
செரிமான மண்டலத்தில் மிகமிக நீளமான உறுப்பு சிறுகுடல். குட்டிப்பாம்பு போல சுருண்டுகிடக்கும் இதன் அடுக்குகள், மடிப்புகள், சுருள்களை விரித்தால், ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுக்கு பரப்பளவு இருக்கும். சிறுகுடலின் மடிப்புகளை மருத்துவ அறவியலில் இன்னமும் ஓர் அதிசயமாகத்தான் பார்க்கிறார்கள். சிறுகுடலுக்கு உறிஞ்சிகள் (Villis) என்றொரு பெயரும் உண்டு. டியோடினம், ஜெஜினம், இலியம் என மூன்று பிரிவுகளாக சிறுகுடலைப் பிரிக்கின்றனர்.
நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதில் 20 சதவிகிதப் பணிகள் மட்டுமே இரைப்பையிலும் பெருங்குடலிலும் நடக்கின்றன. 80 சதவிகிதத்துக்கும் அதிகமான செரிமானப் பணிகள் நடப்பது சிறுகுடலில்தான். அதனால்தான், சிறுகுடல் இன்றி ஒரு மனிதனால் வாழவே முடியாது என்கிறோம். இரைப்பையில் இருந்து அமிலம் கலந்து அனுப்பப்பட்ட உணவு, பித்தப்பையில் இருந்து வரும் பித்தநீர், கணையத்தில் இருந்து வரும் செரிமானத்துக்கான என்சைம்கள் என அனைத்தும் வந்து சேரும் இடம் சிறுகுடல்.
இரைப்பையில் இருந்து சிறுகுடல் தொடங்கும் பகுதிக்குப் பெயர் டியோடினம். சிறுகுடலில் குட்டியான பகுதி இதுதான். சுமார் 20 செ.மீ நீளம் கொண்டது. அடுத்த பகுதி ஜெஜினம். இதன் நீளம் சுமார் 8 அடி. சிறுகுடலின் கடைசிப் பகுதியான இலியத்தின் நீளம் கிட்டத்தட்ட 12 அடி. நாம் உட்கொண்ட உணவு. இவ்வளவு தூரத்தைக் கடந்துதான் பெருங்குடலை அடைய வேண்டியிருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிறுகுடலின் வேலை என்ன?
சிறுகுடலானது தனியாக இயங்க முடியாது. இரைப்பை, கல்லீரல், கணையம் ஆகியவற்றோடு இணைந்துதான் சிறுகுடல் வேலைசெய்கிறது. மேற்சொன்னவற்றில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், சிறுகுடலில் நடக்கும் வேலைகள் தடைப்படலாம்.
டியோடினம்
இரைப்பையில் இருந்து அமிலம் கலந்த கரைசலாக வரும் உணவு, நேரடியாக டியோடினத்தில் வந்து விழும். உணவின், அமிலத்தன்மையைக் குறைத்து உடலின் பி.ஹெச் மதிப்பைக் கட்டுக்குள் வைப்பதற்காக பை கார்பனேட் எனச் சொல்லப்படும் சோடா உப்பை டியோடினம் சுரக்கும். சோடா உப்புடன் இரைப்பையில் இருந்து வரும் கேஸ்ட்ரிக் ஜூஸ் இணையும்போது, அமிலத்தன்மை கட்டுப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக சிறுகுடலின் அடுத்த பகுதிக்கு உணவுக் கரைசல் அனுப்பப்படுகிறது.
நமது உடலில் தினசரி ரத்த செல்கள் உற்பத்தி நடந்துகொண்டே இருக்கிறது. இதற்கு, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் போன்றவை மிகமிக அவசியம். இவற்றை உணவில் இருந்து பிரித்துக்கொடுக்கும் பணியை டியோடினம் செய்கிறது.
ஜெஜினம்
துணியை அடித்துத் துவைக்கும்போது, அழுக்கு வெளியேறுவதுபோல, ஜெஜினத்தில் உணவு செரிமானம் செய்யப்பட்டு, சத்துக்கள் கிரகிக்கப்படுகின்றன. இரைப்பையில் இருந்து உணவு சிறுகுடலுக்கு வந்த பின்னர், அந்த உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதச்சத்து ஆகியவற்றைப் பொறுத்து, கணையத்தில் என்ஸைம்கள் சுரந்து சிறுகுடலுக்கு வரும். சிறுகுடலின் இரண்டாம் பாகமான ஜெஜினத்தில்தான் உணவில் இருந்து சத்துக்கள் பிரித்தெடுக்கப்படும் வேலை நடக்கிறது.
நாம் காலையில் இரண்டு கப் சாம்பார் ஊற்றி, மூன்று நான்கு இட்லி சாப்பிடுகிறோம். கூடவே ஒரு முட்டை சாப்பிடுகிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். இட்லியில் மாவுச்சத்தும், சாம்பார், முட்டைகளில் இருந்து புரதச்சத்தும், முட்டையின் மஞ்சள் கருவில் இருந்து கொழுப்புச்சத்தும் கிடைக்கும். மாவுச்சத்து நிறைந்த உணவு சிறுகுடலுக்கு வரும்போது கணையத்தில் இருந்து அமிலேஸ் (Amylase) எனும் என்ஸைம் சுரந்து வரும். இது, மாவுச்சத்தை சர்க்கரையாகவும், ஒலிகோ சாக்ரைடாகவும் மாற்றி சத்துக்களை உறிஞ்சிவிடும். மாவுச்சத்துடன் இணைந்த நார்ச்சத்தை சிறுகுடலில் இருக்கும் பாக்டீரியாவுக்கு உணவாகக் கொடுத்துவிடும். புரதச்சத்தை புரோட்டேஸ், டிரிப்ஸின் செரித்து, அமினோஅமிலங்களாக மாற்றிவிடும்.
வழவழப்பாக இருக்கும் கொழுப்புடன் லைபேஸ் என்ஸைம் மற்றும் கல்லீரலில் இருந்து வரும் பித்த நீர் சேர்ந்து செரிமானம் செய்யும். கொழுப்பு இங்கே கொழுப்பு அமிலங்களாகவும், மோனோ கிளிசரைட்டுகளாகவும் மாற்றப்பட்டு செரிக்கப்படுகின்றன. இது மட்டும் இன்றி பல்வேறு வைட்டமின்களும் ஜெஜினம் பகுதியில்தான் பிரித்துக் கிரகிக்கப்படுகின்றன.
இலியம்
ஆதிகாலத்தில், வேட்டை சமூகமாக இருந்தபோது, மனிதனுக்கு எப்போது உணவு கிடைக்கும் என்று தெரியாது. காட்டில், உணவைத் தேடி அலையும் மனிதன், விலங்குகளைக் கொன்று தன் பசியைப் போக்கினான். என்றோ ஒரு நாள் கிடைக்கும் அந்த உணவின் சக்தியைக் கொண்டு தான் அடுத்த இரையைத் தேட வேண்டும் என்ற நிலை இருந்தது. கொழுப்புச்சத்து மிகுந்த அந்த விலங்குகளை மனிதன் சாப்பிடும்போது, நீண்ட நாட்களுக்குத் தேவையான சக்தி உடலில் இருந்தது. கொழுப்புச்சத்தை எரிப்பதற்காகக் கல்லீரலில் இருந்து பித்த உப்பு அதிக அளவு சுரந்தது.
ஜெஜினம் பகுதியில் கொழுப்பை செரிக்கப் பயன்பட்ட பித்த உப்பின் மீதி, சிறுகுடலின் இலியத்துக்கு அனுப்பப்படும். அது பத்திரமாகப் பித்த உப்பைக்கொண்டு மிச்சம் மீதி செரிமா னத்தை நடத்தி, பித்த உப்பை வெளியேற்றிவிடும்.
சிறுகுடலில் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் சிறுகுடலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது பற்றியும் அடுத்த இதழில் பார்ப்போம்.
- தொடரும்
தண்ணீரை உறிஞ்சும் இலியம்!

நாம் அருந்தும் திரவ உணவுகள் மற்றும் தண்ணீர் உடலில் எந்தப் பகுதியால் கிரகிக்கப்படுகிறது தெரியுமா? சிறுகுடலில்தான். 80 சதவிகித நீர்ச்சத்து சிறுகுடலில் இருக்கும். சிறுகுடலின் கடைசிப் பகுதியான இலியத்தின் முக்கியப் பணியே தண்ணீரை சுத்திகரித்து, சிறுகுடலின் சுழற்சிக்கு விடுவதுதான். இது மட்டும் அல்ல எலெக்ட்ரோலைட் எனும் மெக்கானிசத்தையும் உடலுக்கு மிகமிக அத்தியாவசியத் தேவையான வைட்டமின் பி12-ஐ செரிப்பதும் இலியம்தான். இலியம் மட்டும் ஒழுங்காகச் செயல்படவில்லை எனில், ரத்த உற்பத்தி பாதிக்கப்பட்டு, ரத்தசோகைகூட ஏற்படலாம்.