Published:Updated:

கோடையில் சளித் தொந்தரவு ஏற்படுவது ஏன், தப்பிப்பது எப்படி?

சளித் தொந்தரவு

கோடையில் சளித் தொந்தரவு ஏற்படுவது ஏன், தப்பிப்பது எப்படி?
கோடையில் சளித் தொந்தரவு ஏற்படுவது ஏன், தப்பிப்பது எப்படி?

கோடையின் மிகப்பெரிய அச்சுறுத்தல் வெயிலும் வியர்வையும்! வேலைச் சூழல் காரணமாக பகலில் வெளியே சென்றால், நம்மையும் அறியாமல் ஜூஸ் கடைகளையும் சர்பத் கடைகளையும் கண்கள் தேடத் தொடங்கிவிடும். வீடு திரும்பியதும், `ஜில்லென்று ஒரு டம்ளர் நீர்மோர் கிடைக்காதா?’ என ஏங்கவைக்கும். ஆனால், சிலருக்கோ வெயில் காலத்திலும்கூட சளித் தொந்தரவு, இருமல் பிரச்னை போன்ற பாதிப்புகள் ஏற்படும். சளி பிடிப்பதோடு மூக்கடைப்பு, இருமல், களைப்பு, தலைவலி போன்ற தொல்லைகளும் சேர்ந்து பாடாகப்படுத்திவிடும். வெயில் காலத்தில் சளி பிடிப்பதற்கான காரணங்கள், அதைத் தடுக்கும் வழிமுறைகள் பற்றில் கூறுகிறார் பொதுநல மருத்துவர்  செல்வராஜன்.

``மழை, கோடை என இரண்டு காலங்களிலும் சளி, இருமல் தொந்தரவுகள் அதிகமிருக்கும். கைகளைக் கழுவாமல் சாப்பிடுவது, கண்களைத் துடைப்பது போன்றவை நோய்த்தொற்றுக்கான முக்கியக் காரணங்கள். நோய்த்தொற்று ஏற்பட்டதும் உடல், அதற்கு எதிர்வினை ஆற்றத் தொடங்கும். அந்த எதிர்வினைதான் சளி, இருமலாக வெளிப்படும். இவற்றை ஆன்டி-பயாடிக்ஸ் மருந்துகள் மூலம் சரிசெய்ய நினைப்பது தவறு. சளியோ, இருமலோ அது எத்தனை நாள்களுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். ஒருவரின் உணவும், பழக்கவழக்கங்களுமே நோய் எதிர்ப்புச் சக்தியை நிர்ணயிக்கின்றன. அவற்றை கவனமாகப் பின்பற்றினாலே, சளி போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபட்டுவிடலாம். அப்படி கவனமாக இருக்கவேண்டிய சில விஷயங்கள்...

* கைகழுவுங்க பாஸ்!

சாப்பிடுவதற்கு முன்னர் கைகழுவுவதுபோலவே, வேறு சில சூழல்களிலும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். வீட்டிலிருக்கும் செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகோ அல்லது அவற்றைச் சுத்தம் செய்த பிறகோ கை கழுவ வேண்டும். காலையில் படுக்கையிலிருந்து எழுந்த பிறகும், கழிப்பறை சென்று வந்த பிறகும், சின்னக் குழந்தைகளைத் தூக்குவதற்கு முன்பும் நன்றாகக் கைகளைக் கழுவ வேண்டும். ஏதேனும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்களைக் கவனித்துக்கொள்ளும்பட்சத்தில், அடிக்கடி கை கழுவ வேண்டும். உங்களுக்கே சளி, இருமல் தொந்தரவு இருக்கிறது என்றால், முடிந்தவரை மற்றவர்களைத் தொடாமல் இருக்கவும். கை கழுவும்போது, பொறுமையாக கையின் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர்விட்டு கழுவ வேண்டும். வெளியே செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டால், ஹேண்ட் சானிட்டைஸர்ஸ் (Hand sanitizers) பயன்படுத்தலாம்.

* உறுதிக்கு உதவும் திரவ உணவுகள்!

கோடையில், உடல் வறட்சி ஏற்படும் வாய்ப்பு அதிகமென்பதால், தினமும் நான்கு முதல் ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பகல் நேரத்தில் வெயிலில் செல்லும்போது இளநீர், ஜூஸ், பானகம், லெமன் சோடா குடிக்க வேண்டும். ஜூஸாகக் குடிக்கும்போது பழத்தின் நார்ச்சத்துகள் குறைந்து, குறைவான சத்துகளே உடலுக்கு கிடைக்கும். இதனால் `ஜூஸாகக் குடிக்கலாமா... பழத்தை அப்படியே சாப்பிடலாமா?’ என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஜூஸுக்காகப் பழங்களை அரைக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்வதே இதற்குச் சிறந்த தீர்வு. சில பழங்களில் தோலில்தான் சத்துகள் இருக்கும் என்பதால், தோலுடன் சேர்த்து அரைக்க வேண்டும்.


* வெளியே செல்லும் நேரத்தை குறைத்துக்கொள்ளலாம்!

நாம் சுவாசிக்கும் காற்றில் பெரும்பாலும் மாசு நிறைந்து காணப்படுகிறது. பகல் நேரத்தில் வெயிலில் செல்லும்போது நச்சுக்காற்று, நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் என்பதால், அதைத் தவிர்ப்பது நல்லது. (குறிப்பாக, பகல் 12 மணி முதல் 4 மணி வரை.) வேலை நிமித்தமாக வெளியே செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டால் ஜூஸ் வகைகள், தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு, லெமன் ஜூஸ், பானகம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

* சீசனல் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்!

சீசனல் உணவுகளின் சிறப்புகளே, அவை அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும்  உடல் உபாதைகளுக்கு தீர்வாக இருப்பதுதான். மாம்பழம், வெள்ளரி, தர்பூசணி, இளநீர், பதநீர், நுங்கு போன்ற சீசனல் உணவுகளைக் கண்டிப்பாகச் சாப்பிடுங்கள்.

* செயற்கை பானங்களுக்கு `நோ' சொல்லலாம்!

தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றுதான் சளி ஏற்பட மிக முக்கியக் காரணம். வெயிலில் சென்றுவிட்டு தொண்டை குளிர்ச்சிக்காக ஐஸ்க்ரீம், ஐஸ் வாட்டர், ஐஸ் சேர்த்த ஜூஸ் போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது. செயற்கையான இந்தக் குளுமை, நோய்த் தொற்றுகளுக்கு வழிவகுக்கும். இதேபோல, கடைகளில் விற்கப்படும் இனிப்புப் பொருள்களுக்கும் `நோ' சொல்லவேண்டியது அவசியம். வீட்டில் ஹைஜீனிக்காகச் செய்யப்படும் பட்சத்தில், பிரச்னையில்லை.

மேற்கூறியவை எல்லாம், சளித் தொந்தரவுகள் ஏற்படாமல், உடலை தற்காத்துக் கொள்வதற்காகத்தான். ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். காரணம், அது உடல் வெளிக்காட்டும் நோய் எதிர்ப்புச் சக்திதானே தவிர, தனியான ஒரு நோய் அல்ல.

'அப்படியே விட்டா 7 நாள், மாத்திரை சாப்பிட்டா ஒரு வாரம்' என்று இந்த நோய்த்தொற்றுகளுக்கு ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும்கூட. `சிலர் சரி செய்கிறேன்...' என நினைத்துக்கொண்டு மருந்து, மாத்திரைகள், சிரப், ஆன்டி-பயாடிக்ஸ் எடுத்துக்கொள்வார்கள். அது தவறான பழக்கம். ஒரு வாரத்துக்கும் மேலாக, தொண்டையில் தீவிரமாக வலி எடுத்தும் சளித் தொந்தரவின் பாதிப்புகள் குறையாதபட்சத்தில், பொது மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் மருத்துவர் செல்வராஜன்.