Published:Updated:

`கிளித்தட்டு’, `கோலிக்கா’... ஆட்டிசம் குழந்தைகளை மீட்க விளையாட்டுகளைக் கற்றுத்தரும் பள்ளி!

வழக்கொழிந்துபோன நம் மரபார்ந்த விளையாட்டுகள் பல, ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உதவக்கூடியவை. இதை நன்கு உணர்ந்திருக்கிறார் பிரீத்தா நிலா.

`கிளித்தட்டு’, `கோலிக்கா’... ஆட்டிசம் குழந்தைகளை மீட்க விளையாட்டுகளைக் கற்றுத்தரும் பள்ளி!
`கிளித்தட்டு’, `கோலிக்கா’... ஆட்டிசம் குழந்தைகளை மீட்க விளையாட்டுகளைக் கற்றுத்தரும் பள்ளி!

`ரம் ஏறிக் குரங்கு’, `கோலிக்கா’, `நொண்டி விளையாட்டு’,` தட்டாங்கல்’, `கபடி’, `கள்ளன்-போலீஸ்’, `கிளித்தட்டு’, `குச்சிக் கம்பு (கிட்டிப்புல்)’... இவையெல்லாம் நடுத்தர வயது கடந்தவர்கள் பலருக்கும் நீங்கா நினைவுகள்... அவற்றை ஆடித்தீர்த்த காலங்களை எண்ணி பெருமூச்சுவிடச் செய்பவை. உடம்புக்கு உரத்தையும் மனதுக்கு உற்சாகத்தையும் தந்தவை. வாழ்நாள் முழுக்கத் தொடரும் நெருக்கமான தோழமையைப் பெற்றுத் தந்தவை. கூட்டு முயற்சியின் பலன்களை அறிவுறுத்தியவை. சரி... இந்த விளையாட்டுகளெல்லாம் இப்போது எங்கே? 

ஒருவேளை மின்சாரமும் சாலையும் கிடைக்காத மலைக்கிராமத்துக் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கலாம். மற்றபடி தமிழகத்தின் சிறு நகரத்திலோ கிராமத்திலோகூட இவற்றைக் குழந்தைகள் விளையாடிப் பார்க்க முடிவதில்லை. மொபைல் போன்களின் பொம்மை விளையாட்டுகள் இவற்றையெல்லாம் விழுங்கி ஏப்பம்விட்டுவிட்டன. வழக்கொழிந்துபோன நம் மரபார்ந்த விளையாட்டுகள் பல,

ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உதவக்கூடியவை. இதை நன்கு உணர்ந்திருக்கிறார் பிரீத்தா நிலா. அதன் காரணமாகவே, இது போன்ற விளையாட்டுகளை மீட்டெடுக்கவும் குழந்தைகளுக்கு உதவவும் களமிறங்கியிருக்கிறார்.  

``என் சின்ன வயசுல `பூமராங்' விளையாட்டு பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். அதைக் கத்துக்கணும்னு ஆசை. அதுலயும் இது ஒரு வீர விளையாட்டு இல்லியா. அதனாலேயே ஆர்வம் அதிகமாகிடுச்சு. `பூமராங் ஆஸ்திரேலியாவில் விளையாடக்கூடிய விளையாட்டு’னு சொல்வாங்க. ஆனா, அது நம்ம ஊர்ல அந்தக் காலத்துலயே புழக்கத்துல இருந்திருக்கு. அதுக்கு `வளரி'னு பேரு. இந்தத் தகவல் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. `வளரி’ங்கிற அழகான தமிழ்ச் சொல்லில் அழைக்கப்பட்ட இந்த ஆயுதம் மிகப் பழைமையானது. 

மதுரை, சிவகாசி, ராமநாதபுரம் போன்ற பகுதிகள்ல வளரியை ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்தியிருக்காங்க. ஒருத்தன் தப்பிச்சு ஓடுறான்னு வெச்சுக்குவோம். அவனோட காலைக் குறி பார்த்து வளரியை வீசினா, அதுல அவன் கால் இடறி கீழே விழுந்துடுவான். அவனை எளிதாகப் பிடிச்சுடலாம். மான் வேட்டைக்காகவும் வளரியைப் பயன்படுத்தியிருக்காங்க. மருது சகோதர்களும் வீரமங்கை வேலுநாச்சியாரும் வளரியைப் போர்க்கருவியாகப் பயன்படுத்தியிருக்காங்க. இதுக்கு `வளைதடி’, `பாறாவலை’, `சுழல்படை’, `படைவட்டம்’னு பல பேர்கள் இருக்கு.

இது மாதிரியான நம் பாரம்பர்ய வீர விளையாட்டுகளோட, இயற்கை விவசாயம், மரபு சார்ந்த உணவு, பாரம்பர்ய மருத்துவம்... எல்லாத்தையும் நம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல விரும்பினேன். அதுக்காகத்தான் இயற்கை எழில் கொஞ்சும் என் சொந்த ஊர் தேனியிலேயே `கற்றல் இனிது'ங்கிற வாழ்வியல் பள்ளியை ஆரம்பிச்சேன். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைனு அஞ்சு வகை நிலப்பரப்புகளைக் கொண்ட நம் மக்களுக்கு மண் சார்ந்த, மரபு சார்ந்த, தொலைந்துபோன எல்லாத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கு. அதையும் மாணவப் பருவத்துலருந்தே கத்துக் குடுக்கணும்கிற நோக்கத்துல இதை நடத்துறேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்தப் பள்ளியில வகுப்பு நடக்கும். அஞ்சு குழந்தைகளோட ஆரம்பிச்ச இந்தப் பள்ளியில இப்போ 30 குழந்தைகள் இருக்காங்க...’’ என்கிறார் பிரீத்தா நிலா.  

இயற்கையோடு இயைந்த சூழல்... மரங்கள் சூழ்ந்த தோட்டம்... `கற்றல் இனிது’ அமைந்திருக்கும் இடமே மனம் கவர்கிறது. இப்படி நம் மண் சார்ந்த சூழலில் இலக்கியம், `ழ', `ள' போன்ற இலக்கண உச்சரிப்புகளை குழந்தைகளுக்குக் கற்றுத்தருகிறார் பிரீத்தா நிலா. வட்ட வடிவில் குழந்தைகள் அமர்ந்து புத்தகம் வாசிக்கிறார்கள். பிறகு, வரிசையாக நின்றுகொண்டு எதையாவது உரக்கப் படிக்கிறார்கள். மற்றக் குழந்தைகளோடு குழந்தையாக ஏ. டி.ஹெச்.டி எனப்படும் `அட்டென்ஷன் டெஃபிசிட்/ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர்’ (ADHD), ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் படிக்கிறார்கள். 

இங்கே குழந்தைகளுக்கு சிலம்பம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற தமிழர் கலைகளையும் சொல்லிக் கொடுக்கிறார் பிரீத்தா நிலா. `தேர் மேளம்' என்ற பழந்தமிழர் கலை இன்றைக்கு அழிவின் விளிம்பில் இருக்கிறது. இப்போது, ஈரோடு பகுதியில் வாழும் வயதான 10 பேருக்கு மட்டுமே தேர் மேளத்தை இசைக்கத் தெரியும். அவர்களை அழைத்து வந்து, தேர் மேளத்தைக் குழந்தைகளுக்கு சொல்லித் தர ஏற்பாடு செய்திருக்கிறார் பிரீத்தா நிலா. அவ்வப்போது தமிழ் அறிஞர்கள் பலர் வந்து குழந்தைகளிடம் பேசுகிறார்கள். இயற்கை வேளாண் விஞ்ஞானியான பாமயன் அடிக்கடி வந்து, உழவு, வேளாண்மை குறித்த செய்திகளைப் பாடமெடுக்கிறார்.

பிரீத்தா நிலா நடத்தும் வகுப்பு, குழந்தைகளுக்குப் புதுமையான ஒன்றாக இருக்கிறது. பயிற்சிக்குப் பிறகு, அவர்களிடம் உளவியல்ரீதியாக நல்ல மாற்றம் தெரிகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது பயிற்சி. குழந்தைகள் வீட்டிலிருந்தே உணவு எடுத்து வந்துவிடுகிறார்கள். பயிற்சி இலவசம்.  

``எந்த ஆற்றல் என்னை உந்தித் தள்ளி எல்லா பிரச்னைகளையும் கடந்து, `கற்றல் இனி’தில் பயணிக்க வைக்குதோ அதே ஆற்றல் இதை தினசரிப் பள்ளியாக மாற்றுகிற நம்பிக்கை எனக்கு இருக்கு. `தமிழைக் கையில் எடுத்தவர் வீழ்வார்கள்’ என்ற நிலையையும், `சமூகத்தில் ஒரு பெண் அவளுடைய ஒழுக்கத்தை விற்றுத்தான் பயணிக்க முடியும்’ என்ற பொது புத்தியையும் உடைக்கணும்கிற எண்ணத்தோட `கற்றல் இனிது' பள்ளியை நடத்திக்கிட்டு வர்றேன். 

நான் ஓர் ஆயுர்வேத மருத்துவர், உளவியல் ஆலோசகர். என் மருத்துவமனையில பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்னை இருக்கு. அவங்களுக்கெல்லாம் சிகிச்சை கொடுக்கறதோட, சரியான உணவு முறையையும் சொல்லித் தர்றேன்.

அந்தக் காலத்துல பூவரசு இலை, பூவை கர்ப்பப்பை பிரச்னைகளுக்குப் பயன்படுத்தினாங்க. திருமணமான ஆணும் பெண்ணும் இதைச் சாப்பிட்டா அவங்களுக்குக் குழந்தைப்பேற்றில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. அதனாலதான் கர்ப்பப்பையை வலுப்படுத்தறதுக்கும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருகவும் பூவரசு இலை, பூவை மையாக அரைச்சு தோசை மாவோட சேர்த்துச் சாப்பிடச் சொல்லித் தர்றேன்.  பூவை வெறும் வயித்துலயே சாப்பிடலாம். இதனால கர்ப்பப்பை நீர்க்கட்டிகள், சீக்கிரம் அபார்ஷன் ஆகுறது, குழந்தை தங்காமல் போறது மாதிரியான பிரச்னைகள் சரியாகும். 

ஆட்டிசம் பாதிச்ச குழந்தைகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்குறேன்; மரபுவழி விளையாட்டுகளைச் சொல்லித் தர்றேன். இதெல்லாம் அவங்களோட குறைபாடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நீக்குது; அந்தக் குழந்தைங்க நல்ல முன்னேற்றத்தை அடைய உதவுது. இதை ஒரு சவாலாக எடுத்து செஞ்சுக்கிட்டு வர்றேன். ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளை மீட்டெடுக்க நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கு. இதுக்காக எத்தனையோ இழப்புகளைச் சந்திச்சிருக்கேன். ஆனாலும் அதையெல்லாம் மகிழ்ச்சியோடதான் ஏத்துக்கிட்டு இருக்கேன். ஒரு நல்லது நடக்குதுனா எந்த இழப்பையும் தாங்கிக்கலாம்தானே..!'' சிரித்தபடி சொல்கிறார் பிரீத்தா நிலா. 

ஆட்டிசம், ஏ.டி.ஹெச்.டி பாதித்த குழந்தைகளை, அவற்றிலிருந்து மீட்டெடுக்க மாற்று வழி சிகிச்சைகள், நம் பாரம்பர்ய விளையாட்டுகள் எல்லாம் உதவும் என நம்புகிறார் பிரீத்தா நிலா. பக்கவிளைவுகளை, பாதிப்புகளை ஏற்படுத்தாதவை நம் பாரம்பர்ய வழிமுறைகள். நாமும் பிரீத்தா நிலாவைப்போல் நம்பலாமே!