Published:Updated:

அந்தப்புரம் - 38

அந்தப்புரம் - 38
பிரீமியம் ஸ்டோரி
News
அந்தப்புரம் - 38

ஓவியம்: ஸ்யாம்

அந்தப்புரம் - 38

ர்ஜுன், அனன்யா வாழ்வில், கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மோசமடைந்து கொண்டே சென்றது. `அர்ஜுன் தன் இயல்பை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று அனன்யா நினைத்தாள். ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்து வெளியே வந்து, மற்றவர்களுடன் சகஜமாகப் பழகக்கூடிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று எதிர்பார்த்தாள். ஆனால், அர்ஜுன் மிகவும் பிடிவாதக்காரனாக இருப்பதைக் கண்டு தன் வாழ்க்கை என்ன ஆகுமோ எனப் பயந்தாள். தன்னுடைய ஆசைகளை மறைமுகமாகச் சொல்லிவந்தவள், ஒருநாள் நேரடியாகச் சொல்லிவிட்டாள்.

“அர்ஜுன்! நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன். உன்னோட இருக்கணும்னு ஆசைப்படுறேன். உன்னோட கைகோத்தபடி நடக்கணும், உன்னைக் கட்டிப்பிடிச்சு தூங்கணும்னு நிறைய ஆசைகள் இருக்கு. நானும் வேலைக்குப் போறேன் கஷ்டப்படுறேன். நான் ரொம்ப டயர்டா வீட்டுக்கு வரும்போது, நீ ஒரு ஹக் பண்ணினா ரொம்ப சந்தோஷப்படுவேன். ஆனா, ஒரு நாள்கூட நீ அப்படி செஞ்சது இல்லை. நான் தினமும் கிச்சன்ல கஷ்டப்படுறேன். என்னைக்காவது எனக்கு உடம்புக்கு முடியலை என்றாலும், நான்தான் சமைக்கிறேன். அன்னிக்காவது நீ கொஞ்சம் ஹெல்ப் செய்யலாம். ஆனா, நீ எந்த ஹெல்ப்பும் செய்யறது இல்லை. உனக்கு என் மேல் அன்பு குறைஞ்சிடுச்சா? ஏன் இப்படி நடந்துக்குறே?” என்று கேட்டாள்.

உடனே, அர்ஜுன் பதிலுக்கு சீறினான். “அனன்யா! நீ செய்யறது, எதிர்பார்க்கிறது எல்லாம் குழந்தைத்தனமாக இருக்குறது உனக்குப் புரியலையா? நீ இவ்வளவு வளர்ந்திருக்கே, ஆனா, இன்னமும் சின்னப் பொண்ணாவே இருக்கே...” என்றவனை அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

மேலும் அவன் தொடர்ந்து, “நீ எப்பவும் என் மேல குறை சொல்லிக்கிட்டே இருக்கே. என்ன செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிக்கிறே. என் மனநிலை, என் உணர்வுகள் உனக்குப் புரியறதே இல்லை. உன் ஆசை, உன் தேவைன்னுதான் எல்லாத்தையும் பார்க்குறே. உனக்கு நான் உரிய மரியாதை கொடுக்குறேன். அதேபோல, என் உணர்வுகளுக்கு நீ மரியாதை கொடுக்க மறுக்குறே. எப்போதும் ஏதோ கனவு உலகத்திலேயே இருக்குறே. நிஜ வாழ்க்கைக்கு இது எல்லாம் செட் ஆகாதுன்னு தெரிஞ்சிக்க” என்றான்.

அர்ஜுனின் பேச்சைக் கேட்டு, அவனைவிட்டு விலகியதைப்போல உணர்ந்தாள் அனன்யா. மேலும், இத்தனை நாள் அவனுடன் இருந்தது அத்தனையும் வீண் என்ற உணர்வு மேலிட்டது அவளுக்கு. அர்ஜுனுடன் பேசுவது வீண் என்று விட்டுவிட்டாள். ஆனால், அவனது பேச்சு அவளது மனதைப் பெரிதும் பாதித்துவிட்டது. எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. எல்லாவற்றிலும் தடுமாறினாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அந்தப்புரம் - 38

வழக்கம்போல காலையில் அலுவலகம் சென்றாள். ஆனால், நிம்மதியாக எந்த வேலையிலும் ஈடுபட முடியவில்லை. அவள் பாஸ் கூப்பிட்டு, ஒரு பார்ட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லிவிட்டு, பிரத்யேகமாகச் செய்யவேண்டியவை பற்றி குறிப்பிட்டார். கவனக்குறைவால், அவர் சொன்னதைச் செய்யாமல், மாலையில் வீட்டுக்குப் புறப்படத் தயாரானாள். அப்போது, அவளை அழைத்த பாஸ், “சொன்ன வேலையை முடித்தால்தான் போக முடியும்” என்று சொல்லிவிட்டார்.எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, இரவு 11 மணிக்கு வீடு திரும்பினாள்.

அவள் கோபம் முழுவதும் அர்ஜுன் மீது திரும்பியது. தன்னுடைய இந்த நிலைக்கு அர்ஜுன்தான் காரணம் என்று நினைத்தாள். அடுத்த நாள் காலையில், நேரடியாகவே அர்ஜுனிடம் சண்டை போட்டாள். ஆனால், அர்ஜுனோ, எதையும் பொருட்படுத்தாமல், “உணர்ச்சிகள் என்பது இருவருக்கும் பொதுவானது. நம் திருமண வாழ்வில் உனக்கு மகிழ்ச்சி, திருப்தி இல்லை என்று நினைத்தால், தாராளமாக இதைவிட்டு வெளியேறலாம்” என்று கூறியபடி, ஷூவை மாட்டிக்கொண்டு வெளியே நடக்க ஆரம்பித்தான். அவன் அறையைவிட்டு மட்டும் அல்ல... தன் வாழ்வைவிட்டும் வெளியேறிவிட்டதாக உணர்ந்தாள்  அனன்யா.

ஏன்? எதற்கு? எப்படி?

சில திருமணங்கள் நீடித்து நிலைப்பதில் தோல்வியுறுகின்றன. இதை அவசரகதியில் எடுத்த முடிவு என்று சொல்ல முடியாது. இதற்காக, திருமணம் என்பதே தோல்வியில் முடிவதுதான் என்றும் சொல்ல முடியாது. சட்டரீதியாக இதை விவாகரத்து என்று சொன்னாலும், இது தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் இடையே ஏற்பட்ட முறிவு என்றுதான் அர்த்தம்கொள்ள வேண்டும்.

இந்தத் தோல்வியானது நீண்டது, மிகவும் வலி தரக்கூடியது. சிலர், திருமணம் என்ன சொல்கிறதோ (சட்டம் சார்ந்து) அந்த வரையறைக்குள் வாழ்கின்றனர். ஆனால், அவர்களின் அத்தியாவசியத் தேவையான உணர்ச்சிரீதியான, உடல்ரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வது இல்லை. இவர்கள், கிட்டத்தட்ட ரயில் பயணத்தில் ஒன்றாகப் பயணிக்கும் பயணிகளைப்போல ஒட்டுறவு அற்ற வாழ்க்கையை வாழ்கின்றனர். அப்படி என்றால், இவர்கள் பெற்றோர்கள் தவறாகத் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள் என்று அர்த்தமா? நிச்சயம் இல்லை. இதற்கு, இளைஞர்கள் இயல்பு வாழ்க்கைக்குப் பொருந்தாத, அதீதக் கனவுகளுடன் திருமண வாழ்க்கைக்குள் நுழைவதுதான் காரணம்.

- ரகசியம் பகிர்வோம்!

டவுட் கார்னர்

“திருமண தெரப்பி (Marital therapy) என்றால் என்ன... இதனால், உத்தரவாதமாகப் பலன் கிடைக்குமா?”

சரண்யா, சென்னை.


“நடத்தை (பிஹேவியர்) தொடர்பாக பயிற்சி அளிக்கக்கூடிய தெரப்பி இது. மகிழ்ச்சியற்ற, உடையக்கூடிய நிலையில் உள்ள திருமணங்களை இணைக்கும் ஒரு முயற்சி. பிரச்னைகளை அறிவியல்பூர்வமான முறையில் அணுகி, அதைத் தீர்க்க முயற்சிக்கிறது இந்த தெரப்பி. தீர்வுகள் தம்பதியர்களுக்கு அளிக்கப்படும். அதன் பிறகு, இருதரப்பும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும். வாழ்க்கையைப் பொறுத்தவரை, எதற்குமே உத்தரவாதம் கிடையாது. திருமண தெரப்பி என்பது மாயமந்திர வித்தை அல்ல. தம்பதிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வைத் தேடும் ஒரு வழிமுறை மட்டுமே.”

அந்தப்புரம் - 38

“எனக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. நான் மேரிட்டல் தெரப்பிஸ்ட்டை அணுகலாமா?”

சரவணன், சென்னை.


“இல்லை. மேரிட்டல் தெரப்பி என்பது திருமணம் ஆன தம்பதிகளுக்குத்தான். நீங்கள் ப்ரீமேரிட்டல் கவுன்சலிங் அளிப்பவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.”

“ப்ரீமேரிட்டல் கவுன்சலிங் என்றால் என்ன?”

பிரதாப், சென்னை.


“திருமணத்துக்கு முன்னர் தம்பதிகள் பெறவேண்டிய ஆலோசனை இது. திருமணம், தாம்பத்தியம் தொடர்பாகப் பொதுவாக எழக்கூடிய சந்தேகங்கள், பயம், கட்டுக்கதைகள் போன்றவற்றுக்குத் தெளிவு பெற சிறந்த வழிமுறை. மேலும், தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் ஏற்படவும் குடும்பத்தைத் திட்டமிடவும் இது உதவும். திருமணம், குடும்ப வாழ்வைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவுகிறது இது.”

“திருமண உறவில் பிரச்னைகளே ஏற்படாமல் இருக்க வழிகள் ஏதும் உள்ளதா?’’

எஸ்.ராஜ்குமார், சென்னை.


“எந்த ஓர் உறவு முறையாக இருந்தாலும், அதில் பிரச்னை எழாமல் பார்த்துக்கொள்ள யாராலும் முடியாது. பிரச்னைகளைக் கண்டு ஓடி ஒளிவதைக் காட்டிலும், அதைத் தீர்க்க முயல்வதே சரியான வழிமுறை. எந்தப் பிரச்னையும் எழவில்லை எனில், வாழ்க்கையில் நிம்மதி, மகிழ்ச்சி என்பதை நம்மால் அனுபவிக்கவே முடியாது என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். எனவே, பிரச்னைகளை எதிர்கொள்ளப் பழகவேண்டியது மிகவும் அவசியம்.”

“திருமணம் என்றாலே ஆயிரத்தெட்டு பிரச்னை என்கிறபோது, ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்?”

கே.சுரேஷ், வடமதுரை.


“திருமணம் செய்யலாமா, வேண்டாமா என்பது அவரவர் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது. ஒன்றை நினைவில்கொள்ளுங்கள், இதுவரை மிகச் சரியான (Perfect) திருமண வாழ்க்கை வாழ்ந்தவர்கள், சிறந்த தம்பதிகள் என யாரும் இல்லை. ஒவ்வொருவர் திருமண வாழ்விலும் ஏதாவது ஒரு கட்டத்தில் பிரச்னை வரத்தான் செய்யும். அதை வெற்றிகரமாக சமாளிப்பதில்தான் திருமணத்தின் வெற்றி இருக்கிறது. எதிர்பார்த்தது கிடைக்கவில்லை, கோபம், குழப்பம் போன்ற காரணங்களால் திருமணத்தை முறித்துவிடாதீர்கள். திருமணம் ஒரு மிகச் சரியான நிறுவனம் இல்லைதான். ஆனால், இன்றைக்கு நம் சமுதாயத்தில் மிகப் பெரும்பாலானோர் ஏற்கும் ஒரே, சமூக ஏற்பாடு திருமணம்தான். இதற்கு மாற்றாக வேறு ஏதும் இல்லை என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். திருமணம் வெற்றியடைய ஃபார்முலா ஏதும் இல்லை. வெற்றியில் முடிவதோ, தோல்வியில் முடிவதோ அந்தந்தத் தம்பதிகளின் கைகளில் உள்ளது.”

“‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்கிறார்கள். அப்படி இருக்கையில் ஏன் இவ்வளவு பிரச்னைகள்?”

ஐஸ்வர்யா, மதுரை.


“எதார்த்த வாழ்வில், தம்பதிகள் ஒன்றும் சொர்க்கத்தில் வாழ்வது இல்லையே? பூமியில் நம் மத்தியில்தான் அவர்களும் வாழ்கின்றனர். தம்பதிகள் எதார்த்தத்தை உணர்ந்து, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து  வாழ வேண்டும். திருமணம் என்பது இருவருக்குமான கூட்டுறவு என்பதை நினைவில்கொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டோ, ஒருவர் பேச்சை மற்றவர் கேட்காமலோ, மற்றவர்களுடன் ஒப்பீடு செய்துகொண்டோ, அமைதியற்று, ஈகோ நிறைந்தவர்களாக, பழைய விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைவூட்டி பிரச்னை செய்பவர்களாக, மற்றவர்கள் முன்னிலையில் சண்டையிடுபவர்களாக இருந்தால், திருமணங்கள் பிரச்னையாகத்தான் இருக்கும். மாறாக, ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக, விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். ஒருவர் மீது ஒருவர் அன்புடன், அக்கறையுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அனைத்துத் திருமணங்களுமே சொர்க்கம்தான்.”