Published:Updated:

அலர்ஜியை அறிவோம் - 14

உணவு ஒவ்வாமை

பிரீமியம் ஸ்டோரி
அலர்ஜியை அறிவோம் - 14

மாறிவிட்ட நம் உணவுப் பழக்கம் காரணமாகவும், செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் விளையும் காய்கறிகள், பழங்களை உண்பதன் காரணமாகவும், கடந்த கால் நூற்றாண்டு காலமாக, உணவு ஒவ்வாமையால் ஏற்படும் பிரச்னை அதிகரித்துவருகிறது. அதிலும் முக்கியமாக, குழந்தைகள்தான் உணவு ஒவ்வாமையால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

அலர்ஜி ஆகும் உணவுகள்

குறிப்பிட்ட ஓர் உணவைச் சாப்பிட்டு, அதனால் தோல் தடிப்பு, அரிப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால், அது உணவு ஒவ்வாமை. சமீபத்திய புள்ளிவிவரப்படி, சுமார் 170 உணவுகளால் ஒவ்வாமை ஏற்படுவதாக அறியப்பட்டு உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் உணவு அலர்ஜி ஆகும். எனவே, பொதுவான பரிந்துரைகள் எல்லோருக்கும் பொருந்துவது இல்லை.

பால் பொருட்கள், கோதுமை, முட்டை, வேர்க்கடலை, மக்காச்சோளம், கடல் மீன்கள், இறால், நண்டு, கருவாடு, இறைச்சி, கத்திரிக்காய், தக்காளி, எலுமிச்சை, பயறு, வெங்காயம், உருளை, செர்ரி, சாக்லேட், நட்ஸ் வகைகள், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், குளிர் பானங்கள், வனஸ்பதி போன்றவைதான் பெரும்பாலும் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. செயற்கை வண்ணம், நறுமணம் சேர்க்கப்பட்டவை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் அலர்ஜியைத் தூண்டும் ரசாயனங்கள் இருக்கும். உதாரணத்துக்கு, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் உள்ள அஸோ (Azo) சாயம்; செயற்கை நிறமிகளில் உள்ள டார்ட்ரஸீன் (Tartrazine) போன்றவை அலர்ஜியைத் தூண்டும்.

அலர்ஜியை அறிவோம் - 14

காரணம் என்ன?

பிடிக்காத பொருளை உடலில் இருந்து வெளியேற்ற ரத்தத்தில் உருவாகும் ‘இம்யூனோகுளோபுலின் இ’ (IgE) எனும் எதிர்ப் புரதம்தான் உணவு ஒவ்வாமை ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம். பிடிக்காத பொருள் முதல் முறையாக உடலுக்குள் நுழைந்ததும், மீண்டும் வராமல் தடுக்க இந்தப் புரதம் உருவாகி, ரத்தத்தில் காத்திருக்கும். மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும் போது, இது ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லியூக்கோட்ரின் (Leukotriene) வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை, ரத்தக் குழாய்களை விரிவடையச்செய்து, அங்கு உள்ள நரம்புமுனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவந்து வீங்குவது, வயிற்றுவலி போன்றவை ஏற்படுகின்றன.

அறிகுறிகள் என்னென்ன?


உணவு ஒவ்வாமையால் ஏற்படும் அறிகுறிகள் பல வகைப்படும்.

வயிற்றில் ஏற்படும் அறிகுறிகள்:  உணவைச் சாப்பிட்ட அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்துக்குள் வாய் மற்றும் உதட்டில் அரிப்பு ஏற்படும். நாக்கும் உதடும் வீங்கும். தொண்டை அடைக்கும். விழுங்குவதற்குச் சிரமம் ஏற்படும். தொடர்ச்சியாக ஏப்பம் வரும். வயிற்றைப் பிசைகிற மாதிரி வலி, குமட்டல், வாந்தி வரும். வயிற்றுப்போக்கு ஏற்படும். சிலருக்கு, மலச்சிக்கல் உண்டாவதும் உண்டு.

தோலில் ஏற்படும் அறிகுறிகள்: தோலில் பல இடங்களில் பூரான் கடித்ததுபோல் வீங்கிவிடும். தோல் தடித்துச் சிவந்துவிடும். சிலருக்கு, தோலில் கத்தியால் கீறியதுபோல் கோடுகோடாக இருக்கும்; வேறு சிலருக்கு வட்ட வட்டமாகத் தோல் தடித்துவிடும். கண் இமை, உதடு, காது வீங்கிவிடும். இந்த ஒவ்வாமை அடிக்கடி நேர்ந்தால் ‘எக்சீமா’ எனும் தோல் தடிப்பு நோய் நிரந்தரமாகிவிடும்.

சுவாச மண்டல அறிகுறிகள்: அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, மூக்கு அரிப்பு, இருமல், இளைப்பு, ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

பொதுவான அறிகுறிகள்: குரல் மாறும். உடல் சோர்வாக இருக்கும். தலைவலி உண்டாகும். படபடப்பு அல்லது மயக்கம் வரலாம்.

சாக்லேட், பால், பாலாடைக்கட்டி, ஈரல், இறைச்சி, சோயா சாஸ் ஆகிய உணவுகளில் ‘டைரமின்’ எனும் வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. செரிமானத்தின்போது, டைரமின் முறையாகச் சிதைக்கப்படாமல், அப்படியே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். இதன் விளைவாக, ரத்த அழுத்தம் அதிகரித்து, கடுமையான தலைவலி ஏற்படும். சூப், சாஸ்களில் மோனோசோடியம் குளுட்டமேட் (Monosodium glutamate) எனும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது, ரத்தக் குழாய்களை விரிவடையச்செய்து, தலைவலியை உண்டாக்கும்.

உணவு ஒவ்வாமை சில சமயங்களில் உயிருக்கே உலைவைப்பதும் உண்டு.

ஒருவருக்கு ஒரு முறை ஏற்பட்ட அறிகுறிகள்தான் மீண்டும் ஏற்படும் என்று இல்லை. ஒவ்வொரு முறையும் இந்த அறிகுறிகள் மாறலாம். ஒரு முறை லேசாகத் தோன்றியவை, அடுத்த முறை கடுமையாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.

வழக்கத்தில், குழந்தைகளுக்கு எல்லா அறிகுறிகளையும் சொல்லத் தெரியாது. ‘தொண்டையை இறுக்குவதுபோல் இருக்கிறது’, ‘வயிற்றைப் பிசைகிற மாதிரி இருக்கிறது’ என்று சொல்வார்கள். பெற்றோர், இவற்றை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச்சென்று சிகிச்சை பெற வேண்டும்.

என்ன பரிசோதனை?

வழக்கத்தில் எந்த உணவைச் சாப்பிடும்போது ஒவ்வாமை குணங்கள் தோன்றுகின்றன என்பதைக் கவனித்தாலே இந்த நோயைக் கணித்துவிடலாம். தேவைப்பட்டால், ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

என்ன சிகிச்சை?

ஒவ்வாமை அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும்.

ஒருவருக்கு ஒரு முறை ஓர் உணவு அலர்ஜி ஆகிறது என்றால், அந்த உணவை அவர் அடுத்த முறை சாப்பிடக் கூடாது என்பதுதான் பொதுவான விதி.

உணவு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, வீட்டுச் சாப்பாடே நல்லது. அடிக்கடி ஹோட்டல் மற்றும் கேன்டீன்களில் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

நமக்கு அலர்ஜி ஆகும் உணவுப் பொருட்கள் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் பாத்திரம், கரண்டி, தட்டுகளில் சிறிது ஒட்டிக்கொண்டு இருந்தாலும், நாம் சாப்பிடும் உணவுடன் அவை கலந்தாலே அலர்ஜி ஏற்படும். இதைத் தவிர்க்கவே இந்த யோசனை.

- எதிர்வினை தொடரும்

அலர்ஜி அலெர்ட்!

அலர்ஜியை அறிவோம் - 14

ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப் பொருள் துளி இருந்தாலும், பிரச்னை ஏற்படும். முக்கியமாக, கலப்பட உணவுகளில் இந்த ஆபத்து அதிகம்.

சாப்பிட்டால்தான் அலர்ஜி ஆகும் என்பது இல்லை. முகர்ந்தாலும் அலர்ஜி ஆகும்.

சமைத்த உணவுகளைவிட, சமைக்காத உணவுகளில்தான் ஆபத்து அதிகம்.

அலர்ஜி ஆகும் உணவுகள் பெரும்பாலும் புரதச்சத்து உள்ளவையாகவே இருக்கும். இவற்றைத் தவிர்ப்பது, பல சத்துக்குறைவு நோய்களுக்கு இடம் தரும். ஆகவே, டயட்டீஷியன் உதவியுடன் தினசரி உணவுகளைத் திட்டமிடுவது நல்லது.

முட்டை காரணமாக அலர்ஜி உள்ளவர்கள், முட்டைக் கருவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளைப் போடக் கூடாது. உதாரணத்துக்கு ஃபுளு தடுப்பூசி, எம்எம்ஆர்வி தடுப்பூசி.

உணவுப் பொருட்களில் உள்ள லேபிள்களைக் கவனித்து, அவற்றில் எந்த வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்து, அலர்ஜி ஆகிற பொருட்கள் இருந்தால், ஒதுக்கிவிட வேண்டும்.

அலர்ஜி டேட்டா!

உலகில் சுமார் 60 கோடி மக்கள் உணவு ஒவ்வாமையால் அவதிப்படுகிறார்கள்.

இந்தியக் குழந்தைகளில் 100-ல் எட்டு பேருக்கும், பெரியவர்களில் 100-ல் நான்கு பேருக்கும் இந்தத் தொந்தரவு ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு ஒரு வயதுக்குள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டுவிடுகிறது. பால், முட்டை, சாக்லேட் முக்கிய அலர்ஜி உணவுகள்.

உணவு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஆஸ்துமா, அரிப்பு, தோல் தடிப்பு நோய் உள்ளிட்ட வேறு அலர்ஜி நோய்களும் சேர்ந்து உள்ளன.

பால், கோதுமை, முட்டை, மீன், வேர்க்கடலை ஆகியவை தமிழகத்தின் முதன்மையான ஐந்து அலர்ஜி உணவுகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு