Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 1

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 1
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 1

புதிய தொடர் - 1ம.செந்தமிழன், படம்: அய்.அசோக்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 1

புதிய தொடர் - 1ம.செந்தமிழன், படம்: அய்.அசோக்

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 1
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 1
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 1

திரும்பிச் செல்லுதல் எப்போதும் இன்பம் தரக்கூடியது. எங்கு திரிந்தாலும் வீடு திரும்ப வேண்டும். வீடு என்பது, குடியிருக்கும் இடத்தையும் குறிக்கும்; இறையின் திருவடியையும் குறிக்கும். அலைவதும் திரிவதும் திரும்பிச் செல்வதற்காகத்தான் என்பதைப் புரிந்துகொண்டால், இன்பம் குடிகொள்ளும்.

முன்னேற்றம் என்ற கருத்து வலுவாகவும் கருணையற்ற வகையிலும் முன்வைக்கப்படும் காலம் இது. `முன்னேறி முன்னேறி எங்கு செல்வது?' என்ற கேள்வியைக் கேட்டால், எவரிடமும் பொருத்தமான விடை இல்லை. `முன்னேற்றத்துக்கான பாதை கடுமையானதாகவும் சுயநல வெறிகொண்டதாகவும் இருக்கிறதே... இது சரியா?’ என்ற கேள்விக்கும் பொருத்தமான விளக்கம் இல்லை. `இவற்றை எல்லாம் கண்டு கலங்கினால், நீ அடைய வேண்டிய இலக்கை அடைய முடியாமல்போகும். ஆகவே, ஓடு… ஓடு… நிற்காதே’ என்ற அறிவுரை எல்லா தரப்பிலும் வழங்கப்படுகிறது.

சொர்க்கத்தை அடைவதுதான் உங்கள் இலக்கு என்றால், அதற்கான பாதை நரகமாக இருக்க முடியாது.

வறண்ட ஆறுகளில் காய்ந்துகிடக்கும் நாணல் கோரைகள், தொழிற்பேட்டைகளுக்காக அழிக்கப்பட்ட மேய்ச்சல் காடுகளில் இருந்து தப்பி ஓட வழியின்றி வாகனங்களில் அடிபட்டு செத்துக்கிடக்கும் பாம்புகள், ரசாயன நஞ்சுகள் கடலில் கலக்கப்பட்டதால் பெருங்கூட்டமாகச் செத்துக் கரை ஒதுங்கும் திமிங்கலங்கள் எல்லாம் வளர்ச்சிக்காகப் பலிகொடுக்கப்படுபவைதான். `எந்தக் கேள்வியும் கேட்காதே, எல்லாம் முன்னேற்றத்துக்காக. நிற்காதே, திரும்பிப் பார்க்காதே, போய்க்கொண்டே இரு’ என்ற சிந்தனை ஆட்டிப்படைக்கும் காலம் இது.

பூமியைக் காப்பது பற்றி நான் உரையாடப்போவது இல்லை. ஏனெனில், பூமிக்குத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியும். மலைகளை வெட்டுகிறீர்களா? நன்றாக வெட்டுங்கள். பெருங் கடல்களுக்குக் கீழே உள்ள கண்டத் திட்டுகளை சில அடிகள் நகர்த்திக்கொண்டால், கடலுக்கு மேலே புத்தம் புதிய மலைகள் முளைத்து வந்து விடும். இமயமலை பூமியால் அப்படி உருவாக்கப் பட்டதுதான். பெருங்கடலுக்கு அடியே உள்ள கடின நிலத்தை ஓரிரு ஆழிப்பேரலைச் சீற்றங்கள், சில நிலநடுக்கங்கள் வழியாக அப்படியே மேலே கொண்டுவந்துவிடுவது பூமிக்கு எளிதான செயல். இமயமலையின் உச்சியில் இப்போதும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்கின்றன.

எரிவாயு எடுக்கிறீர்களா? நன்றாக எடுங்கள். அதற்காக நிலத்தைத் தோண்டி நிலத்தடி நீரை உறிஞ்சித் துப்புகிறீர்களா? நன்றாகத் துப்புங்கள். ஒரே ஒரு நிலப்பிளவு, நிலத்தின் மேல் உள்ள பல கோடி உயிரினங்களை உள்ளே விழுங்கிக் கொள்ளும். அந்த உயிரினங்கள் யாவும் மட்கி, எரிவாயுவாகவும் தங்கமாகவும் வைரமாகவும் நிலக்கரியாகவும் இன்னும் பல விலைமதிப்பற்ற ‘செல்வங்களாகவும்’ மாற்றப்படும்.

காடுகளை அழிக்கிறீர்களா? நன்றாக அழியுங்கள். ஒரே ஒரு பெருமழை, காடுகளை அழித்து நீங்கள் நட்டுவைத்த வண்ணக்கொடிகளையும் கட்டி வைத்தக் கட்டடங்களையும் விழுங்கிச் செரித்துவிடும். ஆகப்பெரிய அரண்மனைகளின் மதில்களில்கூட அரசமரங்கள் முளைத்துக்கிடக்கும்.

பூமி, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும். அதற்குப் பின்னர், `முன்னேற்றம்', `வளர்ச்சி' போன்ற சொற்கள் எழுதப்பட்ட புத்தகங்களும் பதாகைகளும் ஏதோ ஒரு கடலுக்கு அடியில் அல்லது ஏதோ ஒரு பனிமலையின் உச்சியில் சிதைந்துகிடக்கும் கழிவுகளாகத்தான் இருக்கும்.

இயற்கையைச் சீரழித்து வளர்ச்சி காணுதல் என்பதன் உண்மையான பொருள், மனிதகுலம் தன்னைத்தானே அழித்துக்கொள்வதுதான். ஏனெனில், மனிதர்களும் இயற்கையின் அங்கங்கள் தான். இயற்கை வேறு, மனிதர் வேறு என்ற மயக்கத்தை நவீன அறிவியல் நிலைநாட்டியுள்ளது. இயற்கையின் பார்வையில் வளர்ச்சி என்பது, முடிவை நோக்கிய பயணத்தைக் குறிக்கிறது.

வெகுவேகமாக வளரும் முருங்கைமரங்கள் எளிதில் முறிந்துபோகின்றன. மிகவும் நிதானமாக வளரும் பனைமரங்கள் கல் போன்று உறுதியாக நிற்கின்றன. நாற்பதே நாட்களில் வளர்ந்து, அறுபது நாட்களில் பூக்கும் குரோட்டன் செடிகள் யாவும் தண்ணீரின் சலசலப்பில்கூட வேர்களை இழந்து சரிகின்றன. பொறுமையாக வளரும் கள்ளிச்செடிகள் கடும் வறட்சியையும் பெருமழையையும் தாங்கி, வேர்களை இழக்காமல் நீடிக்கின்றன. ஆமைகளின் வளரும் வேகமும் நகரும் வேகமும் குறைவு. அவற்றின் ஆயுள், நூற்றாண்டுக்கணக்கில் நீள்கிறது. பிறந்த சில நாட்களில் இறக்கை வளர்த்து, ஒரு நொடிக்கு பல நூறு முறை படபடத்துப் பறக்கும் பூச்சியினங்கள் யாவற்றின் ஆயுட்காலமும் வாரக்கணக்கில் அடங்கிவிடுகிறது.

வளர்ச்சி எப்போதுமே முடிவை நோக்கியதுதான். வாழ்க்கையும் அப்படியே. ஆனால், அந்த வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்பது உங்கள் முடிவுக்கு விடப்பட்டுள்ளது.

குரோட்டன் செடிகளுக்கும் பட்டாம்பூச்சி களுக்கும் தமது ஆயுட்காலம் குறித்த அக்கறை இல்லை. அவை எல்லாம் ஓரறிவு, மூவறிவு உயிரினங்கள். மனிதர்களுக்கு ஆறறிவு உள்ளது. மனம்தான் ஆறாம் அறிவு. இந்த மனம்தான் வாழ்க்கையின் போக்கை முடிவுசெய்கிறது. இதே மனம்தான் `வாழ்க்கைக்குப் பொருள் உள்ளதா?' எனச் சிந்திக்கிறது; இன்பம், துன்பம் குறித்து கவலைகொள்கிறது; ஆயுட்காலத்தைப் பற்றிய ஆசைகளை உருவாக்குகிறது. மனிதர்கள் மனதால் வாழப் பிறந்தவர்கள். இந்தக் கட்டுரையின் வழியாக நான் உங்கள் மனதுடன்தான் உரையாடுகிறேன். நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கும் எனக்கும் மனது ஒன்றுதான்.

முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவை உங்களை அதிவேகமாகப் பயணிக்கும்படி தூண்டுகின்றன. வளர்ச்சியை விரைவுபடுத்தும் எல்லா செயல்களும் மனிதர்களுக்கு அழிவைத் தருகின்றன.

கீரைச் செடிகளின் வளர்ச்சிக்கு  இயற்கை வகுத்த காலம், ஏறத்தாழ 60 நாட்கள். நிலத்தின் தன்மைக்குத் தகுந்தாற்போல வளர்ச்சியின் வேகம் மாறுபட வேண்டும் என்பது விதி. 20 நாட்களில் இப்போது கீரைகள் வளர்க்கப்படுகின்றன. இதற்காக அவை வளரும் நிலத்தில் கொட்டப்படும் ரசாயனங்களும், அவற்றைத் தாக்கும் பூச்சிகளைக் கொலை செய்ய தெளிக்கப்படும் நஞ்சுகளும் ஏராளம். இப்போது கீரைகளின் வளர்ச்சி வேகம் அதிகமாகியுள்ளது. ஆனால், அந்தக் கீரை?

கோழிகள் ஒரு கிலோ எடை வருவதற்கே ஆறு மாதங்கள் ஆகும். 33 நாட்களில் ஒன்றரைக் கிலோ எடைக்கு வளர்க்கப்படுகின்றன பிராய்லர் கோழிகள். கோழி இறைச்சி உணவு அல்ல... நஞ்சு.
நவீன அறிவியல் வளர்க்கும் மீன்கள், ஆடுகள், மாடுகள், பன்றிகள், முயல்கள், மரங்கள், மனிதர்கள் ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் வளர்ச்சி வேகம் அதிகம்; வாழும் காலம் குறைவு. நவீனத்தின் சுவடு தெரியாத காடுகளில் வாழும் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் தமக்கு வழங்கப்பட்ட ஆயுட்காலத்தை நிம்மதியாக நிறைவுசெய்வதைப் பார்க்கிறேன். நவீன சமூகத்தில் எல்லாமே வேகமெடுத்து ஆடும் அரவங்களாக இருக்கின்றன.

இயற்கை விதிகளை மீறி வளரும் உயிர்களைத் தண்டித்து அழிப்பதற்கு சில ஏற்பாடுகள் உள்ளன. அவற்றை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

ரசாயன உரங்களால் அதிவேகமாக வளர்ச்சி காணும் பயிர்கள் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. வேளாண்மை செய்வோருக்கு இது தெரியும். ரசாயன அடி உரங்கள் இட்டால், விதைகள் வேகமாக முளைத்து வெளிவரும். நீர் பாய்ச்சும்போது யூரியாவைக் கலந்துவிட்டால், பயிர்களின் வளர்ச்சி வேகமடையும். இயற்கையான முறையில் 30 நாட்களில் நிகழும் செயல்கள் யாவும் செயற்கைமுறையில் 15 நாட்களில் நடக்கும். செயற்கை வயல்கள் எப்போதும் பச்சைப்பசேல் எனக் காட்சியளிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 1

இது விதி மீறிய வளர்ச்சி என்பதை இயற்கையின் பேராற்றல் உணர்கிறது. இந்த வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என, தனது படைகளை அனுப்பிவைக்கிறது. யூரியா இடப்பட்ட வயலில் பூச்சிகள் படையெடுப்பு அதிகமாக இருக்கிறது. பூச்சிகளை அழிக்க நஞ்சு தெளித்தால், ஊட்டச்சத்துகளும் அழிந்துபோகின்றன. விளைவு, பயிர்களில் நோய்த்தொற்று உருவாகும். நோய்களைக் கட்டுப்படுத்த மீண்டும் நஞ்சுகளைத் தெளிக்க வேண்டும், ஊட்டச்சத்து ரசாயனங்களையும் கொட்ட வேண்டும். அறுவடையின் அளவு மிகுதிதான். ஆனால், அறுவடை ஆனது உணவு அல்ல, நஞ்சு.

இயற்கையான முறைகளில் வளர்க்கப்படும் பயிர்கள் நிதானமாக வளர்கின்றன. நிலத்தின் தன்மைக்கேற்ற வகையில் அவற்றின் வளர்ச்சி இருக்கிறது. அந்த வயலில் பூச்சிகளின் தாக்குதல் குறைவு, நோய்களும் குறைவு. முழுமையான இயற்கைச் சூழலில் உள்ள பண்ணைகளில் பூச்சிகள் வாழ்ந்தாலும், அவை பயிரைச் சேதப்படுத்துவது இல்லை. தனது விதிகளை மதிக்கும் மனிதர்களை இயற்கையின் பேராற்றலும் மதிக்கிறது.

பத்து வயதில் கற்கவேண்டிய கல்வியை, ஐந்து வயதில் கற்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்லது என இந்தச் சமூகம் ஆசைப்பட்டது. இப்போது, குழந்தைகளின் வெகுளித்தனம் சிதையும் அளவுக்குக் கல்வி கற்பிக்கப்படுகிறது.

குழந்தைகள், வேக வேகமாகக் கிளம்புகிறார்கள்; பசிக்காமல் சாப்பிடுகிறார்கள். மலம் கழிக்க அவகாசம் போதவில்லை. காலுறைகளும் பூட்ஸுகளும் அவர்களது கால்களில் திணிக்கப்படுகின்றன. பள்ளிக்கூடம் வேகமாக இயங்குகிறது. என்னென்னவோ கற்றுத் தருகிறார்கள். குழந்தைகள் அவை அனைத்தையும் கவனிக்கிறார்கள். விளையாட்டும் வேகமாக உள்ளது, வெற்றி-தோல்விகளும் வேகமாக வந்து போகின்றன. பத்து வயதில் அவர்கள் நிறையக் கற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால், இந்தக் காலத்தில் அவர்களுடைய உடல்நிலை பலவீனப்பட்டுவிடுகிறது. உடல் பருமன், பார்வைக்குறைபாடு, மூச்சிரைப்பு, அடிக்கடி காய்ச்சல் எனத் தொடங்கி, சிறுவயது சர்க்கரை நோய் வரையில் உடல்நலக் குறைபாடுகள் பல்கிப் பெருகிவிட்டன. உடல் நோய்கள் மட்டும் அல்ல, சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு என மனநல மருத்துவமனைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றனவே, இதற்குக் காரணம் என்னவெனச் சிந்தியுங்கள்.

வளர்ச்சி வேகத்தை அதிகப்படுத்தினால், அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். இதுதான் படைப்பின் விதி. ஒருபக்கம் வளர்ச்சி, முன்னேற்றம் என ஓடிக்கொண்டு, மறுபக்கம் நல்ல வாழ்க்கை வேண்டும் எனக் கனவு காண்பதும் பொருத்தமற்றது.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 1

கடந்த நூற்றாண்டில் நாம் வந்த பாதைக்கு `முன்னேற்றப் பாதை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்தப் பாதை, மனிதகுலத்தை இயற்கையின் அரவணைப்பில் இருந்து துண்டித்துவிட்டது. அமைதியும் இன்பமும் நிறைந்த வாழ்க்கை வேண்டுமானால், இந்தப் பாதையில் இருந்து விலகித்தான் செல்ல வேண்டும். வந்த வழி தவறானது எனத் தெரிந்துகொண்டால், திரும்பிச் செல்வதுதான் சரியானது.
இன்றைய வாழ்க்கைமுறைக்கான எல்லா தீர்வுகளும் நவீன சமூகக் கட்டமைப்பில் மட்டுமே உள்ளது என்ற மாயக் கருத்து வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. நமது மரபுகளை மீட்டெடுப்பதன் வழியாக, நமக்கான வாழ்க்கைத் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

நமது வேர்கள் இன்னும் காய்ந்துவிடவில்லை. நமது மரபு, பனைமரத்துக்கு ஒப்பானது. மிகவும் நிதானமாக பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்த மரபு நமது. ஆகவே, இதன் ஆயுளும் மிக அதிகம். அந்த மரபில் இருந்து நமது வாழ்வியலைக் கட்டமைக்கும் அறிவை முன்வைக்க விரும்புகிறேன்.

- திரும்பிச் செல்வோம்...

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 1

திரைப்பட இயக்குநர், ஆவணப்பட இயக்குநர், பத்திரிகையாளர், மரபுவழி மருத்துவர் என ம.செந்தமிழனுக்குப் பல அடையாளங்கள். எந்தக் களமானாலும், தமிழின் தொன்மையை முன்வைத்து நம் சமூகத்துடன் உரையாடுவதும் பணியாற்றுவதுமே இவரது சிறப்பு. நவீனமயமாக்கத்தின் கண்மூடித்தனமான பாய்ச்சலில் இன்று கல்வி, வேளாண்மை, உடல்நலம் போன்றவற்றின் அடிப்படையான கூறுகள் குழம்பிக்கிடக்கின்றன. இதன் மோசமான விளைவுகளைச் செந்தமிழன் பல்வேறு தளங்களில் உரக்கப் பேசிவருகிறார்.

பிரச்னைகளைச் சொல்வதோடு நின்றுவிடாமல், அவற்றுக்கான தீர்வுகளைத் தமிழர்களின் தொல்மரபில் இருந்து உள்வாங்கி, அதை நடைமுறைக்கும் கொண்டுவர இவர் மேற்கொள்ளும் பணிகள் ஓர் இயக்கமாகவே இப்போது உருவெடுத்து நிற்கின்றன.

செந்தமிழனின் சொந்த ஊர் தஞ்சை அருகில் உள்ள ஆச்சாம்பட்டி. ஊடகத் துறை மீதான விருப்பத்தில் சென்னைக்கு இடம்பெயர்ந்து பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்தார். 2006-ம் ஆண்டில் அந்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு, சொந்த ஊருக்கே திரும்பி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டார். அங்கு இருந்தே பல ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். 2011-ம் ஆண்டில் இவர் இயக்கத்தில் ‘பாலை’ திரைப்படம் வெளிவந்தது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழர் வாழ்க்கைக்குள் நான்காம் ஈழப்போரைப் பொதிந்துவைத்து அழுத்தமான சில செய்திகளை அந்தப் படம் முன்வைத்தது.