Published:Updated:

உயிர் காக்கும் உறுப்பு தானம்

உயிர் காக்கும் உறுப்பு தானம்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் காக்கும் உறுப்பு தானம்

உடல் உறுப்பு தான தினம் - ஆகஸ்ட் 13

உயிர் காக்கும் உறுப்பு தானம்

டல் உறுப்பு தானம் செய்வதில், இந்தியாவைப் பொருத் தவரை தமிழகம்தான் முன்னிலையில் உள்ளது. ஆனால், நம் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் பேர் உடல் உறுப்புக்கள் கிடைக்காமல் மரணத்தைத் தழுவுகின்றனர். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புஉணர்வு என்பது நெடிய பயணம். அதில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். ஒருவர், தன் உடல் உறுப்புகளைத் தானம் செய்யும்போது, அதனால் சுமார் எட்டு  பேர் வாழ்க்கை பெறுகிறார்கள். எனவே, உடல் உறுப்பு தானத்தின் அவசியம் குறித்த விழிப்புஉணர்வைப் பரவலாக்க வேண்டியது நம் கடமை.

இறந்த பின்னும் நம்மை வாழவைக்கும் அற்புதம் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள். உடல் உறுப்பு தானம் குறித்த, பல தவறான நம்பிக்கைகள் உள்ளன. எது சரி, எது தவறு என்பதைப் பார்ப்போம்.

மித் 1

மனிதர்கள் தங்களது உடல் உறுப்புகளை விற்கலாம், வாங்கலாம்?

உண்மை: வணிக நோக்கில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்வது, தண்டனைக்குரிய குற்றம். உடல் உறுப்புக்கு பேரம் பேசினால், அது மிகப்பெரிய குற்றம். உடல் உறுப்பு தானம் செய்வதாக முடிவு எடுத்தால், அந்த உடல் உறுப்புகள் யார் யாருக்குப் பொருத்தப்படும் என்பதை, அரசின் உடல் உறுப்பு தான மையமே முடிவுசெய்கிறது. அரசு மருத்துவமனையில் உடல் உறுப்புகளைத் தானம் செய்தால், அரசு மருத்துவமனைகளில் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். எனவே, அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.

உயிர் காக்கும் உறுப்பு தானம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மித் 2

இறந்த பின் உறுப்பு தானம் செய்வதால், உடல் சிதைக்கப்படும். உடலுக்கு உரிய மரியாதை செய்யப்படாது.


உண்மை: இது தவறு. பொதுவாக, ஒருவரது உடல் உறுப்பு தானமாகப் பெறப்பட்டால், மிகவும் கவனமாகக் கையாளப்படும். ஒருவர் கண் தானம் செய்திருந்தால், பாதுகாப்பாகக் கண்கள் எடுக்கப்பட்டு,  இறந்த நபருக்கு அதே இடத்தில் செயற்கைக் கண்கள் பொருத்தப்பட்டு, மீண்டும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். ஒருவேளை, எலும்புகள் தானத்துக்கு எடுக்கப்பட்டால், அதற்குப் பதிலாக, ராடுகள் அதே அளவில் உடலில் பொருத்தப்பட்டு ஒப்படைக்கப்படும். எனவே, உடல் சிதைக்கப்பட்டுக் கொடுக்கப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

மித் 3

உடல் நலன் குன்றியிருந்தாலோ, கண் பார்வை மங்கிப்போனாலோ உடல் உறுப்புகளைத் தானம் செய்வதில் பலன் இல்லை?


உண்மை:
ஒருவர் உடல் உறுப்பைத் தானம் செய்துவிட்டார் என்பதால் மட்டும் அவரது உறுப்பை  இன்னொருவருக்குப் பொருத்திவிட முடியாது. அந்த உறுப்பு எவ்வளவு தரமாக இருக்கிறது, அதை இன்னொருவருக்குப் பொருத்தினால், அவருக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமா என்பதை எல்லாம் பரிசோதித்துத்தான் உடல் உறுப்புகள் பொருத்தப்படும். உடல் நலன் குன்றியவர்களாக இருந்தாலும் அவர்களது உடலில் என்னென்ன உடல் உறுப்புகள் நல்ல நிலையில் இருக்கிறதோ அவற்றை  நிச்சயம் சிகிச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மித் 4

வயதானவர்களின் உறுப்புகள் பழுதடைந்து இருக்கும். எனவே, அவர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முடியாது.


உண்மை: இல்லை. தாராளமாகச் செய்யலாம். ஒருவரின் வயதுக்கும் உறுப்புகளுக்கும் பெரிய சம்பந்தம் இல்லை. ஒருவர் எப்படி அவரது உடல் நலனை வைத்திருந்தார் என்பதைப் பொருத்து, ஒவ்வோர் உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான மருத்துவ வயது உண்டு. எனவே, 60, 70 வயதானவர்கள் கூட தாராளமாக உடல் உறுப்பு தானம் செய்யலாம். அவர்களின் உடலில் உள்ள ஆரோக்கியமான உறுப்புகள் மட்டும் பயன்படுத்தப்படும்.

உயிர் காக்கும் உறுப்பு தானம்

மித் 5

உடல் உறுப்பு தானம் செய்ய ஒருவர்  முடிவு எடுத்திருந்தால், ஏதாவது ஒரு பிரச்னை அவருக்கு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது, மருத்துவர் நோயாளியின் உடலை நிலை குறித்து கவனம்கொள்ள மாட்டார். உடல் உறுப்பு தானத்துக்குப் பயன்படட்டும் என அலட்சியமாக விட்டுவிடுவார்.


உண்மை: எந்த மருத்துவரும் அப்படிச் செய்ய மாட்டார். செய்யவும் கூடாது. ஒரு நபர் மருத்துவமனைக்கு வருகிறார் எனில், அவர் நலம் பெற சிகிச்சை அளிக்க வேண்டியதே மருத்துவரின் கடமை. தவிர, ஒருவர் மூளைச்சாவு அடைந்தால் ஒழிய, அவரது உறுப்புக்கள் தானம் செய்யப்பட மாட்டாது.

உடல் உறுப்பு தானம் vs உடல் தானம்

பலரும் உடல் தானத்தையும் உடல் உறுப்பு தானத்தையும் குழப்பிக்கொள்கிறார்கள். உடல் தானம் என்பது, முழு உடலையும் மருத்துவ ஆராய்ச்சிக்காகக் கொடுப்பது. இந்த முறையில், இறந்த பின்னர் ஒருவரின் உடல்  குடும்பத்தினர் ஒப்புதல் பெற்று மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பின், மீண்டும் எந்தக் காரணம் கொண்டும் திருப்பித்தரப்பட மாட்டாது. ஆனால், உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடல் உறுப்புகள் தானத்துக்காக நீக்கப்பட்ட பின் மீண்டும் உரியபடி குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும்.