Published:Updated:

``கர்னாடக இசையைக் கேட்டால் மனம் லேசாகிவிடும்’’ - துரைமுருகன்! #LetsRelieveStress

``கர்னாடக இசையைக் கேட்டால் மனம் லேசாகிவிடும்’’ - துரைமுருகன்! #LetsRelieveStress
``கர்னாடக இசையைக் கேட்டால் மனம் லேசாகிவிடும்’’ - துரைமுருகன்! #LetsRelieveStress

துரைமுருகன், தி.மு.க-வின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர். தி.மு.க-வின் நெருக்கடியான காலகட்டங்களில் கலைஞர் கருணாநிதியுடன் உடனிருந்தவர். அமைச்சர் பொறுப்பு வகித்தவர். சிறந்த பேச்சாளர். அவர் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்ட தருணங்களையும், அவற்றிலிருந்து எப்படி வெளியே வந்தார் என்பது குறித்தும் இங்கே விவரிக்கிறார்.


மன அழுத்தம், மன இறுக்கம் எந்த நிலையில் ஏற்பட்டாலும், அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். 1971 முதல் இன்றுவரை சட்டசபைத் தேர்தல்களில் தி.மு.கழகம் சார்பில் போட்டியிட்டிருக்கிறேன். இவற்றில் இந்திராகாந்தி இறந்தபோது நடைபெற்ற தேர்தலிலும், ராஜீவ்காந்தி இறந்தபோது நடைபெற்ற தேர்தலிலும் தோற்றுப்போனேன். 

அந்த இரண்டு தேர்தல்கள் தவிர, மற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றேன். சிலர் ஓட்டு எண்ணிக்கைக்கு முதல் நாள் இரவு தூங்கக்கூட மாட்டார்கள். நான் அது பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டேன். தோல்வியென்றாலும், `போனால் போகட்டும் போடா...’ என எடுத்துக்கொள்வேன். வெற்றி என்றாலும், ஒரேயடியாகத் துள்ளிக் குதிக்க மாட்டேன்.

இந்த மனநிலை வந்ததற்கு மிக முக்கியக் காரணம், எனது தந்தை துரைசாமிதான். அவர் சாதாரண விவசாயி. ஆனால், `ஒரு சம்பவம் நடந்து போச்சா... அதோட அதை விட்டுத் தள்ளு. அடுத்து என்ன பண்ணலாம்னு பாரு' என்று சொல்வார். அவர் சொல்லித்தந்த பாடம் இது. 
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதுகூட நான் ஒருமுறை பரீட்சையில் ஃபெயிலாகிவிட்டேன். அவர்தான் ஆறுதல் சொன்னார். ``போனால் போகுது போ... அடுத்தமுறை எழுதி பாஸ் பண்ணிக்கலாம்’’ என்றார். மற்ற அப்பாக்களைப்போல கண்டிக்காமல், எனக்கு வித்தியாசமாகப் பாடம் நடத்தினார். 

நான் `மிசா கைதி'யாக வேலூர் சிறையில் இருந்தேன். என்னுடன் அரெஸ்ட் ஆனவர்கள் எல்லாம், 'ஒரு மாசத்துல விட்டுடுவாங்க, ரெண்டு மாசத்துல விட்டுடுவாங்க' என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். `இல்லை... இல்லை. ஒரு வருடமாகும்’ என்று நான் சொன்னேன். சிறைக்குள் இருந்தபோதும் சூழ்நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு சகஜமாகத்தான் இருந்தேன்.

என்னைப் பார்க்க அப்பா வந்தார். `ஜனநாயகத்தைக் காப்பாத்துறதுக்காக ஜெயிலுக்கு வந்திருக்கே. எதையாவது எழுதிக் கொடுத்துட்டு வந்துடாதே. நேரு 12 வருஷம் ஜெயில்ல இருந்திருக்கார். காமராஜர் பத்து வருஷம் ஜெயில்ல இருந்திருக்கார். நீயும் இரு. பார்ப்போம். கட்சியில சேர்ந்துட்டா, ஒரே கொள்கை, ஒரே கட்சினுதான் இருக்கணும். வேற கட்சியெல்லாம் மாறக் கூடாது' என்று சொல்லிட்டுப் போனார். அதைத்தான் இன்னிக்குவரைக்கும் கடைப்பிடிக்கிறேன்.

நான் பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது நடந்த இலக்கியக் கூட்டம் ஒன்றுக்கு எம்.ஜிஆர் தலைமை தாங்க வந்திருந்தார். அதில் நான் பேசிய பேச்சு அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதிலிருந்து என்னுடைய  பி.ஏ., எம்.ஏ., சட்டக் கல்லூரிப் படிப்பு சகலத்தையும் எம்.ஜி.ஆரே ஏற்றுக்கொண்டார்.  அவருக்கு நான் செல்லப்பிள்ளை மாதிரி. அவர் தனியாகக் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்பது முன்பே எனக்குத் தெரியும். அதேபோல அவர் 1977-ம் ஆண்டில் ஜெயித்து முதலமைச்சர் ஆனார். நான் ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வாக ஜெயித்து சட்டசபைக்குப் போனேன். 

எம்.ஜி.ஆர்கூட என்னைக் கூப்பிட்டுச் சொன்னார், `என்னைப் படத்துல பார்த்தவன்லாம் மந்திரியாகிட்டான். நீ என் மடியில வளர்ந்தவன். நீ இங்கே வந்துவிடு. எந்த மந்திரிப் பதவி வேண்டுமோ எடுத்துக்கோ’ என்று சொன்னார். திடுதிப்பென அவர் அப்படிக் கேட்டபோது என்னவோபோல் இருந்தது. ஆனால், மனதுக்குள் சிறு சலனம்கூட எனக்கு ஏற்படவில்லை. 

அப்போதும் என் அப்பா சொன்னதைத்தான் நான் கடைப்பிடித்தேன். `ஒரே கட்சி, ஒரே கொள்கை, அது பிடிக்கலையா... பேசாம  வேற வேலைகளைப் பார்’ என்று சொல்வார். அதைத்தான் நான் இன்னிக்குவரைக்கும் கடைப்பிடிக்கிறேன்.

கலைஞர், சூழ்நிலைகளை நகைச்சுவையாலும் புத்திசாலித்தனத்தாலும் எளிதாக்கிவிடுவார். ஒருமுறை எனக்கு பைபாஸ் சர்ஜரி பண்ணவேண்டிய நிலை ஏற்பட்டது. தலைவர், போன் பண்ணிக் கேட்டார். 

`என்னய்யா பயமா இருக்கா?’ என்று கேட்டார். `நாளைக்கு ஆபரேஷன்... பயப்படாம டென்னிஸா ஆட முடியும் தலைவரே?’ என்று சொன்னேன். `சரிய்யா... நான் வேணும்னா இன்னிக்கு நைட் அங்கே ஆஸ்பத்திரியில வந்து தங்கட்டுமா?’ என்று கேட்டார். அந்த அளவுக்கு என்னிடம் பாசமாக இருப்பார். அவருக்குத் தர்மசங்கடம் தருகிற மாதிரி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. அன்னிக்குத்தான் நான் ரொம்ப மனசு கஷ்டப்பட்டேன்.  

ஒருமுறை கலைஞர் வீட்டில், தலைவர், பேராசிரியர், சாதிக், இன்னும் சிலர், நான்  எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் ஒரு கருத்தைச்சொல்ல வந்தபோது, அங்கிருந்த மூத்த அரசியல்வாதி ஒருவர், `ஏய், நீயெல்லாம் இதுல கருத்து சொல்லாதே’ என்று சொன்னார். 

எனக்கு என் சுமரியாதையைச் சுரண்டிப் பார்த்ததும் மிகவும் கோபமடைந்துவிட்டேன்.  பதிலுக்கு நான் அவரைத் திட்டிவிட்டேன். 
`தலைவர் முன்னிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டதே’ என வருந்தினேன். பிறகு எல்லோரும் கிளம்பிப்போனார்கள். தலைவர் பஸ்ஸரை அழுத்தி, `துரைமுருகன் எங்கே?’ என்று யாரிடமோ கேட்டிருக்கிறார். `அவர் இன்னமும் போகலை. இங்கேதான் இருக்கார்’ என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். `வரச் சொல்லு’ என்று என்னை கூப்பிட்டு அனுப்பினார். நான் அவரிடம் என் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் சொன்னேன். `அந்த இடத்தில் நீ கோபப்படவில்லையென்றால்தான் நான் ஆச்சர்யப்பட்டிருப்பேன்' எனக் கூறி ஆறுதல்படுத்தினார்.

பொதுவாக எனக்கு மன அழுத்தம், மனச்சங்கடம் தரும் சம்பவங்கள் நடந்தால், புத்தகங்களில் இதுதான் என்றில்லை... புராணக் கதைகள் தொடங்கி அரசியல் கட்டுரைகள்வரை வாசிக்கத் தொடங்கிவிடுவேன். கர்னாடக சங்கீதத்தில் எனக்கு ஈடுபாடு அதிகம். அதிலும் எம்.எஸ்.சுப்புலட்சுமி, சுதா ரகுநாதன் வரை அனைவரின் பாடல்களிலும் எதையாவது ஒன்றைக் கேட்பேன். கர்னாடக இசையைக் கேட்டால் என் மனம் எப்போதும் லேசாகிவிடும்...’’ என்கிறார் துரைமுருகன்.