பிரீமியம் ஸ்டோரி
கவனம் வலி நிவாரணிகள்!

சிவக்குமாருக்கு நீண்ட காலமாக தலைவலி இருந்துவந்தது. தலைவலி வரும்போது எல்லாம் தைலம் தேய்ப்பது, தலைவலி  மாத்திரை வாங்கிப் போட்டுக்கொள்வது என்று இருப்பார். தலைவலி பிரச்னைக்காக மருத்துவர்களை அணுகியதே இல்லை. அலுவலகத்தில் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவர், திடீரென்று மயங்கிவிழவே, அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

பரிசோதனையில் அவருக்கு மூளையில் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. சிவக்குமார் மட்டுமல்ல... பலரும் சுய மருத்துவத்தில்தான் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கி ன்றனர். வலி என்பது வெறும் அறிகுறிதான். அது நோய் அல்ல என்ற விழிப்புஉணர்வே நம் ஊரில் இல்லை. இதனால்தான், வலி போனால் போதும் என்று மாத்திரைகளை வாங்கிப் பயன் படுத்துகின்றனர். வலி தீவிரம் அடையும்போது மருத்துவர்களிடம் வருகின்றனர்.

வலிக்கான காரணத்தைக் கண்டறிந்து, பிரச்னையின் மூலக்காரணத்தை குணமாக்குவதன் மூலம், நோயாளியின் அன்றாடச் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் பொதுவான இலக்கு. ஆனால், நோயாளிகளுக்கோ வலியற்ற வாழ்வு வேண்டும், அதுவும் உடனடியாக வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

வலி நிவாரணிகள்


வலி நிவாரணிகள் என்பவை, நமது நரம்புமண்டலத்தின் மீது செயல்பட்டு, நமக்கு வலி ஏற்படுத்தும் உணர்வை செயலிழக்கச் செய்யும் மாத்திரைகள். இது, ஒரு தற்காலிக மாற்றுநிலையே தவிர, நமது வலிக்கான நிரந்தரத் தீர்வு கிடையாது.

அதிக வீரியம் உள்ள வலி நிவாரணிகள் ‘ஓப்பியாய்டு’ (Opioids) எனப்படும் போதைப் பொருளால் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலான வலி நிவாரணிகள் ஆக்சிகோடோன் (Oxycodone), ஹைட்ரோகோடோன் (Hydrocodone), மெப்ரிடைன் (Meperidine), ஹைட்ரோமார்ஃபோன் (Hydromorphone), ப்ரொபாக்ஸிஃபீன் (Propoxyphene) போன்றவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்துமே நரம்பு மண்டலத்தின் மீது செயல்பட்டு, அதை மந்தப்படுத்தி வலி உணர்வைப் போக்குகின்றன; அல்லது கட்டுப்படுத்துகின்றன.

கவனம் வலி நிவாரணிகள்!

பக்கவிளைவுகள்

டாக்டர் பரிந்துரையுடன் எடுக்கும்போது, வலி நிவாரணிகள் மிகவும் பாதுகாப்பான மருந்தாகச் செயல்படுகின்றன. ஆனால், எந்த வழிகாட்டுதலுமின்றி, தங்கள் விருப்பம்போல் எடுக்கும்போது அதுவே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

தொடர்ந்து பயன்படுத்தும்போது, குமட்டல், நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் புண், அலர்ஜி போன்றவை ஏற்படும். அளவுக்கு அதிகமாக வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டால், சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரல் பிரச்னைகள், எலும்புத் தேய்மானம், பற்கள் வலுவிழத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

வலி என்கிற அறிகுறி, சாதாரணப் பிரச்னை காரணமாகக்கூட ஏற்பட்டிருக்கலாம். என்ன பிரச்னை என்று கண்டறிந்து அதைச் சரிபடுத்துவதன் மூலம் நிரந்தரத் தீர்வைப் பெறக்கூடியதாக இருக்கலாம். ஆனால், அதைத் தவிர்த்துவிட்டு, சுய மருத்துவம் மேற்கொள்ளும்போது பிரச்னை தீவிரம் அடைகிறது. பிற்காலத்தில், பிரச்னையைக் கண்டறியும்போது அது முற்றிய நிலையில் இருக்கும்.

சிலவகை ஆன்டிபயாடிக் மருந்துகளுடன், வலி நிவாரணியையும் சேர்த்து எடுக்கும்போது, அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து உயிரிழப்பு வரைகூடச் செல்ல வாய்ப்புள்ளது.

உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள், வலி நிவாரணிகள் எடுக்கும்போது செரிமானப் பிரச்னை, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள்கூட ஏற்படலாம்.

போதுமான அளவு டோஸ் எடுக்காதபோது, வலி போவது இல்லை. இதனால், பலரும் அதிக டோஸ் வலி நிவாரணியை எடுத்துக்கொள்கின்றனர். மருந்தைச் செயல்படுத்தி, வெளியேற்றும் பணியை கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செய்கின்றன. அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது, கல்லீரல், சிறுநீரகங்கள் பாதித்து செயலிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.

சில வகை வலி நிவாரணிகளைத் தொடர்ந்து எடுக்கும்போது தூக்கமின்மை பிரச்னையை ஏற்படுத்திவிடும். வயிற்றில் அல்சர், காயங்கள் உள்ளவர்கள் ஆஸ்பிரின் உள்ளிட்ட மாத்திரைகளை எடுக்கும்போது அது ரத்தப்போக்கை ஏற்படுத்தும்.

கவனம் வலி நிவாரணிகள்!

வலியைப் போக்கும் வழிமுறைகள்

வலிகளைத் தடுப்பதற்கு அவற்றின் தன்மையைப் பொறுத்துப் பல்வேறு வகையான சிகிச்சைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அறுவைசிகிச்சை, ஊசி போடுதல், மருந்து-மாத்திரை உட்கொள்ளுதல், பிசியோதெரப்பி, ஒத்தடம் எனப் பலவகைகள் உள்ளன. ஒருவருக்கு ஏற்படும் வலியின் தன்மையைப் பொறுத்து ஒவ்வொரு சிகிச்சையையும் தகுந்த நிபுணரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது.

- ச.மோகனப்பிரியா,  வெ.வித்யா காயத்ரி  

மாடல்: லாவண்யா

இயற்கையான நிவாரண முறைகள்

எப்போதாவது வலி வந்தால்...


முழங்கால் வலிக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

தலைவலிக்கு நொச்சி இலைகளை அரைத்துப் பூசலாம்.

தலை பாரத்துக்கு வெந்நீரில் ஆவி பிடிக்கலாம்.

ஒரு வாரத்துக்கு மேல் வலி தொடர்ந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

வலி நிவாரணிகள் கவனம்!

தொடர்ச்சியாக வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது, வலியைத் தவிர்த்து உடல் மற்றும் மனரீதியான மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தால், உடனடியாக மாத்திரை எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும்.

குடிப்பழக்கம் மற்றும் போதை மருந்துக்கு அடிமை யானவர்கள், மனஇறுக்கம், நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள், வலி நிவாரணி மருந்துகளை, மருத்துவரின் ஆலோசனை இன்றி எடுத்துக்கொள்ளக் கூடாது.
வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளும் முன், மருத்துவரிடம் உங்கள் உடல் நலன் மற்றும் தினசரி பழக்கவழக்கங்களை உண்மையாகவும் நேர்மையாகவும் கூற வேண்டும்.

வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளும் முன்போ பின்போ, மது போன்ற போதைப் பொருட் களைத் தொடக் கூடாது. இதனால் உயிரிழப்புகூட நேரிடலாம்.

வலி அதிகம் உள்ள சமயங்களில் மருத்துவரின் பரிந்துரையின்படி, வலி நிவாரணி எடுத்துக்கொள்வது; சில நாட்களில் வலி குணமடைந்ததும், மருத்துவர் பரிந்துரைத்த நாட்கள் முடியும் முன்பே மருந்துகள் உட்கொள்வதை நிறுத்திவிடுவது; மீண்டும் வலி ஏற்பட்டால், மீதம் இருக்கும் பழைய மருந்துகளை எடுத்துக் கொள்வது... இவை பலரின் வழக்கமாக உள்ளன. இது வலியை இரட்டிப்பாக்கிப் பக்கவிளைவு களை ஏற்படுத்தும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு