Published:Updated:

தூக்கம் எனும் மாமருந்து

தூக்கம் எனும் மாமருந்து
News
தூக்கம் எனும் மாமருந்து

தூக்கத்தைத் தூண்டும் மெலட்டோன்... தூக்கமின்மை பிரச்னைக்கு தீர்வு என்ன..?

தூக்கம்தான் நம் வாழ்வை முழுமையாக்குகிறது.  ஆழ்ந்த  தூக்கம் ஆரோக்கியத்தின் அடிப்படை. தூக்கத்தில்தான் நமது உடல் தனக்குத் தேவையான ஆற்றலைத் திரட்டி, உறுப்புகளைப் புத்துணர்வாக்கி, அடுத்தநாளை எதிர்கொள்ள நம்மைத் தயாராக்குகிறது. சோர்வடைவதால் தூங்குகிறோம் என நினைக்கிறோம். உண்மையில், சோர்வடையாமல் புதுப்பித்துக்கொள்ளவே நாம் உறங்குகிறோம்.

மனதைக் கட்டுப்படுத்தவும், கோபம், துக்கம் ஆகியவற்றைக் குறைக்கவும் இயற்கையாகப் படைக்கப்பட்ட செயலே தூக்கம். இன்றைய கேட்ஜெட்ஸ் உலகில் பலரும் பின்னிரவுகளில்தான் தூங்குகிறார்கள். இளைய தலைமுறையினர் மொபைலிலும் இணையத்திலும்தான் வாழ்க்கையையே நடத்துகின்றனர். இதனால், தூக்கமின்மை பிரச்னை அதிகரித்துள்ளது. தூக்கமின்மையால் பல பாதிப்புகள் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

தூக்கம் எனும் மாமருந்து
தூக்கம் எனும் மாமருந்து

தூக்கத்தைத் தூண்டும் மெலட்டோனின்

*நம் உடலின் உறக்கச் சுழற்சி, அதாவது நாம் உறங்கும் நேரம், எழும் நேரம் ஆகியவற்றைத் தீர்மானிப்பது மெலட்டோனின் எனும் ஹார்மோன்தான். இந்த ஹார்மோன் இரவில் சுரக்க ஆரம்பித்து காலையில் நின்றுவிடும். நாம் மெலட்டோனின் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளை இரவில்
உண்ண வேண்டும். இதனால், சீக்கிரம் உறங்கிவிடலாம்.

*இரவில் அதிக அளவு கிளைசமிக் இண்டெக்ஸ் (Glycemic Index)  உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகளில் வைட்டமின் பி6 அதிகம் இருக்கும். இது, மெலட்டோனினைச் சுரக்கச் செய்கிறது.

*இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு, பால் குடிப்பது, மெலட்டோனினைச் சுரக்கச் செய்கிறது. நம் உடலில் உள்ள கால்சியம், தசைகளைத் தளர்வடையச் செய்வதால் தூக்கம் வரும். எனவே, கால்சிய சத்துக் குறைந்தாலும், தூக்கம் வருவதில் பாதிப்பு ஏற்படுகிறது.  

*தேன் நம் உடலில் டிரிப்டோபான் (Tryptophan) எனும் அமினோஅமிலத்தைச் சுரக்கச் செய்யும். இதுவே, மெலட்டோனினைச் சுரக்கச் செய்யும் வேதிப்பொருள்களில் ஒன்றாகும்.  இரவு பால் குடிக்கும் போது, அதில் இரண்டு மூன்று டீஸ்பூன் தேன் கலந்து குடிப்பதன் மூலம் நல்ல தூக்கம் வரும்.

*ஓட்ஸ், கார்ன் ஃபிளேக்ஸ் உள்ளிட்ட உணவுகளும் டிரிப்டோபானைச் சுரக்கச் செய்கின்றன. மேலும், நம் மனதை உற்சாகப்படுத்தும் செரோடோனின் (Serotonin)  எனும் ஹார்மோன், ஓட்ஸ் உண்பதன் மூலம் சுரக்கிறது.

*பொட்டாசியமும் மக்னீசியமும் தசைகளைத் தளர்வடையச் செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டும் நிறைந்துள்ள வாழைப்பழத்தைத் தூங்கும் முன்பு உண்ணலாம். இதனால், செரிமானமும் மேம்படும்.

*பாதாமில் மக்னீசியம் நிறைந்துள்ளது. இரவில் பாதாம் பால் குடிக்கலாம்.

ஆழ்ந்த தூக்கத்துக்கு... 

*வெளிச்சத்தில் மெலட்டோனின் சுரக்காது. அதனால், இருட்டான அறையில்தான் தூங்க வேண்டும்.

*ஏதேனும் ஒரு சொல்லை மந்திரம் போல் முணுமுணுத்துக்கொண்டே இருக்கலாம்.

*இரவு சாப்பிட்டுவிட்டு, அரை மணி நேரம் கழித்துக் கொஞ்ச நேரம் மிதமான நடைப்பயிற்சி செய்யலாம். இது, தூக்கத்தைத் தூண்டும்.

*மனதுக்கு இதமான பாடல்களைக் கேட்கலாம். ஹெட்போன் அணிந்து கேட்கக் கூடாது. அதிக சப்தம் இல்லாமல் 5-10 நிமிடங்கள் பாடல்களைக் கேட்டுவிட்டு, உறங்கச் செல்லலாம்.

*இடதுகைப் பக்கமாக உறங்கினால் நெஞ்செரிச்சல் வராது. செரிமானம் மேம்படும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

*தூங்குவதற்குக் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே, டிவி, மொபைல், கம்ப்யூட்டர் ஆகியவற்றை ஆஃப் செய்துவிட வேண்டும். காரணம், நாம் பார்க்கும் ஒளி பிம்பங்கள், நம் விழித்திரையில் இருந்து அகலாதவரை, மெலட்டோனின் சுரப்பு நடக்காது.

- ந.ஆசிபா பாத்திமா பாவா,

படம்: சூ.நந்தினி

தூக்கத்தைக் கெடுக்கும் உணவுகளும், பழக்கங்களும்:

*காஃபின் (Caffeine) உள்ள உணவு, காபி, டீ போன்றவற்றைத் தூங்குவதற்கு  இரண்டு மணி நேரம் முன்பு எடுத்துக்கொள்ள கூடாது.

*இரவில் ஃபாஸ்ட் ஃபுட் கூடவே கூடாது. பர்கர், பீட்ஸா போன்றவை தூக்கத்தைத் துரத்தும் வில்லன்கள்.

*மைதா உணவுகளும் தூக்கத்தைப் பாதிக்கும்.

*கார்பனேடட் பானங்கள், கோலா, சோடா கலந்த பானங்கள் தூக்கத்தையும் பாதிக்கும் செரிமானத்துக்கும் தீங்கு.

*உறங்கும் நேரத்தில் அதிகமாகத் தண்ணீரோ, நீர்ச்சத்து மிகுந்த உணவுகளோ எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம். காரணம், இரவில் சிறுநீர் கழிக்க எழ வேண்டியது இருக்கும். இது தூக்கத்துக்கு இடையூறாக மாறலாம்.

தூக்கம் எனும் மாமருந்து
தூக்கம் எனும் மாமருந்து

தூக்கமின்மை உருவாக்கும் பாதிப்புகள்

*மனம் சார்ந்த பிரச்னைகள்

*ஜீரண மண்டலப் பிரச்னைகள்

*இதய நோய், ஞாபக மறதி

*கோபம், எரிச்சல், மனஅழுத்தம்

*உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்