Published:Updated:

இனி எல்லாம் சுகமே - 19

இனி எல்லாம் சுகமே - 19
பிரீமியம் ஸ்டோரி
இனி எல்லாம் சுகமே - 19

செரிமானம் அறிவோம்!

இனி எல்லாம் சுகமே - 19

செரிமானம் அறிவோம்!

Published:Updated:
இனி எல்லாம் சுகமே - 19
பிரீமியம் ஸ்டோரி
இனி எல்லாம் சுகமே - 19
இனி எல்லாம் சுகமே - 19

ர்க்கரை நோய், இதய நோய்கள் எல்லாம் இந்தியர்களுக்கு வராது. அவை பணக்கார நோய்கள். மேலை நாட்டினருக்கு மட்டும்தான் வரும். இப்படித்தான், 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் பலர் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், வேலைப்பளு, வாழ்வியல் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் அசுர வேகத்தில் லைஃப் ஸ்டைல் நோய்கள் வந்துவிட்டன. பெருங்குடலை பொறுத்தவரை ஐ.பி.டி (Inflammatory Bowel Disease) மற்றும் ஐ.பி.எஸ் (Irritable Bowel Syndrome) என்ற இரண்டு நோய்களும் முக்கியமானவை. பலர் இரண்டையும் ஒரே நோய் எனக் கருதுகிறார்கள், அது தவறு.

அதென்ன ஐ.பி.டி?

நமது பெருங்குடலுக்குள் பல பில்லியன் கணக்கில் பாக்டீரியா வசிக்கின்றன. செரிமானத்துக்கு உதவுவதே இவற்றின் வேலை. இந்த பாக்டீரியா திடீரென பெருங்குடலுக்கு எதிரியாகச் செயல்பட்டால், பெருங்குடலில் ரணம் ஏற்படும். இதுதான் ஐ.பி.டி. ஏன் இந்த பிரச்னை வருகிறது? எதனால் பாக்டீரியா பெருங்குடலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பன குறித்து இன்று வரை தெளிவான மருத்துவ விளக்கம் கிடையாது. ஆனால், மனஅழுத்தமே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கக்கூடும் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

நமது முந்தைய தலைமுறைக்கு இவ்வளவு மனஅழுத்தம் கிடையாது. நம் அப்பாவுக்கு நம்மைவிட மன அழுத்தம் குறைவு. தாத்தாக்களுக்கு நமது அப்பாவைவிட மனஅழுத்தம் குறைவு. உறவுகளைப் பிரிந்து அயல் மண்ணில் வேலை பார்க்கும் ஸ்ட்ரெஸ்ஸோ, கலிஃபோர்னியாவில் இருக்கும் கிளையன்டுக்கு இங்கிருந்து நள்ளிரவில் வேலைசெய்யும் ஸ்ட்ரெஸ்ஸோ, நிறுவனத்தின் டார்கெட்டை முடிக்க அரக்கப்பறக்க வேலைசெய்ய வேண்டிய ஸ்ட்ரெஸ்ஸோ நமது முன்னோர்களுக்கு இல்லை. எனவேதான், இந்த தலைமுறையில் ஐ.பி.டி உள்ளிட்ட நோய்கள் அணிவகுக்கின்றன.

50 வயதுக்கும் கீழே இருப்பவர்களுக்கு, மலத்தில் ரத்தம் வருதல், சளியுடன் மலம் வருவது, பேதி, வயிற்றுவலி, திடீர் எடைக்குறைவு போன்ற பிரச்னைகள் நீண்ட நாட்களாகத் தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம். குடலில் ஏற்படும் ரணத்தைச் சரிசெய்ய மாத்திரை, மருந்துகள் உள்ளன. இது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே ஐ.பி.டி பிரச்னைதானோ எனக் கவலைப்பட வேண்டாம். இந்த அறிகுறிகள் இருந்தாலும்கூட சுமார் ஐந்து சதவிகிதம் பேருக்குத்தான் ஐ.பி.டி பிரச்னை இருக்கும். அனுபவம் உள்ள மருத்துவர், ரத்தசோகை பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளைப் படிப்படியாகச் செய்து, ஐ.பி.டி பிரச்னை உள்ளதா? இல்லையா எனக் கண்டுபிடிக்க முடியும். எல்லோருக்கும் பரிசோதனை மேற்கொள்வதும் தவறு. பிரச்னை இருப்பவருக்குப் பரிசோதனை மேற்கொள்ளாமல் விட்டுவிடுவதும் தவறு என்பதால், மருத்துவர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இனி எல்லாம் சுகமே - 19

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மறைக்க வேண்டிய பிரச்னை அல்ல ‘மூலம்’

இன்னொறு முக்கியமான பிரச்னை மூலம். தமிழகமெங்கும்  மின்சாரக் கம்பங்களில் ‘மூலம்’ நோட்டிஸ் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்தால், தமிழகத்தில் பலருக்கும் மூலம்தான் பிரதான வியாதியா எனச் சந்தேகம் வரலாம். ஆனால், மூலம் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் ஆரம்பத்திலேயே மருத்துவமனைக்கு வருவது கிடையாது. எங்கெங்கோ தனியாக ரூம் போட்டு சிகிச்சை பார்க்கும் போலி மருத்துவர்களிடம் மாட்டிக்கொண்டு, நிலைமை மோசமான பிறகே மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

ஆசனவாயும் நம் உடல் உறுப்புதான். இதில் பிரச்னை என்றால் வெட்கப்பட, அவமானப்பட, கூச்சப்பட ஏதும் இல்லை. உடலிலேயே மிக சென்ஸிட்டிவ்வான நரம்புகள் ஆசனவாயில் இருக்கின்றன. சோப் மாற்றுவது, குளிக்கும்போது பிரஷ் வைத்து அந்த இடத்தில் தேய்ப்பது போன்றவை சில சமயங்களில் அலர்ஜியை ஏற்படுத்தும். அப்போது அங்கே சொறியும்போது ரத்தநாளங்கள் பாதிக்கப்படலாம். ரத்த நாளங்களில் வலுக் குறையும்போது மூலம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். ஆசனவாயில் ஏதாவது தொற்றுக்கள் ஏற்பட்டாலும் மூலம் வரும்.

மூலத்தில் உள் மூலம், வெளி மூலம் என இரண்டு வகை உள்ளன. ஆசனவாயில் இருந்து கறுப்பு நிறத்தில் வெளியே வரும் தசைகள், சில சமயம் முடிச்சுப்போட்டது போல சுருண்டுகொண்டு, மீண்டும் உள்ளே செல்லாது. இதனை, வெளி மூலம் என்பார்கள். வலி மோசமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஆசனவாய் பிளவும் (Anal Fissure) ஏற்படலாம். இவர்களுக்கு, கண்ணாடியை வைத்து ஆசனவாயில் கீறியது போன்று இருக்கும். மலம் கழிக்க ஆரம்பிக்கும்போது உண்டாகும் வலி, அதன் பின்னர் பல மடங்கு அதிகமாகும். உள்மூலத்தில் பல நிலைகள் உள்ளன. இவற்றுக்கு லேசர் சிகிச்சை, ஸ்டாப்ளர், ரப்பர் பேண்டு சிகிச்சை போன்றவை இருக்கின்றன.

மூலம் வந்தால் என்ன நடக்கும்?


ஆசனவாயில் ரத்தநாளங்கள் வீக்கம் அடைவதால், ரத்தம் கசிய ஆரம்பிக்கும். இதனால், மலத்தில் ரத்தம் வெளியேறும். முற்றிய நிலையில் ஆசனவாய் வழியாக ரத்தநாளங்கள் சதையோடுச் சேர்த்தது போல வெளியே தள்ளப்படும். இதனால், மலம் கழிக்கவே  மிகவும் கஷ்டமாக இருக்கும்.

உடல் பருமனாக இருப்பவர்கள், உட்கார்ந்தே இருப்பவர்கள், ஓட்டுநர்கள், அதிக நேரம் நின்று கொண்டே இருப்பவர்களுக்கு ஆசனவாய் அருகே இருக்கும் ரத்தநாளங்கள் பலவீனமடைவதால், மூலம் வர வாய்ப்பு இருக்கிறது. மூலத்துக்கு மிக முக்கியக் காரணமே மலச்சிக்கல்தான். மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மூலம் பிரச்னை ஏற்பட்டால், ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவமனைக்கு வந்துவிட்டால் பெரும்பாலும் அறுவைசிகிச்சை தேவைப்படாது. மாத்திரை, மருந்துகள் மூலமே சரி செய்துவிடலாம். பயம் வேண்டாம்.

- தொடரும்

இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்

உலகம் முழுவதும் சுமார் 15 சதவிகிதம் மக்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது. காலையில் உணவைச் சாப்பிட்டு முடித்தவுடன், வயிற்றுவலி ஏற்பட்டு, உடனடியாக டாய்லெட்டுக்கு ஓடிச்சென்று மலம் கழித்துவிட்டு வருகிறீர்களா? இப்படியே தொடர்ந்து உங்களுக்கு நடந்துகொண்டிருந்தால், ஐ.பி.எஸ் எனச் சொல்லப்படும் ‘இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்’ பிரச்னை எனப் புரிந்துகொள்ளுங்கள்.

வளரும் குழந்தைகள், முதியவர்கள் போன்றோருக்கு அடிக்கடி இந்தப் பிரச்னை இருக்கும். பெரும்பாலும், தற்காலிகமானதாகத்தான் ஐ.பி.எஸ் ஏற்படும். இதற்குக் கவலைப்பட தேவை இல்லை. எதனால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது என அறிந்து, அதற்குரிய சிகிச்சை எடுத்தால் பிரச்னை சரியாகிவிடும். ஐ.பி.எஸ் பிரச்னை ஆபத்து இல்லாத தொந்தரவுதான். ஆனால், மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுதல், அனீமியா, எடை குறைப்புக்கு முயற்சி செய்யாமலே திடீர் உடல் எடை இழப்பு போன்றவை நிகழ்ந்தால், மருத்துவரை அணுகுவது அவசியம். தூக்கம் உடலுக்கு அவசியம். தூக்கத்தின் போதுதான்  தசைகள் ரிலாக்ஸ் ஆகும். அடிக்கடி தூக்கத்தினிடையே எழுந்து மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால், பெருங்குடலில் ஏதோ பிரச்னை எனப் புரிந்துகொண்டு, மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

ஐ.பி.எஸ் பிரச்னை, அலர்ஜி காரணமாகவும் ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளுக்குத் தரப்படும் மெட்ஃபார்மின், சிலருக்கு அலர்ஜியாக மாறலாம். ஒரு சிலருக்கு பால் பொருட்கள் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். இதனை, ‘லாக்டோஸ் இ்ன்டாலரன்ஸ்’ எனச் சொல்வார்கள். இந்த வகை அலர்ஜி உள்ளவர்கள், குறிப்பிட்ட அந்த உணவுப்பொருளையோ மாத்திரை மருந்துகளையோ தவிர்த்தால், தானாகவே பிரச்னை சரியாகிவிடும். கணையச் சுரப்பியில் ஏற்படும் கோளாறு, பித்தப்பை அகற்றல் உள்ளிட்டவற்றால், ஐ.பி.எஸ் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.