ஹெல்த்
Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

ம.தேனப்பன், நாகபட்டினம்.

“எனக்கு வயது 45. கடந்த ஆண்டு எனக்கு யானைக்கால் நோய் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, சிகிச்சை எடுத்துவருகிறேன். இந்த நோய் என் மனைவிக்கும் பரவி உள்ளதோ என சந்தேகமாக உள்ளது. யானைக்கால் நோய் ஏன் ஏற்படுகிறது? இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுமா? இதற்கு என்ன தீர்வு?”

டாக்டர் என்.பாரதி, பூச்சியியல் துறை நிபுணர், மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

கன்சல்ட்டிங் ரூம்

“யானைக்கால் நோய் எனப்படும் லிம்ஃபாடிக் ஃபைலெரியாசிஸ் (Lymphatic filariasis) உடலின் நிணநீரில் வாழும் ஒட்டுண்ணிப் புழுக்களால் உருவாகிறது. நிணநீரில் வாழும் மைக்ரோஃபைலேரியா எனப்படும் ஒட்டுண்ணிப் புழுக்களின் லார்வாக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுக்கப் பயணிக்கும். இந்தப் பாதிப்பு ஏற்பட்டவரைக் கொசு கடிக்கும்போது, அதன் லார்வாக்கள் கொசுவுக்குத் தொற்றி, அந்தக் கொசு இன்னொருவரைக் கடிக்கும்போது அவருக்கும் யானைக்கால் நோய் ஏற்படுகிறது. சாக்கடையில் வளரும் கொசுக்கள் மூலமாக இது பரவும்.

திடீரென அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு, குளிர் நடுக்கம், மலேரியா போல விட்டு விட்டு தோன்றும் காய்ச்சல், கை, கால்களில் தோல் வீக்கம், வலி, பெரிதான நிணநீர் முடிச்சுகள், நிணநீர்க் குழாய் வீக்கம், கை, கால்களின் கீழ்ப்பகுதி, பிறப்புறுப்பில் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள்.  

இந்தப் பாதிப்பு ஏற்பட்டவருக்கு டைஎத்தில் கார்பமசைன் (Diethylcarbamazine) மாத்திரைகள் தரப்படுகின்றன. இந்த மருந்தை நோயாளியின் எடையில் கிலோவுக்கு 6 மி.கி என்ற கணக்கில் இரண்டு வாரங்களுக்குத் தர வேண்டும். இதன் விலை மிகவும் மலிவு. இதனுடன், அல்பெல்டஸோல் மாத்திரையையும் மருத்துவர் பரிந்துரையுடன் அளவாக எடுத்துக்கொள்ளலாம்.  கால் வீக்கத்தைக் குறைக்க எலாஸ்டிக் பேண்ட் அணிவது நல்லது. இது நிரந்தரமாகக் கால் வீங்கிப்போவதைத் தவிர்க்கும். இரவு நேரத்தில் கட்டை அவிழ்த்துவிடுவது நல்லது. இதை, ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை எடுப்பது நலம். இந்த நோய், கொசுக்கள் மூலம் பரவுவதால், சுகாதாரமான சூழல் அவசியம். இந்தக் கொசுக்கள் மாலை நேரத்தில்தான் கடிக்கும் என்பதால், கொசுவலை போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த நோய் பரவாமல் தடுக்கலாம். கடலோரப் பகுதிகளில்தான் இந்த நோய் அதிகமாகப் பரவுகிறது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மருத்துவரிடம் ஆலோசனைப்படி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது.”

கன்சல்ட்டிங் ரூம்

மா.மதுசூதனன், ராஜபாளையம்.

“எனக்கு அக்குளில் அக்கி எனப்படும் சிறுசிறு கொப்பளங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. டாக்டரிடம்் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் சில மாதங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நன்றாக இருக்கிறது. பிறகு, மீண்டும் இது ஏற்படுகிறது. இந்த அக்கி ஏன் ஏற்படுகிறது? இதற்கு நிரந்தரத் தீர்வு உண்டா?”

டாக்டர் சுதாகர்,தோல் நோய் சிகிச்சை நிபுணர், பெரம்பலூர்

கன்சல்ட்டிங் ரூம்“அக்குளில் அதிக வியர்வை சுரப்பிகள் இருப்பதால், அடிக்கடி பலருக்குக் கொப்பளங்கள் வரலாம். இந்தக் கட்டிகள் இரண்டு பக்கமும் வருகிறதா, ஒரு பக்கம் மட்டும் வருகிறதா எனப் பார்க்க வேண்டும்.  இது மட்டும் இல்லாமல் வியர்க்குரு கட்டிகளும் வரலாம். இவை, மற்றவர்களுக்குப் பரவாது. இதற்கு, தோல் மருத்துவரைப் பார்த்து முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அக்குளுக்கும் கீழே, மார்பு, உள்ளிட்ட பகுதிகளில்தான் அக்கி என்பது வரும். இதனை மருத்துவமுறையில் ஹெர்பிஸ் ஸோஸ்டர் என அழைப்பார்கள். சின்னம்மையை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகள் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். உடலில், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது மறு உயிர்ப்பு பெற்று இந்தப் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. இப்படி, மறு உயிர்ப்பு பெறும்போது, உடலின் ஒரு பகுதியில் மட்டும் வலி போன்ற உணர்வு ஏற்படும். முதுகு நரம்புகளில் இருந்து வைரஸ் ஒரு நரம்பு வழியாக வெளிப்படுவதால், இந்த வலி ஏற்படுகிறது. இந்த வலி சில நாட்கள் நீடிக்கும். பின்னர், தோலில் சீழுடன் சிறுசிறு கொப்பளங்கள் தோன்ற ஆரம்பிக்கும். தோல் கொப்பளங்கள் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நீடித்துப்பரவும். இவை சில நாட்களில் காய்ந்து, பொருக்குகளாகி உதிரும்.  இதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகலாம்.

இந்தக் கொப்பளங்கள் மற்றவர்களுக்கும் பரவும் தன்மை கொண்டவை. எனவே, இந்தப் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து மற்றவர்கள் விலகி இருக்க வேண்டும். இந்தக் கொப்பளங்களுக்கு ஈரமான குளிர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதற்கு அலுமினியம் அசிடேட் கலவையைப் பயன்படுத்தலாம். கொப்பளங்களை நன்கு கழுவ வேண்டும். அவற்றைக் கட்டுப்போட்டு மறைக்கக் கூடாது.

கன்சல்ட்டிங் ரூம்

காலமைன் லோஷன் கிரீம்களைப் பூசலாம். வலி இருக்கிறது  என்றால், டாக்டரின் பரிந்துரையின் பேரில் வலி நீக்கும் மாத்திரைகள் மற்றும் களிம்புகளைத் தடவலாம்.  ஏசைக்ளோவின் எனும் நோய் தடுப்பு மாத்திரை போடலாம். இந்தக் கட்டிகள் முகத்தில் குறிப்பாக, கண்களுக்கு அருகே தோன்றினால், உடனே மருத்துவர் உதவியை நாட வேண்டும். கவனிக்காமல் விட்டால், பார்வை இழப்புகூட ஏற்படக்கூடும். எனவே, சுய மருத்துவம் எடுக்காமல், மருத்துவர் உதவியைப் பெறுவது நல்லது.”

எஸ்.சரண்யா, செங்கல்பட்டு

“எனக்கு 21 வயதுதான் ஆகிறது. ஸ்கின் எப்போதும் ஃபிரஷ்ஷா இருக்க வேண்டும் என்று நினைப்பவள். இரவில், முகத்தில் மஞ்சள் அல்லது கடலை மாவு தடவிக்கொண்டு, அடுத்தநாள் காலையில் கழுவினால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும் என்று என் தோழி ஒருவர் ஐடியா கொடுத்தார். இப்படி செய்வது சரியா?”

டாக்டர் ஆர்த்தி,தோல் நோய் நிபுணர்

கன்சல்ட்டிங் ரூம்“இரவு முழுவதும் மஞ்சள் அல்லது கடலை மாவை முகத்தில் பூசிவிட்டுத் தூங்கக் கூடாது. மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்புக் காரணியாக செயல்படுகிறது. அதை தினமும் நாம் பயன்படுத்துவதன் மூலம் முகத்திலுள்ள ஈரப்பதத்தை நீக்கி, சருமத்தை வறட்சியுறச் செய்யும். தினசரி மற்ற அழகு சாதனப் பொருட்களை எந்த அளவுக்குப் பயன்படுத்துகின்றீர்களோ, அதே அளவுக்கு மஞ்சளைப் பயன்படுத்தினால் போதும். அதற்கு பதில், இரவு முழுவதும் முகத்தில் தடவி தூங்குவது கூடாது. மஞ்சள் பூசி ஒரு சில நிமிடங்களில் கழுவிவிடுவது நல்லது.  இதேபோல் தான் கடலை மாவும்... இரவு முழுவதும் போட வேண்டும் என்று அவசியமில்லை. மஞ்சள் அல்லது கடலைமாவு பூசிவிட்டு சோப், க்ரீம் போட்டு முகத்தைக் கழுவக்கூடாது. வெறும் தண்ணீரில் கழுவினாலே போதுமானது.

உள் மற்றும் வெளி என்று சருமத்தை இரண்டு விதமாக பராமரிக்கலாம். சருமத்தை வெயிலில் இருந்து காப்பது, சன்ஸ்கிரீன் தடவுவது, சுத்தமாக இருப்பது, கெமிக்கல் அழகுசாதனங்களைத் தவிர்ப்பது, அவ்வப்போது முகத்தைக் கழுவுவது, நம்மை நாமே சுத்தமாக பராமரிப்பது எல்லாம் வெளிப்புற பராமரிப்பு. அதிக காய்கறி, பழங்கள் எடுத்துக்கொள்வது, போதுமான அளவு நீர் அருந்துவது, உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது போன்றவை உள்ளுக்குள் நாம் செய்ய வேண்டிய பராமரிப்பு. இவற்றை செய்தாலேபோதும் சருமம் எப்போதும் பொலிவுடன், ஆரோக்கியத்துடன் இருக்கும்.”

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.