண்டிய விழித்திரை பரிசோதனை இது.

குளோரோக்வின் ரெட்டினோபதி டெஸ்ட் (Chloroquine Retinopathy Test): நாள்பட்ட மூட்டுவலிக்காக மாத்திரை எடுத்து வருபவர்களுக்கு, கலர் விஷன் (color vision) என்றழைக்கப்படும், கண்ணின் நிறத்தை அறியும் தன்மையில் குறைபாடு உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள இந்த சோதனை முறை பயன்படுகிறது.

குறிப்பு: மேற்கண்ட சோதனைகளுக்கு (ஒன்றுக்கு)  200 - 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்துகொள்ளலாம்.

சிகிச்சை முறைகள்!

நோய் நாடி..! - காக்க... காக்க... கண் நலம் காக்க!

கண் மருந்துகள்: கண்களில் மேற்புறத்தில் போடும் சொட்டு மருந்து, மேற்புறத்தில் போடும் ஊசி, உட்புறத்தில் போடும் ஊசி உள்ளிட்ட சிகிச்சைகளை கண் மருத்துவர்கள் மேற்கொள்வார்கள். 

கண்பார்வை குறைபாட்டு சிகிச்சை:
கண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ், லேசர் சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை (கண்ணுக்குள் லென்ஸ் பொருத்துவது) போன்றவை இந்த சிகிச்சை முறையில் அடங்கும். 

கண் புரைநோய் அறுவை சிகிச்சை: சிறு துவாரம் வழியாக அளிக்கக்கூடிய சிகிச்சை முறை மற்றும் இதர கண் வியாதிகளுக்கு லேசர் மூலமாக அளிக்கும் சிகிச்சை.

குறிப்பு:
கண் மருந்துகளுக்கு 10 முதல் 1,000 ரூபாய் வரையும், பார்வைக் குறைபாட்டு சிகிச்சைக்கு 1,000 முதல் 2,500 ரூபாய் வரையும், கண்புரை நோய் அறுவை சிகிச்சைக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையும், இதர கண் வியாதிகளுக்கு லேசர் மூலமாக அளிக்கும் சிகிச்சைக்கு 2,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையும் செலவாகலாம். அரசு மருத்துவமனையில் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளில் இடத்துக்கு ஏற்ப கட்டணம் மாறக்கூடும்.

உணவும் கண்ணும்!

நோய் நாடி..! - காக்க... காக்க... கண் நலம் காக்க!

மஞ்சள் நிறப் பழங்கள், பப்பாளி, வாழை, ஆப்பிள் மற்றும் அனைத்து கீரைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது. சமைக்காமல் சாப்பிடும் கேரட், வெள்ளரி சிறந்தது. பீட்ரூட் கண்ணுக்கு நலம் தரக்கூடியது. பொதுவாக காய்கறிகளை பாதியளவு வேகவைத்துச் சாப்பிடுவது பரிந்துரைக்கத்தக்கது. குழந்தைகளுக்கு ஒரு வயதில் இருந்தே இந்த உணவுப் பழக்கங்களைப் பழக்கலாம்.

ஒருவரது கண்ணின் மேற்பரப்பில் மஞ்சள் நிற படிமானம் தென்பட்டால் அது விட்டமின்-ஏ சத்துக்குறைவால் ஏற்பட்டிருக்காலம். பெரியவர்களின் கண் பார்வைக்குத் தேவைப்படும் லைக்கபீன் (lycopene) என்னும் சத்து நாம் அன்றாடம் சாப்பிடும் எல்லா காய்கறி, கீரையிலும் உள்ளது. குறிப்பாக அரைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை போன்றவற்றிலும், பீட்ரூட்டிலும் அதிகளவில் இது இருக்கும்.

அசைவப் பிரியர்கள் கடல் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக சிறு மீன்கள், இறால். அதிக விலையுள்ள மீன்களைத்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை, குறைந்த விலையில் கிடைக்கும் ஆரோக்கியம் தரவல்ல மீன்களையும் சாப்பிடலாம்.

``மொத்தத்தில், விரைவாக கண்டறியப்படும் பாதிப்புகள், எளிதாக குணப்படுத்துவதற்கான வாய்ப்பைத் தருகின்றன. கண் பிரச்னைகளும் அப்படியே! அதனால், வருடத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை இன்றைய உலகில் அனைத்து வயதினருக்கும் அவசியமான ஒன்று. பார்வைதான் உடல் இயக்கத்துக்கான ஆதாரம். அதில் அலட்சியம் காட்டினால், வாழ்க்கை இருட்டாகிவிடும்!’’

- டாக்டர் வெங்கடேஷ் தரும் எச்சரிக்கை, புறந்தள்ளக் கூடாதது.

சா.வடிவரசு

குழந்தைகளுக்கான கண் பரிசோதனைகள்... செக் லிஸ்ட்!

நோய் நாடி..! - காக்க... காக்க... கண் நலம் காக்க!

சில குழந்தைகளுக்கு, குறிப்பாக உறவுகளுக்குள் திருமணம் செய்துகொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு பிறவியிலேயே பார்வைக் குறைபாடு இருக்கக்கூடும். பிறந்த குழந்தைகளுக்கு, பொதுவாக 2 முதல் 3 மாதத்துக்குள் அம்மாவின் முகம் தெரிய ஆரம்பிக்கும். அந்த மாதங்களுக்குப் பிறகும் அவர்கள் ஒளியை, உருவங்களை உள்வாங்கவில்லை என்றால், உடனடியாக மருத்துவரிடம் செல்லவும்.

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக, அவர்களுக்குப் பார்வையில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வகுப்பில் குழந்தையின் கவனக்குறைவு பார்வைக் குறைபாட்டாலும் இருக்கலாம்.

7 வயதுவரை குழந்தையின் கண் சம்பந்தமான வளர்ச்சிகள் அதிகமாக இருக்கும். கண்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து 7 வயதுக்குள் சரிசெய்துவிட வேண்டும். அதற்கடுத்த வயதுகளில் முழுமையாகக் குணப்படுத்துவது இயலாமல் போகலாம்.

கண் சொட்டுமருந்து..!

நோய் நாடி..! - காக்க... காக்க... கண் நலம் காக்க!

குழந்தையின் கண் நலனுக்காக பிறந்த 9-வது மாதத்தில் இருந்து 3 வயதுவரை, ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் ஒருமுறை விட்டமின்-ஏ சொட்டுமருந்து போட்டுக்கொள்வது அவசியம். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இது இலவசமாகப் போடப்படுகிறது. ஆனால், அதிகமானோருக்கு இது பற்றிய விழிப்பு உணர்வு இல்லை.

கண் விஷயத்தில் செய்யக்கூடாதவை!

நோய் நாடி..! - காக்க... காக்க... கண் நலம் காக்க!

கண் சிவத்தல், நீர் வழிதல், எரிச்சல் உண்டாதல் என எந்தக் கண் பிரச்னைக்கும் சுயமருத்துவம் கூடாது. 

கண்கட்டியை சூடு என்று நினைத்து நாமக்கட்டி, சந்தனம் என தடவி, சாதாரண பிரச்னையை நீங்களே சிக்கலாக்கிக்கொள்ளாதீர்கள். அது பார்வை பறிபோவது வரை கொண்டுசெல்ல வாய்ப்புள்ளது. 

கண் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர் தந்த மருந்துகளை ஒருவருக்கு ஒருவர் தந்து பயன்படுத்துவது தவறு.

கண் பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொண்டவர்கள் மருத்துவர் சொல்லும் அறிவுரைகளை அவர் குறிப்பிடும் காலம்வரை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தானாக நிறுத்தக் கூடாது.

தூசு விழுந்தால் விரலால் எடுப்பது, துணியால் துடைப்பது போன்றவை என கண்ணை மிகவும் கசக்கினால் கருவிழிவரை பாதிப்பு ஏற்படுத்தலாம்.

சிலர் அடிக்கடி கண் கசக்குவதை வாடிக்கையாகவே வைத்திருப்பார்கள். அவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

கண்களில் எக்காரணம் கொண்டும் எண்ணெய் விடக் கூடாது. கண்களைச் சுற்றி எண்ணெய் வைக்கலாம்.

அழகுக்காக பவர்லெஸ் கிளாஸ், லென்ஸ் அணிவதைத் தவிர்க்கவும்.

மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே லேசர் சிகிச்சை செய்துகொள்ளவும். பொதுவாக கண்ணின் பவர் + or - 3 வரை உள்ளவர்களுக்கு லேசர் சிகிச்சை தேவையில்லை.

மொத்தத்தில், கண் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னைக் கும் மருத்துவரை அணுகாமல் சுயமருத்துவம் கூடவே கூடாது!

கண் பிரச்னைக்கான வெளிப்புறக் காரணிகளும், தீர்வுகளும்! 

நோய் நாடி..! - காக்க... காக்க... கண் நலம் காக்க!

ஒருவருக்கு கண்ணில் வறண்ட காற்று, சிறு தூசுகள் தொடர்ந்து படும்போது அது பிரச்னையை உண்டாக்கக்கூடும். அதனைத் தவிர்க்க கூலிங் கிளாஸ், வண்டியில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்வது நல்லது.

தூசு மட்டுமில்ல, ஏ.சி-யும் கண்ணுக்குப் பிரச்னைதான். ஏ.சி காற்றானது முகத்தில், கண்களில்பட்டால், கடும் வறட்சியை உண்டாக்கும்.

கணினி திரையைத் தொடர்ந்து பார்க்கும்போது கண் வறட்சி/அழற்சி என கண்கள் பாதிக்கப்படும். பொதுவாக, நாம் கண்களை ஒரு நிமிடத்துக்கு 10 - 12 தடவை சிமிட்டுவோம். ஆனால், கணினி முன் இருக்கும்போது 6 - 8 முறை என அது குறையக்கூடும். இதனால் கண் மேற்பரப்பு வறண்டுபோவது, சிவந்துபோவது, கண்களில் சிறு கட்டி உருவாவது என பிரச்னைகள் ஏற்படும். 

கணினியில் வேலை செய்பவர்கள் அடிக்கடி கண்களைச் சிமிட்ட வேண்டும். கணினியின் ஒளி உமிழ்வை (brightness) குறைத்துப் பயன்படுத்தவேண்டும். 30 - 45 நிமிடங்களுக்கு ஒருமுறை கணினியில் இருந்து பார்வையை விலக்கி, தூரமான பொருட்களைப் பார்ப்பது, எழுந்து ஜன்னல் வழியாக தூரத்தில் சிறிது நேரம் பார்ப்பது போன்றவற்றைச் செய்ய வேண்டும்.