Published:Updated:

இனி எல்லாம் சுகமே - 21

இனி எல்லாம் சுகமே - 21
பிரீமியம் ஸ்டோரி
இனி எல்லாம் சுகமே - 21

செரிமானம் அறிவோம்!

இனி எல்லாம் சுகமே - 21

செரிமானம் அறிவோம்!

Published:Updated:
இனி எல்லாம் சுகமே - 21
பிரீமியம் ஸ்டோரி
இனி எல்லாம் சுகமே - 21
இனி எல்லாம் சுகமே - 21

ல்லீரலை ஆங்கிலத்தில் ‘Liver’ (லிவர்) என்று சொல்வார்கள். ‘மனிதன் வாழ்வே (Live)r கல்லீரலில்தான் அடங்கியிருக்கிறது என்பதால்தான் இதற்கு லிவர் என்று பெயர’ என மருத்துவர்கள் சுவாரஸ்யமாகச் சொல்வார்கள். ஆம், செரிமான மண்டலத்தின் இதயம், மூளை எல்லாமே கல்லீரல்தான். மார்புக்கூட்டின் வலதுபக்கம் ஒன்றரைக் கிலோ எடை அளவுக்குக் கல்லீரல் பாதுகாப்பாகப் பொதிக்கப்பட்டிருக்கிறது. தோலுக்கு அடுத்ததாக, உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான்.

கல்லீரலின் செயல்பாடுகளைப் பற்றி விரிவாக விளக்கவேண்டும் என்றால், 20 எபிசோடுகள்கூடப் போதாது. ஏனெனில், சுமார் 500-க்கும் அதிகமான, முக்கியமான பல்வேறு வேலைகளை தினமும் செய்கிறது கல்லீரல்.

தலைக்குத் தேய்க்கும் தைலமோ, ஆஸ்துமாவுக்கு எடுத்துக்கொள்ளும் இன்ஹேலரோ, சாப்பிடும் உணவோ,  தண்ணீரோ, மாத்திரையோ அனைத்தும் கல்லீரலுக்குத்தான் செல்கின்றன. எந்த இடத்தில் என்ன தேவை, எதை, எங்கே, எப்போது எவ்வளவு அனுப்ப வேண்டும், எதனை வெளியேற்ற வேண்டும் என எல்லாவற்றையும் முடிவு செய்யும் அதிகாரம் கல்லீரலிடம்தான் இருக்கிறது.

இயக்குநீர்கள் எனப்படும் ஹார்மோன்கள் பலவற்றையும் கையாளுவது கல்லீரல்தான். கல்லீரலில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படும். குறிப்பாக, ஆண், பெண் இருபாலருக்கும் செக்ஸ் ஹார்மோன்களைத் தயாரிப்பதிலும், சமச்சீராக வைப்பதிலும் கல்லீரல் முக்கியப் பங்காற்றுகிறது. சூரியனிடம் இருந்து கிடைக்கும் வைட்டமின்-டியை உடலுக்கு ஏற்றவாறு மாற்றுவதும் கல்லீரலின் பணியே! வைட்டமின்-ஏ வை  சேர்த்துவைத்தல், கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்தல், கொலஸ்ட்ராலில் இருந்து ஹார்மோனைகளைத் தயாரித்தல், குளுக்கோஸை சேகரித்து வைத்தல், புரதச்சத்தைத் தயாரித்தல்,  இரும்புச்சத்தைத் தேக்கிவைத்தல், வைட்டமின்-கே தயாரித்தல், ரத்த உறைதலுக்கான பொருட்களைத் தயாரித்தல் போன்ற பல்வேறு முக்கிய வேலைகளையும் கல்லீரல்தான் செய்கிறது.

இனி எல்லாம் சுகமே - 21

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்பை உடல் ஜீரணிப்பதற்குத் தேவையான பித்த உப்பையும் கல்லீரல்தான் உற்பத்தி செய்கிறது. நமது உடலில் அனுதினமும் பல பில்லியன் ரத்தச் சிவப்பணுக்கள் அழியும். இவ்வாறு அழியும்போது அதில் இருந்து இரும்பு, புரதம் ஆகியவற்றைப் பிரித்தெடுத்து, மறுசுழற்சிக்குப் பயன்படுத்தி, அழுக்கான பிலிரூபினை (bilirubin) வெளியேற்றுவதும் கல்லீரல் செய்யும் முக்கியமான வேலைகளில் ஒன்று.

பொதுவாக, கல்லீரல் சுமார் 50-75 சதவிகிதம் அளவுக்குச் செயலிழக்கும்போதுதான், பரிசோதனைகளில் ஓரளவாவது கண்டுபிடிக்க முடியும். கல்லீரல் பிரச்னையால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பலருக்குக் கல்லீரல் செயலிழப்பு எனச் சொன்னால், அதிர்ச்சியடைவார்கள். “ஒரு மாதத்துக்கு முன்பு மாஸ்டர் ஹெல்த் செக் செய்தபோதுகூட கல்லீரலில் எந்தப் பிரச்னையும் இருப்பதாகச் சொல்லவில்லையே... உடல்நலனில்கூட எந்தப் பிரச்னையும் பெரிதாக வந்தது கிடையாதே” எனப் புலம்புவார்கள். கல்லீரலின் வரமும் சாபமும் இதுதான். தனக்கு எவ்வளவுதான் பிரச்னை இருந்தாலும், உடலின் இயக்கங்களில் எந்தச் சோர்வும் ஏற்படக்கூடாது என இடைவிடாமல் உழைக்கும் பண்பு கல்லீரலுக்கு உண்டு. 70 சதவிகிதம் கல்லீரல் செயல் இழந்தவர்கள்கூட ஆரோக்கியமாகப் பல வருடங்கள் வாழ முடியும். இது எல்லாம் கல்லீரலின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

கல்லீரலில் வீக்கமோ அல்லது வேறு ஏதாவது பிரச்னையோ ஏற்பட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும். இதனால், சாதாரண காய்ச்சல், சிறு காயங்கள் போன்றவைகூட குணமாவதற்கு நீண்ட காலம் தேவைப்படும். தேவைப்படும் நேரங்களில் குளுக்கோஸை வழங்க இயலாது. இதனால், வேலைகளைச் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஆண்களுக்கு ஆண்மைச் சக்தி குறையும். வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டு, எலும்புகள் வலுவிழக்கும். வைட்டமின் கே குறைவதால், உடலில் சிறு அடிபட்டாலும் ரத்தச் சேதம் அதிகமாக இருக்கும். பித்த உப்பு சரியாக வெளியேறாது என்பதால், கொழுப்பு உணவுகள் செரிக்கப்படாமல் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். பிலிரூபின் உடலில் தேங்குவதால் மஞ்சள்காமாலை ஏற்படும். உடல் சோர்வு ஏற்படும். சாப்பாட்டைப் பார்த்தாலே குமட்டல், வெறுப்பு ஏற்படும்; பசி இருக்காது. கல்லீரல் இருக்கும் பகுதியில் பயங்கரமான வலி ஏற்படும். தோலில் அரிப்புகள் அதிகமாகும். இது போன்ற பல கோளாறுகளுக்கும் கல்லீரல் பிரச்னையே காரணியாக இருக்கும்.

கல்லீரல் சுருக்க நோய் (Liver cirrhosis), ஃபேட்டி லிவர் முதலான கல்லீரல் கோளாறுகள் குறித்து அடுத்தடுத்து விரிவாகப் பார்க்கலாம்.

- தொடரும்

தவிர்ப்போம் ஹெபடைட்டிஸ்!

ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் கல்லீரலை பாதித்து பலவீனப்படுத்தும். சுகாதாரம் இன்றி இருப்பதால்தான் ஹெபடைட்டிஸ் ஏ, இ ஆகிய வைரஸ்கள் அதிகம் பரவுகின்றன. கை, கால்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், மலம் கழித்த பிறகு சுத்தமான நீரில் கிருமிநாசினி பயன்படுத்தி கை கழுவுதல், சாக்கடை ஓர கடை உணவுகளைத் தவிர்த்தல், உணவு உண்ணும்போதும் கைகளை நன்றாகக் கழுவிவிட்டுச் சாப்பிடுதல் போன்ற பழக்கமுறைகளிலேயே இந்த இரண்டு வைரஸ்களைத் தவிர்த்துவிட முடியும். ஹெபடைட்டிஸ் ஏ வைரஸுக்குத் தடுப்பூசியும் இருக்கிறது.

ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ்களைப் பொறுத்தவரையில் ரத்தம், விந்து மற்றும் உடல் திரவங்கள் வழியாகப் பரவுகின்றன. ஹெபடைட்டிஸ் பி வைரஸுக்குத் தடுப்பூசி உண்டு. தேவை இல்லாமல் குச்சிகளால் காது குடைதல், டாட்டூ குத்திக்கொள்ளுதல், மற்றவர்களின் ஷேவிங் கருவியைப் பயன்படுத்துதல், சுத்தப்படுத்தப்படாத ஊசியை பயன்படுத்துதல், ஹெபடைட்டிஸ் வைரஸ் உள்ள நபருடன் உடலுறவுகொள்ளுதல், ஓரினச்சேர்க்கை போன்ற காரணங்களால் ஹெபடைட்டிஸ் வைரஸ் பரவுகிறது.

கல்லீரலில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பொதுவாக ஐந்து காரணங்கள் உள்ளன. இந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருந்தால் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

இனி எல்லாம் சுகமே - 21

வைரஸ்கள் 

ஹெபடைட்டிஸ் முதலான வைரஸ்களைத் தடுப்பதன் மூலம் பெருமளவில் கல்லீரல் சேதத்தைத் தவிர்க்க முடியும்.

ஆல்கஹால் 


மது அருந்துபவர்களில், 100ல் 20 பேருக்கு கல்லீரல் பாதிப்பால் மரணம் வரலாம். எனவே, மதுவை அறவே தவிர்ப்பதே சிறந்தது.

உடல் பருமன், மனஅழுத்தம்


இந்த இரண்டு பிரச்னைகள் இருந்தாலே கல்லீரல் பாதிக்கப்படுவது உறுதி. உடல் பருமனும் மனஅழுத்தமும் ஃபேட்டி லிவர் பிரச்னையை ஏற்படுத்தவல்லவை. எனவே, வயிற்றைச் சுற்றி அதிகக் கொழுப்புப் படியாதவாறு பார்த்துக்கொள்வதும், மனஅழுத்தத்தைத்் தவிர்ப்பதும் அவசியம்.

மருந்துகள்

சுய மருத்துவம், லேகியம், சூரணம் சாப்பிடுவது, கஷாயம் அருந்துவது போன்றவை சிலருக்கு அலர்ஜியாகி, கல்லீரலை முடக்கலாம். அலோபதி மருந்தும் கூட சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். காசநோய்க்குச் சாப்பிடும் மருந்துகளால் சிலருக்கு மஞ்சள்காமாலை ஏற்படுவது வழக்கம். எனவே, மருந்து எடுக்கும்போது கவனம் தேவை.

தவிர்க்க முடியாத காரணிகள்

மரபுரீதியாகச் சிலருக்குக் கல்லீரல் செயல்திறன் குறைவாக இருக்கலாம். ஒரு சிலருக்கு தாமிரக் குறைபாடு இருக்கலாம். சிறு வயதில் இருந்தே கல்லீரல் பாதிக்கப்பட்டு இருக்கலாம். கல்லீரலில் ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் எனப்படும் சுய எதிர்ப்புக் கோளாறு இருக்கலாம். இது போன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, மாற்று ஏற்பாடுகளைச் செய்வதும், மேற்கொண்டு கல்லீரலைப் பாதிக்கும் விஷயங்களைச் செய்யாமல் தவிர்ப்பதும் முக்கியம்.