Published:Updated:

அந்தப்புரம் - 40

அந்தப்புரம் - 40
பிரீமியம் ஸ்டோரி
அந்தப்புரம் - 40

அந்தப்புரம் - 40

அந்தப்புரம் - 40

அந்தப்புரம் - 40

Published:Updated:
அந்தப்புரம் - 40
பிரீமியம் ஸ்டோரி
அந்தப்புரம் - 40
அந்தப்புரம் - 40

முதல் இரவு அறைக்குள் பல்வேறு எண்ணங்கள் சேர்ந்து ஆனந்தின் பதற்றத்தை அதிகரித்திருக்க... அதைவிட அதிகப் பதற்றம், படபடப்பில் அமலாவின் மனம் இருந்தது. பிறந்த வீட்டைவிட்டு, சொந்த ஊரைவிட்டு, அம்மா, அப்பா, சொந்தங்கள் அனைவரையும்விட்டு, இதுவரை பழக்கத்தில் இருந்த அனைத்தையும்விட்டு புதிய இடத்தில், புதிய நபருடன் இருப்பது அவளது மனதுக்குள் பெரும் புயலை ஏற்படுத்தியது. அனைத்தையும்விட, முதல் இரவில், கணவன் தன்னை முழுவதும் ஆட்கொள்ள இருப்பது அவளுக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குக் காரணம், சமீபத்தில் திருமணமான அவளது தோழிகள் அனைவரும் தங்கள் முதலிரவில் நடந்தவை பற்றி அவளிடம் சொல்லியதுதான். முதலிரவில் கட்டாயம் கணவன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவான், தாங்க முடியாத வலி ஏற்படும், ரத்தப்போக்கு இருக்கும் என்றெல்லாம் சொல்லியது அவள் மனதில் கிலியை ஏற்படுத்தியிருந்தது.

இனிப்புகள், மல்லிகை மணம், படுக்கையில் ரோஜா இதழ்கள் தூவல் என்று முதலிரவு அறை சினிமா காட்சி போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனந்தின் பார்வை, அமலாவின் மீது விழுந்தது. சந்தனநிறப் பட்டுச் சேலையில் தேவதை போல இருந்தாள். மெதுவாக அவளை நோக்கி சில அடிகள் எடுத்துவைத்தான். ஆனந்த் வருவதை உணர்ந்த அமலாவுக்கு மேலும் படபடப்பு அதிகரித்தது. அதை வெளிக்காட்டாமல் இருக்க முயற்சித்தாள். அமலாவின் பின்னால் வந்துநின்ற ஆனந்துக்கு படபடப்பு காரணமாக மூச்சை வேகமாக விட்டான். அது, அவளது முதுகில் பட்டது. திடீரென்று அவனது பிறப்பு உறுப்பில் மாறுதல்கள் ஏற்படுவதை உணர்ந்தான். அதே நேரத்தில், இன்றைக்கு இதை எப்படிச் சமாளிக்கப்போகிறோமோ என்ற நடுக்கமும் ஏற்பட்டது. ஆனந்தின் மூச்சுக்காற்று முதுகில் படவே, அமலா திரும்பினாள். இருவரும் ஒருவரை ஒருவர் மிக நெருக்கமாகப் பார்த்துக்கொண்டனர்.

ஆனந்த், தைரியத்தை வரவைத்துக்கொண்டு அமலாவின் கரம் பற்றி அவளைப் படுக்கையில் அமரச் செய்தான். அமலாவுக்கோ இதயத்துடிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது. முதலிரவில் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என்றால், அமலா தன்னை தவறாக நினைத்துக்கொள்வாளே என்ற எண்ணத்தில், அவளைக் கட்டியணைத்து ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்தான். திடீரென்று ஆனந்த் ஆடைகளை அகற்ற ஆரம்பிக்கவே, அதிர்ச்சி அடைந்தாலும் அவள் தடுக்கப் பயந்தாள். அவளின் பயத்தைப் பற்றி கவலைப்படாமல் அவளுடன் பலவந்தமாக உறவுகொள்ள முயன்றான். அமலா, பயம் காரணமாகக் கால்களை இறுக்கிக்கொண்டாள். அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

எப்படிச் செய்வது, என்பதுகூடத் தெரியாமல் ஆனந்த் மேற்கொண்ட முயற்சி, தோல்வியில் முடிந்தது. அவனது பதற்றம், தோல்வி எல்லாம் சேர்ந்து அவனுக்குள் மாற்றங்கள் ஏற்படுத்தியிருந்தன. அவனது ஆணுறுப்பு, தளரத் தொடங்கியது. அப்போதுதான் அமலாவின் அழுகையை அவன் உணர்ந்தான். என்ன செய்வது என்று தெரியாமல் அவளைவிட்டு விலகினான். அவளிடம் மன்னிப்புக் கேட்டான். ஆனால், அமலாவோ எழுந்து பெட்ஷீட்டைப் போர்த்திக்கொண்டு அறையின் மூலையில், குத்துக்கால் இட்டு அமர்ந்துகொண்டாள். தாங்க முடியாத வலி, பயம், பதற்றம் என அனைத்தும் சேர்ந்து அவள் கண்களில் தாரைதாரையாகக் நீர் கொட்டியது. மெள்ள அவளை அணைத்து ஆறுதலாய் பேச ஆரம்பித்தான். அன்பும் ஆதரவுமான பேச்சில் அமலா ஒரு நெருக்கத்தை உணர்ந்தாள். மிக மெதுவாக இரு மனங்களும் ஒரு வாழ்நாள் உறவுக்குத் தயாராகின.

அந்தப்புரம் - 40

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏன்? எதற்கு? எப்படி?

தங்கள் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று சொல்லி சொல்லி வளர்க்கும் பெற்றோர்கள், திருமணம், தாம்பத்தியம் போன்ற விஷயங்களைச் சொல்லித்தருவது இல்லை. அதை அவர்களாகவே தெரிந்துகொள்வார்கள் என்று விட்டுவிடுகின்றனர்.

இதன்விளைவு, நன்கு படித்த, ஐ.டி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்து பல நிறுவனங்களுக்கு புரொகிராம் எழுதியவர்களுக்குக்கூட, தங்கள் தாம்பத்திய வாழ்வுக்கு புரொகிராம் எழுதத் தெரிவது இல்லை. அனைத்துக்கும் மேலாக, இவர்கள் உணர்வுப்பூர்வமற்ற, மிகைப்படுத்தப்பட்ட சில படங்களின் காட்சிகள் மற்றும் ஆபாச இணையதளங்கள் மூலம் சில விவரங்களைப் பெறுகின்றனர். ஆபாச இணையதளங்களில் உள்ள படங்கள், வீடியோக்களில் வரும் காட்சிகள் இயல்பு வாழ்க்கைக்குப் பொருந்தாதவை. இவை, தேர்ந்த நடிகர், நடிகைகளைக்கொண்டு மிகைப்படுத்தப்பட்டு எடுக்கப்படுகின்றன. 

இதை எல்லாம் பார்த்து வளர்ந்த ஒரு ஆண்உண்மையான முதலிரவுக்குள் முதன்முறையாக ஒரு  பெண்ணை அணுகுகிறான் என வைத்துக்கொள்வோம்.  என்ன நிகழும்? நம் இந்தியப் பெண்கள் மிகவும் வெட்கம், நாணம் மிக்கவர்கள். ஆடை அவிழ்ப்புக்கு எல்லாம் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். இதற்காக அவன் தட்டுத்தடுமாறி, என்ன செய்வது எனத் தெரியாமல் பலவந்தப்படுத்துகிறான்.

பெண்ணின் நிலையோ மிகவும் குழப்பமானதாக இருக்கிறது. அவள் தன்னம்பிக்கை குறைந்தவளாக இருக்கிறாள். அந்த இரவை மிகவும் அழகானதாக, மிகவும் இனிதானதாக கணவன் மாற்றுவான் என்ற நம்பிக்கையுடன் உள்ளே நுழைந்தாலும் முதன்முறை தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய வலியை நினைத்து அஞ்சுகிறாள். எழுச்சியடைந்த ஆண் உறுப்பைக் காணும்போது, ‘இது கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று அவள் மனம் பதைபதைத்து உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும், கணவன் அவளது உடையை அகற்ற முயல்கிறான். கணவனாக இருந்தாலும் வேறொருவர் முன் நிர்வாணம் ஆவது ஒருவித அசெளகர்யமாய் இருக்கிறது. இதனால், வானவெளியில் பறக்கும் கனவுகளோடு வந்தவளுக்குத் தரையில் முட்டிமோதிய அனுபவம் ஏற்படுகிறது.

முதலிரவு பற்றிய தவறான எண்ணங்கள் மாற வேண்டும். முதலிரவு அறை, அன்பு, நெருக்கம், அந்நியோன்யம், இன்பம், நம்பிக்கை போன்றவற்றுக்கு அடிகோள வேண்டுமே தவிர, தன்னுடைய ஆண்மையை, பெண்மையை நிரூபிக்கும் ஆய்வுக்கூடமாக அதை மாற்றக்கூடாது.

டவுட் கார்னர்

“தாம்பத்திய உறவு எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் டாக்டர்?”

கே.ஆனந்தராஜ், கோவை.

“நல்லவேளை ஐ.எஸ்.ஓ (இந்தியன் ஸ்டாண்டர்டு ஆர்கனைசேஷன்) எந்த ஒரு ஸ்டாண்டர்டு கால அளவையும் தாம்பத்தியத்துக்கு நிர்ணயிக்கவில்லை. தாம்பத்திய கால அளவு என்பது தம்பதிகளுக்குத் தம்பதி மாறுபடும். அதேபோல ஒரே தம்பதிகளுக்குள்கூட இடம், பொருள், ஏவல் என்று வெளிப்புற சூழலைப் பொறுத்துக் கால அளவு மாறுபடும்.”

“எனக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. ஆனால், முதலிரவுக்கு நல்ல நேரம் இல்லை என்று, மூன்று நாட்கள் கழித்துத் தேதி குறித்திருக்கிறார்கள். எனக்கு செக்ஸ் அனுபவம் இல்லை. என் மனைவியை எப்படி அணுக வேண்டும், செய்ய வேண்டியவை என்ன என்பது பற்றி சொன்னால் நன்றாக இருக்கும்.”

பெயர் வெளியிட விரும்பாத வாசகர், நாமக்கல்.

“என்ன செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்குள் சிக்கிக்கொள்வதில் இருந்து முதலில் வெளிப்படுங்கள். இப்படி, மற்றவர்கள் சொல் கேட்டுத்தான் பலரும் சிக்கிக்கொள்கிறார்கள். நண்பர்கள், மற்றவர்கள் என்ன சொன்னார்கள், செக்ஸ் தளங்களில் என்ன செய்தார்கள் என்று நினைவுகூர்ந்து அவற்றைச் செய்ய முயற்சிக்கின்றனர். இதனால், தங்கள் அருகில் மிகவும் பயத்துடன், எந்த உதவியும் அற்ற நிலையில் அமர்ந்திருக்கும் மனைவியைப் பற்றி நினைப்பது இல்லை. எனவே, உங்கள் மனைவியைப் பற்றி நினையுங்கள். தாம்பத்தியம் இயற்கையானமுறையில், இருவருக்கும் நடைபெற வேண்டும். இந்த உலகில் எல்லாம் தெரிந்துகொண்டு பிறந்தவர்கள் யாரும் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் வழியிலேயே கற்கிறோம். எனவே, முதலிரவு அறையில் இதை நினைவுகூர்ந்து நடந்துகொள்ளுங்கள்.”

“தாம்பத்தியத்தின்போது ஆண் உறுப்பைச் சரியாக நுழைத்திருப்பதை எப்படி உறுதிசெய்வது?”

பெயர் வெளியிட விரும்பாத வாசகர், சென்னை.

உங்கள் மனைவியின் உதவியையே நாடுங்கள். உடற்கூறு அடிப்படையில், பெண்களுக்கு சிறுநீர்ப்பாதை, வெஜைனா மற்றும் ஆசனவாய் என மூன்று திறப்புக்கள் உள்ளன. சிறுநீர்ப்பாதை என்பது மிகவும் சிறியது. சுண்டு விரல்கூட உள்ளே நுழைய முடியாது. ஆசனவாய் என்பது மிகவும் கீழே இருக்கிறது. இன்னொரு திறப்பு வெஜைனா மட்டும்தான். பெண்களுக்கு, தங்கள் உடற்கூறு பற்றி நன்கு தெரியும். எனவே, ஆண் உறுப்பை எங்கே நுழைப்பது என்று அவரிடம் ஆலோசனை கேட்டுச் செய்யுங்கள். இதன்மூலம், மிகவும் எளிமையாக ஆணுறுப்பை உள்ளே நுழைக்கலாம்.”

“தாம்பத்தியத்தின்போது இருவரும் ஒரே நேரத்தில் உச்சத்தை அடைய வேண்டியது அவசியமா?”

ஜெயராணி, திருச்சி.

“கட்டாயம் இல்லை. மிகமிக அரிதாகத்தான் தம்பதிகள் இருவருக்கும் ஒரே நேரத்தில் உச்சம் ஏற்படும். பொதுவாக, முதலில் ஒருவருக்கும், அதைத் தொடர்ந்து சற்று தாமதமாக மற்றொருவருக்கும் உச்சம் ஏற்படும். பெண்கள் முதலில் உச்சம் அடைவது நல்லது. ஏனெனில், ஆண் முதலில் உச்சம் அடைந்துவிட்டான் என்றால், அவன் எழுச்சி குறைந்துவிடும், மீண்டும் எழுச்சி பெறுவது சிரமம். ஒரு முறை எழுச்சி அடைவதற்கும், அடுத்த முறை எழுச்சி அடைவதற்கும் இடையே குறிப்பிட்ட கால இடைவெளி இருக்கிறது.”

“எப்போது எல்லாம் தாம்பத்திய உறவு மேற்கொள்கிறோமோ, அப்போது எல்லாம் என் கணவர் “நீ உச்சம் அடைந்தாயா?” என்று கேட்கிறார். தாம்பத்தியத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், உச்சம் அடைந்தது பற்றியெல்லாம் எனக்குத் தெரியவில்லை. நான் உச்சம் அடைந்தேன் என்பதை எப்படி உணர்வது?”

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

“சிக்கலான கேள்விகேட்டு என்னை மாட்டிவிட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில், இதை விவரிக்க முடியாது. இது எப்படி என்றால் கடவுள் எப்படி இருப்பார் என்று விவரித்துச் சொல்வதுபோலத்தான். பொதுவாக, போதுமான அளவு மகிழ்ச்சி, சந்தோஷம் கிடைத்தது என்று நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் உச்சம் அடைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். தாம்பத்தியத்தில் உங்கள் தேவை பூர்த்தியாகவில்லை, இன்னும் கொஞ்ச நேரம் கணவர் செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றினால், நீங்கள் உச்சம் அடையவில்லை என்று அர்த்தம்.”

“என் மனைவியை எப்படித் திருப்திப்படுத்துவது? மகிழ்ச்சியான தாம்பத்தியத்துக்கு என்ன செய்ய வேண்டும்?”

பெயர் வெளியிட விரும்பாத வாசகர், மதுரை.

“ஓட்டப்பந்தயம், விளையாட்டுப் போட்டி போல தாம்பத்தியத்தின் செயல்திறனை மதிப்பிட முடியாது. தாம்பத்தியத்தில் சிறப்பாகச் செயல்பட, உங்கள் ஜோடியின் தேவை, உணர்வுகளைப் புரிந்திருக்க வேண்டும். செக்ஸ் டெக்னிக் பற்றி சொல்லித்தர ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இந்த படித்த அறிவு, அனுபவ அறிவு எதுவும் மகிழ்ச்சியை அளித்துவிடாது. உங்கள் ஜோடியை நன்கு புரிந்து, அவர் மீது அக்கறையுடன் நடந்துகொள்ளும்போதுதான் மகிழ்ச்சி பெருகும். இதற்கு, சில வழிகாட்டுதல்கள் உள்ளன.

1. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

2. இருவருக்குமான இணக்கமான சூழ்நிலை இருக்க வேண்டும்.

3. முதன் முறையே அதிகப்படியான எதிர்பார்ப்பை, அதீத முயற்சியை மேற்கொள்ளாதீர்கள்.  ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள், தனிச் சிறப்பானவர்கள். எனவே, அவர்கள் போக்கில் சென்று அவர்களின் அன்பைப் பெறுங்கள்.

4. தானாக வரும் வரை சற்று காத்திருங்கள். வரவில்லை எனில், சகஜமான நிலைக்கு கொண்டுசென்று நீங்களாக எடுக்க முயற்சியுங்கள்.

5. உணர்வுக்கு மரியாதை அளிப்பதும், பொறுமை காப்பதும் மிகப்பெரிய பலனைத் தரும்.

பொதுவாக பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணங்களில் பெண்கள் மிகவும் இறுக்கமாகவும், அதிக மனக் குழப்பத்துடனும் இருப்பர். முதலில் அவர்களது பயம், பதற்றம், சந்தேகங்களைப் போக்க வேண்டும். உங்கள் துணைக்கு ஏற்ற, இனிய, இதமான, பாதுகாப்பான சூழலை உருவாக்குங்கள். இதன்மூலம் உங்கள் ஜோடிக்கு நம்பிக்கை பிறக்கும். நம்பிக்கை வந்தாலே பயம் மறைந்து ஒத்துழைக்க ஆரம்பிப்பார். இது, எந்தத் தொந்தரவையும் ஏற்படுத்தாத அமைதியான வழி. இதற்காக டைம், டாக், டிரஸ்ட், டச் (நேரம், பேச்சு, நம்பிக்கை, தொடுதல்) என்ற நான்கு டி-க்களை பரிந்துரைக்கின்றனர். உங்கள் துணையுடன் பேச நேரத்தை ஏற்படுத்துங்கள். இதன் மூலம் அவர் நம்பிக்கையைப் பெறுங்கள். அப்போதுதான் தன்னைத் தொட அவர் அனுமதிப்பார்.”

- முற்றும்

தொகுப்பு: தமிழ்மகன், பா.பிரவீன் குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism