ஹெல்த்
Published:Updated:

பெரியோர் தடுப்பூசிகள்

பெரியோர் தடுப்பூசிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பெரியோர் தடுப்பூசிகள்

பெரியோர் தடுப்பூசிகள்

பெரியோர் தடுப்பூசிகள்

மிக ஆபத்தான தொற்று நோய்களைக்கூட சுலபமான முறையில், சகாயமான செலவில் கட்டுப்படுத்தும் வழிமுறைதான் தடுப்பூசி. இதனால், தனிநபர் மட்டும் பாதுகாக்கப்படுவதுடன்,  நோய்த் தொற்றுதலுக்கான வாய்ப்பைக் குறைப்பதனால், சமூகமே பாதுகாக்கப்படுகிறது. தடுப்பூசிகள் பற்றிய சர்ச்சை எப்போதும் இருந்துவந்தாலும், மிகக் கொடிய பல தொற்றுநோய்களை வெற்றிகரமாக இல்லாமல் செய்ததற்கான வெற்றி வரலாறு நம்மிடம் இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்கது பெரியம்மை. இன்றைக்குத் தடுப்பூசியின் பலனால், ஆய்வுக்கூடங்களில் மட்டுமே மிகப் பாதுகாப்பாக இந்தக் கிருமி இருக்கிறது. போலியோ தடுப்பு மருந்து தொடர்ந்து அளித்துவருவதன் காரணமாக, போலியோ பாதிப்பு இல்லாத இந்தியாவை உருவாக்கியிருக்கிறோம்.

தடுப்பூசி என்றால் அது குழந்தைகளுக்கு மட்டும் என்ற எண்ணம் உள்ளது. உண்மையில், பெரியவர்கள், முதியவர்கள் என அனைவருக்குமே நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதிலும், நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்த முதியவர்களும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். முதுமையில் தனிமைதான் பெரும்பாலானவர்களுக்கு மிகப்பெரிய பிரச்னை. குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இன்மை, போதிய வருமானமின்மை காரணமாக நோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகு உரிய சிகிச்சை இன்றி உயிரிழப்பவர்கள் அதிகம். தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன் மூலம் உயிரிழப்பைத் தடுக்க முடியும், அதனுடன் தேவையில்லாத உடல் சார்ந்த பிரச்னை, மனநலப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

நிமோனியா:
முதுமையில் பெரும்பாலானவர்களைப் பாதிப்பது நிமோனியா காய்ச்சல். இதனால் உயிரிழப்புகூட ஏற்படலாம். கடுமையான காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி போன்றவை இதன் அறிகுறிகள். ‘பிபிஎஸ்வி23 நிமோகாக்கல் தடுப்பூசி’யைப் (PPSV23 - Pneumococcal vaccine) போட்டுக்கொள்வது நல்லது. முதியவர்கள் மட்டும் அல்ல, 19 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை, இதய நோயாளிகள்கூட இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். ஐந்து வருட இடைவெளியில், இரண்டு தவணைகள் போட வேண்டும்.

பெரியோர் தடுப்பூசிகள்

முத்தடுப்பூசி: 19 வயதுக்குப் பிறகு போட்டுக்கொள்ள வேண்டிய சில தடுப்பூசிகள் உள்ளன. டெட்டனஸ், டிப்தீரியாவு, கக்குவான் இருமலுக்கான டிடி/டிடிஏபி தடுப்பூசியை 19 வயதில் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

சின்னம்மை (வேரிஸெல்லா): சின்னம்மை எந்த வயதிலும் தாக்கலாம். பெரியவர்களுக்கு வரும்போது பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். மூளை பாதிப்புகூட ஏற்படலாம். சின்னம்மை தடுப்பூசி அனைவரும் போடலாம். குறிப்பாக பெண்கள் போட வேண்டும். இதை இரண்டு தவணைகளில் போட வேண்டும். இப்போது சின்னம்மை வந்தாலும் ஆன்டிவைரல் தெரப்பி என்று சிகிச்சை இருக்கிறது என்றாலும், வரும் முன் காக்க தடுப்பூசி போட்டுக்கொள்வதே நல்லது.

ஃப்ளு காய்ச்சல்:
நம் ஊரில் ஃப்ளு காய்ச்சல் பாதிப்பு அதிகம். குறிப்பாக மழை, குளிர் காலத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே, மழை, குளிர் காலம் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே ஃப்ளு தடுப்பூசி போட வேண்டும். அப்போதுதான் தடுப்பூசியின் பலன் இருக்கும். ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து தடுப்பூசி போட்டுவருவதன் மூலம் ஃப்ளு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பலாம்.

டைபாய்டு:
மழைக்காலத்தில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றொரு காய்ச்சல், டைபாய்டு. இதற்கும் தடுப்பூசி உண்டு. இதை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டுவருவதன் மூலம் டைபாய்டைத் தவிர்க்கலாம்.

ஹெபடைட்டிஸ்: உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது ஹெபடைட்டிஸ் வகை வைரஸ்கள். ஒவ்வொரு ஆண்டும் 1.5 கோடி பேர் ஹெபடைட்டிஸ் ஏ வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, ஹெபடைட்டிஸ் வைரஸ்க்கு எதிராக நான்கு ஆற்றல் மிக்க தடுப்பூசிகள் உள்ளன. ஹெபடைட்டிஸ் ஏ வைரஸுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட வேண்டும். ஹெபடைட்டிஸ் பி என்பது ரத்தம் மூலமாகவும் உடலுறவு மூலமாகவும் பரவக்கூடியது. இதற்கு மூன்று டோஸ் தடுப்பூசி போட வேண்டும். இப்போது, ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் பி கிருமிக்கு எதிராக தடுப்பூசி உள்ளது. இதை மூன்று டோஸ் போட்டாலே போதும்.

இதர தடுப்பூசிகள்: ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி, காலரா, ஜப்பான் மூளைக்காய்ச்சலுக்கு என சில பிரத்யேகத் தடுப்பூசிகள் உள்ளன. டாக்டர் பரிந்துரையின்படி இவற்றைப்போட்டுக்கொள்வது நல்லது.

- பா.பிரவீன் குமார்

பெண்கள் ஸ்பெஷல்

பெரியோர் தடுப்பூசிகள்பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் முக்கியமானது கர்ப்பப்பைவாய் புற்றுநோய். இதற்கு, ஹீயூமன் பேப்பிலோமா வைரஸ் என்ற கிருமிதான் காரணம். இதைத் தடுக்க தடுப்பூசி இருக்கிறது. இதை, 11 வயதில் இருந்து 26 வயதுக்குள், திருமணத்துக்கு முன் போட்டுக்கொள்வது நல்லது. முதல் ஊசியைப் போட்டதில் இருந்து, இரண்டு மாதங்கள் இடைவெளியில் இரண்டாம் தவணை, இரண்டு அல்லது நான்கு மாதங்கள் இடைவெளியில், மூன்றாம் தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். ஆண் இனப்பெருக்க உறுப்பு வழியாகத்தான் இந்த வைரஸ் பரவுகிறது என்பதால், பாலியல் முதிர்ச்சி பெறும் காலத்திலேயே ஆணுக்கும் இந்த ஊசியைப் போட்டுக்கொள்வது நல்லது.

சர்க்கரை நோயாளிகளுக்கான தடுப்பூசி: ஹெபடைட்டிஸ், நிமோனியா, ஃப்ளு காய்ச்சல்