Published:Updated:

இனி எல்லாம் சுகமே - 18

இனி எல்லாம் சுகமே - 18
பிரீமியம் ஸ்டோரி
News
இனி எல்லாம் சுகமே - 18

இனி எல்லாம் சுகமே - 18

இனி எல்லாம் சுகமே - 18

பெருங்குடலில் கோளாறுகள் ஏற்பட்டால், இயல்பு வாழ்க்கை உடனடியாகப் பாதிக்கப்படும். நாம் உண்ணும் உணவு சரியாகச் செரித்து, சரியான நேரத்தில் வெளியேறினால்தான், நமக்கு ஆரோக்கியம் நிலைத்திருக்கும். கழிவுகள் வெளியேற்றத்தில் பிரச்னை ஏற்பட்டால், நம்மால் எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்ய முடியாது. ஒருவர் எத்தனை முறை மலம் கழிக்க வேண்டும் என வரையறுப்பதற்கில்லை. பொதுவாக, ஒரு நாளைக்கு ஒரு முறை, இரண்டு முறை அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறை என அவரவர் வசதிக்கு ஏற்ப மலம் கழிக்கும் பழக்கம் மாறுபடும்.

மலம் எப்படி வெளியேறுகிறது என்பதை வைத்தே ஒருவரின் ஆரோக்கிய நிலையைக் கண்டுபிடித்துவிட முடியும். மலத்துடன் நீர் அதிகமாக வெளிவந்தால், வயிற்றுப்போக்கு; மலம் இறுகி, கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்தால் மலச்சிக்கல் என அறியலாம். மலம் கழித்த பின்னர் திருப்தி இல்லை என்றாலோ, மலத்துடன் ரத்தம் வருகிறது, சளி வருகிறது என்றாலோ பெருங்குடல் சரியாக வேலை செய்யவில்லை என்று பொருள். மலம் பிரவுன் நிறத்தில் வந்தால், பெருங்குடலின் உட்பகுதியில் பாதிப்பு என அறியலாம். எவ்வளவுக்கு எவ்வளவு மலம் சிவப்பாக வருகிறதோ, அதை வைத்து ஆசனவாய் அருகே ரத்தக்கசிவு பாதிப்பு இருப்பதை  புரிந்துகொள்ளலாம்.

பெருங்குடலில் ஏதாவது பாதிப்பு என்றால், அடிவயிறு வலிக்கும். வயிற்று உப்பசம் ஏற்படும். பெருங்குடல் வாய்ப் பகுதியில் சில சமயம் ரத்தம் கசிந்தால், அது நமக்குத் தெரியாது. தொடர்ந்து, நாட்கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மலத்தின் வழியே ரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும். இதனால், ரத்தசோகை ஏற்படும். எனவே, ரத்தசோகை இருப்பது  தெரியவந்தால், பெருங்குடலை பரிசோதனை செய்வது மிக அவசியம். இதற்கு ‘கொலோனோஸ்கோப்பி’ எனும் முறை இருக்கிறது. 60 வயதைக் கடந்தவர்களுக்கு, தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு மேல் வழக்கத்துக்கு மாறாக பேதி, மலச்சிக்கல் ஏற்படுகிறது என்றாலோ, மலத்தில் ரத்தம் வந்தாலோ, திடீர் ரத்தசோகை ஏற்பட்டாலோ, குடல்நோய் சிறப்பு மருத்துவரை அணுக வேண்டும். தேவைப்பட்டால், கொலோனோஸ்கோப்பி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இனி எல்லாம் சுகமே - 18

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எப்படிப் பரிசோதனை செய்யப்படுகிறது?

முதலில், பெருங்குடலைச் சுத்தம் செய்ய மருந்து கொடுக்கப்படும். பிறகு, வலிக்காமல் இருக்கத் தேவையான மருந்துகள் தருவார்கள். பின்னர், ஆசனவாய் வழியாக ஒரு சிறு குழாய் போன்ற கருவியைச் செலுத்தி, பெருங்குடல் எப்படி இருக்கிறது எனக் கணினித் திரை வழியாக மருத்துவர்கள் அறிவார்கள். புறநோயாளியாகவே மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொண்டு ஒரே நாளில் திரும்பச் செல்லலாம்.

பெருங்குடலைப் பொறுத்த வரையில் இரண்டு பெரிய பிரச்னைகள் உள்ளன. பெருங்குடல் புற்றுநோய் மற்றும் ஐ.பி.டி எனப்படும் பெருங்குடல் ரணம் (Inflammatory bowel disease). இவை தவிர, சிலருக்கு  ‘இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்’ என்ற பிரச்னையும் இருக்கும். அதாவது, சாப்பிட்டவுடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு, கழிப்பறையை நோக்கி ஓடுவார்கள்.

பெருங்குடல் புற்றுநோய்


பெரும்பாலும், மரபியல் ரீதியாகத்தான் இந்தப் புற்றுநோய் வருகிறது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் இன்ன நேரத்தில் பிறக்க வேண்டும், இவ்வளவு பெருக்கமடைய வேண்டும், இத்தனை நாளில் அழிய வேண்டும் என்கிற கட்டாயம் உண்டு. இதில், செல் அழிவில் பிரச்னை ஏற்படும்போது, அவை பல்கிப் பெருகி புற்றுநோயை உண்டாக்குகின்றன.

பொதுவாக, உடலின் இடப்பக்கம் உள்ள இறங்குமுகக் குடல், நெளிவுக்குடல் போன்ற இடங்களில் கட்டிகள் வந்தால், மலம் செல்லும்போது ரத்தம் அல்லது சளி சேர்ந்தே வரும்; வலி இருக்கும். வலப்பக்கப் பெருங்குடலில் புற்றுநோய்க் கட்டி வந்தால், ரத்தசோகை ஏற்படும்; வலி இருக்காது. உடல் எடை திடீரெனக் குறையும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். முன்கூட்டியே பரிசோதனை செய்வதால், ஏதேனும் சிறு கட்டிகள் இருந்தால் தெரிய வரும். உடனே,  கொலொனோஸ்கோப்பி பரிசோதனை வாயிலாகவே, ஒரு கம்பியில் மின்சாரம் செலுத்தி, கட்டியை அகற்றிவிடுவார்கள். இதன்மூலம், புற்றுநோய் வருவது தடுக்கப்படும். இதனால், இன்ஷூரன்ஸ் கம்பெனி, நோயாளிகள் இருதரப்புக்குமே லாபம்.

யாராவது பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களின் சந்ததியினர் 30-40 வயதுகளிலேயே கொலொனோஸ்கோப்பி பரிசோதனை செய்துகொள்வது நல்லது. பெருங்குடலில் சிறு பாலிப் கட்டிகள் வரும்போதே அகற்றிவிடுவது நல்லது. ஸ்டேஜ் 1, 2-ஐ தாண்டினால், நிலைமை மோசமாகிவிடும். எனவே, கவனம் தேவை.

- தொடரும்

தவிர்ப்போம் தேவையற்ற ஆன்டிபயாடிக்!

இனி எல்லாம் சுகமே - 18

சிறுகுடலைவிட பெருங்குடலில் பல பில்லியன் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இவை, நமது உடலில் பெருங்குடல் செயல்பாடுகள் சீராக நடக்க உதவுகின்றன. ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால், பெருங் குடல் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

இந்தியாவில், சளி போன்ற வைரஸ் தொற்று, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற சின்ன விஷயங்களுக்குக்கூட சம்பந்தமே இல்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்தை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.
இது மிகவும் ஆபத்தானது. எந்த நோய்க்கு எந்த ஆன்டிபயாடிக் தேவையோ  அதை மட்டுமே சாப்பிட வேண்டும். தேவையான நோய்களுக்கு ஆன்டிபயாடிக் சாப்பிடுவதைத் தவிர்ப்பது, தேவையற்ற நோய்களுக்கு ஆன்டிபயாடிக் சாப்பிடுவது இரண்டுமே தவறான  விஷயங்கள்.

ஸ்டூல் சார்ட்

இனி எல்லாம் சுகமே - 18

மலம் எப்படி வெளியேறுகிறது என்பதைக் கொண்டு பெருங்குடல் சரியாக வேலை செய்கிறதா என அறியமுடியும்.

டைப் 1:
மலம் கழிக்க மிகவும் சிரமமாக இருக்கும். தனித்தனியாக சிறு சிறு உருண்டைகள் போல வெளிவரும். இந்த நிலை இருந்தால், மோசமான மலச்சிக்கல்.

டைப் 2:
மலம் கழிப்பதில் சிரமம் இருக்கும். மிகவும் வறட்சியாக இருக்கும். மலம் கழிக்கும்போது எரிச்சலான உணர்வு இருக்கும். இது பொதுவான மலச்சிக்கல் நிலை.

டைப் 3:
மலம் கழிக்கும்போது லேசான எரிச்சல் இருக்கும். வறட்சியாக, விரிசல்களோடு மலம் வெளிவரும். மலச்சிக்கல் இவர்களுக்கு ஏற்படலாம். எனவே, அதைத் தவிர்க்க போதுமான அளவு நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

டைப் 4:
பாம்பு போல நீளமாக மலம் வெளியேறும். மலம் வெளிவரும்போது எந்த எரிச்சல் உணர்வும் இருக்காது. இதுதான் இயல்பான நிலை.

டைப் 5:
எளிதாக மலம் வெளியேறும். ஆனால், தனித்தனியாக சொத் சொத் என வெளியேறும். உணவில் நார்ச்சத்து குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். எனவே, நார்ச்சத்து மிகுந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

டைப் 6:
திரவ நிலை அதிகமாகவும், கொஞ்சம் திடமாகவும் மலம் வெளியேறும். இது வயிற்றுப்போக்கின் ஆரம்ப நிலை.

டைப் 7: திரவ நிலையில் மலம் வெளியேறும். அடிக்கடி வயிறு வலித்து, இதே போல தொடர்ந்து போகும். இது தீவிர வயிற்றுப்போக்கு.

பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்க 5 வழிகள்

1.மேற்கத்திய உணவு முறையைக் கைவிட வேண்டும்.

2.அசைவ உணவுகளைத் தொடர்ந்து அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

3.காய்கறி, பழங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

4.உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

5.நிறங்களுக்காகச் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள், சுவையூட்டி களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.