Published:Updated:

ஸ்வீட் எஸ்கேப் - 19

ஸ்வீட் எஸ்கேப் - 19
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்வீட் எஸ்கேப் - 19

சர்க்கரையை வெல்லலாம்

ஸ்வீட் எஸ்கேப் - 19

நாம் உட்கொள்ளும் உணவு, இரைப்பையில் செரிக்கப்பட்டு, சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, மலக்குடல், ஆசனவாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்தச் செயல்பாட்டுக்கு, குடலின் அசைவுத்தன்மை மிக முக்கியம். உட்கொண்ட உணவு இரைப்பையைத் தாண்டி சிறுகுடலுக்குள் நுழையாமல் போனால் என்னாகும்? உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது. உணவு இரைப்பைக்குள் தங்கி பாதிப்பை ஏற்படுத்தும். இரைப்பையில் எவ்வளவு நேரம் உணவு இருக்கலாம், எப்போது சிறுகுடலுக்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது வேகஸ் (Vagus) நரம்புகள்தான். இந்த நரம்புகள் பாதிக்கப்பட்டால் ‘கேஸ்ட்ரோபெரிசிஸ்’ (Gastroparesis) என்கிற இரைப்பை வாதம் ஏற்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காதபோது, டயாபடீக் கேஸ்ட்ரோபெரிசிஸ் (Diabetic Gastroparesis) ஏற்படும்.

தொடர்ந்து ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது ஏற்படக்கூடிய டயாபடீக் நியூரோபதியின் மற்றொரு வகைதான் இது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, அது ரத்தக் குழாயைப் பாதித்து, நரம்புகளுக்குத் தேவையான உணவு மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதைத் தடை செய்கிறது. மேலும், அதிக சர்க்கரை அளவு காரணமாக நரம்புகளில் சில ரசாயன மாற்றங்களும் ஏற்படுகின்றன. பெரும்பாலும், டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு இந்தப் பிரச்னை அதிக அளவில் ஏற்படுகிறது. டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கும் இது ஏற்படுகிறது.

இரைப்பை வாதம் ஏற்பட்டால், உணவு உடலில் தங்குகிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து, பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி, அசௌகரியத்தை அளிக்கும். இந்த அறிகுறிகள் நபருக்கு நபர் சிறிதாகவோ, தீவிரமாகவோ ஏற்படலாம்.

ஸ்வீட் எஸ்கேப் - 19

சிக்கல்

சர்க்கரை நோயாளிகளுக்கு இரைப்பை வாதம் ஏற்படும்போது, ரத்தத்தின் சர்க்கரை அளவு சீரற்றதாக மாறிவிடும். இவர்களுக்கு, உணவு இரைப்பைக்கு வந்து நீண்ட நேரம் கழித்துச் சிறுகுடலுக்குள் நுழையும். அங்கே ஊட்டச்சத்து கிரகிக்கப்பட்டு, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். நீண்ட நேரம் இரைப்பைக்குள்ளேயே உணவு இருக்கும்போது, பாக்டீரியா கிருமிகளின் வளர்ச்சி அதிகரிக்கலாம். உணவு மேலும் கடினமாகி, வாந்தியை ஏற்படுத்தலாம் அல்லது குடலில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

கண்டறிவது எப்படி?


நோயின்அறிகுறிகளை வைத்து டாக்டர் ஓரளவுக்குப் புரிந்துகொள்வார். அதைத் தொடர்ந்து, ஒரு சின்ன உடல் பரிசோதனையும், ரத்தத்தில் சர்க்கரைப் பரிசோதனையும் செய்யப்படும். பின்னர், பேரியம் எக்ஸ்ரே உள்ளிட்ட சில பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும்.

ஸ்வீட் எஸ்கேப் - 19

பேரியம் எக்ஸ்ரே

நோயாளிக்கு பேரியம் கலந்த திரவம் குடிக்கக் கொடுக்கப்படும். அது உணவுக் குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலில் தற்காலிகமாகப் படியும். பின்னர் எக்ஸ்ரே எடுப்பதன் மூலம், இது எவ்வளவு தூரத்துக்குப் பயணிக்கிறது, எங்கே தடை ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய முடியும்.

ரேடியோஐசொடோப் கேஸ்டிரிக் எம்டியிங் ஸ்கேன் (Radioisotope gastric-emptying scan)நோயாளிக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, கதிர்வீச்சு செலுத்தப்படும். நோயாளிக்கு உணவு கொடுப்பர். பின்னர், அவர்களுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து ஸ்கேன் செய்யப்பட்டு, கதிர்வீச்சு எங்கு உள்ளது எனப் பரிசோதிக்கப்படும். இதில், உணவு இரைப்பையிலேயே தங்கியிருக்கிறது என்றால், அவர்களுக்கு இரைப்பை வாதம் உள்ளது என்று அர்த்தம்.

வொயர்லெஸ் மொட்டிலிட்டி கேப்ஸ்யூல் (Wireless motility capsule)


உணவுடன் வைத்து இந்த சிறிய கருவியை விழுங்க வேண்டும். வயிற்றின் ஒவ்வொரு பகுதியிலும் உணவு செல்லும்போது அதன் அழுத்தம், வெப்பம், பி.ஹெச் அளவு போன்றவை பரிசோதிக்கப்படும்.

மேல்வயிறு எண்டோஸ்கோப்பி


மயக்க மருந்து அளித்துவிட்டு, நீளமான ஒரு மெல்லிய குழாயை வாய் வழியே இரைப்பைக்குள் விடுவார் டாக்டர். இந்த எண்டோஸ்கோப்பியில் உள்ள கேமரா மூலம் இரைப்பை, குடல் உள்ளிட்டவற்றின் சுவர் படிவம் இயல்பாக உள்ளதா, மாற்றம் ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறியப்படும்.

ஸ்வீட் எஸ்கேப் - 19

அல்ட்ராசவுண்ட்

பித்தப்பை, கணைய அழற்சியால்கூட இந்தப் பாதிப்பு ஏற்படலாம். எனவே, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலமாக இந்த உறுப்புகளின் அளவில் ஏதேனும் மாறுபாடு உள்ளதா எனக் கண்டறியலாம்.

சிகிச்சை


சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய இரைப்பை வாதம் தடுக்க ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது முதல் இலக்கு. இதற்காக இன்சுலின், வாய்வழி மருந்துகள், உணவுப் பழக்கத்தில் மாறுதல் போன்றவை பரிந்துரைக்கப்படும். மிகவும் அபாயகரமான நோயாளிகளுக்கு, குழாய் வழியாக நேரடியாக உணவு அளிக்கப்படும்.

இவை தவிர, இரைப்பை வாதப் பிரச்னையைக் கட்டுப் படுத்த பல்வேறு மாத்திரை, மருந்துகள் உள்ளன. நோயா ளியின் உடல் நிலை, அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகிய வற்றைக்் கருத்தில கொண்டு இவை பரிந்துரைக்கப்படும்.

- தொடரும்

ஸ்வீட்டர்

‘குறைவாகப் பேசு; அதிகமாக வேலை செய்’ என்று சொல்வார்கள். அதேபோல், இரைப்பை வாதம் பாதிப்பு இருந்தால் ‘குறைவாகச் சாப்பிடுங்கள்; அதிகமாக நடைப்பயிற்சி செய்யுங்கள்’.

டயாபடீஸ் டவுட்

“மூன்று வேளை உணவுக்குப் பதிலாக, ஆறு வேளை உணவாகப் பிரித்துச் சாப்பிடச் சொல்கிறார்கள் சிலர். வேறு சிலரோ, அடிக்கடி உண்ண வேண்டும் என்கின்றனர். இப்படிப் பலரும் பலவிதமாகச் சொல்வதால் குழப்பமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய, சரியான உணவு உண்ணும் முறை என்ன?”

- கே.பழனிச்சாமி, கோவை


“சர்க்கரை நோய் இருந்தால், இரைப்பை வாதம் பாதிப்பு வராமல் தடுக்க என்ன சாப்பிடுகிறோம் என்பது மட்டும் அல்ல; எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதைப் பற்றியும் நாம் தெரிந்திருக்க வேண்டும். உணவு உண்ணும் பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்றியமைப்பதன் மூலம் இரைப்பை வாதத்தைத் தவிர்க்க முடியும். இதற்கு, உணவை மூன்று வேளையாகச் சாப்பிடுவதற்குப் பதிலாக, ஆறு வேளையாகப் பிரித்துச் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம், இரைப்பைக்குக் குறைந்த அளவில் உணவு செல்கிறது. இதனால், உணவு மிக எளிதாக அடுத்த நிலைக்குப் பயணித்துவிடும். அதேபோல், உணவை எந்த விதத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். திரவ நிலையில் இருக்கும் உணவு மிக எளிதாக அடுத்த நிலைக்குச் சென்றுவிடும். உணவை உண்ணும்போது மிகவும் மெதுவாக, பொறுமையாக, கடித்துச் சுவைத்து விழுங்க வேண்டும். உணவு உண்டதற்குப் பிறகு, அரை மணி நேரம் கழித்துச் சிறிய நடைப்பயிற்சி செய்யலாம். இது கொழுப்பு உணவு செரிமானத்தைத் தாமதப்படுத்தும். தொடர்ந்து கொழுப்பு உணவு எடுத்துக்கொள்ளும்போது, எதிர்காலத்தில் செரிமானம் தாமதமாகும். மற்ற எல்லோருக்கும் நார்ச்சத்து நல்லது என்று சொல்வோம். ஆனால், இரைப்பை வாதம் உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்களுக்கு அதுவே அடைப்பை ஏற்படுத்திவிடலாம்.”