Published:Updated:

இந்தியாவில் முதல்முறையாக ஸ்டெம் செல் தெரபி செய்த தாமிரபரணி இப்போது?! #StemCellTherpy

இந்தியாவில் முதல்முறையாக ஸ்டெம் செல் தெரபி செய்த தாமிரபரணி இப்போது?! #StemCellTherpy
இந்தியாவில் முதல்முறையாக ஸ்டெம் செல் தெரபி செய்த தாமிரபரணி இப்போது?! #StemCellTherpy

''தாமிரபரணிக்கு ஒன்றரை வயசு இருக்கும்போது, ஒருநாள் அவளுக்கு திடீர்னு உடம்புக்கு ரொம்ப முடியாமப் போயிடுச்சு. டாக்டருங்க முதல்ல மஞ்சள்காமாலைனு சொன்னாங்க. அதுக்கு சிகிச்சை எடுத்துக்கிட்ட பிறகும் அவ இயல்பான நிலைக்கு வரலை. ஒவ்வொரு முறை ரத்தப் பரிசோதனை செஞ்சபோதும், ரத்தச்சோகைனுதான் முடிவு வந்துச்சு. அவளுக்குப் புது ரத்தம் உற்பத்தியாகவே இல்லைனு சொன்னாங்க. தொடர்ந்து பரிசோதனைகள் செஞ்சப்போ, என் பொண்ணு 'தலசீமியா'வால (Thalassemia) பாதிக்கப்பட்டிருக்கறது தெரிய வந்துச்சு’’ என்று கூறும் செந்தில்குமாருக்கு, தன் மகள்தான் இந்தியாவில் முதன்முறையாக ஸ்டெம் செல் தெரபியைச் செய்துக்கொள்ளப் போகிறாள் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.

''தலசீமியா பிரச்னையை 'ஸ்டெம் செல் தெரபி' மூலமா குணப்படுத்த முடியும்னு டாக்டர்லாம் சொன்னப்போ, அப்படின்னா என்னன்னே தெரியாம ரொம்பத் தவிச்சுப்போயிட்டோம். முதல்ல ஸ்டெம் செல் தெரபினா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டோம். சிகிச்சைக்கு எங்க முழு ஒத்துழைப்பைக் குடுத்தோம். ஸ்டெம் செல் சிகிச்சைக்கு தொப்புள்கொடி ரத்தம் வேணும்னு சொன்னாங்க. எங்க பொண்ணு பிறந்ததோ 2001-ம் வருஷத்துல. அப்போ ஸ்டெம் செல் பத்தி எங்களுக்கு எதுவுமே தெரியாது. அவ பிறந்தப்போ அவளோட தொப்புள்கொடி ரத்தத்தை நாங்க சேமிச்சுவெக்கலை. இனிமே என்ன பண்ண முடியும்னு தெரியாம தவிச்சோம். அப்போதான், டாக்டர் ரேவதி ராஜ் 'தாமிரபரணியோட கூடப் பிறந்தவங்களோட ஸ்டெம் செல், அவளுக்குப் பொருந்தும். நீங்க இன்னொரு குழந்தைக்கு முயற்சி பண்ணுங்க'னு யோசனை சொன்னாங்க. அப்படி, தாமிரபரணியைக் காப்பாத்துறதுக்காகவே பிறந்தவன்தான் எங்க பையன் புகழேந்தி. அவன் பிறந்தவுடனே, ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியோட, அவனுடைய ஸ்டெம் செல்லை சேமிச்சு, சிகிச்சைக்கு உபயோகப்படுத்தினாங்க. மறுபடியும் தாமிரா எங்க கைக்குக் கிடைச்சு, இந்த மார்ச் பதினேழோட ஒன்பது வருஷமாகிடுச்சு’’ என்று புன்னகைக்கிறார் தாமிரபரணியின் தந்தை செந்தில்குமார். 

தொடர்ந்து, ''அந்தச் சிகிச்சை பத்தி எங்களுக்கு முன்னே பின்னே தெரியாது. ஆனாலும், நாங்க ஒத்துகிட்டோம். உண்மையைச் சொல்லணும்னா, அந்தச் சூழ்நிலையில என் பொண்ணு பிழைச்சுடுவான்னு நான் நம்பவேயில்லை. பிழைச்சுட்டா நல்லா இருக்குமேன்னுதான் தோணிச்சு. நாங்க பார்க்காத சிகிச்சையே கிடையாது. ஹோமியோபதி, சித்தா-னு எல்லா மருத்துவத்தையும் முயற்சி பண்ணினோம். அதுக்கு ஒரே ஒரு காரணம், ஒருவேளை என் பொண்ணு பிழைச்சுட்டா, இனிமே தலசீமியாவை குணப்படுத்த வழி தெரிஞ்சுடும்ல... அது எல்லாருக்கும் நல்லதுதானே’’ என்று கூறியவரிடம் ''தாமிரபரணி இப்போ எப்படி இருக்கா, என்ன பண்றா?’’ என்று கேட்டோம். ''சந்தோஷமா இருக்கா, எல்லோரும் சந்தோஷமா இருக்கோம். பத்தாவது பொதுப் பரீட்சை எழுதி முடிச்சிருக்கா’’ என்ற செந்திலின் குரலில் அவ்வளவு மகிழ்ச்சி. சிகிச்சையின் தொடக்கத்தில் மண்ணீரலை எடுத்துவிட்டதால், அதற்கான மாத்திரையை மட்டும் தொடர்ந்து உட்கொள்கிறாள் தாமிரா.

'ஸ்டெம் செல் பேங்கிங்’ (Stem Cell Banking) குறித்த விழிப்புஉணர்வு, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவருகிறது. ஸ்டெம் செல் பேங்கிங் முறை சமீபத்தில் கண்ட வளர்ச்சியாக, 'கம்யூனிட்டி பேங்கிங்’ (Community Banking) முறையைச் சொல்லலாம் என்கிறார்கள் ஸ்டெம் செல்களை சேமித்துவைக்கும் லைஃப்-செல் நிறுவனத்தினர். இந்தியாவில் கம்யூனிட்டி பேங்கிங் முறையை அறிமுகப்படுத்தியிருப்பது, இந்த நிறுவனம்தான். இது குறித்து அந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் ஜவஹரிடம் பேசினோம்... ''முன்பிருந்த ஸ்டெம் செல் பேங்கிங் முறைக்கும், இப்போது வந்திருக்கும் கம்யூனிட்டி பேங்கிங் முறைக்கும் வித்தியாசம் இருக்கிறது. கம்யூனிட்டி பேங்கிங் என்பது, ஒருவருடைய ஸ்டெம் செல்லை, அதன் மரபு ஒத்துப்போகும் வேறொருவரை குணப்படுத்த உபயோகப்படுத்திக்கொள்ளலாம். அதற்கு அவர் ஸ்டெம் செல் தானம் பெற்றுக்கொள்பவரின் உறவினராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடந்த ஒர் ஆண்டாகத்தான் இந்தியா கம்யூனிட்டி பேங்கிங் முறையை நோக்கி நகர்ந்திருக்கிறது. நாங்கள் மகப்பேறு மருத்துவர்கள் மூலமாகப் பிறக்கும் குழந்தைகளின் ஸ்டெம் செல்லை சேமிக்கும்படி, பெற்றோர்களுக்கு அறிவுரையும் ஆலோசனையும், விழிப்புஉணர்வும் வழங்கிவருகிறோம்

ஸ்டெம் செல்கள் வெறும் உயிரணுக்கள் அல்ல. உடலின் 'ஆதார செல்கள்.’ உடலின் அடிப்படை செல்களான இவை, தொப்புள்கொடி ரத்தத்தில் மட்டுமன்றி ரத்தம், எலும்பு, மஞ்ஞை, கருத்தரித்த முட்டை, மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தம், கல்லீரல், கணையம்... என உடலின் பல இடங்களிலும் இருக்கின்றன. மற்ற இடங்களிலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்லைவிட, பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியிலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்களில்தான் நன்மைகள் அதிகம்.

ஸ்டெம் செல் சேமிப்பு என்பது, தொப்புள்கொடி ரத்தத்தை, திரவ வடிவ நைட்ரஜன் வாயுவில் (Liquid Nitrogen) மைனஸ் 196 சென்டிகிரேடில் (Minus 196 Centigrade) பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால், அதன் தன்மையை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அது இழந்துவிடும். ஸ்டெம் செல் சேமிப்பின் தொடக்க காலத்தில், போதிய விழிப்புஉணர்வு இல்லை. தாமிரபரணியின் சிகிச்சைக்குப் பிறகு, அவளுடைய வாழ்க்கை எப்படிப் புதிதாக பல சவால்களை நோக்கி அமைந்ததோ, அப்படித்தான் எங்கள் பயணமும். அன்று அவள் கொடுத்த நம்பிக்கைதான், அவளைப்போல அவதிப்படும் பல்வேறு குழந்தைகளை நோக்கி எங்களை மேலும் மேலும் பயணிக்கச் சொன்னது. கம்யூனிட்டி பேங்கிங் முறைக்கு, சம்பந்தப்பட்ட நபர் ஒப்பந்தத்தில் கையழுத்திட்டிருக்க வேண்டும். குழந்தைகளாக இருந்தால், பெற்றோர் கையழுத்திடுவார்கள். 'குழந்தையின் ஸ்டெம்  செல்லை வேறு ஒருவருக்கு தானமாக அளித்த பிறகு, பிற்காலத்தில் குழந்தைக்கு எதாவது பிரச்னை என்றால் என்ன செய்வது' என்று நினைத்து சில பெற்றோர்கள் தயங்குவார்கள். தயக்கமே வேண்டாம். அனைவரும் டோனாராக முற்படும்போது, கம்யூனிட்டி பேங்கிங் முறையின் வளர்ச்சி பெரிதாகிவிடும். மரபுக்குறைபாட்டில் மட்டும் தலசீமியாபோல 80 வகை பாதிப்புகள் இருக்கின்றன. கம்யூனிட்டி பேங்கிங் முறை வளரும்பட்சத்தில், ஒருவருக்குப் பிரச்னை என்றால், அவருக்கு குருத்தணு தானமளிக்க பலர் முன்வந்திருப்பார்கள்...’’ என்று முகத்தில்  நம்பிக்கை ஒளிரக் கூறுகிறார் ஜவஹர். 

ஸ்டெம் செல் சேமிப்பு குறித்த விழிப்புஉணர்வு அதிகரித்திருந்தாலும், சாமானியர்கள் இன்னமும் இதை நோக்கி நகர மறுக்கிறார்கள். காரணம் என்னவென்று அறிந்துகொள்வதற்காக, தன் குழந்தையின் ஸ்டெம் செல்லை சேமித்துவைத்திருக்கும் முத்தழகனிடம் பேசினோம். ''21 வருடங்களுக்கு ஸ்டெம் செல்லை சேமித்துவைக்க, பல லட்ச ரூபாய்வரை செலுத்த வேண்டியிருக்கு. பொருளாதாரரீதியாக சாமானியர்களுக்கு இது நிச்சயமாகச் சாத்தியமில்லை. அதேநேரத்தில், ஸ்டெம் செல் சேமிப்பில் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. தனியார் நிறுவனங்கள் என்பதால், அதில் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. அரசு முழுமையாக ஸ்டெம் செல் சேமிப்பில் ஈடுபடவில்லையென்றாலும், அரசு உதவி பெறும் தனியார் நிறுவனங்களாக அவற்றை மாற்ற முயற்சி எடுக்கலாம். அது எங்களுக்குக் குறைந்தபட்ச நம்பிக்கையையாவது தரும்’’ என்றார் முத்தழகன். 

'இதுபோன்ற திட்டங்களுக்கு அரசு முன்வருமா, வராதபட்சத்தில், தலசீமியா போன்ற மரபுக்குறைபாட்டால் பாதிக்கப்படும் ஏழைக் குடும்பங்கள், ஸ்டெம் செல் சேமிப்புக்கு என்ன செய்வார்கள்?’ என்று கேட்டால், அதற்கு யாரிடமும் பதில் இல்லை. 

ரத்தவியல் நிபுணர் ரேவதி ராஜ் ஸ்டெம் செல் தெரபி குறித்துச் சொல்கிறார்... ''தொப்புள்கொடி ரத்தத்திலிருந்து (Umbilical cord blood)

எடுக்கப்படும் ஸ்டெம் செல்கள் மட்டுமன்றி, உடலின் பல பகுதிகளிலிருந்தும் ஸ்டெம் செல்களை எடுக்கலாம். அப்படி ஒருவருடைய உடலிலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்கள், அந்த நோயாளிக்குப் பொருந்துகிறதா என்பதை தெரிந்துகொள்ள ஹெச்.எல்.ஏ (Human Leukocyte Antigen - HLA) என்ற பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ரத்தம் தொடர்பான நோய்களுக்கு மட்டும்தான் ஸ்டெம் செல் தெரபி மூலம் சிகிச்சையளிக்க முடியும். உதாரணமாக, லுகேமியா (Leukemia), தலசீமியா போன்றவை. முதுகெலும்பு (Spinal Card) பிரச்னை, மூளைப் பிரச்னை, இதயக் கோளாறு, நரம்புக் கோளாறு போன்றவற்றுக்கெல்லாம் இதில் தீர்வு காண முடியாது. 

இனிமேல் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு அவசியமற்றது என்பது என்னுடைய கருத்து. காரணம், கம்யூனிட்டி பேங்கிங் முறையின் அடுத்த கட்டத்தை மருத்துவம் எப்போதோ எட்டிவிட்டது. ஹெச்.எல்.ஏ டெஸ்டின் முடிவில் பாதிக்கப்பட்டவரின் செல்கள், டோனரின் செல்களோடு பாதி ஒத்துப்போனாலே போதுமானது. பொதுவாக, அம்மா அப்பாவின் செல்களே குழந்தைக்குப் பாதி ஒன்றிப்போகும். அவர்களே குழந்தைகளுக்குக் கொடுத்துவிடலாம். அதேபோல தொப்புள்கொடி ரத்தத்திலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல் மூலம் ஒருவருக்கு சிகிச்சையளிக்கும்போது, புது ரத்தம் உற்பத்தியாக நான்கு வாரங்கள் ஆகும். இதுவே, பாதி பொருந்திப்போகும் ஒருவரின் ஸ்டெம் செல்லைப் பொருத்தினால், இரண்டு வாரங்களிலேயே புது ரத்தம் உற்பத்தியாகிவிடும். ஆக, என்னைக் கேட்டால் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு ஒருவகை வியாபார தந்திரமே. எனவேதான், மருத்துவம் அதைப் பரிந்துரைப்பதில்லை."