Published:Updated:

உடல் பருமன், பறிபோன பார்வை... மீண்டெழுந்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய பெண்!

'மிசஸ் கோயம்புத்தூர்', 'மிசஸ் இந்தியா எர்த்' என அழகுக்காக பல மகுடங்களைச் சூடியவர் ஜெய மகேஷ். ஆனால், அவருடைய கடந்தகாலம் எப்படி இருந்தது தெரியுமா?

உடல் பருமன், பறிபோன பார்வை... மீண்டெழுந்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய பெண்!
உடல் பருமன், பறிபோன பார்வை... மீண்டெழுந்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய பெண்!

ஜெயா மகேஷ் உடன் 10 நிமிடம் பேசிக்கொண்டிருந்தால் நமக்கும் சிறகு முளைத்துவிடும். உற்சாகம் ததும்புகிறது பேச்சில். மனதுக்குள் படிந்து கிடக்கும் அத்தனை எதிர்மறை எண்ணங்களையும் நொடியில் அகற்றிவிடுகிறார்.  எல்லா வார்த்தைகளும் அவருடைய அனுபவத்திலும் வலியிலும், வெற்றியிலும் தோய்ந்துவரும் வார்த்தைகள்.  

ஜெயா, கோவையைச் சேர்ந்தவர். இப்போது, 48 வயது. 'மிசஸ் கோயம்புத்தூர்', 'மிசஸ் இந்தியா எர்த்' என அழகுக்காக பல மகுடங்களைச் சூடிக்கொண்டவர்.  `பாடி ஸ்கல்ப்டிங்’ (Body Sculpting) என்ற புதுவகையான மனநலம் சார்ந்த உடற்பயிற்சியை வடிவமைத்து, இந்தியா முழுவதும் பறந்து பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார். இன்று அவரது ஒவ்வொரு நிமிடமும் ஆயிரங்களால் ஆனது. ஆனால், இந்த உயரங்கள் அவருக்கு எளிதில் சாத்தியமாகிவிடவில்லை. தென்றல் மாதிரி இதமாக நகர்ந்துகொண்டிருந்த வாழ்க்கை திடீரென பூகம்பத்தில் சிக்கிக் குலைந்துபோய் நின்றது. 

"இப்போ நினைச்சாலும் திகைப்பாத்தான் இருக்கு சார். இது, நிறைய இழப்புகளுக்குப் பிறகு கிடைச்ச புது வாழ்க்கை. நிறைய கனவுகளோட படிப்பை முடிச்சேன். அப்பா சந்திரமோகன் போலீஸ் கமிஷனரா இருந்தார். ஃபிட்னஸ்ல அவர் காட்டுற தீவிரம் ஆச்சர்யமா இருக்கும். எங்களையும் அப்படித்தான் வளர்த்தார். `உடல் உறுதி மட்டுமில்லாம மன உறுதியும் வேணும்’னு சொல்வார். ரொம்ப ஸ்ட்ராங்காத்தான் வளர்ந்தோம். நேரம் தவறாத உடற்பயிற்சி, டயட், ஜிம்...  எல்லாம். 

ஸ்போர்ட்ஸ்லயும் எனக்கு ஈடுபாடு உண்டு. கல்லூரி அளவுல அத்லெட்ல நிறைய பதக்கங்கள் வாங்கியிருக்கேன். இருபது வயசுல திருமணம். நான் எதிர்பார்த்த மாதிரியே நல்ல வாழ்க்கை... என்னையும் என் குடும்பத்தையும் நல்லா புரிஞ்சுக்கிட்ட கணவர். சின்ன வயசுலருந்து நண்பர்களா இருந்தோம். பெரியவங்க ஆசீர்வாதத்தோட வாழ்க்கையில இணைஞ்சோம். பேர் மகேஷ்குமார்.  
எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டிருந்துச்சு. ஒரு வருஷத்துல கன்சிவ் ஆனேன். அப்ப தொடங்கி சின்னச் சின்னதா பிரச்னைகள்... குழந்தையோட தலை திரும்பலை... பிரசவமே கொஞ்சம் சிரமமானதா மாறிடுச்சு. சஞ்சனா பிறந்தா... வாழ்க்கையே முழுமையடைஞ்ச மாதிரி இருந்துச்சு.  ஆனா, அதுக்கப்புறம் எதிர்பார்க்காத அளவுக்கு உடல்நிலை மாறிடுச்சு..." - அழுத்தமாகக் கண்களை மூடித்திறக்கிறார் ஜெயா. 

சிறு புன்னகையால் உணர்வுகளை மறைத்துக்கொண்டு தொடர்கிறார்... 

"திடீர்னு உடல் எடை அதிகமாகத் தொடங்குச்சு. 'குழந்தை பிறக்கும்போது எல்லாப் பெண்களுக்கும் எடை அதிகமாகத்தான் செய்யும்'னு எல்லாரும் சொன்னாங்க. ஆனாலும்  எனக்கு ஏதோ ஒரு வித்தியாசம் தெரிஞ்சுச்சு. கொஞ்சநாள்ல மொத்தமா முடங்கிட்டேன். என்ன நடக்குதுனு உணர்றதுக்குள்ள 118 கிலோவாயிடுச்சு எடை... குழந்தையை ஆசையாத் தூக்கி தோள்லகூட போட்டுக்க முடியலை. கால்களை நகர்த்த முடியலை. 'கன்சிவாகியிருந்த நேரத்துல சில மருந்துகளை அதிகமா எடுத்துக்கிட்டதாலதான் எடை அதிகமாயிடுச்சு'னு டாக்டர்கள் சொன்னாங்க. அந்தத் துயரத்தை உள்வாங்கிக்கிறதுக்கு முன்னாடி  இன்னொரு பிரச்னை... கண்கள் ரெண்டும் கூச ஆரம்பிச்சுச்சு. எதிர்ல ஏதோ பனி படர்ந்து கிடக்கிற மாதிரி தெரியும்...  படிப்படியா பார்வையும் குறைஞ்சுபோச்சு. ரெண்டு வருஷத்துல மொத்த வெளிச்சமும் போயாச்சு... சரி, இறைவன் ஏதோ ஒரு நோக்கத்துல நம்மை சோதிக்கிறான்னு நினைச்சுக்கிட்டேன்.  ``டிஸ்ஸிஃபார்ம் கேராடைட்டிஸ்’ (Disciform Keratitis)னு ஒரு வைரஸ் பாதிப்புதான் பார்வை போனதுக்குக் காரணம்’னு சொன்னாங்க. ஒரு மில்லியன் பேர்ல ஒருத்தருக்குத்தான் இந்தப் பிரச்னை வருமாம். 

நிறைய மருத்துவங்கள்... ஆனா, 'மருந்து மட்டும் நம்ம பிரச்னைக்குத் தீர்வில்லை'னு புரிஞ்சுக்கிட்டேன். இதுலருந்து மீளணும்னா, அதுக்குத் தகுதியானவளா நம்மை மாத்திக்கணும். மனதளவுலயும், உடல் அளவுலயும். நாம நம்மைத் தகுதிப்படுத்திக்கணும். நம்மைத் தவிர யாரும் நம்மை மீட்க உதவ முடியாது...  அதனால மெள்ள எழுந்து நடக்க ஆரம்பிச்சேன். எங்கேயாவது முட்டுறது, மோதி விழுறதுனு தொடக்கத்துல நிறைய சிரமங்கள். உயிர் போற மாதிரி வலிக்கும். படிப்படியா சூழலைப் பழக்கப்படுத்திக்கிட்டேன். வலி மரத்துபோச்சு. 

மகேஷ், அம்மா, அப்பா, தங்கச்சினு எல்லாரும் பக்கபலமா நின்னாங்க. சிலபேர், 'ஆபரேஷன் பண்ணி எடை குறைக்கலாம்'னு சொன்னாங்க. எனக்கு அதுல விருப்பமில்லை. ஆபரேஷன் உடம்பை சிதைச்சிடும். தன்னம்பிக்கையைக் குலைச்சிடும். திபெத்தியன் யோகா. பைலேட்ஸ் (Pilates), தியானம், எக்சர்சைஸ்னு படிப்படியா டைம்டேபிள் போட்டு செய்ய ஆரம்பிச்சேன்.  சரியா ரெண்டரை வருஷம்... 48 கிலோ குறைஞ்சிடுச்சு. எடை குறையக் குறைய பார்வையும் வர ஆரம்பிச்சுச்சு. 

இதை எளிதா ஓரிரு வரிகள்ல சொல்லிட்டேன். ஆனா,  வலி, அவமானம், காயங்கள், அழுகைனு இதுக்குப் பின்னாடி நிறைய இருக்கு. ஆனா, எல்லாத்தையும் தாங்கிக்கிற மன உறுதியை கடவுள் எனக்குக் கொடுத்தார். 'எழுந்து நடந்தே தீருவேன், என் பார்வை எனக்குத் திரும்பவும் கிடைக்கும்’னு நான் உறுதியா நம்பினேன். என் நம்பிக்கைதான் என்னை வழிநடத்திச்சு. 

என்னை கேலியா, கிண்டலாப் பார்த்தவங்க, நான்  கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்யறதைப் பார்த்து பரிதாபப்பட்டவங்கல்லாம், உடல் எடையைக் குறைச்சு, பார்வையை மீட்ட பிறகு ஆச்சர்யமாப் பார்த்தாங்க. நிறைய பேர் என்னைத் தேடி வந்து ஆலோசனை கேட்க ஆரம்பிச்சாங்க.  என் அனுபவங்களைப் பகிர்ந்துக்கிட்டேன்.  நாளாக, நாளாக என்னைத் தேடி வர்றவங்களோட எண்ணிக்கை அதிகமாச்சு. ஒரு கட்டத்துல இதுவே என் வாழ்க்கை ஆகிடுச்சு..." - சிரிக்கிறார் ஜெயா. 

அவர் என்னவெல்லாம் வழிமுறைகளைக் கையாண்டாரோ, அதுதான் ஜெயா வடிவமைத்துள்ள 'மசில் மேனிபுலேஷன்' (Muscle manipulation) தெரபி.  ஃபிட்னஸ் உலகில் இளைஞர்களை அதிகம் வசீகரிக்கும் டெக்னிக்காக மாறியிருக்கிறது.  உடம்பில் எந்தப் பாகத்தில் அளவு குறைக்க வேண்டுமோ, அதை உடற்பயிற்சிகள் மூலம் குறைப்பது.  'பாடி ஸ்கல்ப்டிங்' (Body Sculpting)  என்று பொருத்தமாகப் பெயர் வைத்திருக்கிறார் ஜெயா. 

"உடல் எடை அதிகரிப்புக்கு ஒரு காரணம் மட்டுமில்லை. நிறைய இருக்கு. முக்கியமானது, மனஅழுத்தம். முதல்ல அதைத்தான் சரி செய்யணும். குறிப்பா, பெண்களோட உடல் எடை அதிகரிக்கக் காரணம், அவங்க பேசுறதைக் கேட்க யாரும் இல்லைங்கிற எண்ணத்துல ஏற்படுற மனஅழுத்தம்தான். 

என்கிட்ட வர்ற பெண்கள்கிட்ட முதல்ல மனம்விட்டுப் பேசுவேன். அந்த முதல் பேச்சுலயே அவங்க உடல் எடை அதிகரிப்புக்கு என்ன காரணம்னு கண்டுபிடுச்சுடுவேன்.  முதல்ல, அவங்களை  புது மனுஷியா மாத்துவேன். இந்த உலகத்தை வேற கண்ணால பார்க்க வைப்பேன். 'நம்மால முடியும்'ங்கிற நம்பிக்கையை அழுத்தமா உருவாக்குவேன். மனோபாவம் மாறினாலே பாதி உடல் பிரச்னை தீர்ந்துடும்..." என்று உற்சாகமாகச் சொல்கிறார்  ஜெயா.  

ஜெயா உடல் பருமனை மட்டுமின்றி, டிஸ்ஸிஃபார்ம் கேராடைட்டிஸ்’ நோயையும் ஜெயித்துவிட்டார். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான பெண்களுக்கு தன்னம்பிக்கை தந்து முன்மாதிரி மனுஷியாகவும் மாறியிருக்கிறார். 

வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கிறது..!