Published:Updated:

வெயிலுக்குப் பயந்து ஏ.சி-யிலேயே அடைபட்டுக் கிடக்குறீங்களா..? உடம்பு பத்திரம் மக்களே! #HealthRisksOfAC

ஏ.சி-யிலிருந்து வரும் நல்ல குளிர்ந்த காற்று உடலுக்கு வெளியில் இதமாக இருக்கும். உடலுக்குள்ளே ?

வெயிலுக்குப் பயந்து ஏ.சி-யிலேயே அடைபட்டுக் கிடக்குறீங்களா..? உடம்பு பத்திரம் மக்களே! #HealthRisksOfAC
வெயிலுக்குப் பயந்து ஏ.சி-யிலேயே அடைபட்டுக் கிடக்குறீங்களா..? உடம்பு பத்திரம் மக்களே! #HealthRisksOfAC

கோடை வருகிறதோ இல்லையோ, வாடிக்கையாளர் மனதைக் குளிரச்செய்வதுபோல வந்துவிடுகின்றன வெவ்வேறு ஆஃபர்களில் ஏ.சி-கள். கூடவே, `எங்கள் ஏ.சி-யை வாங்கினால்... இதைத் தருகிறோம், அதைத் தருகிறோம்...’ என இலவசங்களின் பட்டியல் வேறு. கோடை சீஸனில் குளிர்பானக் கடைகளுக்கு இணையாக ஏ.சி-களை விற்கும் டீலர்களும், அவற்றை விற்கும் கடைக்காரர்களும் ரொம்ப பிஸி. ஏ.சி இல்லாத வீடுகளை ஏளனமாகப் பார்க்கும் மனநிலைக்கே பலர் வந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.``ஏ.சி-யால் நமக்கு ஏற்படும் நன்மைகளைவிட, தீமைகளே அதிகம்’’ என்கிறார்கள் மருத்துவர்கள். சிலருக்கு இதனால் ஏற்படும் தீமைகள் தெரிந்திருந்தாலும்கூட, இதன் மீதான மோகம் குறைந்தபாடில்லை. ஏ.சி-யால் நமக்கு உண்டாகும் உடல்நலக் கோளாறுகள் குறித்து பொதுநல மருத்துவர் சிவராமகண்ணன் இங்கே விவரிக்கிறார்...

* பொதுவாகவே ஏ.சி., அறையின் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இதனால் விரைவிலேயே உடல் வறட்சி ஏற்பட்டுவிடும். ஏ.சி அறை எந்த அளவுக்குக் குளிராக, வெப்பம் குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமாக உடல் வறட்சி ஏற்படும். நிறைய தண்ணீர் குடிப்பதுதான் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட ஒரே வழி.

* ஏ.சி ஃபில்டரை முறையாகச் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். வாரத்துக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதிலிருக்கும் அழுக்குகள், தூசிகள், பாக்டீரியாக்கள் போன்றவை அதிகமாகி, தலைவலி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நோய்தொற்று, நுரையீரல் தொற்றுகள் போன்ற பிரச்னைகள் ஏற்பட வழிவகுத்துவிடும். அலுவலகத்தில் அதிக நேரம் ஏ.சி-யில் வேலை செய்பவர்கள், மிதமான வெப்பநிலையைப் பராமரிப்பது நல்லது. மிகக் குளிரான வெப்பநிலையில் அதிக நேரம் இருப்பது உடலுக்குக் கேடு உண்டாக்கும்.

*ஏ.சி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், அதைவிட்டு வெளியே வர மனமில்லாமலிருப்பார்கள். இப்படி வெயிலேபடாமல், செயற்கையான குளிரில் இருப்பவர்கள் சுறுசுறுப்பாக இருக்க மாட்டார்கள். அப்படியே வெளியில் வந்தாலும், பல நேரங்களில் வெயிலும் வெப்பமும் ஒப்புக்கொள்ளாமல், உடல் உபாதைகள், ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் இவர்களுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

* ஏ.சி... அறையின் ஈரப்பதத்தை உறிஞ்சுவதோடு, தோலின் ஈரப்பதத்தையும் சேர்த்தே உறிஞ்சிவிடும். ஏ.சி. உபயோகிப்பவர்களால் இதை எளிதாக உணர்ந்துகொள்ள முடியும். இதனால் தோல் அரிப்பு, சருமம் வறண்டு போவது, முடி உதிர்வது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

* சிலர் அதிக நேரம் வெயிலில் இருந்துவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஏ.சி-யை நோக்கிச் செல்வார்கள். உஷ்ணமான சூழலில் இருந்துவிட்டு, திடீரென குளிரான சூழலுக்கு உடல் தள்ளப்படும்போது, சுவாசப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது சில நேரங்களில் ஒவ்வாமை பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.

* ஏ.சி-யால் கண்களுக்குத்தான் அதிகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கண் அரிப்பது, கண்கள் சிவந்துபோய் எரிச்சல் உண்டாவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதை கவனிக்காமல்விட்டுவிட்டால், நாளாக நாளாக கண்பார்வை மங்கி, பார்வைக்குறைபாடு ஏற்படலாம். ஏற்கெனவே கண்களில் பிரச்னை இருப்பவர்களுக்கு, இன்னும் அது அதிகமாகி, மேலும் சிரமத்தைக் கொடுக்கும்.

* ஏ.சி... உடலின் ரத்த அழுத்த அளவு,  `க்ரானிக் டிசீசஸ்' (Chronic Diseases) எனப்படும் நாள்பட்ட நோய்கள், வாதப் பிரச்னைகள் போன்ற பாதிப்புகளை அதிகரிக்கும். இதுபோன்ற பாதிப்பு இருப்பவர்கள் ஏ.சி பயன்படுத்துவதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.

* ஏ.சி வாங்கி சில ஆண்டுகள் ஆன பிறகு, அதிகச் சத்தத்துடன் இயங்கும். அதிக இரைச்சல் காரணமாக வேலையில் கவனச்சிதறல் ஏற்படக்கூடும். சத்தம் போட்டுக்கொண்டே இருக்கும் இதுபோன்ற இயந்திரங்கள், நாளடைவில் கேட்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அறையின் வெப்பம்  21 முதல்  25 டிகிரி சென்டிகிரேடுவரை இருக்க வேண்டும். நாமிருக்கும் இடத்தின் ஈரப்பத அளவு, 60 முதல்  70 சதவிகிதம் இருக்கவேண்டியது அவசியம் .

வெயிலில் சென்றால் ஏற்படும் உடல் உபாதைகளை நினைத்து, வீட்டிலும் அலுவலகத்திலும் அடைபட்டுக் கிடப்போம். ஆனால் , உண்மையில் வெளியே இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளைவிட, ஏ.சி அறையில் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம். மதிய நேரம் தவிர மற்ற நேரங்களில் வெப்பத்தின் அளவு மிதமாகவே இருக்கும். வெயிலால் உண்டாகும் உடல் பிரச்னைகளை இளநீர், நீர்மோர், வெள்ளரிக்காய் போன்ற எளிய உணவுகளின் மூலமே சரிசெய்துகொள்ளலாம். ஆனால், காலை முதல் மாலை வரை ஏ.சி-யில் இருந்துவிட்டு, இரவு மீண்டும் ஏ.சி அறையில் தூங்குவது, உடலுக்கு அதிகமான கெடுதலை உண்டாக்கும். ஏ.சி-க்கு `நோ’ சொல்லிவிட்டு, இயற்கை வழிமுறைகளுக்கு `வெல்கம்’ சொல்வது மட்டுமே நமக்குச் சிறந்த, சரியான மாற்று!