Published:Updated:

அந்தப்புரம் - 39

அந்தப்புரம் - 39
பிரீமியம் ஸ்டோரி
News
அந்தப்புரம் - 39

ஓவியம்: ஸ்யாம்

அந்தப்புரம் - 39

ப்போதுதான் முதன்முதலாக அந்த அறைக்குள் நுழைந்தாள் அமலா. உள்ளே நுழையும்போதே ஏ.ஸி-யின் குளிரும் நல்ல நறுமணமும் வீசியது. மல்லிகை மணம், குளிர் எல்லாவற்றையும் தாண்டி அவள் உடல் வியர்த்தது, மெல்லிய நடுக்கம் ஏற்படவே, கண்களை நன்கு மூடினாள். கண்களைத் திறந்தபோது, அவள் முன்னால் சில்க் குர்த்தாவில் ஆனந்த் நின்றிருந்தான்.

15 மணி நேரத்துக்கு முன்புதான் அமலாவுக்கும் ஆனந்துக்கும் திருமணம் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ நிகழ்ந்த மிகப் பிரமாண்டமான திருமணம். பெற்றோர் பார்த்து ஏற்பாடுசெய்த திருமணம் என்பதால், திருமணத்துக்கு முன்பாக இருவரும் அதிகம் பேசிக்கொண்டது இல்லை. திருமணத்துக்குப் பிறகு, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

ஒருவரைப் பற்றி மற்றொருவருக்கு முழுமையாகத் தெரியாது என்பதால், இருவர் மனதிலும் மிகப்பெரிய போரே நடந்துகொண்டிருந்தது. ஆனந்துக்கு முதலிரவு என்றால் என்ன என்று அவனது நண்பர்கள் பலரும் பலவிதமாகச் சொல்லி இருக்கிறார்கள். அவை எல்லாம் அவன் நினைவுக்கு வந்து சென்றது. அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் செயல்வீரம், இளமைத் துடிப்பைப் பற்றி பெருமை பேசினார்களே தவிர, தாங்கள் எந்த அளவுக்குப் பாலியலில் திறமையானவர்கள் என்பதைப் பற்றி மூச்சுவிட்டதே இல்லை. இப்போது, அவனுக்குள் ஒருவிதப் பதற்றம், தயக்கம். ‘பாவிப்பசங்க! அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று என்னென்னமோ சொன்னாங்க. நமக்கு மட்டும் ஏன் கை, கால் எல்லாம் நடுங்குது’ என்று நினைத்துக்கொண்டான். அப்படி நினைக்கும்போதே அவனுக்குக் கொட்டாவி வந்தது. ‘இவ்வளவு டயர்டா இருக்கு, அவர்களால் மட்டும் எப்படி எல்லாம் செய்ய முடிந்தது’ என்று யோசித்தான்.

அந்தப்புரம் - 39

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முந்தைய நாள் மாலையில் இருந்து பல்வேறு சடங்குகள், மாலையில் திருமண வரவேற்பு, அலைச்சல் என்று பலவும் ஒன்று சேர்ந்து, அதிகப்படியான சோர்வைத் தந்தன. முதலிரவு எப்படி நடக்கப்போகிறதோ, ‘முதலிரவில் எதுவும் செய்யவில்லை என்றால், அமலா தன்னைப் பற்றி, தன் ஆண்மையைப் பற்றி தவறாக நினைப்பாளோ’ என்று குழப்பத்தில் இருந்தான். ‘நண்பர்கள் சொல்லும்போது எல்லாம் ரொம்ப ஈஸியாகத் தெரிந்தது. ஆனால், இங்கே வந்தா அப்படி இல்லையே’ என்று நினைத்தான். எப்படித் தொடங்குவது என்றும் தெரியவில்லை. இதனால், தைரியம் அற்றவனாகவே இருந்தான். ஆனால், செய்தாக வேண்டுமே... அப்படிச் செய்யவில்லை என்றால், அவமானமாகப் போய்விடுமே என்று பயந்தான்.

தயக்கம், பதற்றம், பரபரப்பு என்று அனைத்தும் சேர்ந்து அவனை அழுத்தவே, எண்ணத்தைத் திசை திருப்பலாம் என்று, எச்சிலை விழுங்கியபடி, அறை முழுவதிலும் கண்களைச் சுழற்றினான். அப்படியே, ஜன்னல் ஓரம் தயங்கியபடி நின்றுகொண்டிருந்த அமலாவைத் தன் கண்களால் ஸ்கேன் செய்தான். அதே நேரத்தில், அமலா மனதிலும் ஏராளமான எண்ண ஓட்டங்கள்.

ஏன்? எதற்கு? எப்படி?

முதல் இரவு என்றதும் அழகான பட்டுப்புடவை, நகைகள் அணிந்து கையில் பால் டம்ளருடன் வெட்கத்துடன் நிற்கும் மணமகள்... தைரியமான, மகிழ்ச்சியான, துடிப்புடன், சற்று வீராப்புடன் இருக்கும் மணமகன்... அழகாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அறை... ஊதுபத்தி, நறுமணப் பொருட்களின் வாசம்... இனிப்புகள், பழங்கள் என்று பல விஷயங்கள் நம் நினைவுக்கு வரும். இப்படித்தான் பல படங்களில் காண்பிக்கின்றனர். அதன் பிறகு என்ன நடக்கும்? அது ஒவ்வொருவரின் கற்பனைக்கு ஏற்ப விரிந்துகொண்டே செல்லும்.

ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது என்பது நபருக்கு நபர் வேறுபடும். திருமணம் என்பது இரு மனங்கள் வாழ்நாள் முழுமைக்கும் ஒன்றிணையும் ஒரு நிகழ்வு. இரு குடும்பங்களுக்கு இடையேயான இணைப்புப் பாலம். அனைத்துக்கும் மேலாக, ஆணும் பெண்ணும் தாம்பத்தியத்தில் இணையலாம் என்று எடுக்கும் முக்கிய முடிவு. இந்தியாவில் திருமணம் முடிவானதும், அனைவரின் கவனமும் பாரம்பரியம், கலாசாரம், உறவினர்கள் பட்டியல், விருந்து உணவுப் பட்டியல், இடம், நேரம், ஆடை, நகை எனப் பல விஷயங்களிலேயே இருக்கிறது. திருமணத்தின் மிக முக்கிய நோக்கமான மணமகன், மணமகளின் தாம்பத்தியத் தொடக்கம் என்பது வழக்கமாக இரவின் மறைவில் வைக்கப்படுகிறது. ஜோடிகள் தங்கள் திருமணம் முழு நிறைவு பெறுவதற்குக் காத்திருக்கும் காலம்தான் முதல் இரவு.

- ரகசியம் பகிர்வோம்!

அந்தப்புரம் - 39

டவுட் கார்னர்

“முதல் இரவிலேயே தாம்பத்திய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று ஏதேனும் கட்டாயம் உள்ளதா?”

என்.பிரகாஷ், சென்னை.


“இல்லை, அப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்தத் தேவையும் இல்லை. இது தம்பதிகளுக்கு இடையேயான புரிதல் மற்றும் சௌகரியத்தைப் பொருத்தது. வாத்சாயனார், காமசூத்ராவில், புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகள் முதல் 10 நாட்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டாம் என்கிறார். பிறகுதான் செக்ஸுக்கு முயற்சிக்க வேண்டும். இதனால், மணமகன் மற்றும் மணமகளுக்கு இடையேயான உறவு இனிமையானதாகி, பூத்துக்குலுங்கி மனம் வீசி, ஆரோக்கியமாக இருக்கும் என்பதற்காகத்தான் இந்த 10 நாட்கள் இடைவெளி. அதன் பிறகு, தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது, எந்தவித பயம், பதற்றம், நெருக்கடிகள் இன்றி முழுமையாக ஈடுபடலாம்.”

“தாம்பத்தியத்தின்போது விளக்குகளை அணைக்க வேண்டும் என்று என் மனைவி வற்புறுத்துகிறார். ஆனால், எனக்கோ விளக்குகள் எரிய வேண்டும். என் மனைவி மிகவும் பிடிவாதமாக இருக்கிறாரா?”

பெயர் வெளியிட விரும்பாத வாசகர், மதுரை.


“இல்லை. பெண்களின் இயல்பே எப்போதும் தடுப்பதும் தற்காப்பதும்தான். இயற்கையாகவே பெண்களுக்குக் கூச்ச உணர்வு அதிகம். அதிலும், அடுத்தவர் முன்னிலையில், அது கணவனாகவே இருந்தாலும் ஆடை கலைவதை அவர்கள் உள்ளுணர்வு விரும்புவது இல்லை. எனவே, வெளிச்சம் வேண்டாம் என்கிறார். அவர் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். அவரை உடனே செய்தாக வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். இந்தத் தடையில் இருந்து வெளிவர அவருக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். கொஞ்ச காலத்திலேயே அவர் இதில் இருந்து விடுபடுவார்.”

“திருமணத்துக்குப் பிறகு ஹனிமூன் செல்லலாம் என்கிறார் என்னவர். வீண் செலவு என்பதால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆனால், அவர் வற்புறுத்துகிறார். ஹனிமூன் என்றால் என்ன? அது அந்த அளவுக்கு முக்கியமானதா?”

ஜி.சரண்யா, ஈரோடு.


“திருமணம் முடிந்த உடன் தொடங்கும் குறிப்பிட்ட காலத்தை ஹனிமூன் என்கிறார்கள். பொதுவாக, திருமணம் முடிந்த முதல் சில வாரங்கள், சிலர் மூன்று வாரங்கள், நான்கு வாரங்கள் வரையிலான காலத்தை ஹனிமூன் காலக்கட்டம் என்கிறார்கள். இந்தக் காலக்கட்டத்தில்தான் திருமணம் ஆன தம்பதி்யினர் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இருவருக்கும் சௌகரிய நிலையை அடையவும் உதவும். பொதுவாக பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணங்களில், திருமணத்துக்கு முன்பாக ஜோடிகள் பேசிப் பழக வாய்ப்பு இருக்காது. இதனால், திருமணத்துக்குப் பிறகு ஜோடிகள் வெளியூர் சென்று, பேசி, பழகி, இருவரும் மனம் இணைந்து, தங்கள் தாம்பத்திய வாழ்க்கைப் பயணத்தில் பல விஷயங்களை தெரிந்துகொள்ள உதவும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, வாழ்க்கையைத் தொடங்க உதவியாக இருக்கும் என்பதால், ஹனிமூன் செல்லத் தயக்கம் வேண்டாம்.”

“எனக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. என் குடும்பத்தினர் எங்கள் தேனிலவுக்காக, 10 நாட்கள் வட இந்தியா சுற்றுலா பேக்கேஜுக்குப் பணம் கட்டி முன்பதிவு செய்திருக்கிறார்கள். ‘குறைந்த காலத்தில் பல இடங்களை நாங்கள் சென்று காண வேண்டும்’ என்று நினைத்து இதைச் செய்திருக்கிறார்கள். ஆனால், எனக்கு ஒரே ஒரு இடத்துக்குச் சென்று, தனிமையில் இருவரும் பழக வேண்டும் என்று ஆசை. இதில் எது சரி?”

எஸ்.நரேஷ் குமார், சென்னை.


“நிச்சயம் ஒரே இடத்துக்குச் செல்வது என்பதுதான் அர்த்தம் உள்ளது. தேனிலவு செல்வதன் நோக்கமே, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதுதான், பல இடங்களைப் பார்ப்பது அல்ல. இதற்கு, வாழ்க்கையின் இன்னும் பெரும் பகுதி காத்திருக்கிறது. எனவே, ஒரே இடத்துக்குச் செல்வது நல்லது. அது, மலைப்பிரதேசம் அல்லது கடற்கரைப் பகுதி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். திருமணத்துக்காக ஜோடிகள் மேற்கொண்ட அலைச்சல், அவஸ்தைகளில் இருந்து மனஅமைதி, உடல் ஓய்வு பெறும் வகையில் ஒரு இடத்தைத் தேர்வுசெய்வது நல்லது. அப்போதுதான், அவர்கள் தாம்பத்திய வாழ்வில் உச்சத்தை அடைவதற்கான வழிகளைக் காண முடியும். டூர் பேக்கேஜில், ஒரே இடத்தில் தங்குவதற்குப் பதில், தினமும் பயணத்திலேயே நாட்கள் கழியும். மற்றவர்களுடன் சேர்ந்து நீங்களும் செல்ல வேண்டியிருக்கும். ஏற்கெனவே, சோர்வில் இருக்கும் உடலும் மனமும் மேலும் சோர்வடையும். இதனால், தாம்பத்தியத்தில் சிறப்பாக ஈடுபட முடியாது போகலாம்.”

“சமீபத்தில் எனக்குத் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் திருமணத்துக்கு முன்பு நன்கு பேசிப் பழகினோம். முதலிரவு அன்று என் கணவரால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை. ஆனால், அடுத்த நாள் அவரால் ஈடுபட முடிந்தது. இதில் என்ன பிரச்னை டாக்டர்?”

பெயர் வெளியிட விரும்பாத வாசகி, சென்னை.


“முதல் நாள் ஈடுபட முடியவில்லை, ஆனால் அடுத்த நாள் நன்றாக ஈடுபட முடிந்தது என்றால் அவரிடம் எந்தப் பிரச்னையுமே இல்லை. திருமணத்துக்காக அதிகாலையில் கண் விழித்தது, நீண்ட நேரம் திருமணச் சடங்குகளில் ஈடுபட்டது, உறவினர்கள், நண்பர்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டது என்று திருமணத்தின் பல நிகழ்வுகள் அவருக்கு அசதியைக் கொடுத்திருக்கலாம். இதனால், உடல் சோர்வு ஏற்பட்டிருக்கலாம். இந்த சூழலில் அவருக்கு விருப்பம் இருந்தும்கூட அவரது இனப்பெருக்க உறுப்புக்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அடுத்த நாள் சோர்வு நீங்கியதும், அவரால் இயல்பாகத் தாம்பத்தியத்தில் ஈடுபட முடிந்திருக்கிறது அவ்வளவே.”