பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

கலைச்செல்வி,பொள்ளாச்சி.

``எனக்கு 33 வயது ஆகிறது. ‘ஃபிளாட்ஃபுட்’ எனப்படும். தட்டையான பாதங்கள் உள்ளன. கால் மற்றும் மூட்டுக்களில் அடிக்கடி வலி ஏற்படுகிறது. ஃபிளாட்ஃபுட் இருப்பதால்தான் இவ்வாறு வலி ஏற்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா?’’

மொ.அலெக்ஸ்பாண்டியன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர், நாமக்கல்.

கன்சல்ட்டிங் ரூம்``பாதங்கள் தட்டையாக இல்லாமல் சற்று குழியாக, வளைந்து இருந்தால்தான் நடக்கும்போதும்  நிற்கும்போதும் உடல் எடையைத் தாங்கிக்கொள்ள வசதியாக இருக்கும். பாதங்கள் வளைந்து இருக்கும்போது, கால்களுக்கும் நிலத்துக்குமான இடைவெளியில் காற்று நிரம்பி இருக்கும். இதனால், பாதங்களில் உள்ள சவ்வுகளின் மேல், முழு அழுத்தம் இறங்காமல் பாதுகாக்கப்படும். தட்டையான பாதம் உள்ளவர்களுக்கு இவ்வாறு காற்று நிரம்ப இடம் இல்லை என்பதால், உடலின் மொத்த எடையையும் பாதமே தாங்க நேரிடுகிறது. இதனால், பாதங்களுக்கு அழுத்தம் அதிகரித்து கால்வலி ஏற்படுகிறது.

நம்  உடல் எடையைத் தாங்குவது மூட்டுக்கள்தான் என்பதால், மூட்டுவலியும் ஏற்படுகிறது. ஃபிளாட்ஃபுட் பிரச்னை இருப்பவர்கள் பருமனாக இருந்தாலும் மெலிந்து இருந்தாலும் கால்வலி ஏற்படவே செய்யும். உடற்பயிற்சி செய்தாலும் வலி குறையாது. மாறாக, மேலும் வலி அதிகரிக்கவே செய்யும். ஆகவே, கால்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் வேலைகளைச் செய்யக் கூடாது. போதுமான ஓய்வு எடுக்க வேண்டும். இதனால், கால் மற்றும் மூட்டுவலி ஏற்படாமல் ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஃபிளாட்ஃபுட் பிரச்னை   உள்ளவர்களுக்கு எனப் பிரத்யேக செருப்புகள் உள்ளன. அதை அணிந்துகொள்ளலாம். ஹீல்ஸ் அதிகம் உள்ள செருப்பு, ஷூக்களை அணியக் கூடாது.

தற்போது, ஃபிளாட்ஃபுட் பிரச்னைக்கு அறுவைசிகிச்சை மூலம் தீர்வு வந்துவிட்டது. அவசியப்பட்டால், அறுவைசிகிச்சை மூலம் உங்கள் பாதங்களைச் சீராக்கிக்கொள்ளலாம்.’’

மு.தேவபேரின்பன், தூத்துக்குடி.

“எனக்கு அடிக்கடி கண் கட்டிகள் தோன்றுகின்றன. இரண்டு கண்களிலும் கீழ் இமை, மேல் இமை நுனிகளில் அடிக்கடி கட்டி வருகிறது. நாமக்கட்டியை உரசிப் பூசினால் குணமாகிறது. ஆனால், நிரந்தரத் தீர்வு இல்லை. கண்கட்டிகள் எதனால் உருவாகின்றன?’’

டாக்டர் அரவிந்த் சீனிவாசன், கண் மருத்துவர், மதுரை.

கன்சல்ட்டிங் ரூம்“இமைப் பகுதியில் உள்ள சீபச் சுரப்பியில் ஏற்படும் அடைப்புகளின் காரணமாக கண்கட்டிகள் உருவாகின்றன. இமை முடிகள் முளைக்கும் இடங்களில் உள்ள ஜீஸ் எனும் சுரப்பியில் அடைப்பு ஏற்படுவதால், வெளிப்புறக் கண்கட்டிகள் உருவாகின்றன. கண் இமையின் நடுப்பகுதியில் அமைந்துஉள்ள மெய்போமியன் சுரப்பியில் பிரச்னை ஏற்படுவதால், உட்புறத்திலும் சிலருக்கு கண்கட்டி ஏற்படும். பொதுவாக, வெளிப்புறக் கட்டிகளில் கிருமித்தொற்று ஏற்படுவதால், சீழ் பிடித்து அதிக வலியை ஏற்படுத்தும். உட்புறக் கட்டிகள் நாள்பட்டவையாக இருந்தாலும் வலி இருக்காது. சிலருக்குக் குறைவான வலி இருக்கும்.

கண்கட்டிக்கு எனப் பிரத்யேக மருந்துகள் உள்ளன. கண் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று சொட்டு மருந்து, மாத்திரைகள், களிம்புகள் பயன்படுத்துவதன் மூலம் கண்கட்டிக்குத் தீர்வு காணலாம். காலை, மாலை இரண்டு வேளையும் ஐந்து நிமிடங்களுக்கு வெந்நீர் ஒத்தடம் தரலாம். கண்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. சர்க்கரை நோய் அதிகமாகவும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகவும் இருப்பவர்களுக்கு, கண் கட்டியாகத் தொடங்கி, பின்னர் இவை முகத்திலும் பரவ வாய்ப்புஉண்டு. எனவே, சுய வைத்தியம் செய்துகொள்ளாமல் உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.”

கே.எஸ்.ராமலிங்கம், நாமக்கல்.

``என் வயது 26. லாரி ஓட்டுநராகப் பணிபுரிகிறேன். எனக்குக் கடந்த ஒரு வருடமாக உள் மூலம் உள்ளது. மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், ஓரிரு மாதங்கள் நலமாக உள்ளது. பிறகு, மீண்டும் பிரச்னை ஏற்படுகிறது. மூலநோய் ஏன் ஏற்படுகிறது? இதற்கு என்னதான் தீர்வு?’’

டாக்டர் பி.செந்தில்குமார்,  வயிறு, குடல் அறுவைசிகிச்சை நிபுணர், கோவை.

கன்சல்ட்டிங் ரூம்``ஆசனவாயில் உள்ள ரத்த நாளங்களில் வீக்கம் ஏற்படுவதைத்தான் மூலநோய் என்கிறோம். பொதுவாக, நம் உடலில் உள்ள ரத்தநாளங்களில், குறிப்பிட்ட இடைவெளியில் வால்வுகள் உள்ளன. இவை, ரத்தத்தைத் தேங்கவிடாமல் முன்னே செலுத்த உதவுகின்றன. ஆனால், ஆசனவாய்க்குச் செல்லும் ரத்தநாளங்களில் இந்த வால்வுகள் இல்லை. இதனால், ஆசனவாய் ரத்தநாளங்களில் சிறிது அழுத்தம் அதிகமானால்கூட அவற்றில் ரத்தம் தேங்கி, சிறிய பலூன்போல உப்பிவிடுகிறது.

மலச்சிக்கல், சிறுநீர்த்தாரை அடைப்பு, ப்ராஸ்டேட் வீக்கம், உடல் பருமன் போன்றவற்றால் ‘மூலம்’ உண்டாகும். வயிற்றில் தோன்றும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும் கழலைகள் காரணமாகவும் மூலம் வரும். கர்ப்பிணிகளுக்குக் கருப்பையில் வளரும் குழந்தை மலக்குடலை அழுத்துவதால், தற்காலிக மூலம் உண்டாகும். சிலருக்கு பரம்பரையாகவே  ஆசனவாய் ரத்தநாளச்சுவர்கள் மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலம் வரலாம். அமர்ந்துகொண்டே பணி செய்யும் தொழிலில் உள்ளவர்களுக்கும் மூலம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

மூலத்தை நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் இரண்டு நிலைகளை மருந்து, மாத்திரை, உணவு மற்றும் வாழ்க்கைமுறை மூலமாகச் சரிசெய்துவிடலாம். மூன்றாவது மற்றும் நான்காவது நிலை என்றால், அறுவைசிகிச்சை, லேசர், ஸ்டேப்ளர்  (Stapler) போன்ற அதிநவீன சிகிச்சை முறைகள் மட்டுமே நிரந்தரத் தீர்வு.

மலச்சிக்கலைத் தவிர்க்க, காய்கறி, பழங்கள், கோதுமை போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவை எடுக்க வேண்டும். வாழைப்பழம், கொய்யா, பப்பாளி, மாதுளை, உலர் திராட்சை போன்றவை நல்ல மலமிளக்கிகள். மாவுச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்வதோடு, அதிக அளவு தண்ணீர் குடிப்பதும் மலச்சிக்கல் வராமல் காக்கும். ஒரே இடத்தில் தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு மேல் உட்காராமல், அவ்வப்போது எழுந்து ரிலாக்ஸ் செய்துகொள்வதும், உட்காரும் நிலையை அடிக்கடி மாற்றிக்கொள்வதும் நல்லது.’’

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு