Published:Updated:

''என் மன அழுத்தம் போக்கும் நால்வர்!’’ - நாஞ்சில் சம்பத் #LetsRelieveStress

''என் மன அழுத்தம் போக்கும் நால்வர்!’’ - நாஞ்சில் சம்பத் #LetsRelieveStress

''என் மன அழுத்தம் போக்கும் நால்வர்!’’ - நாஞ்சில் சம்பத் #LetsRelieveStress

''என் மன அழுத்தம் போக்கும் நால்வர்!’’ - நாஞ்சில் சம்பத் #LetsRelieveStress

''என் மன அழுத்தம் போக்கும் நால்வர்!’’ - நாஞ்சில் சம்பத் #LetsRelieveStress

Published:Updated:
''என் மன அழுத்தம் போக்கும் நால்வர்!’’ - நாஞ்சில் சம்பத் #LetsRelieveStress

நாஞ்சில் சம்பத், நாஞ்சில் நாட்டிலிருந்து, நானிலத்தையே தன் வசீகரப் பேச்சால் வசியப்படுத்தி வலம்வருபவர். இவரது நகைச்சுவைப் பேச்சுக்கு எப்போதும் ஒரு ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தையும் அதிலிருந்து எப்படி விடுபட்டார் என்பதையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்... 

''மன அழுத்தத்துக்கு நான் பெரும்பாலும் ஆட்படுவதில்லை. மன அழுத்தம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நான் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன். 'நாம் நினைத்தது நடக்க வேண்டும்’ என்று எப்போதும் நான் எதிர்பார்ப்பதில்லை. சில வெறுக்கத்தக்க மனிதர்களால், விரும்பத்தகாத செயல்கள் நடக்கும்போது அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து போய்விடுவேன். 

எனக்கு மன அழுத்தம் ஏற்பட்ட நிகழ்வும் உண்டு. 'பொது வாழ்க்கையிலிருந்து விடுவித்துக்கொள்கிறேன்' என்று அறிவித்தபோது மிகவும் மன வேதனையும் மன உளைச்சலையும் அனுபவித்தேன். 


அண்மையில் என்னிடம் தொலைக்காட்சி ஒன்றிலிருந்து பேட்டியெடுக்க வந்த நிருபரிடம், 'பொது வாழ்க்கையிலிருந்து விடுவித்துக்கொள்கிறேன்' என்று அறிவித்தேன். அந்த நிருபர், 'எதற்காக வெளியேறுகிறீர்கள்?’ என்று கேட்டார். 
'அண்ணாவும் திராவிடமும் இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன்’ என்று சொன்னேன்.

அந்த நிருபரோ, 'ஆனால், சமூக வலைதளங்களில் ஆடி காரை எதிர்பார்த்து விலகுவதாக தகவல்கள் பரவுகிறதே...’  என்று திருப்பிக் கேட்டார். 'உள்ளத்தால் பொய்யாது ஒழுக வேண்டும்’ என்று ஒவ்வொரு நொடியும் கருதி வாழ்பவன்; 'நேர்மையான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்’ என நினைப்பவன் நான். எனக்கு இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ரத்த அழுத்தம் எகிறியது. எரிச்சலும் கோபமும் என்னைக் காவு கேட்டது. மிகவும் வேதனையையும் மன அழுத்தத்தையும் எனக்குத் தந்தது. உடம்பு முழுவதும் வியர்வை ஆறாகக் கொட்டியது. 

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி என்ற இடத்துக்கு அருகில் அந்தப் பேட்டி எடுக்கப்பட்டது. அந்தப் பேட்டி முடிந்ததும், நேராக அருகிலிருக்கும் ஔவையார் அம்மன் கோயிலுக்குச் சென்றேன். அங்கே போய்,  ஔவையார்  இயற்றிய 'சீதக்களப செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பல இசை பாட...’ எனும் விநாயகர் அகவலைப் பாடினேன். எனக்கு ஏற்பட்டிருந்த மன இறுக்கம் இருந்த இடம் தெரியாமல் பறந்து போனது.

இதைத் தவிர சென்னையிலிருந்து, சுற்றுப்பயணங்களுக்குப் புறப்படும்போது, ரயிலைப் பிடிக்கச் செல்லும்போது வாகன நெரிசலில் சிக்கிவிட்டால், பதற்றத்துக்கு உள்ளாகிவிடுவேன். கார் நகராமலிருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் எனது பேரப் பிள்ளைகள் மாக்ஸிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய் இருவரும் சிரித்துக்கொண்டிருக்கும் படத்தை எடுத்துப் பார்ப்பேன். என்னுடைய பதற்றம் தணிந்துவிடும். டிரைவரும் ஏதோ ஒரு வழியில் காரை ஓட்டிச் சென்று ஸ்டேஷனை அடைந்துவிடுவார்.

'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 
ஆகுல நீர பிற',

'வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 
உள்ளத்து அனையது உயர்வு’... 

போன்ற மனம் சார்ந்த திருக்குறள்களை எடுத்து வாசிப்பேன். திருக்குறளுக்கு இணையான நூல் இந்த உலகிலேயே கிடையாது. அறத்துப்பால், பொருட்பால்  ஆகிய இரண்டிலும் மனித மனங்களை உழவு செய்ய திருவள்ளுவர் ஏராளமான குறள்களை இயற்றியுள்ளார்.

 குறிப்பாக, மனித மனத்தின் செம்மைக்கு தனித்தனியாக பல அதிகாரங்கள் ஒதுக்கியதோடு, பல இடங்களிலும் மனத்தின் பாங்கு, அது செயல்படுவதற்கு உரிய வழிமுறைகள், நெறிமுறைகள் என ஏராளமானவற்றைக் கொடுத்திருக்கிறார்.  

ஒரு கட்சியிலிருந்து நான் விலகியபோது, அதிலிருந்து நான் தூக்கி எறியப்பட்டபோது இந்தக் குறள்தான் எனக்கு நம்பிக்கை தந்தது. 

'யாதனின் யாதனின் நீங்கியான் – நோதல்
அதனின் அதனின் இலன்.’

'ஒருவன் எந்தெந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கிறானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை’ என்பது இதன் பொருள். 

மேலாண்மைக்கும் நிர்வாகத்துக்கும் பெரிய அளவில் பயன்படக்கூடிய நூல் திருக்குறள்.  மனித வாழ்வின் 360 டிகிரியிலிருந்தும் வாழ்க்கையைப் பார்த்து எழுதப்பட்ட நூல். எப்போது மன அழுத்தம் ஏற்பாட்டாலும் திருக்குறள் எனக்குப்பெரிய அளவில் கைகொடுக்கும்.  எனக்கிருப்பது, நம் தமிழ்ப் புலவர்களின் மனநிலை.

உள்ளத்தில் எதையும் ஒளித்துவைப்பதில்லை. இரண்டு வாழ்க்கை எனக்கு கிடையாது. அன்பானவர்களிடம் நான் மிகவும் அன்பாக இருப்பேன். அதைவிட மிகவும் உண்மையுள்ளவனாகவும் இருப்பேன். அவர்கள் என்னை ஏமாற்றும்போது துடித்துப் போய்விடுவேன். ஆனாலும், எனது இயல்பை நான் எந்தச் சூழ்நிலையிலும் மாற்றிக்கொண்டதில்லை. என் மனதுக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்கிறேன். நான் கற்றத் தமிழும் அதில் எனக்கிருக்கும் புலமையும் என்றைக்கும் எனக்குச் சோறிடும்’’ என்கிறார் நாஞ்சில் சம்பத்.