ஹெல்த்
Published:Updated:

ஸ்வீட் எஸ்கேப் - 15

ஸ்வீட் எஸ்கேப் - 15
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்வீட் எஸ்கேப் - 15

சர்க்கரையை வெல்லலாம்

ஸ்வீட் எஸ்கேப் - 15

த்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவு என்பது கடலில் தெரியும் ஐஸ் பாறைகளின் நுனியைப் போன்றது. சிறிய ஐஸ்கட்டிகள்தானே மிதக்கிறது என்று நினைப்போம். ஆனால், அது கடலின் ஆழத்தில் காலூன்றி இருக்கும், ஒரு மலையின் நுனியாக இருக்கும். அதுபோலத்தான் சர்க்கரை நோயும். கொஞ்சம்தானே அதிகமாக இருக்கிறது என்று நினைப்போம். ஆரம்ப நிலையில் அதன் பாதிப்புகள் வெளியே தெரியாது. ஆனால், பிரச்னை முற்றும்போது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

மது அருந்துபவர்களுக்குத்தான் கல்லீரல் பிரச்னை வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், சர்க்கரை நோய்கூட, ஃபேட்டி லிவர் பிரச்னைக்குக் காரணமாகிறது. சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, கல்லீரலில் அதிகப்படியான கொழுப்புப் படிந்து, ஃபேட்டி லிவர் பிரச்னை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களில் பாதிப் பேருக்கு மேல் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் தவிர்த்து, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு போன்றவையும் ஃபேட்டி லிவர் பிரச்னைக்குக் காரணமாகின்றன.

மதுப் பழக்கமற்ற ஃபேட்டி லிவர் (NASH-Non Alcoholic Steatohepatitis)

இதை, சைலன்ட் கல்லீரல் பிரச்னை என்று சொல்லலாம். மது அருந்துபவர்களுக்கு ஏற்படக்கூடிய கல்லீரல் பிரச்னை போன்றே இது இருக்கும். ஆனால், இவர்கள் மது அருந்துபவர்களாக இருக்க மாட்டார்கள் அல்லது மிகமிகக் குறைந்த அளவு மது அருந்துபவர்களாக இருப்பார்கள். ஃபேட்டி லிவர் பிரச்னையின்போது, கல்லீரல் திசுக்கள் வீக்கம் அடைந்து, பாதிப்படைகின்றன. இதில் மிகவும் வருத்தமான விஷயம், இந்தப் பிரச்னை உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தங்களுக்கு இப்படி ஒரு பிரச்னை உள்ளது என்பதே தெரியாமல் இருப்பதுதான். பிரச்னை முற்றும்போது கல்லீரல் சுருக்கம் ஏற்பட்டு, கல்லீரல் செல்கள் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டு, கல்லீரலில் தழும்புகள் ஏற்படுகின்றன. கல்லீரல் இந்த நிலைக்கு வந்துவிட்டால், அதனால் இயல்புநிலைக்குத் திரும்ப முடியாது, பணிகள் சரிவர நடக்காது.

ஸ்வீட் எஸ்கேப் - 15

அறிகுறிகள்

இந்தப் பிரச்னை ஆரம்பநிலையில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. பாதிப்பு உள்ள பெரும்பாலானவர்கள், தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவே கருதுவார்கள். அந்த அளவுக்கு எந்த அறிகுறியும் தெரியாது. பிரச்னை தீவிரம் அடையும்போது, சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். இதற்கு, பல ஆண்டுகள் வரைகூட ஆகும். சோர்வு, காரணமின்றி உடல் எடை குறைதல், உடல் வலுவற்றத்தன்மை, வலது பக்க வயிற்றின் மேல் பகுதியில் அரிப்பு போன்றவை இதன் அறிகுறிகள்.

கண்டறிவது எப்படி?

எளிய ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம். இதற்கு கல்லீரல் செயல்திறன் பரிசோதனை என்று பெயர். கல்லீரல் செல்களில் அதிகப்படியான கொழுப்புப் படிவதால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இதனால், கல்லீரல் அளவு பெரிதாகி இருக்கும். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்வதன் மூலம், இதை எளிதில் கண்டறியலாம். இந்தப் பரிசோதனை மூலமே 70 சதவிகித ஃபேட்டி லிவர் பிரச்னையைக் கண்டறிய முடியும்.  இதன் பிறகு, எவ்வளவு கொழுப்புப் படிந்திருக்கிறது என்று மதிப்பிட வேறு ஒரு பரிசோதனை உள்ளது. இதற்கு, கல்லீரல் பயாப்ஸி செய்ய வேண்டும். இது கொஞ்சம் வலி மிக்க செயல்முறை. ஒரு நாள் மருத்துவமனையில் தங்க வேண்டி இருக்கும்.

சிக்கல்

ரத்தக் குழாயில் கொழுப்புப் படிந்தால், ரத்த ஓட்டம் தடைபடும். கல்லீரலில் படிந்தால் என்ன பிரச்னை வரப்போகிறது என்று நினைக்கலாம். கல்லீரலில் கொழுப்புப் படிவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு, கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis) என்று பெயர். இந்த நிலையில், கல்லீரல் செல்கள் மரணித்து, அந்த இடத்தில் தழும்பு ஏற்படுகிறது. கல்லீரல் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் செயல்பாட்டைக் குறைத்துக்கொள்கிறது. இதனால், சில நேரங்களில், கால் அல்லது வயிற்றில் நீர் கோத்துக்கொள்கிறது. உணவுக் குழாயில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடைந்து வெடிக்கின்றன. இதனால், ரத்த வாந்தி ஏற்படுகிறது.

ஸ்வீட் எஸ்கேப் - 15

கல்லீரல் சுருக்கம் ஏற்பட்டுவிட்டால், கல்லீரல் செயல்பாடு முற்றிலும் நின்றுவிடும். இவர்களுக்கு, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே பலன்தரும்.

சிலருக்கு, ஃபேட்டி லிவர் ஏற்பட்டு, கல்லீரல் சுருக்கப் பிரச்னை ஏற்படுவது விரைவாக இருக்கும். சிலருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும். ஏன் இப்படி மாறுபடுகிறது என்பதற்குத் தெளிவான காரணங்கள் அறியப் படவில்லை. இருப்பினும், உடல் பருமன், மது அருந்துவது, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் சேரும்போது பாதிப்பு மிக விரைவில் ஏற்படலாம்.

தீர்வு 

தற்போதைக்கு ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு என்று எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால், உடல் எடையைக் கட்டுக்குள்வைத்தல் (அதிக எடை அல்லது உடல் பருமனானவர்கள்), ஆரோக்கியமான சமச்சீரான டயட்டைப் பின்பற்றுவது, அதிகப்படியான உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்வது, மதுவைத் தவிர்ப்பது, தேவையற்ற மருந்து, மாத்திரைகள் எடுப்பதை நிறுத்துவது என சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், மிகப் பெரிய மாற்றத்தைக் காணலாம். இதன் மூலம், இதய நோய் உள்ளிட்ட பல பிரச்னைகளையும் தவிர்க்க முடியும்.

- தொடரும்

ஸ்வீட்டர்

நாம் எடுக்கும் உணவில் உள்ள கலோரிகளுக்கு நாம்தான் பொறுப்பு. எனவே, உணவில் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்தாலேபோதும், ஆரோக்கியம் மேம்படும்.

டயாபடீஸ் டவுட்

“மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்று சொல்லக் கேள்விபட்டிருக்கிறேன். நிறையப் பேர் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். அப்படி என்றால் என்ன டாக்டர்?”

ஆர்.அருணாச்சலம், சென்னை.

ஸ்வீட் எஸ்கேப் - 15

“நாம் இப்போது மெட்டபாலிக் சிண்ட்ரோம் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மருத்துவத்துறையில், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் என்று ஐந்து மிக முக்கியப் பிரச்னைகளைப் பற்றிச் சொல்வோம். ஒருவருக்கு, இதில் மூன்று பிரச்னைகள் இருந்தால், அதை மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்கிறோம். அந்தப் பிரச்னைகள்...

வயிற்றுப் பகுதி பருமனாக இருத்தல் (ஆப்பிள் ஷேப் என்றும் சொல்லலாம்.) இவர்களுக்கு வயிறு, இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகமாகப் படியும்.

உயர் ரத்த அழுத்தம்: 130/80 மி.கி/டெ.லி என்ற அளவுக்கு மேல் இருத்தல்.

சாப்பிடுவதற்கு முன்பு செய்யப்பட்ட ரத்தப் பரிசோதனையில் சர்க்கரை அளவு 100 மி.கி/டெ.லி-க்கு மேல் இருத்தல்.

ரத்தத்தில் டிரைகிளசரைட் என்ற கெட்ட கொழுப்பு 150 மி.கி-க்கு மேல் இருத்தல்.

ஹெச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு 45 மி.கி-க்கு கீழ் இருத்தல்.

மெட்டபாலிக் சிண்ட்ரோம் காரணமாக ஃபேட்டிலிவர், இன்சுலின் ரெசிஸ்டென்ஸ், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், இதயநோய்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.

மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான துல்லியமான காரணங்களைக் கண்டறிய ஆய்வுகள் நடந்துவருகின்றன. இருப்பினும், நம் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி அற்ற வாழ்க்கைமுறை உள்ளிட்டவை காரணமாக ஏற்படுகிறது என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நம் உணவில் மிகப்பெரிய மாறுதல்கள் நடந்துவிட்டது. உடல் உழைப்பும் குறைந்துவிட்டது. இதனால், உடலில் சேரும் கலோரி எரிக்கப்படாமல் சேமிக்கப்படுகிறது.

இன்றைக்குப் பலரும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு, மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, போதுமான அளவு உடல் உழைப்பை அதிகரிப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வது, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதுதான் சிறந்த வழி.”