Published:Updated:

ஸ்வீட் எஸ்கேப் - 20

ஸ்வீட் எஸ்கேப் - 20
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்வீட் எஸ்கேப் - 20

சர்க்கரையை வெல்லலாம்

ஸ்வீட் எஸ்கேப் - 20

குழந்தையின்மைக்காகச் சிகிச்சைக்கு வந்தவருக்குச் சர்க்கரை நோய் இருக்கிறதா என்று பரிசோதித்திருக்கின்றனர். இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அளவு அதிகமாக இருந்ததால், அதைச் சரிசெய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர். “சர்க்கரைக்கும் இனப்பெருக்க மண்டலத்துக்கும் என்ன தொடர்பு டாக்டர்?” என்று என்னிடம் கேட்டார் அவர்.

சர்க்கரை அளவு அதிகமாவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றித் தொடர்ந்து சொல்லிவருகிறேன். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது ரத்தக் குழாய்களையும் நரம்புகளையும் பாதிக்கிறது. இது, மறைமுகமாக ஆண், பெண் இருவருக்குமே பாலியல் செயல்திறனைக் குறைக்கிறது. எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களுக்குப் பாலியல் திறன் குறைவு ஏற்படுவதைத் தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே நேரம், பாலியல் செயல்திறன் குறைவுக்கு சர்க்கரை  நோய் மட்டும் காரணம்அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். பயம், பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் பாலியல் செயல்திறன் குறைவு ஏற்படலாம். எதனால் பாதிப்பு என்பதைத் தகுந்த மருத்துவரை அணுகிக் கண்டறிவது முக்கியம்.

சமீபத்திய ஆய்வுப்படி, சர்க்கரை நோயாளிகளில் 50 சதவிகித ஆண்கள் விரைப்புத்தன்மைக் குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். சர்க்கரை அளவு அதிகரிப்பால் ஆண்களுக்கு இனப்பெருக்க மண்டலத்தில் உள்ள ரத்தக் குழாய், நரம்புகளை பாதிப்படையச்செய்து, சீரான ரத்த ஓட்டத்தைத் தடைப்படுத்துகிறது. இதனால், போதுமான அளவில் விரைப்புத்தன்மை ஏற்படுவது குறைகிறது. இது, நீண்ட காலம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சகஜமாகக் காணப்படும் பிரச்னை. ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை பொதுவாகச் சர்க்கரை நோயாளிகள் மத்தியில் காணப்படும் பிரச்னை. இதனுடன் சிகரெட் புகைத்தல், மது அருந்துதல் போன்றவையும் சேரும்போது, பிரச்னை மேலும் தீவிரமாகிவிடுகிறது.

சில ஆண்களுக்கு ரெட்ரோகிரேட் எஜாக்குலேஷன் (Retrograde ejaculation) எனும் பிரச்னை ஏற்படும். அதாவது, உடலுறவின் உச்சத்தின்போது, விந்தணு வெளியேறாமல், திரும்பிப் பாய்ந்து சிறுநீர்ப்பையை அடையும். இதனால், உச்சம் அடைவதில் பாதிப்பு இருக்காது என்றாலும், குழந்தைப்பேறுக்குத் தடை ஏற்படும்.

ஸ்வீட் எஸ்கேப் - 20

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பாதிப்புகள்

இனப்பெருக்க உறுப்புக்களில் உள்ள ரத்த நாளங்கள், நரம்புகள் பாதிக்கப்படுவதால், வெஜைனா உலர்ந்துபோகும் பிரச்னை ஏற்படும். இதனால், தாம்பத்திய உறவு மிகவும் சிரமமானதாக மாறிவிடும். நரம்பு பாதிப்பு காரணமாக, உணர்ச்சி அடைவதில் குறைபாடு ஏற்படலாம். இதனால், உச்சம்அடைவதில் சிரமம் அல்லது இயலாமை ஏற்படலாம்.

இருவருக்கும் ஏற்படக்கூடி பாதிப்புகள், தீர்வுகள்!

சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு, சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம். இதனால், இவர்களால் முழுமையான தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள முடியாது. ஆண்களுக்குச் சிறுநீர் கழிக்கும்போதும், விந்தணு வெளிப்படும்போதும் அசௌகரியமான நிலை ஏற்படும். இவை எல்லாம் தற்காலிகமானவைதான். சரியான சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் பிரச்னையில் இருந்து விடுபட முடியும்.

சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று உள்ள காலத்தில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.எஸ்.டி.டி எனப்படும் பால்வினை நோய்கள் இவர்களுக்கு எளிதில் தொற்ற வாய்ப்புஉள்ளது. இதற்கு, பிறப்புறுப்பு உலர்வது, காயங்கள் ஏற்படுவது ஆகியவை முக்கியக் காரணங்கள். எனவே, இவர்கள் பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ள வேண்டும். தொடர்ந்து ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, டெஸ்டோஸ்டிரான் அளவு குறையும். இது செக்ஸ் மீதான விருப்பத்தை குறைத்துவிடும்.

நரம்புப் பாதிப்பு காரணமாக வலி அதிகமாக ஏற்படும். தாம்பத்திய உறவு மீதான வெறுப்பு ஏற்பட இந்த வலியே காரணமாகிவிடும். தாம்பத்திய உறவு ஓர் உடற்பயிற்சி போன்றது என்பதால், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு குறைந்து, ஹைப்போகிளைசீமியா ஏற்படலாம். எனவே, இவர்கள் தாம்பத்தியத்துக்குப் பிறகு ஹைப்போகிளைசீமியா அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

இது தவிர, சர்க்கரை நோயாளிகளுக்கு, குறிப்பாக சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காதவர்களுக்கு, ப்ரோலாக்டின், டெஸ்டோஸ்டிரான், தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன்கள் சுரப்பில் பாதிப்பு ஏற்படலாம். எனவே, இவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் சிலர் இதயப் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், மனப்பதற்றம், மனஅழுத்தம், வலி, அலர்ஜி என வேறு வேறு பாதிப்புகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள்கூட ஆண்மைக் குறைவை ஏற்படுத்தலாம். இந்த மருந்துகளை மாற்றுவதன் மூலம், பாதிப்பில் இருந்து தப்பலாம்.

மருத்துவரை எப்போது சந்திப்பது?

விரைப்புத்தன்மை உள்ளிட்ட பிரச்னைகள் தோன்றும்போது, மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.உடல்ரீதியான பரிசோதனைகளைச் செய்த பின்பு, ஹார்மோன் அளவைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை உள்ளிட்டவற்றை மருத்துவர் பரிந்துரைப்பார்.

- தொடரும்

டயாபடீஸ் டவுட்

“எனக்கு 45 வயதாகிறது. ஐந்து ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை எடுத்துவருகிறேன். சமீபகாலமாக, தாம்பத்திய வாழ்வில் நாட்டம் குறைந்துகொண்டே செல்கிறது. முன்பு போல என்னால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை. அதனால், எனக்குள் ஒருவித பயம், வெட்கம், அவமானத்தை உணர்கிறேன். இதுபற்றி யாரிடமும் பேச தயக்கமாக இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?”

- பெயர் வெளியிட விரும்பாத வாசகர்

“இது உங்களுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள பிரச்னை அல்ல. சர்க்கரை நோயாளிகளில் பலர் இதுபோன்ற பாதிப்புடன்தான் வாழ்கின்றனர். இதற்கு ஒரே தீர்வு, உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை மருத்துவரிடம் மனம் திறந்து வெளிப்படுத்துவதுதான். விரைப்புத்தன்மை குறைபாடு அல்லது வேறு பாலியல் செயல்திறன் குறைபாடுகளை மருத்துவரிடம் சொல்வதன் மூலம், என்ன பாதிப்பு என்று கண்டறிந்து சிகிச்சை பெற்று, பாதிப்பில்இருந்து விடுபடலாம். விரைப்புத்தன்மை பிரச்னைக்கு மாத்திரைகள், ‘வேக்குவம் டியூப்’ எனப் பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. இதனுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைப்பது, உடற்பயிற்சி செய்வது, சிகரெட் பழக்கத்தைக் கைவிடுவது ஆகியவை மூலம் பாலியல் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.”