Published:Updated:

அந்தப்புரம் - 37

அந்தப்புரம் - 37
பிரீமியம் ஸ்டோரி
அந்தப்புரம் - 37

ஓவியம்: ஸ்யாம்

அந்தப்புரம் - 37

ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
அந்தப்புரம் - 37
பிரீமியம் ஸ்டோரி
அந்தப்புரம் - 37
அந்தப்புரம் - 37

னன்யாவுக்கு அர்ஜுன் மீது கண்டதும் காதல். அர்ஜுனுக்கும் அதுபோலவே... ஒருவரோடு ஒருவர் பேசிப்பழகக்கூட நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. இருவரும் வீட்டில் பேசினர், அவர்களும் ஓ.கே சொல்லவே, ஒருசில மாதங்களில் திருமணம் முடிந்தது. இருவரும், நகரின் மையப்பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துப் பால் காய்ச்சினர். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரித்தனர். மணமான புதிதில், மகிழ்ச்சியாக வாழ்க்கை ஆரம்பித்தது. சில வாரங்களில் அவரவர் இயல்புத்தன்மை வெளிப்பட ஆரம்பித்தது.

அனன்யாவின் சில நடவடிக்கைகள் அர்ஜுனுக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் அதைப் பொறுத்துக்கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனதில் வேதனை அதிகரித்தது. அர்ஜுனுக்கு எதுவுமே திட்டமிட்டுச் செய்ய வேண்டும். ஒரு விஷயத்தில் இறங்குவதாக இருந்தால், அதன் அடி ஆழம் வரை தெரிந்திருக்க வேண்டும் என்று நினைப்பான். அனன்யாவோ, அந்த நிமிடத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவள். இயற்கை நமக்கு அளிக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியானதாக மாற்ற வேண்டும் என்று நினைப்பவள். பலரைச் சந்திக்க வேண்டும், நன்றாகப் பேச வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், அனைவருடனும் கலந்து பழக வேண்டும் என்று நினைப்பவள். ஈவென்ட் மேனேஜர் என்பதால், பல பார்ட்டிகளுக்குச் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பாள். இது, அர்ஜுனுக்குப் பிடிக்கவில்லை. இது நேரத்தை வீணாக்கும் வேண்டாத செயல் என்று அர்ஜுன் நினைத்தான். அதற்குபதில், நல்ல புத்தகத்தில் நேரத்தைச் செலவிட விரும்பினான். கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் அனன்யாவின் பழக்கம் அர்ஜுனுக்குப் பிடிக்கவே இல்லை.

அந்தப்புரம் - 37

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நாம் இவ்வளவு சந்தோஷமாக, இனிமையாகப் பேசிப் பழகுகிறோம். ஆனால், ஏன் அர்ஜுன் இப்படி இருக்கிறான். எப்போதும் ஒருவித இறுக்கமான மனநிலையிலேயே இருக்கிறானே” என்று அனன்யா சதா அவனைப் பற்றியே யோசிக்க ஆரம்பித்தாள். இதுவே, அவளுக்கு ஒருவித சலிப்பைத் தந்தது. அவளுக்கு இனிய காதல் நிறைந்த படங்களுக்குச் செல்வது, கேண்டில் லைட் டின்னருக்குச் செல்வது, ஒருவருக்கு ஒருவர் திடீர் பரிசு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவது, இருவரும் மகிழ்ச்சியாகப் பொழுதைப்போக்குவது என்பவற்றில்தான் ஆர்வம் இருந்தது. ஆனால், அர்ஜுன் இவை எதையும் செய்யவில்லை. அவனுக்குப் படம் பார்ப்பதே பிடிக்காது. அவனுக்குப் பிடித்த நிதி தொடர்பான ஆங்கிலச் செய்தி சேனல்களைப் பார்க்கும்படி அனன்யாவிடம் சொல்லுவான். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிருந்த அனன்யா, இந்த உலகத்தில் இப்படியும் ஒருவன் இருப்பானா என ஆச்சர்யப்பட்டாள்.

தாம்பத்திய உறவிலும் சிக்கல் இருந்தது. எல்லாவற்றையும் திட்டமிட்டு, குறித்த காலத்தில் செய்ய வேண்டும் என்று இருக்கும் அர்ஜுன் இதிலும் திட்டமிடலை மேற்கொண்டதுதான் பிரச்னை. அவனைப் பொருத்தவரை, தாம்பத்திய உறவு வார இறுதி நாட்களில்தான் நடக்க வேண்டும். தன்னியல்பாகத் தோன்றும் அன்னியோன்யம், ஈர்ப்பு போன்றவற்றை அர்ஜுன் ஒப்புக்கொள்வது இல்லை. அனன்யா வந்து கட்டிப்பிடித்து அதேபோல அவனும் செய்வான் என்று எதிர்பார்க்கும்போது, அவளை விலக்கிவிட்டு தன் வேலையைச் செய்வான் அர்ஜுன். ‘அது அதுக்கு இடம், பொருள், நேரம் என்று ஏதும் கிடையாதா? இது ஏன் அனன்யாவுக்குப் புரியவில்லை?’ என்று நினைப்பான். அதுவும், தாம்பத்திய உறவில் அவனுடைய பங்களிப்பு அனன்யாவுக்கு மேலும் வெறுப்பை ஏற்படுத்தியது.

ஏன்? எதற்கு? எப்படி?

பெரும்பான்மையான திரைப்படங்கள், நாவல்களில் இனிய முடிவாகத் திருமணத்தைக் காட்டுகின்றனர். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுவது இல்லை. அப்படி நாம் பார்த்தோம் என்றால், ஒவ்வொரு தம்பதிகளுக்கு இடையேயும் ஏதாவது ஒரு பிரச்னை இருப்பதைக் காண முடியும். அதற்காகத் திருமணம் மகிழ்ச்சியைக் கொண்டு வரவில்லை என்று சொல்ல முடியாது. மகிழ்ச்சியைக் கொண்டுவரத்தான் செய்கிறது. அது யாருக்கு என்றால், திருமணம், குடும்பம் என்ற கலையின் உண்மையை, உன்னதங்களை நன்கு புரிந்தவர்களுக்கு ,அது மிக அதிகப்படியான மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. ஒருவரை கல்வி, வேலை, விளையாட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை போன்றவற்றில் தேர்ந்தவர்களாக மாற்ற நினைக்கும் சமுதாயம், திருமண உறவில் நிபுணத்துவம் பெற்றவர்களாக வளர்த்தெடுப்பது இல்லை. தொழில் தொடர்பான உறவில் எப்படிச் செயல்பட வேண்டும், எப்படிச் செயல்படக்கூடாது என்று சொல்லித்தரும் நாம், திருமண உறவில் நல்லது, கெட்டது பற்றிச் சொல்லித்தருவது இல்லை. இதன் விளைவுகள் ஒவ்வொரு தனிநபர் வாழ்விலும் எதிரொலிக்கின்றன.

- ரகசியம் பகிர்வோம்!

டவுட் கார்னர்

“டாக்டர், எனக்குச் சமீபத்தில் திருமணம் நிச்சயம் ஆனது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் நடத்தத் தேதி குறித்துள்ளனர். என் வருங்கால கணவர் தினமும் என்னிடம் போனில் பேசுவார். மணிக்கணக்கில் பேசுவோம். திருமணம்தான் நிச்சயிக்கப்பட்டுவிட்டதே, நாம் வெளியே செல்லலாம் என்று அழைத்தார். பார்க், பீச், சினிமா என்று சென்றோம். இப்போது, வெளியூர் பயணத்துக்கு அழைக்கிறார். திருமணத்துக்கு முன்பு தாம்பத்தியம் தவறு இல்லை என்கிறார். நான் மறுத்தால், என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா என்று எமோஷனல் பிளாக்மெயில் செய்கிறார். நான் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறேன். வழிகாட்டுங்கள்.”

பெயர் வெளியிட விரும்பாத வாசகி, சென்னை.


“திருமணத்துக்கு முன்பு தாம்பத்திய உறவு சமூகரீதியாக நல்லது அல்ல. இன்றைய நவீன உலகில் நாம் என்னதான் நவீனமானவர்கள் என்றாலும், சில விஷயங்களில் நம் கலாசாரத்தைப் பின்பற்றுபவர்களாகத்தான் இருக்கிறோம். நம் சமுதாயம் இத்தகைய செயல்களை அனுமதிக்காது என்பதால், மனப்பதற்றம், மனஅழுத்தம், குற்றஉணர்ச்சி போன்றவை மேலோங்கலாம். மற்றொரு மிக முக்கியப் பிரச்னை, கருத்தரிக்க உள்ள வாய்ப்பு. இதனால், தேவையற்ற கருக்கலைப்பு போன்ற பிரச்னைகளைச் சந்திக்க நேரலாம். இது, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, மிக அரிதாகத் திருமணம் நடைபெறாமல்போகவும் வாய்ப்பு உள்ளது. தாம்பத்திய உறவுக்குப் பிறகு மணமகனுக்கோ மணமகளுக்கோ பிடிக்காமல் போய் திருமணம் தடைபடலாம். இதுபோன்று, பல காரணிகளை நன்கு அலசி, ஆராய்ந்து முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.”

அந்தப்புரம் - 37

“எனக்குத் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. திருமணம் நடைபெற உள்ள நாள், எனக்கு மாதவிலக்கு வரக்கூடிய நாள். திருமணத் தேதியை என்னால் மாற்ற முடியாது. மேலும், அதன் பிறகு நல்ல முகூர்த்த நாளும் இல்லை என்கிறார்கள். இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது?”

ஆர்.கவிதா, சென்னை.

“உங்கள் குடும்ப மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். இதை எப்படிக் கையாளலாம் என்பது உங்களுக்கு மாதவிலக்கு வரக்கூடிய நாள் மற்றும் திருமண நாள் இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளியைப் பொருத்து முடிவு செய்யப்படும். மிகக் குறுகிய காலமாக இருந்தால், மாதவிலக்கு வருவதைச் சில நாட்கள் தள்ளிப்போடலாம். 15 நாட்களுக்கும் அதிகமான நாட்கள் இருக்கின்றன என்றால், முன்கூட்டியே மாதவிலக்கை வரவைக்க வாய்ப்பு உள்ளது. டாக்டர் பரிந்துரையின்படி ஹார்மோன் மாத்திரை எடுத்துக்கொள்வதன் மூலம் மாதவிலக்கை முன்கூட்டியேயோ, தள்ளிப்போகவோ செய்ய முடியும். ‘இதை எல்லாம் டாக்டரிடம் ஏன் கேட்க வேண்டும்... தோழி சொன்னார், உறவினர் சொன்னார்’ என்று சுய மருத்துவம் மட்டும் தயவுசெய்து எடுத்துவிடாதீர்கள். டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். அட்வான்ஸ் திருமண வாழ்த்துகள்.”

“தாம்பத்தியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா?”

எஸ்.தேவராஜன், சென்னை.

“இருக்கிறது. பொதுவான சில அறிகுறிகளை உங்களுக்குச் சொல்கிறேன். அவை, ஒன்றும் இல்லாத விஷயத்துக்குச் சண்டைபோடுதல், ஒருவரைத் தவிர்ப்பதற்காக சண்டைபோடத் தொடங்குவது, திரும்பத் திரும்ப ஒரே பிரச்னையைக் கிளப்புவது, பிரச்னை தோன்றினால் அதை முடிவடையவிடாமல் பார்த்துக்கொள்வது, கொஞ்சம் கொஞ்சமாகப் பிரச்னையை வளர்ப்பது போன்றவை ஆகும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism