Published:Updated:

வாய்க்குள் ஓர் அமுத ஊற்று!

வாய்க்குள் ஓர் அமுத ஊற்று!
பிரீமியம் ஸ்டோரி
வாய்க்குள் ஓர் அமுத ஊற்று!

எச்சில் பற்றிய 10 ரகசியங்கள்

வாய்க்குள் ஓர் அமுத ஊற்று!

எச்சில் பற்றிய 10 ரகசியங்கள்

Published:Updated:
வாய்க்குள் ஓர் அமுத ஊற்று!
பிரீமியம் ஸ்டோரி
வாய்க்குள் ஓர் அமுத ஊற்று!
வாய்க்குள் ஓர் அமுத ஊற்று!

றுகாய் என்றதும் ஊறாத வாய் உண்டா? ‘புளிப்பு’ என்ற சுவையை நினைத்ததுமே நாக்கில் எச்சில் திரள்கிறதே! அலுவலகத்தில் மேலதிகாரி உஷ்ணமானால், நாக்கு உலர்ந்துவிடுகிறது. நம்முடைய உணவை செரிமானத்துக்கு மட்டுமல்ல... மனநிலைக்கு ஏற்பவும் சுரக்கும்  எச்சிலை நாம் பொருட்படுத்துவது இல்லை. அதை ஏதோ ஒரு கழிவுப் பொருள் போலக் கண்ட கண்ட இடங்களில் துப்பிக்கொண்டு இருப்பவர்களையும் பார்க்கிறோம். ஆனால், நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அற்புத ஊற்று எச்சில் என்றால், நம்பமுடிகிறதா? உண்மைதான்!

*எச்சில் என்பது 99 சதவிகிதம் நீரால் ஆனது. இதுதவிர சோடியம், பொட்டாசியம், கால்சியம், குளோரைடு, மக்னீசியம், பைகார்பனேட், பாஸ்பேட் உள்ளிட்ட எலெக்ட்ரோலைட்கள், ம்யூகஸ், ரத்த வெள்ளை அணுக்கள், நுண்ணுயிர் நாசினிகள், வைட்டமின்கள், நல்ல பாக்டீரியா உட்பட, என்னென்ன உணவுப் பொருட்கள் எல்லாம் நாம் வாயில் இடுகிறோமோ, அவற்றின் சத்துக்களும் கலந்திருக்கும்.

*நமது வாயில் ஆறு எச்சில் சுரப்பிகள் உள்ளன. இவை, தானியங்கி நரம்பு மண்டல அமைப்பின் (Automatic nervous system) தூண்டுதலால் எச்சிலைச் சுரக்கின்றன. ஆரோக்கியமான ஒருவருக்கு தினசரி 2 லிட்டர் வரை எச்சில் சுரக்கும். மற்றபடி, எச்சில் சுரப்பின் அளவு ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கேற்பவும், ஒவ்வொரு சூழலுக்கேற்பவும் மாறுபடும்.

*பொதுவாக தூங்கும்போதும், எச்சில் சுரப்பு குறைவாக இருக்கும். சிலருக்கு, முதுமையில் எச்சில் சுரப்பு குறையும். பயப்படும்போதும், சோர்வாக இருக்கும்போதும், உலர்ந்த வானிலை இருக்கும்போதும், போதுமான அளவு தண்ணீர் அல்லது நீராகாரங்கள் எடுத்துக் கொள்ளாதபோதும் எச்சில் சுரப்பு குறையும்.

*அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியாலும், சில மாத்திரை, மருந்துகளைத் தொடர்ந்து அதிகமாக எடுத்துக்கொள்வதாலும், சிகரெட், போதைப் பழக்கங்களாலும் எச்சில் சுரப்பு குறைந்து, வாய் உலர்தல் பிரச்னை ஏற்படும்.

*வாய் உலர்தல் பிரச்னை இருப்பவர்களுக்குப் பற்கள், ஈறுகள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில், எச்சில்தான் பற்களையும் ஈறுகளையும் வாயில் உள்ள தாதுஉப்புக்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கிறது.

*மியூகின்ஸ் (Mucins) எனப்படும் உயவுச்சுரப்புதான் எச்சிலில் பிரதானமானது. புரோட்டின் மூலக்கூறுகளால் ஆன இது, பால்பேரிங்குகளைப் போலச் செயல்படுகிறது. உணவை மெல்லவும், விழுங்கவும், பேசவும், பற்களை ஈறுகளோடு வலுவாகப் பிணைக்கவும், பற்குழி, பற்சொத்தை போன்றவற்றில் இருந்து காக்கும் நல்ல பாக்டீரியா மற்றும் அமிலங்கள் வாயிலேயே தங்கியிருக்கவும் இது உதவுகிறது.

*நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களையும், ஸ்டார்ச்சையும், கொழுப்பையும் உடைத்து செரிமானத்துக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கான என்சைம்கள் எச்சிலில் உள்ளன. இவ்வாறு, உணவை எச்சில் சுலபமாகக் குழைத்துக் கூழாக்கிக் கொடுப்பதால்தான்,  விழுங்கும் திறனும் செரிமானமும் சுலபமாகின்றன.

*எச்சில் நமது வாயின் பி.ஹெச் (PH) அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால்,  உணவுப்பொருளின் ருசியை நமது நாவின் சுவைமொட்டுக்களால் உணர முடிகிறது. நாவின் சுவை நரம்புகள் உணவின் ருசியை உணர்ந்ததும், அதன் மூலக்கூறுகளின் பண்புக்கு ஏற்ப, எச்சில் சுரப்பி தன் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், உணவுப்பொருள் எளிதாகக் குழைக்கப்பட்டு, செரிமானத்துக்குத் தயாராகிறது.

*எச்சிலில் நுண் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் எதிர்ப்புச் சக்தி (ஆன்டிபாடி) அதிகம் உள்ளது. தோல் செல்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான இந்த ஆன்டிபாடி, எச்சிலில் அதிகம் உள்ளதால்தான், உடலில் வேறு இடங்களில் ஏற்படும் புண்களைவிட, வாயில் ஏற்படும் புண்கள் விரைவில் குணமாகிவிடுகின்றன.

*நோய்களைக் கண்டறியவும் எச்சில் பயன்படுத்தப்படுகிறது. எச்சிலைக்கொண்டு ஒருவரின் வயதையும் சொல்லிவிட முடியும்.

இத்தனை வேலைகளைச் செய்யும் எச்சில் என்பது இயற்கை மனிதனுக்குக் கொடுத்த அருங்கொடை அமுதம். இனியும், எச்சில்தானே என ஏளனமாக நினைக்கமாட்டீங்கதானே!

- இளங்கோ கிருஷ்ணன்

படம்: சி.சுரேஷ் பாபு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism