Published:Updated:

நோய் நாடி..! - பதறவைக்கும் இதய நோய்!

நோய் நாடி..! - பதறவைக்கும்  இதய நோய்!
பிரீமியம் ஸ்டோரி
நோய் நாடி..! - பதறவைக்கும் இதய நோய்!

ஏன் வருகிறது... என்ன தீர்வு? - கம்ப்ளீட் மெடிக்கல் கைடு

நோய் நாடி..! - பதறவைக்கும் இதய நோய்!

ஏன் வருகிறது... என்ன தீர்வு? - கம்ப்ளீட் மெடிக்கல் கைடு

Published:Updated:
நோய் நாடி..! - பதறவைக்கும்  இதய நோய்!
பிரீமியம் ஸ்டோரி
நோய் நாடி..! - பதறவைக்கும் இதய நோய்!
நோய் நாடி..! - பதறவைக்கும்  இதய நோய்!

‘‘உலகின் நம்பர் 1 உயிர்க்கொல்லியாக இதய நோய்கள் உருவெடுத்துள்ளன. இவற்றால் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள்.

ஆனால், நாம் விழிப்பு உணர்வுடன் செயல்படும்போது, இதய நோய்களால் ஏற்படக்கூடிய மரணங்களைக் குறைக்க முடியும், தவிர்க்க முடியும்’’ என்ற முன்னுரையோடு பேசத் தொடங்கினார், சென்னை - ஸ்டான்லி மருத்துவமனையின் இதய சிறப்பு மருத்துவர் கண்ணன். நோய்களைப் பற்றி தொடர்ந்து வெளிச்சம் தந்துவரும் ‘நோய் நாடி’ தொடரில், இதயம் குறித்த பல விஷயங்களை இங்கே விளக்கமாகப் பகிர்கிறார் டாக்டர் கண்ணன்...

நோய் நாடி..! - பதறவைக்கும்  இதய நோய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதயத்தின் பணி்!

மனிதன் உயிர்வாழ மிகவும் அவசியமான உறுப்பு இதயம். தசைகள், நரம்புகள், ரத்தக் குழாய்களாலான இதயத்தின் எடை, பொதுவாக 250 கிராம் இருக்கும். இது ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அவற்றின்  தேவைக்கேற்ப அனுப்பும். குறிப்பாக, இதயத்தின் வலது அறையில் இருந்து கெட்ட ரத்தத்தை நுரையீரல் வழியாக அனுப்பி, இடது அறையில் நல்ல ரத்தமாக மாற்றி உடல் உறுப்புகளுக்கு அனுப்பும் மிக முக்கியமான வேலையை செய்கிறது. ஆனால் இத்தகைய முக்கியத்தும் வாய்ந்த இந்த இதயத்தைப் பாதுகாப்பது பற்றிய விழிப்பு உணர்வு பொதுமக்களிடையே மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதன் விளைவாக இந்தியாவில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 24 லட்சம் பேர் இதய நோய்களால் உயிர் இழக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

பிரச்னைகள் பலவிதம்..!

இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்பவை...

 * இதய வால்வு பிரச்னைகள்

 * இதய தசை வியாதிகள்

 * பிறவியில் வரக்கூடிய வியாதிகள் (இதயத்தில் ஓட்டை, அடைப்பு, இதய அறைகள் இல்லாமல் இருப்பது)

 * இதயத்துக்கு மின்சாரம் செல்லும் நரம்பில் பிரச்னைகள்

 * ரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட வியாதிகள்

  * இதயத்தின் வெளி உறையான பெரிகார்டியம் (Pericardium) பாதிக்கப்படுவது

  *இதயப் புற்றுநோய்

  * மாரடைப்பு (Heart Attack)

குறிப்பு: இவற்றில் இன்றைக்கு மிக அதிகமானோர் ரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட வியாதிகளால்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காரணங்கள் என்னென்ன?

சொந்தத்தில் திருமணம் செய்த தம்பதிகளின் குழந்தைகளுக்கு இதயம் சார்ந்த பிறவிக் குறைபாடுகள் வர அதிக வாய்ப்புள்ளது. தவிர, இதயப் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாழ்க்கை முறைக் காரணங்கள் பின்வருமாறு...

  * மனஅழுத்தம்

  * ரத்த அழுத்தம்

  * சர்க்கரை நோய்

  * புகைபிடிப்பது

  * உடல்பருமன்

  * உடற்பயிற்சியின்மை

  * அதிக கொழுப்பு உட்கொள்வது

மேலும், தனியாக `டயட்டரி கொலஸ்ட்ரால்' (Dietry Cholesterol) எடுத்துக்கொள் பவர்களும், பரம்பரையில் இதயப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் (டயட்டரி கொலஸ்ட்ரால்' என்பது நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கும் கொலஸ்ட்ரால்).

இதயநோய்க்கான அறிகுறிகள் (இதில் மாரடைப்பும் அடங்கும்)

  * நடுமார்புப் பகுதியில் அழுத்துதல் போன்ற வலி

  * கைகள் உடைந்த மாதிரி மிகுதியான வலி

  * அதிகமான வியர்வை

  * மூச்சு வாங்குதல்

  * அடிக்கடி மயக்கம்

  * உடல் சோர்வு

  * அதிக ஏப்பம்

குறிப்பு: சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும்பாலும் மாரடைப்பின் அறிகுறிகள் வெளியே தெரியாது என்பதால், சுதாரிக்கக்கூட கால அவகாசமின்றி உயிரிழப்பை ஏற்படுத்திவிடக் கூடும். எனவே, இவர்கள் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சோதனை முறைகள்

1. இதய அடிப்படை சோதனைகள்: `ஈசிஜி' (ECG) போன்ற அடிப்படை சோதனைகள் மூலமாக இதயத் துடிப்பின் வித்தியாசம் உள்ளிட்ட பல விஷயங்களை அறியலாம்.

2. எக்கோகார்டியோகிராம் சோதனை (Echocardiogram test): இதய வால்வு, இதயத்தின் இயக்கம், பிறவிக் குறைபாடுகள் உள்ளிட்ட பல விஷயங்களை அறியவைக்கும்.

3. டிரெட்மில் சோதனை (Treadmill Test): இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் உள்ள அடைப்பு, ரத்தம் சீராகச் செல்வதில் சிக்கல் போன்றவற்றை இச்சோதனை முறை மூலம் கண்டறியலாம்.

4. கொரோனரி ஆஞ்சியோகிராஃபி சோதனை (Coronary Angiography Test):  ரத்தக்குழாயில் உள்ள அடைப்பை 100% மிகத் துல்லியமாக, ரத்தக்குழாய் வழியாக டியூப் செலுத்திக் கண்டறியும் சோதனை இது.

5. ஹோல்ட்டர் சோதனை (Holter test): 24 மணி நேரத்தில் இதயத் துடிப்பில் ஏற்படும் வித்தியாசத்தைக் கண்டறிய இச்சோதனை முறை பயன்படுகிறது.

சிகிச்சை முறைகள்!

மருத்துவ ரீதியான சிகிச்சை

ரத்தக்குழாய் அடைப்பு, இதயத் துடிப்பில் வித்தியாசம், ரத்தம் சீராகச் செல்ல, ரத்தம் உறையாமல் இருக்க, வலி ஏற்படாமல் இருக்க, இதய இயக்கம் சீராக இருக்க... என வியாதிக்கு ஏற்ப மருந்து, மாத்திரைகள் வழங்கி சரிசெய்யும் சிகிச்சை இது.

கருவி மூலமாக சிகிச்சை

சிறிய துவாரம் உள்ள டியூப் மூலமாக, கை அல்லது கால்களில் உள்ள ரத்தக் குழாய் வழியாக இதயத்தின் ரத்தக்குழாய் அடைப்பை பலூன் மூலம் அகற்றி, `ஸ்டென்ட்' என்னும் கருவியைப் பொருத்தும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி (Angioplasty) தொடங்கி, பிரச்னைக்கு ஏற்ப கருவிகள் மூலமாக சிகிச்சை வழங்கப்படும் முறை இது.

 அறுவை சிகிச்சை

இதயநோய்களை சரிசெய்வது தொடங்கி, இதய மாற்று அறுவை சிகிச்சை வரை அறுவை சிகிச்சை மூலமாக இதயப் பிரச்னைகள் பலவற்றையும் சரிசெய்யலாம்.

இதய நோய்கள் வராமல் இருக்க..!

*  ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளவும். இதனால் இதயப் பிரச்னைகளை வருவதற்கு முன்பே ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுத்துவிடலாம். 30 வயதுக்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது.

*  புகையிலையில் உள்ள ரசாயனங்கள் இதயம் மற்றும் ரத்தக்குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் ரத்தக்குழாய்கள் குறுகலாகி, மாரடைப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே, புகைப்பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

*  சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம், உடற்பருமன் ஆகியவை இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. அதனால் மருத்துவ ஆலோசனையோடு  இவற்றைக் கட்டுப்படுத்துவதும், தொடர் சிகிச்சை பெறுவதும் முக்கியம்.

*  ஒருவர் தன் உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருக் கிறாரா என்பதைக் கண்டறியும் பிஎம்ஐ (BMI – Body Mass Index) அளவானது 25-க்கு அதிகமாக இருந்து, மேலும் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். எனவே, `பிஎம்ஐ' சரியான அளவில் வைத்திருக்கப்பட வேண்டியது அவசியம்.

*  தினமும் 30 - 45 நிமிடங்கள் உடற்பயிற்சி தேவை. ஜிம் சென்று வொர்க் அவுட் செய்ய வேண்டும் என்பது இல்லை. குழந்தைகளுடன் விளையாடுவது தொடங்கி வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் என உடலுக்கு இயக்கங்கள் கொடுக்கலாம். நடைப்பயிற்சி, நீச்சல் போன்றவை இதயத்தை பலப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

*  ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். இல்லாவிட்டால் உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன், சர்க்கரை நோய், மாரடைப்பு, மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு அதுவே வாசலாக அமையும்.

*  நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது அது ரத்தத்தில் சர்க்கரை கலக்கும் வேகத்தைத் தாமதப்படுத்து வதோடு கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்தும். ஒரு நாளைக்கு 25 - 35 கிராம் நார்ச்சத்து ஒருவருக்குத் தேவைப்படும்.

*  உணவில் உப்பு, கொழுப்பு, சர்க்கரை அளவைக் குறைக்கவும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், சில மீன் வகைகள் இதயத்தைப் பாதுகாக்கும். பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பாம் ஆயில், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்வது நல்லது.

*  வயிற்றைச் சுற்றி அதிகரிக்கும் கொழுப்பு, இதயத்துக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால், இதய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படும். எனவே, தொப்பையைக் கரைக்கும் பயிற்சி களைச் செய்து, வயிற்றுப்பகுதியை ஃபிட்டாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

``மொத்தத்தில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, தொடர் உடற்பரிசோதனைகள், இடைவிடாத சிகிச்சை போன்றவை இதயம் காக்கும் கவசங்கள்’’ என்று நிறைவு செய்தார் டாக்டர் கண்ணன்.

 சா.வடிவரசு

நோய் நாடி..! - பதறவைக்கும்  இதய நோய்!

இதயத்துக்கு இதமான பழங்கள்!

உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை பழங்களுக்கு உண்டு. ஆப்பிள், இதயத்துக்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தரவல்லது. திராட்சை, அன்னாசி, சீதாப்பழம் போன்றவையும் இதயத்தைப் பலப்படுத்தக்கூடியவை. நெல்லிக்கனி இதயத்துக்கு மிகுந்த பலனைத் தரவல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆரஞ்சுப் பழம், இதயம், மார்புநோய் போன்றவற்றுக்கு சிறந்த டானிக். உலர் திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் இதயத்தைப் பாதுகாக்கும். மார்பில் வலியும், மரத்துப்போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம். அது வலியைக் குறைக்கும். இதய நோயாளிகள் தினமும் திராட்சைச் சாறு பருகுவது, நோயைக் குணப்படுத்த உதவும்.

நேரம் மிகவும் முக்கியம்!

ரத்தக் குழாய் அடைப்பால் மாரடைப்பு ஏற்படும்போது, 90 நிமிடத்துக்குள் மாத்திரை மூலமாகவோ ஆஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சை மூலமாகவோ அடைப்பை சீர்செய்ய வேண்டும். இல்லையெனில் உயிரிழப்புவரை அழைத்துச் செல்லக்கூடும் என்பதால், மாரடைப்பால் பாதிக்கப்படும்போது சில நொடிகள்கூட வீணாக்காமல் சிகிச்சைக்கு விரைவது உயிர்காக்கும் நடவடிக்கையாக அமையும்.

நோய் நாடி..! - பதறவைக்கும்  இதய நோய்!

லப்டப்... டிப்ஸ்!

நல்லது...

*  பால், சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீ, இஞ்சி டீ மற்றும் தினமும் மூன்று, நான்கு பாதாம், வால்நட் சாப்பிடுவது.

*  உணவில் கீரை, காய், கனிகள் அதிகம் சேர்ப்பது. குறிப்பாக, சிவப்பு நிறக் காய்கறிகள் மற்றும் பழங்களான ஆப்பிள், பீட்ரூட், தக்காளி, மாதுளை, தர்பூசணி.

*  தினமும் 40 நிமிடங்கள் என வாரத்துக்கு ஐந்து நாட்கள் உடற்பயிற்சி.

*  மனஇறுக்கம் தகர்க்க நகைச்சுவைப் படங்கள், நிகழ்ச்சிகள் பார்ப்பது, விருப்பமான செயல்களில் ஈடுபடுவது.

*  தன்னம்பிக்கை புத்தங்கள் வாசிப்பது, தன்னம்பிக்கை தரும் மனப் பயிற்சிகளைச் செய்வது.

கெட்டது...

*  புகைப்பதால் உண்டாகும் நச்சு இதயம், நுரையீரலைப் பாதித்து நோய்களை உண்டாக்கும்.

*  கோபம், சோகம், பதற்றம் போன்றவை உடலில் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தி இதயத்தைப் பாதிக்கும்.

*  கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதால் உடல் பருமனாகும். அதனால் இதயம் தொடர்பான பிரச்னைகள் வரக்கூடும்.

*  மாசடைந்த சூழலில் வசிப்பது சருமம், கூந்தல், நுரையீரல், இதயம், சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தும். சத்தம் மிகுந்த சூழல், எரிச்சல் மனநிலையை உருவாக்கி, உடல் மற்றும் மனதை பலவீனமாக்கும்.

*  சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்காமல் இருப்பது எந்நேரத்திலும் இதயப் பிரச்னைக்கு வழிவகுத்து உயிரிழப்புவரை அழைத்துச் செல்லக்கூடும்.

நோய் நாடி..! - பதறவைக்கும்  இதய நோய்!

குழந்தைகளுக்கும் இதயப் பிரச்னை!

கொ
லஸ்ட்ரால், சர்க்கரை, உடற்பருமன் உள்ளிட்ட காரணங்களால் ஆண்டுதோறும் இதயநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதில் நகர்ப்புறங்களில் ஆண்டுக்கு 10% - 12% பேரும், கிராமப்புறங்களில் (மாறிவரும் நகரங்கள் என்றுதான் கிராமங்களைச் சொல்லவேண்டும்) 7% - 10% பேரும் இதயநோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்கெல்லாம் மிக முக்கியக் காரணங்கள்... ஃபாஸ்ட் ஃபுட், பரோட்டா, நொறுக்குத் தீனிகள், எண்ணெய் உணவுகள் போன்ற உணவுப் பழக்கவழக்க மாற்றங்களே. மேலும், உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய விளையாட்டு, நல்ல உணவுப்பழக்கம் எல்லாம் இன்றைய தலைமுறைக்குக் கிடைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வருவதால், பள்ளி மாணவர்களுக்கே உடற்பருமன் தொடங்கி இதயப் பிரச்னைகள்வரை எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளன.

எனவே, இவற்றை எல்லாம் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு, குழந்தைகளை ஆரோக்கியப் பாதையில் கூட்டிச்செல்ல வேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism