ஹெல்த்
Published:Updated:

நமக்கான 5 ரூல்ஸ்... 30 நிமிட சவால்!

நமக்கான 5 ரூல்ஸ்... 30 நிமிட சவால்!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்கான 5 ரூல்ஸ்... 30 நிமிட சவால்!

நமக்கான 5 ரூல்ஸ்... 30 நிமிட சவால்!

நமக்கான 5 ரூல்ஸ்... 30 நிமிட சவால்!

காலையில் அலாரம் அடிக்கிறது. கஷ்டப்பட்டு எடுத்து அதை ‘ஸ்னூஸில்’ போட்டுவிட்டு இன்னும் கொஞ்சம் தூங்குகிறோம். அன்றைய அலுவல்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர, வேண்டா வெறுப்பாக கண்விழித்து, காலைக்கடன்களை முடித்து, அலுவலகம் கிளம்புகிறோம்.

இதற்கிடையே ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மெசேஜ்கள் என சோஷியல் மீடியாவில் நேரத்தைச் செலவு செய்துவிடுகிறோம். இன்று சராசரியாக, ஒரு நாளில் 90 முதல் 120 நிமிடங்களை சோஷியல் மீடியாவில் நாம் செலவழிக்கின்றோம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். சமூக விஷயங்களை அறிந்துகொள்ள இவ்வளவு நேரம் செலவிடும் நாம் ஏன் நமக்கே நமக்காக ஒரு 30 நிமிடங்களை ஒதுக்கக் கூடாது?

நடைப்பயிற்சி

ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடல் நலமாக இருக்கும். ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்கிறோம், இன்று எவ்வளவு அடிகள் நடந்துள்ளோம் என கணக்கிடுவதற்கு மொபைலில் நிறைய செயலிகள் வந்துவிட்டன. சிலர் அதை மாலை வேளைகளில் பார்த்து 6,000 அடிகள் மட்டுமே நடந்திருந்தால் மேலும் 4,000 அடிகள் வாக்கிங் சென்று வருகின்றனர். இதை முயற்சி செய்து பார்க்கலாம். செயலிகளை பயன்படுத்தாதவர், குறைந்தது 30 நிமிடங்கள் மிதமான நடை மேற்கொள்ளலாம். இதனால் உடலுக்குத் தேவையான ஹெச்.டி.எல் எனும் நல்ல கொழுப்பு உற்பத்தி ஆகிறது.

தன்னை உணர்தல்

நம் மனம் கடல்; கடலின் மேற்பரப்பில் தளும்பும் நீரானது எண்ணங்கள்; கரையில் வீசியடிக்கும் அலைகள் நம் உணர்ச்சிகள் என வைத்துக்கொள்வோம். ஆனால், இவற்றைவிட வெகு ஆழத்தில் அமைதியாய் இருக்கிறது கடல். அதுதான் நம் ஆழ்மனம். நமது உடல்நிலையை சீராக வைத்துக்கொள்வது நம் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதில் தொடங்குகிறது.

அன்றைய நாளில் எதற்கெல்லாம் கோபப்பட்டோம், யாரையெல்லாம் சந்தித்தோம், ஒவ்வொருத்தரை சந்தித்தபோதும் எழுந்த உணர்வுகள்; ஏன் அத்தகைய உணர்வுகள் எழுந்தது என உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். குறிப்பாக ஒரு நண்பருடன் பேசும்போது, தேவையின்றி மனதுக்குள் அவரைப் பற்றிய பொறாமை, எரிச்சல் போன்ற எண்ணங்கள் எழுந்தால், அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். ஒருவேளை அந்த எண்ணம் அவரின் உடையின் நிறத்தால்கூட ஏற்படலாம். நமது முடிவினை குடும்பத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை அடியோடு மாற்ற வேண்டும். கணவரோ மனைவியோ அவர்கள் தரப்பு கருத்தைக் கேட்கவேண்டும். இப்படி கருத்துகளை பகிர்வதும் கேட்பதும் எப்படி குடும்பத்திற்கு நல்லதோ, அதே அளவு உங்கள் உடலுக்கும் நன்மை செய்யும். குறிப்பாக சீரற்ற ரத்தஅழுத்தம், மனஅழுத்தம். நீங்கள் தன்னை உணர்தலை முயற்சி செய்யலாம். 

நமக்கான 5 ரூல்ஸ்... 30 நிமிட சவால்!

குட்டித் தூக்கம்

தூக்கம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரக்கூடியது. உணவுக்கு பின், 15 முதல் 30 நிமிடங்கள் வரை குட்டித் தூக்கம் போட்டால் மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும். மேலை நாடுகளில் பல்கலைக்கழகங்களிலும் ‘ஓப்பன் ஆபீஸ்’ எனும் நவீன அலுவலகங்களிலும் ‘நாப்பிங் ரூம்’ எனப்படும் குட்டித் தூக்கம் போடும் அறைகள் வந்துவிட்டன. அங்கெல்லாம் ‘பவர் நாப்’ என்கிற முறை பின்பற்றப்படுகிறது. சரியாக 30 நிமிடங்களுக்குப் பிறகு உடல் பிரிஸ்க்காக இருக்கும்.

நிறைவான தண்ணீர்

அனைவராலும் மிக எளிதாக செய்யக்கூடிய ஒன்று... தண்ணீர் குடிப்பது. காலையில் வெறும் வயிற்றில், 2 கிளாஸ் இளஞ்சூடான நீர் குடிக்க வேண்டும். அதன் பிறகு, தாகம் எடுக்கும் போதெல்லாம் நீர் அருந்த வேண்டும். இதன் அளவு 2-3 லிட்டர் வரை இருக்கலாம்.

தியானம்

மனதை அமைதிப்படுத்துவதில் தியானத்துக்கு முதல் இடம். மனம், இதயம் மற்றும் உடல் ஆகிய மூன்றுமே சிறப்பாக இயங்க, தொடர்ந்து தியானம் செய்ய வேண்டும். பதற்றம், மன உளைச்சல், சோர்வான மனநிலை ஆகியவற்றுக்கு தியானம் மிகச்சிறந்த வலி இல்லா மருந்தாகப் பயன்படுகிறது.  தினமும் 30 நிமிடங்கள் தியானத்துக்காக நேரத்தை ஒதுக்கினால், மனஅமைதி கிடைக்கும்.

நம்மை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் வைத்துக்கொள்ள யோகாவில் சில ரிலாக்சேஷன் டெக்னிக்ஸ் இருக்கிறது. இதை ‘டீப் ரிலாக்சேஷன் டெக்னிக்’ (DRT) என்று சொல்வார்கள். இதை முறையாகக் கற்றுக்கொண்டு அரைமணி நேரம் செய்தால், உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்வு  கொள்ளும். மேலும், அதிக மனஅழுத்தம்,  தூக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்கும் இது தீர்வாக இருக்கும்.

இது போன்ற சின்னச் சின்ன மாற்றங்கள் இடம் பெற அனுமதியுங்கள். உடல்நலம் உங்கள் வசம்!

- வரவனை செந்தில், இரா.கலைச்செல்வன்