மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 14

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 14
பிரீமியம் ஸ்டோரி
News
உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 14

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 14

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 14

மீபத்தில் வெளிவந்த ‘தோழா’ படத்தில், முதுகுத் தண்டுவட விபத்தால் பாதிக்கப்பட்டு, உடல் செயலிழந்த நாகார்ஜுனாவைப் பார்த்துக்கொள்ள கார்த்தி செல்வார். தவறுதலாக, அவர் காலில் வெந்நீரை ஊற்றிவிடுவார். நாகார்ஜுனாவால் அதை உணர முடியாது. இதனால், மீண்டும் மீண்டும் வெந்நீரை ஊற்றிப் பரிசோதிப்பார். உண்மையில், நம் காலில் ஒரு சின்ன முள் குத்தினால்கூட வலியால் துடிக்கிறோம். ஆனால், நாகார்ஜுனாவால் ஏன் உணர முடியவில்லை என்று படம் பார்த்தவர்களுக்குக் கேள்வி எழலாம்.

மூளைக்கும் உடலின் மற்ற உறுப்புகளுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டால், இயக்கம் மட்டும் அல்ல... உணர்ச்சிகளும் தடைபட்டுப்போய்விடும். காலில் பாதிப்பு இருந்தாலும், அதை மூளை உணர்ந்தால்தான் வலி என்ற உணர்வு ஏற்படுகிறது. இப்படி, ஒவ்வொன்றையும் உணரும் மூளைக்கு வலி என்ற உணர்வு இல்லை. அதனால்தான், சில பாதிப்புகளுக்கு மூளையில் அறுவைசிகிச்சை செய்யும்போது, நோயாளியை கண்விழிக்கச் செய்து, எந்த இடத்தில் பாதிப்பு, அறுவைசிகிச்சை சரியாகத்தான் நடந்திருக்கிறதா என்று பரிசோதிக்கிறோம். 

இதுவரை, மூளையின் ஒவ்வொரு பகுதியையும் அதன் செயலையும் பார்த்தோம். இனி, மூளையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பார்க்கலாம்.

உடலின் ஒவ்வொரு செயலின் இயக்கமும் மூளையின் கட்டுப்பாட்டில் நடக்கிறது. மூளை ஒழுங்காகத் தன் வேலையைச் செய்யும் வரைதான் நம்மால் எந்த ஒரு செயலையும் (நம் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் இதயத் துடிப்பு போன்ற நம் கட்டுப்பாட்டில் இல்லாதது) ஒழுங்காகச் செய்ய முடியும். மூளை செல்களில் செயல் இழப்பு ஏற்படும்போது, பல வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால், நினைவாற்றல் பாதிக்கப்படும், உணர்ச்சி நிலை பாதிக்கப்படும், ஆளுமையே பாதிக்கப்படும்.

மூளையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை, காயங்களால் வரக்கூடியது, கட்டியால் வரக்கூடியது, மூளை செல்கள் இறப்பு, மனநலக் குறைபாடு என்று நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

காயங்கள் என்றால், வெறும் விபத்து மட்டும் அல்ல, ரத்தக் குழாய் வெடிப்பு, அடைப்பு எல்லாம் இதில் அடங்கும். மூளையில் வீக்கம் ஏற்பட்டால், அது பார்வையிழப்பு, சோர்வு, உடல் செயல் இழப்புக்கு வழிவகுத்துவிடும். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு அல்லது ரத்தக் குழாய் வெடிப்புக் காரணமாக, மூளை செல்களுக்குப் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைப்படும்போது, மூளை செல்கள் உயிரிழக்கின்றன. இதனால், பக்கவாதம் ஏற்படும். இந்தச் சூழலில் இயக்கம், சிந்தனை போன்றவையும் பாதிக்கப்படும்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 14

சில பாதிப்புகள் நோய்த்தொற்றுக் காரணமாக ஏற்படுகின்றன. வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு, வெறிநாய்க் கடியை உதாரணமாகச் சொல்லலாம். வெறிநாய் கடித்ததும், வைரஸ் கிருமி நம் தண்டுவட திரவத்தில் தங்கி வளர்ச்சிப்பெறுகிறது. பின்னர், இது மூளையைத் தாக்கி, உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

மூளையில் கட்டி ஏற்படும்போது, அது மூளை நரம்புகளைப் பாதித்து, வலிப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சில நோய்கள் மரபு வழியாகத் தோன்றுகின்றன. இவை ஏன் வருகின்றன என்று நம்மால் இதுவரை அறிய முடியவில்லை. இதற்கு உதாரணம், அல்சைமர், ஆட்டிசம் போன்றவை.

மூளையில் உள்ள ரசாயன சுரப்புக்களின் அளவு மாறுபடும்போது மனஅழுத்தம், பைபோலார் டிஸ்ஆர்டர், ஸ்கீஸோஃப்ரனியா உள்ளிட்ட மனநலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

ஒரு சிறிய மூளைதான், ஆனால் பாதிப்புகள் பலவிதம். இதற்கான அறிகுறிகளும் வெவ்வேறானவை. எந்த இடத்தில், என்ன பாதிப்பு என்பதைப் பொருத்து அறிகுறிகள் மாறுபடும். இதை, நோயாளியின் பேச்சு, பார்வை, கேட்டல், இயக்கம், நிலைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு ஓரளவுக்குக் கண்டறியலாம். சி.டி, எம்.ஆர்.ஐ, பெட்ஸ்கேன் மூலம் பாதிப்புகளைத் துல்லியமாகக் கண்டறியலாம். நோய்த்தொற்று பாதிப்பு இருந்தால், அதை மூளை மற்றும் தண்டுவட திரவத்தைப் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறிய முடியும். மனநலப் பிரச்னைகளை நோயாளியின் அறிகுறிகள் மற்றும் நோயின் காலத்தை ஆய்வுசெய்வதன் மூலம் கண்டறியலாம்.

ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை தேவைப்படும். சில பிரச்னைகளுக்கு மருந்து மாத்திரைகள் போதும். சிலவற்றுக்கு, அறுவைசிகிச்சை, பிசியோதெரப்பி போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.

சில பிரச்னைகள் நிரந்தரமானவையாக இருக்கின்றன. மூளை செல்கள் செயல் இழப்பு (Neurodegenerative diseases) நோய்கள், மோசமான விபத்துக்கள் காரணமாக மூளையில் ஏற்படும் பாதிப்புக்களைக் குறிப்பிடலாம். இந்த சூழலில் எந்த சிகிச்சையும் அவர்களுக்குத் தீர்வு அளிப்பது இல்லை. அதற்காக, சிகிச்சையே இல்லை என்று அர்த்தம் இல்லை. அவர்கள் வாழ்க்கை முடங்கிவிடாமல், முடிந்தவரை அவர்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்காமல், சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தர மருத்துவர்கள் முயற்சிக்கிறோம்!

- அலசுவோம்!

மூளை பாதிப்பு யாருக்கு ஆபத்து?

யாருக்கு வேண்டுமானாலும் மூளை பாதிப்பு வரலாம். ஆனால், ஒவ்வொருவருக்குமான வாய்ப்பு என்பது மாறுபடும்.

குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்களுக்கு விபத்து காரணமாக மூளை பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

மூளைக் கட்டி எந்த வயதிலும் வரலாம். கதிர்வீச்சு உள்ள பகுதி, மரபியல்ரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது மூளைக்கட்டி இருந்தால், அடுத்த சந்ததியினருக்குக் கட்டி வர வாய்ப்பு உள்ளது.

மூளை செல்கள் செயலிழப்பு என்பது வயது அதிகரித்தலினால் ஏற்படுகிறது.

பாக்டீரியா, வைரஸ் தொற்றுக்களும் மூளை பாதிப்பை ஏற்படுத்தும்.