Published:Updated:

''ஏக்கங்கள், ஆதங்கங்களிலிருந்து விட்டு விடுதலையாவோம்!’ - இயக்குநர் சீனு ராமசாமி #LetsRelieveStress

''ஏக்கங்கள், ஆதங்கங்களிலிருந்து விட்டு விடுதலையாவோம்!’ - இயக்குநர் சீனு ராமசாமி #LetsRelieveStress
''ஏக்கங்கள், ஆதங்கங்களிலிருந்து விட்டு விடுதலையாவோம்!’ - இயக்குநர் சீனு ராமசாமி #LetsRelieveStress

சீனு ராமசாமி திரைப்பட இயக்குநர். 'கூடல் நகர்', 'தென்மேற்குப் பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை'... உட்பட ஆறு படங்களை இயக்கியிருக்கிறார். இப்போது 'மாமனிதன்’ படத்தை இயக்கிவருகிறார். மண்வாசனை மாறாமல்  வித்தியாசமான கதைக்களங்களுக்கு ஏற்ப திரைக்கதை அமைப்பது இவரின் தனித்தன்மை. அவர் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களையும், அதைப் போக்கக் கையாளும் வழிமுறைகள் குறித்தும் விளக்குகிறார் இங்கே....   

நாமும் நம் மனமும் சிலவற்றைப் பிரித்துப் பார்க்கத் தவறிவிடுவதால்தான் மன அழுத்தம், மன இறுக்கம் இவையெல்லாம் ஏற்படுகின்றன. ஒன்றுபோலவே இருக்கும். ஆனால், அவை ஒன்றல்ல. 

ஆசையையும் ஆதங்கத்தையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஆசையை எளிதாகப் பூர்த்தி செய்துவிடலாம். ஆனால், ஆதங்கம் என்பது நம் வாழ்வோடும் மரணத்தோடும் சம்பந்தப்பட்டது. அதை நாம் எரிக்கும்வரை போகவே போகாது. 

பலருக்கு நிறைவேறாத ஆதங்கங்கள் எப்போதுமே இருக்கும். அவற்றோடு சண்டையிட்டுக்கொள்வதைவிட சமரசம் செய்துகொள்ள வேண்டும். இதற்கு 'ஏற்றுக்கொள்ளுதல்’ என்று பெயர். 

தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிக்குத் தடியடி கிடைப்பதில்லை. அவனால் சிறையில் சுதந்திரமாக இருக்க முடிகிறது. அப்படி அவன் ஒப்புக்கொள்ளவில்லையென்றால், அவனால் சிறையில் நிம்மதியாக இருக்க முடியாது. சிறைக்குள்ளேயே அவன் இன்னொரு சிறையை மனதினில் அமைத்துக்கொண்டு உழல்வான்.

ஆதங்கம் என்பது எதனுடன் தொடர்புடையது என்று பார்க்க வேண்டும். லட்சியம் வேறு, ஆதங்கம் வேறு. 
உதாரணத்துக்கு, 'ஒரு திரைப்படம் எடுப்பது லட்சியம்’ என்று ஒருவர் சொன்னால், 'என்னை யாருமே அங்கீகரிக்கவில்லையே..!’ என்று வருத்தப்படுவது ஆதங்கம். 

அன்றாடம் நாம் செய்யும் பணிகளைத் தங்கு தடையில்லாமல் நாம் செய்துகொண்டிருந்தால், அதுவே நம்மை நம் லட்சியத்திடம் கொண்டுபோய் சேர்த்துவிடும். ஆனால், அதன் மேல் நாம் கொள்ளும் எதிர்பார்ப்பு ஆதங்கமாக மாறிவிடும்.
'நம் மனைவி இப்படிச் சமைக்கணும்’, 'வீட்டை இப்படிவெச்சுக்கணும்’, 'இப்படி நடந்துக்கணும்’ என்று எதிர்பார்த்துக்கொண்டு குற்ற உணர்வோடு ஒருவன் அலையக் கூடாது. 

புகார்களுடனும் கோரிக்கைகளுடனும் அலைகிற மனிதனுக்குத்தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. வாழ்க்கையின் போக்கை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற நிறைவேறாத ஏக்கங்களுக்கு விடை கொடுத்துவிட வேண்டும். அதனிடம் சென்று மண்டியிட்டு நம் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். 

ஏக்கங்களிடமிருந்து, ஆதங்கங்களிடமிருந்து விடுபட வேண்டும். அப்படி விடுபடும்போது உடம்பு, மனசு இரண்டுமே லேசாகிவிடும். மனம் அமைதியாகிவிடும். விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவியைப்போல் மனம் சிறகடிக்கத் தொடங்கிவிடும். 

அந்தப் 'புளிப்பான பழம்' நரியின் கண்களுடன் தெரியத் தொடங்கும். அதைவிட்டு விலகிவிட்டால், வாழ்க்கை பளிச்சென்று பளிங்கு மாளிகையைப்போல் தெரியத் தொடங்கும். இதை லட்சியத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ளக் கூடாது. இதையெல்லாம் விட்டுட்டாலே நீங்க லட்சியத்தை அடைஞ்சிடலாம்.

இப்போ ஒரு மனிதனை, 'சும்மா உட்காருங்க’னு சொல்லுங்களேன். அந்த மனிதனுக்கு, 'நாம் ஏன் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும்?' என்று மன அழுத்தம் ஏற்படும். அந்த இடத்தில், ' நான் ஏன் உட்கார வேண்டும்?’ என்ற புரிதல் இருந்தால், அந்த மனிதனுக்கு மன அழுத்தம் ஏற்படாது. 

'நாம நின்னாதான் நம்ம குடும்பம் உட்கார்ந்து சாப்பிடும்’ங்கிறதாலதான் ஒரு வாட்ச்மேனால எட்டு மணி நேரம் நிற்க முடியுது. அவர் அதைப் புரிஞ்சிருக்கார்னு அர்த்தம். 

தெரியாத ஒரு பொண்ணை வீடு கூட்டச் சொல்லுங்களேன்... அந்த வேலை அந்தப் பொண்ணுக்கு இமயமலையைச் சாய்க்கிற மாதிரி இருக்கும். நாம் எதைச் செய்தாலும், 'இதை ஏன் நாம் செய்ய வேண்டும்?’, 'எப்படிச்  செய்ய வேண்டும்?’ என்ற புரிதல் நமக்கு இருக்கும்போது, அற்பத்தனமான ஆதங்கங்கள் நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொள்கின்றன. 

இதற்கு ஒரே வழிதான் இருக்கு. 'நம்மை நாமே கவனிக்கத் தொடங்கணும். இந்த உயிர் இந்த உலகத்துக்கு ஏன் வந்தது... நாம் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன... இந்த உயிரால் இந்த உலகத்துக்கு என்ன பயன்?’ எனத் தன்னை நேசிக்கத் தொடங்குவதுகூட ஒருவகையில் ஞானத்தின் தொடக்கம்தான். 

கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் சொல்வதென்றால், 'தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்,
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்.
பெரும் பேரின்பம்...' 

அந்த நிலையை அடைய வேண்டும். தன்னை ஒருவன் அறிந்தால்தான் அவனால் உலகை வெல்ல முடியும். 
உலகத்திலேயே பெரிய துன்பம் எதுவென்றால், மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் மனப்பாங்கு. இதை முதலில் கைவிட வேண்டும். 'தனிச்சொத்தைவிட தனிச்சொத்து மனப்பான்மை பெரும் துன்பம் விளைவிக்கும்' என்கிறார் ஏங்கல்ஸ். 

ஓர் அழகான மாளிகையை அவனால் கட்டமுடியாது. ஆனால், அதைக் கட்ட முடியவில்லையே என்கிற துன்பம் மிகவும் துயரம் தரக்கூடியது. தனக்கு எது முடியும்; தனக்கு எது முடியாது; தன் பலம் எது; தன் பலவீனம் எது என்பதைத் தன் மனக்கோட்டையைச் செங்கல் செங்கலாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். 

'அவன் கார்ல போறான். பங்களாவுல இருக்கான்'னு நினைக்கிறாங்க. ஒவ்வொரு மாசமும் இ.எம்.ஐ அவனைத் துரத்திக்கிட்டே இருக்கும். அவனுக்கு காலிங்பெல் அடிக்கும்போதெல்லாம் நிம்மதியில்லாமதான் கதவைத் திறப்பான். இது எத்தனை பேருக்குத் தெரியும்? 
வெறும் கட்டாந்தரையில பாயை விரிச்சுப் படுப்பான். படுத்ததும் தூங்கிடுவான். ஆனா, இன்னொருத்தன் மெத்தையில படுத்தாலும் தூக்கம் வராம, மதுவுக்கும் மாத்திரைக்கும் அடிமையாகிக் கிடப்பான்...’’ என்றவரிடம், 'உங்களுக்கு மன அழுத்தம் தந்த அனுபவம்... அதிலிருந்து விடுப்பட்டவிதம்...’’ என்று கேட்டோம். 

''சினிமாவே மிகப் பெரிய ஸ்ட்ரெஸ்தான். கதாசிரியனாகப் போய்விட்டாலே, அவன் மனநோயாளிதான். ஒவ்வொரு படத்தையும் இயக்கி, அது வெளிவருவதற்குள் ஏற்படுகிற ஸ்ட்ரெஸ் இருக்கே... அதுவும் முதல்படம்  இயக்குகிற மாதிரிதான். 

ஒரு புதுப்பட இயக்குநர் முதல் படத்தை இயக்க என்னவெல்லாம் கஷ்டப்படுவாரோ... அந்தக் கஷ்டத்தை கடந்த 11 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டுதான் படங்களை இயக்கிவருகிறேன். ஆறு படங்கள் இயக்கிட்டேன். ஏழாவது படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறேன். நான்கு விருதுகள் என் படங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றில் ஒரு விருது எனக்கே கிடைத்திருக்கிறது.

தொழிலின் தன்மைக்கு எதிராக, 'நான் இப்படித்தான் பண்ணுவேன்’னு படம் செய்வது எதிர்க்காற்றில் சைக்கிள் மிதிப்பதைப் போன்றது. தொடக்கத்தில் எனக்கு இந்தச் சிரமம் நிறையவே இருந்தது. போகப் போக புரிந்துகொள்ள முடிந்தது. 

வாழ்க்கை நிலையாமையைப் பற்றி பட்டினத்தாரும் கண்ணதாசனும் சொன்னதுதான், மன அழுத்தம் விலகி, இந்தப் புரிதல் ஏற்பட்டதற்குக் காரணம். 

''ஆரவாரப் பேய்கள் எல்லாம் ஓடிவிட்டதடா...
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா...’’ ஆலய மணியின் ஓசை என் மனதில் கேட்கத் தொடங்கிவிட்டதுதான் காரணம்.
எனக்குத் தெரிந்ததை என் சக மனிதனுக்கு தந்துவிட்டு ஒரு புன்னகையுடன் விடைபெறவே விரும்புகிறேன்...’’ எனக்கூறி விடை கொடுத்தார்.